சுப. உதயகுமாரன்
<15> கோப மேலாண்மை
நமது சமூகத்தின் குறைகளை, அநியாயங்களை, ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வெகுண்டெழுந்து அவற்றை மாற்றத்துடிக்கும் ஆர்வமிக்க பருவம்தான் இளம்பருவம். பலரும் இளமையில் முற்போக்குவாதியாகவும், முதுமையில் பழமைவாதியாகவும் இருப்பது வயதோடு தொடர்புடைய ஒன்றுதான்.
இளம்பருவத்தின் பெரிய பிரச்சினைகளுள் ஒன்று கோபம் கொள்வது. நம்முடைய கருத்துக்கு, விழுமியங்களுக்கு, நம்பிக்கைகளுக்கு, அடையாளத்துக்கு, உடமைகளுக்கு, அகங்காரத்துக்கு ஓர் ஆபத்து ஏற்படும்போது, கோபம் வருகிறது. கோபமடையவேக் கூடாது என்று சிலர் வாதிடும்போது, வேறு சிலர் கோபம் தவறான, மோசமான உணர்வல்ல, கோபம் கொள்கிறவர்கள் அனைவருமே தவறானவர்களும், மோசமானவர்களும் அல்லர் என்று கருதுகின்றனர்.
இயேசு பிரான் தன் வாழ்நாள் முழுவதும் கோபக்காரராகவே இருந்தார் என்று ஒரு கட்டுரைப் படித்தேன். அதனால்தான் ஜெருசலேம் நகர வட்டிக்கடைக்காரர்களின் கடைகளை கம்பால் அடித்து உடைத்தார் அவர். எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்கிறார்: “எனது கோபத்தில் நிறைய நியாயம் உண்டு. என் உள்ளே கோபம் உருவாவது குறித்து எனக்குக் கவலை இல்லை. கோபம் என்கிற நல்லுணர்ச்சி இல்லாவிட்டால் நான் மானம் அற்றுத் திரிகிற பேடியாகிவிடுவேன். நான் கோபமே கொள்ளாதிருக்குமளவுக்கு இந்த உலகம் ஒன்றும் யோக்கியமாக இல்லை.”
சமூக ஏற்பாடுகளின் மீது, கட்டமைப்புக்களின் மீது அறச்சீற்றம் இல்லாமல் போயிருந்தால், மோகன்தாஸ் காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ், நெல்சன் மண்டேலா போன்ற ஒப்பாரும், மிக்காரும் இல்லாத் தலைவர்கள் ஒருபோதும் உருவாகியிருக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோருமே சினத்தை நேர்மறையாக சமூக மாற்றத்துக்கான மூலதனமாக பயன்படுத்தினார்கள். அதனால்தான் கோபத்துக்கும் ஆக்கத்திறனுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாக கருதுகிறோம்.
ஆனால் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் கோபக்காரராக இருந்தால், அது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. எப்போதாவது கோபமடைவது வேறு, எப்போதும் கோபமாய் இருப்பது வேறு.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
நீங்கள் அடிக்கடி கோபமடைகிறீர்களா? பிறரோடுப் புழங்கும்போது, பொறுமை இழக்கிறீர்களா? அவர்களுக்கு மிரட்டல் விடுக்கிறீர்களா, அல்லது மோசமான வார்த்தைகளால் திட்டுகிறீர்களா? நீங்கள் கோபப்படும்போது, அடுத்தவரை அடிக்கிறீர்களா? அல்லது கையில் கிடைப்பதைத் தூக்கி எறிகிறீர்களா? அல்லது எதையாவது காலால் எட்டி உதைக்கிறீர்களா? ஆம் என்பது உங்களின் பதிலானால், கோபம் மட்டுமே உங்களுடைய ஒரே முக்கியமான உணர்வாக இருந்தால், நீங்கள் உடனடியாக அதனை மேலாண்மை செய்தாக வேண்டும்.
புத்தபிரான் சொல்கிறார்: “கோபத்தில் உழல்வது என்பது எரிந்து கொண்டிருக்கும் கரிக்கொட்டையை கைக்குள் வைத்துக்கொண்டு யார் மீது எறியலாம் என்று பார்த்துக்கொண்டிருப்பது போன்றது. இறுதியில் உங்கள் கைதான் எரிந்து போகும்.”
ஆம், கோபம் நெருப்பைப் போன்றது. இதை தேவைப்படும் இடங்களில் மட்டும் தேவையான அளவு கவனமாக பயன்படுத்தி சாதனைகள் படைக்கலாம். மாறாக, காணும் இடங்களில் எல்லாம், கட்டுப்பாடுகள் இன்றி, கவனமின்றிக் கையாண்டால், பெரும் குற்றங்களுக்குள் சிக்கிச் சீரழியும் அவலநிலையை சினம் உருவாக்கிவிடும்.
உங்களுக்கு வெஞ்சினப் பிரச்சினை இருக்கிறது என்றுணர்ந்தால், அதனைத் திறம்பட மேலாண்மை செய்தாக வேண்டும்.
முதலில், எது உங்களைக் கோபப்படுத்துகிறது என்பதைக் கண்டுணருங்கள். எந்தவொரு குறிப்பிட்ட சந்தர்ப்பமும் கோபத்தை உருவாக்குவதில்லை; மாறாக நீங்கள் அதைக் குறித்து எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதுதான் கோபத்தைக் கிளறுகிறது. எனவே மனதை பிரச்சினையின்மீதும், அதனை எப்படி அமைதியாக, முறைப்படியாக கையாள்வது என்பதன் மீதும் செலுத்துங்கள்.
“ஆகட்டும், பார்க்கலாம்” என்கிற “Take it easy” மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். ரெயினோல்ட் நியூபூர் (1892–1971) எனும் அமெரிக்க இறையியலாளர் ஓர் அமைதி பிரார்த்தனையை அறிமுகப்படுத்தினார்:
“இறைவா, என்னால் மாற்ற முடியாத விடயங்களை ஏற்றுக்கொள்ளும் சமநிலையையும்,
என்னால் மாற்ற முடியும் விடயங்களை மாற்றியமைக்கும் தைரியத்தையும்,
இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ளும் ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக!”
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
உங்கள் வாழ்வின் நிகழ்வுகள், விடயங்கள் போன்றவை இப்படித்தான் நிகழ வேண்டும் என்கிற பிடிவாதத்தைக் கைவிடுங்கள். உங்கள் எதிர்பார்ப்புக்களை சற்றே தளர்த்திக் கொள்ளுங்கள். பிறரைக் கட்டுப்படுத்தவேண்டும் எனும் விருப்பத்தை விட்டொழியுங்கள். வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறரை மரியாதையோடு நடத்துங்கள்.
அவர்களோடு ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும்போது, உங்களை எது பாதிக்கிறது என்பதை நேரடியாக, துல்லியமாக, அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். “நீங்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டீர்கள்” என்று ஒருவர் மீது குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, “நான் அவமானப்படுத்தப்பட்டது போன்று உணர்கிறேன்” எனபது போன்ற ‘நான்-வாக்கியங்களை” பயன்படுத்துங்கள். உங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறுகள் எழுந்தனவாம். இருவரும் ஒருவரையொருவர் கோபமான வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும்போது, விடயம் விபரீதமாகிப் போனதாம். தீர்வுக்காக ஓர் ஆற்றுப்படுத்துனரை இருவரும் அணுகினார்களாம். அவர் ஓர் எளிய பயிற்சியை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். வாக்குவாதம் வரும்போது, யாராவது ஒருவர் தன் வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக் கொண்டு, அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். அலையடித்து ஓய்ந்த பிறகு, அவர் தன் வாயிலிருக்கும் தண்ணீரைக் கொப்பளிக்கலாம்.
உங்கள் கோபத்துக்கு மற்றவர்களை குறை சொல்வதைவிட, நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். கோபம் வரும்போது, ஓர் இடைவேளை எடுத்துக்கொண்டு, பல்வேறு தீர்வுகளைப் பற்றி சிந்தியுங்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கோபப்படுவது பலவீனத்தின் வெளிப்பாடு, அது அதிகாரத்தின், கட்டுப்பாட்டின் தன்மை அல்ல என்பதை உணருங்கள். நீங்கள் சினம் கொள்ளும்போது, நிலைமை உங்கள் கட்டுக்குள் இல்லை என்றே பொருள் கொள்ளப்படும். நீங்கள் பலவீனமானவராகவேப் பார்க்கப்படுவீர்கள். உங்கள் மீதான பிடி தளரும்போது, உடனடியாக அதை உணர்ந்துகொண்டு, உங்கள் கியரை மாற்றி, பிரேக் போடுங்கள். ஆழமாக மூச்சு விடுங்கள்
கோபத்துக்கும், நம் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. உடலில் எழும் இரசாயன மாற்றங்களால், வெறிபிடித்தார் போன்ற மனநிலையும், கட்டுக்கடங்காத ஆத்திரமும் எழலாம். அதிகரிக்கும் வேலைப்பளு, அலுவல்களில் இடையூறுகள், மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவை கோபம் ஏற்பட ஏதுவாக அமைகின்றன.
கோபமடையும்போது, உங்கள் உடல் எப்படி மாற்றமடைகிறது என்பதை அவதானியுங்கள். முறைத்துப் பார்ப்பது, பற்களைக் கடிப்பது, உடல் தசைகள் இறுகுவது, உள்ளங்கைகள் வியர்ப்பது போன்றவை கோபத்தால் உடலில் எழும் மாற்றங்கள். கோபத்தால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, மாரடைப்பு, சீரணமின்மை, தோல் நோய்கள், பசியின்மை, மன அழுத்தம், தனிமையுணர்வு, தூக்கமின்மை, ஆண்மையின்மை, விரக்தி, சந்தேகம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இன்று முதல் உங்கள் முகத்திலிருந்து அந்த முறைப்பை நீக்கிவிட்டு, அதனை ஆயாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சுவிட்டு, உடல் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு, அமைதியாகப் பேசுங்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மனதிற்கு இதமான இசையைக் கேளுங்கள், தியானம் செய்யுங்கள், புத்தகம் படியுங்கள்.
கோபம் குறித்த ஒட்டுமொத்த விவாதத்தையும் ஏழே வார்த்தைகளில் நறுக்கெனச் சொல்கிறது வள்ளுவம்:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையேக் கொல்லும் சினம்.
சினம் இருக்கும் இடத்தில் கர்வம், பேராசை, காமம், பொறாமை போன்ற எந்த வார்த்தையையும் இட்டுநிரப்பித் தெளிவடையலாம்.
இன்றையச் சமூகத்தில் சில சமூகவிரோத சக்திகள் கோபத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர். மக்களைக் கோபப்படுத்துவதும், அந்த கோபத்தை ஒரு குறிப்பிட்ட தரப்பின்மீது திருப்பிவிடுவதும் ஆட்சி அதிகாரச் சதிகளாக இருக்கின்றன. இதனால் கோபம் வெறுப்போடு சேர்ந்து தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
நம்முடைய திரைப்படங்களில் கோபமும், வன்முறையும் கொப்பளிக்கின்றன. காவல்நிலையங்களில், சாலைகளில், பள்ளிக்கூடங்களில் என எல்லா இடங்களிலும் கோபம் உயிர்களைப் பலிவாங்குகிறது. பெருகிவரும் கொலைக் குற்றங்களுக்குப் பின்னால் கோபம் இருக்கிறது. அதிகரித்து வரும் தற்கொலைகள் பலவற்றுக்குப் பின்னாலும் கோபம் இருக்கிறது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இன்றைய மிகப் பெரிய சமூக அவலம் என்பது பச்சைக் குழந்தைகள்கூட கோபத்திற்குள்ளாவதுதான். பொறுப்பற்ற பெற்றோர், குடும்ப வன்முறை, தரமற்ற கல்வி என பல்வேறு காரணங்களால் குழந்தைகள் கோபத்திற்கு ஆளாகிறார்கள். கோபப்படும் குழந்தைகளை கவனமாக வெளிக்கொணர வேண்டும். “அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே” என்று கட்டுப்படுத்த முயற்சிக்காமல், “எப்படிச் செய்வது” என்று பொறுமையாகக் கற்பிக்கலாம். அவர்களிடம் மனம்விட்டுப் பேசி, உள்ளக்கிடக்கைகளை அறிந்துணர்ந்து, அவர்களின் பிஞ்சு மனங்களில் குடிகொண்டிருக்கும் கோபத்தை நீக்குவது மிகவும் அவசியம்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.