scorecardresearch

சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 11

Social Activist Suba Udayakumaran New series about self management in tamil: வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை சந்திக்க தவிர்த்தல், தலைவணங்கல், தப்பித்தல் போன்ற பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. இவையெதற்கும் தைரியம் தேவையில்லை.

சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 11
Suba Udayakumaran

சுப. உதயகுமாரன்

[11] தைரியம் கொள்வோம்

இம்மண்ணுலக வாழ்வை எதிர்கொள்ள என்ன வேண்டும்? தைரியம் வேண்டும்! தைரியம் ஏன் வேண்டும்? வாழ்வில் ஏற்படும் சறுக்கல்கள், சரிவுகள், சங்கடங்கள், சதிகள், இழப்புக்கள், தோல்விகள், மரணங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள, எதிர்த்துப் போராட, எழுந்து நிற்க!

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பாடுகிற பாரதியார், பல்வேறு அச்சமுறு தருணங்களை அடுக்குகிறார்:

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்,
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சப்படாதீர்கள்! இவையனைத்தையும்விட மிகவும் மோசமான, ஆபத்தான, இடர்மிகுந்த இன்னலான
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
என்று அறிவிக்கிறார் முண்டாசுக் கவிஞர்.

அதே நேரம், வெறும் வாய் வார்த்தைகளால் மானம், வீரம் என்று வெறுமனே கதைப்பவர்களை “வாய்ச்சொல் வீரர்கள்” என்று ஏளனம் செய்கிறார் அவர்..

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி
என்று பாடும் பாரதியார் தைரியத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறார்: நெஞ்சில் உரம், நேர்மைத் திறம்.

நெஞ்சில் உரமுடையோர் எல்லோரும் நேர்மையாளர்களாக இருப்பதில்லை; ஆனால் நேர்மைத் திறமுடையோர் கட்டாயம் நெஞ்சில் உரத்துடனேதான் விளங்குகின்றனர். உண்மையாக, நேர்மையாக மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர்கள் அத்தனை பேருடைய வாழ்க்கை வரலாறுகளைப் படித்துப் பாருங்கள். நெஞ்சுரத்தோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். நேர்மைதான் தைரியத்தின் திறவுகோல். நேர்மையோடு வாழ்கிறவர்களை தைரியம் தானாகத் தேடி வருகிறது.

வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைரியம் உங்களிலிருந்தே தொடங்கட்டும். உங்களையே உங்கள் குற்றம் குறைகளுடன் முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய முயலுங்கள். உங்களிடமே கருணைக் காட்டுங்கள். உங்களைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு மரியாதை கொடுங்கள். உங்களின் உற்ற நண்பராய் இருங்கள். இதுதான் மிக மிக தைரியமான செயல்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு தவறிழைத்துவிட்டால், அதைப் பற்றியே சிந்தித்து, நடந்ததையே எண்ணியெண்ணி அதை உயிரோட்டத்துடன் வைத்திருக்காதீர்கள். உங்களையே மன்னிக்கப் பழகுங்கள். உங்களை மன்னிக்கும்போது, பிறரையும் எளிதாக மன்னிக்க முடியும். வாழ்க்கைத் தடைகளை கடந்து செல்வதுதான் தைரியமான செயல்.

அதேபோல, நீங்கள் இன்னொருவருக்கு ஓர் அநீதி இழைத்துவிட்டால், அல்லது அவர் மனம் புண்படும்படி நடந்துகொண்டால், உங்கள் தவறை ஏற்றுக்கொண்டு உரியவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்புக் கேட்பதும், மீளிணக்கம் கொள்வதும் தைரியத்தின் உச்சபட்ச நிலை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல நடப்பது, அல்லது நடிப்பது, தைரியமற்ற செயல் என்பதை உணருங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். இயற்கை உங்களை மட்டுமே விசேட குணநலன்களுடன் படைத்திருக்கிறது. இந்த எளிய உண்மையை உணர்வது தைரியத்தின் மிகப் பெரிய வெளிப்பாடு.

நீங்கள் உங்களுக்கோ, அல்லது வேறு யாருக்குமோ ஓர் உத்தரவாதம் அளித்துவிட்டால், அதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றுவது மிகவும் தைரியமான செயல். அதேபோல, உங்களை ஒருவர் புறக்கணித்தால், அல்லது உங்கள் நட்பை, காதலை அங்கீகரிக்க மறுத்தால், அவரது முடிவை ஏற்றுக்கொண்டு விலகிச் செல்வது தைரியம் மிகுந்த அணுகுமுறை.

உங்கள் வாழ்விலும், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்திலும் நிகழும் சம்பவங்களுக்கு பொறுப்பேற்பதும் தைரியமான செயல்தான். உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை மாற்றியமைப்பதற்கு மிகுந்த தைரியமும், மனத்திடமும் வேண்டும். ஒரு கருத்து வேறுபாடு எழும்போது, உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சொல்பவற்றை கவனமாகக் கேளுங்கள். கேட்பது தைரியமான செயல்.

புகழ்பெற்ற கோகோ சானல் (Coco Chanel) என்கிற பிரான்சு நாட்டு ஆடை வடிவமைப்பாளர் குறிப்பிடுவது போல, “மிகவும் தைரியமான செயல் என்பது உங்களுக்காக நீங்கள் சிந்திப்பது. சத்தமாக!” அதாவது உங்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையில் உங்களுக்காக ஒரு நிலைப்பாடு எடுத்து, அதை உலகறிய உரக்க எடுத்துச் சொல்வது தைரியமான செயல் என்கிறார்.

ஒரு தவறு அல்லது அநீதி நடக்கும்போது, உங்கள் உணர்வுகளை, எண்ணங்களைப் பிறருடன் பகிரங்கமாகப் பகிருங்கள். சமூகத்துக்கு ஒவ்வாத ஒன்றை ஒருவர் செய்யும்போது, அதை செய்யக்கூடாது என்று சொல்லுங்கள். உங்கள் அடிவயிற்றுத்தீ உங்களை முன்னே உந்தித் தள்ளும்போது, பின்வாங்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

குழந்தைகளுக்கு அறிவுரைகள் சொல்லும் பாரதியார் அவர்களை இப்படிப் பணிக்கிறார்:

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -
நாம்பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! -
அவர்முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

உங்களுக்கோ அல்லது ஊருக்கோ ஒருவர் உபத்திரவம் செய்தால், அவரை கேள்விகள் கேட்காமல், கேவலப்படுத்தாமல், கேடடையச் செய்யாமல் விட்டுவிடாதீர்கள் என்பதுதான் இதன் அர்த்தமே தவிர, வன்முறையைக் கையிலெடுங்கள் என்பதல்ல. தைரியம் மிக்கவர்களுக்கு வன்முறை பெரும்பாலும் தேவைப்படுவதில்லை.

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சமூக விரோதிகள், ஊழல் பேர்வழிகள், வீணர்கள், வெற்று மனிதர்கள் அத்தனை பேரையும் நாம் மோதி மிதிக்கவும், முகத்தில் உமிழவும் முடியாது. வேட்டைக்குப் போகிற ஒருவர் எப்படி கண்ணில்படும் சிறு சிறு முயல்களுக்குப் பின்னால் ஓடி தன்னுடைய ஆற்றலை, நேரத்தை வீணாக்காமல், பெரிய பெரிய யானைகளை குறிவைத்துத் தாக்குகிறாரோ, அதுபோல திமிரும் யானைகளை தேர்ந்தெடுத்துத் துரத்துங்கள்.

கான முயலெய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

என்கிறது வள்ளுவம். அதாவது வலிமையற்ற முயலை வெற்றிகரமாக வேட்டையாடிய அம்பினைப் பெற்றிருப்பதைவிட, வலிமை மிகுந்த யானையைக் குறிவைத்து தவறவிட்ட வேலைப் பெற்றிருப்பது பெருமையானது.

சுவாமி விவேகானந்தா தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைக் கூறுகிறார். ஒருமுறை அவர் ஒரு காட்டுப்பாதை வழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு குரங்கு கூட்டம் அவரைத் துரத்தியிருக்கிறது. குரங்குகளோடு மோதிக் கொண்டிருக்காமல், வேகமாக கடந்து சென்றுவிடுவோம் என்றெண்ணி அவர் ஓடியிருக்கிறார். குரங்குகள் அவரைவிட வேகமாக ஓடி அவரை துரத்திச் சென்றிருக்கின்றன. அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஞானி, குரங்குகளை எதிர்த்து நின்றால்தான் அவை பின்வாங்கும் எனும் எளிய உண்மையை அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஓடிக்கொண்டிருந்த சுவாமி விவேகானந்தா எதிர்த்து நின்றிருக்கிறார். மந்திரம் போட்டதுபோல, அக்குரங்குகள் மலைத்து நின்றிருக்கின்றன.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

இதே போன்றதொரு தைரியம் செய்யும் அற்புதத்தை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அகில இந்திய வானொலியின் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பகுதிநேர ஒலிபரப்பாளராக நான் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு காவல்துறை தடியடியை எதிர்கொள்ள நேரிட்டது. வேலை முடிந்து சமாதானபுரம் வீதி ஒன்றில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது, ஒரு கூட்டம் இளைஞர்களை காவல்துறையினர் அடித்துவிரட்டிக் கொண்டு வந்தனர். அந்த களேபரத்தைப் பார்த்ததும் என்னுடைய உள்ளுணர்வு ஓடித் தப்பித்துக்கொள்வோம் என்பதாகவே இருந்தது. ஆனால் எனதருகே நடந்துகொண்டிருந்த ஒரு பெரியவர் “நம்மையும் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றெண்ணி அடிப்பார்கள், நின்று விடுவோம்” என்றார். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் அப்படியே நின்றோம். மிகப்பெரும் காவல்துறை தாக்குதலில் இருந்து மனதைரியம்தான் எங்கள் இருவரையும் காப்பாற்றியது.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை சந்திக்க தவிர்த்தல், தலைவணங்கல், தப்பித்தல் போன்ற பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. இவையெதற்கும் தைரியம் தேவையில்லை. துரத்திவரும் குரங்குகளை தடுத்து நிறுத்தும் ஒரே வழி தைரியமாக எதிர்த்து நிற்பதுதான்.

தூத்துக்குடி மாநகரின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, அந்நகர மக்களின் வாழ்வினை அழித்தொழிக்கும் ஒரு நச்சாலையை எதிர்த்து மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஓர் அமைதியானப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி பதினைந்து பேரை துள்ளத் துடிக்கக் கொன்று குவித்தார்கள். அவர்களுள் ஒருவர் நச்சாலையை உறுதிபட எதிர்த்து நின்ற 16-வயது ஸ்னோலின். தன்னுடைய வாயிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளம் வீராங்கனையின் கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் இது: “இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் தீமையானதற்கு அஞ்சேன்.”

(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 12

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Suba udayakumarans tamil indian express series on self management part 11