சுப. உதயகுமாரன்
[12] கருணைக் காட்டுவோம்
வணக்கத்திற்குரிய தலாய் லாமா அவர்கள் ஒரு முறை ஹானலூலூ நகருக்கு வருகை புரிந்தார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த நானும், என்னுடைய மனைவியும் அவர் உரையாற்றிய நிகழ்வு ஒன்றில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டோம். எங்களுடன் அரசியல் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டத்துக்காகப் பயின்றுகொண்டிருந்த சில அமெரிக்க வகுப்புத் தோழர்களும் உடன் வந்திருந்தனர்.
தலாய் லாமா அவர்கள் தனது உரை முழுக்க மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசிய ஒரே ஒரு கருத்து, கருணை என்பதுதான். “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” எனும் ஒப்பற்ற அருள் முழக்கத்தால், கடவுள் என்பதே கருணையுணர்வுதான் என்ற பேருண்மையை வழங்கிச் சென்றிருக்கும் வள்ளலார் பெருமானை வணங்கி மகிழும் எனக்கும், என் மனைவிக்கும் அவரின் உரை அத்தனை ஆழமானதாக அமைந்திருந்தது.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வருந்திய வள்ளலார், வாடியக் குதிரை ஒன்றிடம் வருத்தம் தெரிவித்த நிகழ்வு ஒன்றுண்டு. ஒருமுறை வள்ளலார் பெருமானை சந்திப்பதற்கென ஒரு செல்வந்தர் தனது குதிரை வண்டியில் வந்திறங்கினார்.
பெருமானை விரைவாக சந்திக்க வேண்டுமென்பதற்காக, தான் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தை அவர் விவரித்தார். தன்னுடைய ஊரிலிருந்து வள்ளலார் இருந்த ஊருக்கு குதிரை வண்டியில் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகுமென்றும், அடிகளாரைச் சந்திக்கும் ஆர்வப்பெருக்கால் வண்டிக்காரரிடம் சொல்லி, குதிரையைச் சாட்டையால் அடித்து விரைந்து செலுத்தி, தான் ஒரே மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டதாகவுமெல்லாம் விவரித்து செல்வந்தர் புளகாங்கிதம் அடைந்தார்.
விரைந்து சந்திக்க வேகமாக வந்த செல்வந்தரை அப்படியே விட்டுவிட்டு, விருட்டென்று எழுந்து குதிரையிடம் சென்ற வள்ளலார், அதனைக் கட்டித்தழுவி, தடவிக் கொடுத்தவாறே “என்னால் நீ அடிபட்டிருக்கிறாயே” என்று கண்கலங்கினாராம்.
கருணை என்பது வாடிய பயிரிடமும், வாயில்லாச் சீவனிடமும் காட்டும் இரக்கம் மட்டுமல்ல; அது ஓர் அரசியல் மார்க்கமும்கூட என்றறிந்தவர் வள்ளலார். அதனால்தான் “கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக! அருள்நயந்த சன்மார்க்கர் ஆள்க!” என்றார். இன்றைய அரச அமைப்பை மகாத்மா காந்தி ‘ஆன்மாவற்ற இயந்திரம்’ (soulless machine) என்று வர்ணித்தார். ஆன்மா இல்லாத ஜடப்பொருளுக்கு கருணை இருக்க முடியாது; அது ஈவு இரக்கம் பார்க்காது. அப்படிப்பட்ட அரசு கருணை இலா ஆட்சியைத்தான் வழங்க முடியும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கருணை என்பது மனிதகுலத்தின் வாழ்வியல் கூறு. என்றறைந்த கவியரசு கண்ணதாசன்,
ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்;
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
என்று பாடினார். அந்த மனித தெய்வம் “காக்கை குருவி எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” எனக்கொண்டு, பிற உயிர்களிடமும், அஃறிணைப் பொருட்களிடமும் கருணை காட்டும் என்று சுட்டுகிறார் பாரதியார்.
கொல்லாமை, புலால் மறுத்தல் பற்றியெல்லாம் பாடுகிற நம் தமிழர் வேதமாம் திருக்குறள், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்
என்று பறைசாற்றுகிறது. குறள்நெறியில் சிந்திக்கும் பாரதியும் “பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கு அருள்வாய்” என்று பாடுகிறார். இப்படியாக இரக்கம், பரிவு, தயவு, கருணை என்றியங்கும் சமூகத்தில் வன்மம், வன்முறை, வகைதொகையற்ற ஆயுதங்கள், வாட்டிவதைக்கும் போர்களுக்கு தேவையே இருக்காது.
கருணைமிகு தமிழ்ப் பின்புலம் கொண்ட எனக்கும், என் மனைவிக்கும் தலாய் லாமா அவர்களின் கருத்து எளிதில் புரிந்தது. உண்மையில் கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர் அந்த உரையை பக்தியுடனும், மரியாதையுடனும் உள்வாங்கி நின்றனர்.
ஆனால் என்னுடைய அதிபுத்திசாலி வகுப்புத் தோழர்கள் அந்த உரையை கிண்டலும், கேலியுமாகவே எதிர்கொண்டனர். கருணையின் தத்துவார்த்தப் பின்புலம் என்ன? கருணை என்பதை எப்படி ஓர் அரசியல் கோட்பாடாக மாற்ற முடியும்? இப்படியான பல்வேறு கேள்விகளோடு, அந்த உரையில் அரசியல் அறிவியல் அடித்தளம் அறவே இல்லை என்று அறிவுசீவித்தனமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் அறிவியல் பாடத்தை அவர்கள் இராஜதந்திரம், போர்த்திறன், படைபலப்போட்டி என்றே பார்த்தார்கள். அவர்களுக்கு கவிமணி சொல்லும் எளிய உண்மை புரியவில்லை:
நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு, நேயம் கொண்ட நெறியோர்க்கு, விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு, வெல்லும் படைகள் வேறுளவோ?
தலாய் லாமா அவர்களின் கருணை பற்றிய தத்துவார்த்த விளக்கத்தை உள்வாங்கும் திறனற்ற என்னுடைய நண்பர்கள் அன்னை தெரசா அவர்களின் தன்னலமற்றச் சேவையையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஒருமுறை தொழுநோய் பெருமளவு பீடித்திருந்த முதியவர் ஒருவரை அன்னையார் துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற ஒரு பத்திரிக்கையாளர், “மில்லியன் டாலர் பணத்தை எனக்குத் தந்தாலும் இதை நான் செய்யமாட்டேன்” என்று கருத்துத் தெரிவித்தார். அதைக் கேட்ட அன்னையார் உடனே சொன்னார்: “மில்லியன் டாலர் பணத்துக்காக நானும் இதனைச் செய்ய மாட்டேன்.” அன்னை தெரசாவையும், அவரைப் போன்றோரையும் இயக்குவது பணவெறியல்ல, மாறாக கருணையுணர்வு. கோட்பாடு, சித்தாந்தம், தேற்றம் எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். நீங்கள் சக மனிதர்களுக்கு கருணைக் காட்டுங்கள். உங்கள் வாழ்வு நிச்சயம் சிறக்கும்.
கடந்த 1900-ஆம் ஆண்டு வாக்கில் அடைமழை பெய்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் ஒரு வயதான தம்பதியர் ஃபிலடெல்ஃபியா நகர ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்தனர். அந்த கடினமான இரவைக் கழிப்பதற்கு தங்களுக்கு ஓர் அறை வேண்டுமெனக் கேட்டனர். அப்போது பணியில் இருந்த வரவேற்பாளர், “நகரில் மூன்று பெரும் மாநாடுகள் நடப்பதால் அனைத்து அறைகளையும் ஒருசில வாரங்களுக்கு முன்னரே முன்பதிவுசெய்து விட்டனர். ஆனால் வயோதிக நிலையிலுள்ள உங்கள் இருவரையும் இந்த நள்ளிரவு நேரத்தில் அடைமழைக்குள் திருப்பியனுப்ப நான் விரும்பவில்லை. உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் இருவரும் என்னுடைய அறையில் தங்கிக் கொள்ளுங்கள், நான் ஒரு நண்பரோடு சமாளித்துக் கொள்கிறேன்” என்று சொன்னார்.
அந்தப் பெரியவர், “உங்களைப் போன்ற உதவும் மனப்பான்மையும், ஆக்கத்திறனும் கொண்ட இளைஞர்கள்தான் நமக்குத் தேவை. நீங்கள் இந்த ஓட்டலின் மேலாளராகப் பணியாற்ற வேண்டும். நான் ஓர் ஓட்டல் கட்டி, அதற்கு உங்களை மேலாளராக நியமிக்கிறேன்” என்று சொன்னார். அவர் நகைச்சுவையாகப் பேசுகிறார் என்று நினைத்த அந்த இளைஞர் வாய்விட்டுச் சிரித்தார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞருக்கு ஒரு கடிதம் வந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் நியூயார்க் மாநகருக்கு வரும்படி அந்த இளைஞரை அழைத்தது அந்தக் கடிதம். அவர் நியூயார்க் சென்று ரயிலைவிட்டு இறங்கியதும் அதே பழையத் தம்பதியர் அவரை வரவேற்று, ஐந்தாவது அவென்யூ மற்றும் 34-வது தெரு சந்திக்கும் சந்திப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கே புத்தம்புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஒரு மாபெரும் கட்டிடத்தைக் காட்டி, அந்தப் பெரியவர் சொன்னார்: “இது நாங்கள் கட்டியிருக்கும் புதிய ஓட்டல். இதற்கு நீங்கள் மேலாளராக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”
அந்த பெரியவர் வில்லியம் வால்டோர்ஃப் அஸ்தர் (William Waldorf Astor); அந்த ஓட்டலின் பெயர் வால்டோர்ஃப் அஸ்தோரியா ஓட்டல் (WaldorfAstoria Hotel). அதன் முதல் மேலாளராகப் பணியில் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஜார்ஜ் சி. போல்ட் (George C. Boldt).
ஊர் பேர் தெரியாத அந்த இளைஞரை இவ்வுலகின் மிகவும் புகழ்பெற்ற ஓர் ஓட்டலின் மேலாளராக மாற்றியது அந்த மழைநாள் இரவில் அவர் காட்டிய கருணைதான். கவிமணி சொல்வது போல:
உள்ள துணர வேண்டுமெனில்
உள்ளம் தெளிய வேண்டுமப்பா!
கள்ளங் கபடாகா தப்பா!
கருணை பெருக வேண்டுமப்பா!
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 13
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil