சுப. உதயகுமாரன்
<13> சமநிலைப் பேணுவோம்
நாமெல்லாம் சூப்பர்மேன்களோ, ஸ்பைடர்மேன்களோ, சக்திமான்களோ அல்ல, சராசரி மனிதர்கள்தான். நம்மை சில வேளைகளில் அச்சம், கவலை, கழிவிரக்கம், குற்றவுணர்ச்சி போன்ற எதிர்மறை உணர்வுகள் பீடிக்கலாம். அப்போது கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடலைக் கேளுங்கள்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா? வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்.
வாழ்க்கையில் எது வந்தாலும், என்ன நடந்தாலும், நிலைகுலையாமல் நிற்பது மிக முக்கியமானது. உள்ளுக்குள் சமநிலையைப் பேணிக்கொள்ள பலரும் பல வழிகளைக் கடைபிடிக்கிறோம்.
சிலர் “நடப்பவை எல்லாம் நல்லதற்கே” என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கின்றனர்.
ஒருமுறை ஒரு ராஜா வேட்டைக்குப் போயிருக்கும்போது தனது கட்டைவிரலைத் துண்டாக வெட்டிவிட்டார். அருகேயிருந்த அமைச்சர் “இதுவும் நல்லதற்குத்தான்” என்று சொன்னார். கோபமடைந்த ராஜா அமைச்சரை சிறையில் அடைத்துவிட்டார். அடுத்த முறை ராஜா வேட்டைக்குச் சென்றபோது, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் அவரைப் பிடித்து, தங்களின் கடவுளுக்கு பலிகொடுக்கத் தீர்மானித்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், பலிகிடாவுக்கு ஒரு கட்டைவிரல் இல்லை என்பதை ஒருவர் கண்டுபிடித்து தன் கூட்டத்தாருக்குச் சொன்னார். முழுமையாக இல்லாதவரை பலிகொடுக்க முடியாதென்று காட்டுமிராண்டிகள் ராஜாவை விட்டுவிட்டார்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று ஓடோடிவந்த ராஜா, நேராக சிறைக்குப் போய், அமைச்சரிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி, “அமைச்சரே, நீர் கூறியது சரிதான். எனக்கு கட்டைவிரல் போகாமலிருந்திருந்தால், என்னைப் பலிகொடுத்திருப்பார்கள்” என்று அரற்றினார். அமைச்சரை சிறையில் தள்ளியமைக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கோரினார். ஆனால் அமைச்சரோ, “இதுவும் நல்லதற்குத்தான்” என்றார். குழம்பிப்போன ராஜா அதெப்படி என்று கேட்டார். அமைச்சர் சொன்னார்: “நீங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால், நான் உங்களோடு வேட்டைக்கு வந்திருப்பேன். என்னைப் பிடித்து பலிகொடுத்திருப்பார்களே?” என்றார்.
வேறு சிலர் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாமல் இருப்பதால், வருவதை வருவதுபோல எதிர்கொள்வோம் என்று இயங்குகின்றனர். அமெரிக்க கவிஞர் டி. எஸ். இலியட் சொல்வது போல, “நல்லதோ, கெட்டதோ, காலச்சக்கரம் கடிதில் சுழலட்டும்” என்றிருக்கிறவர்கள் இவர்கள்.
ஒரு விவசாயி ஓர் அழகானப் பெண் குதிரையை அன்புடன் வளர்த்து வந்தார். ஒருநாள் திடீரென அந்தக் குதிரை காணாமற்போய் விட்டது. அக்கம்பக்கத்தார் வந்து விசாரித்து அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். விவசாயி “இது நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?” என்று பதிலளித்தார்.
ஓரிரு வாரங்கள் கழித்து அந்தப் பெண் குதிரை வாட்டசாட்டமான ஓர் ஆண் குதிரையோடுத் திரும்பிவந்து, சினையாகி, ஓர் அழகானக் குட்டியை ஈன்றது. கிராமத்தார் “இது உங்களின் பெரும் பாக்கியம்” என்றெல்லாம் விவசாயியைப் பாராட்டிப் புளகாங்கிதமடைந்தனர். விவசாயி, “இது நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?” என்று பதிலளித்தார்.
ஒரு வருடம் சென்ற நிலையில், அந்த குதிரைக் குட்டியின் மீதேறி விளையாடிய விவசாயியின் ஒரே மகன் கீழே விழுந்து, முதுகில் அடிபட்டு, நடக்கமுடியாமல் ஆகிப்போனான். ஊர்க்காரர்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்கள். விவசாயி, “இது நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?” என்று பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சில வருடங்கள் கழித்து ஒரு பெரும் போர் வந்து, உடல் திறனுள்ள இளைஞர்கள் அனைவரும் கட்டாய இராணுவச் சேவைக்கு அழைக்கப்பட்டனர். போரில் ஈடுபட்ட அந்த ஊர் இளைஞர்கள் அனைவரும் உயிரிழந்தனர். ஆனால் வீட்டிலிருந்த விவசாயியின் ஒரே மகன் மட்டும் உயிர்தப்பினான்.
இன்னும் சிலரோ, பொறுமையாக, விடாப்பிடியாக முயன்று நமக்கேற்ற வழியில், விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலும் என்று நம்புகிறார்கள்.
ஓர் இளைஞன் ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது, ஒரு வினோதமான விளையாட்டைப் பார்த்தான். சுவரில் குத்தப்பட்டிருந்த நீளமான கத்திகளில் சிறு வளையங்களைத் தூக்கி எறிய வேண்டும். சரியாக எறிந்தால், செலுத்திய பணத்தைப் போல ஐந்து மடங்கு பணம் கிடைக்கும். அங்கே அந்தச் சாவடியின் உரிமையாளரின் மகளும் நின்று கொண்டிருந்தாள். அவளின் அழகில் தன்னைப் பறிகொடுத்த அந்த இளைஞன் தினமும் அங்கே வந்து வளையங்களை எறிந்தான். அனைவரும் பணம் வெல்வதிலேயேக் கவனம் செலுத்திய நிலையில், அந்த இளைஞனோ அப்பெண்ணின் உளம் கவர்வதிலேயே குறியாய் இருந்தான்.
குறிப்பிட்ட நாட்கள் சென்றதும், அந்தக் கண்காட்சி வேறு ஊருக்கு இடம்மாறிச் செல்லவிருந்த நிலையில், தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அந்த இளைஞன் அப்பெண்ணின் பெற்றோரிடம் அவர்களின் மகளை தனக்கு மணமுடித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டான். “நீ ஓர் ஏழையாக இருக்கிறாய். உன்னால் எங்கள் மகளை நன்றாக கவனித்துக்கொள்ள இயலாது. எனவே இதற்கு நாங்கள் உடன்படமாட்டோம்” என்று அவனது விருப்பத்தை நிராகரித்தார்கள்.
அடுத்த வருடம் கண்காட்சி நடைபெறும்போதே அவர்கள் அவனது ஊருக்கு மீண்டும் வருவார்கள் என்றறிந்த இளைஞன் சோர்ந்து விடவில்லை. மாறாக ஒரு திட்டம் தீட்டினான். சில கத்திகளையும், வளையங்களையும் வாங்கிக்கொண்டு, அந்த எறிதல் போட்டியில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டான். முதலில் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து ஓராண்டு காலம் முயற்சி செய்து, பயிற்சிப் பெற்று, அந்த எறிதல் வித்தையில் நன்கு தேர்ச்சிப் பெற்றான்.
கண்காட்சி மீண்டும் அந்த ஊருக்கு வந்தபோது, அந்தக் கடையும் இடம் பெற்றது. முதல் நாளே அங்கேச் சென்ற அந்த இளைஞன் வளையங்களை வாங்கி துல்லியமாக எறிந்தான். தான் வென்ற பணம் அனைத்தையும் மீண்டும், மீண்டும் அந்தப் போட்டியிலேயேச் செலவு செய்தான். அதனை நம்பமுடியாமல் திகைத்துப்போன கடைக்காரர் கவலையுடன் நின்றிருந்தார். அவரது கையிருப்பு அனைத்தையும் அந்த இளைஞனிடம் கையளிக்க வேண்டியச் சூழலில், அவன் சொன்னான்: “உங்கள் பணமோ, சொத்துக்களோ எனக்குத் தேவையில்லை. உங்கள் மகளை மட்டுமே நான் விரும்புகிறேன்.”
அந்த இளைஞன். தன் மகளுக்கு விசுவாசமான கணவனாக இருப்பான் என்றறிந்த பெற்றோர், தங்கள் மகளை அவனுக்கு திருமணம் செய்துகொடுக்க இசைந்தனர். அந்த இளைஞனின் பொறுமையும், விடா முயற்சியும் அவன் விரும்பியவளை அவனுக்குப் பெற்றுத்தந்தன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இப்படியாக வாழ்க்கை வண்டியை ஓட்டிச்செல்ல பல அணுகுமுறைகள் உடையவர்களை நாம் பார்க்கிறோம். வண்டி போகிற வழியில் அடித்துச் செல்பவர்கள், எல்லாம் அவன்விட்ட வழி என்று அடங்கிச் செல்பவர்கள். கருமவினை, விதிப்பயன், தலையெழுத்து என்றெல்லாம் புறக்காரணிகளை நம்புகிறவர்கள். ஆனால் நாம் அடிக்கிற வழியில்தான் நமது வண்டி போகவேண்டும் என்று முனைகிறவர்கள் முயற்சியில் நம்பிக்கை உடையவர்கள்.
அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார்:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
சோர்வின்றி முயற்சி மேற்கொள்பவர்கள் வெல்ல முடியாதது என்று கருதப்படும் ஊழையும் தோல்வியடையச் செய்வார்கள். “முயற்சி திருவினை ஆக்கும்” என்று உறுதியளிக்கிற தெய்வப்புலவர் மேலும் சொல்கிறார்:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
கடவுளே செய்ய முடியாத காரியமாக இருந்தாலும், ஒருவர் தொடர்ந்து தன்னை வருத்திக்கொண்டு முயற்சி செய்யும்போது, அதற்கேற்ற வெற்றி அவருக்கு நிச்சயம் கிடைக்கும். கவிமணியின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,
உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
பாறை பொடியாய்ப் போகாதோ?
அதுவும் குறிப்பாக, தன்னலனுக்காக அன்றி பொதுநலனுக்காக இயங்கும் ஒருவருக்கு ஊழ் தனது ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு, தானே முன்வந்து துணை செய்யும் என்கிறார் வள்ளுவர்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.