சுப. உதயகுமாரன்
<16> காதல்/காமம் மேலாண்மை
வாழ்வின் எந்த காலக்கட்டத்தையும்விட, ஹார்மோன்களும், காதலும், காமமும் களிநடம் புரியும் இளமைப்பருவத்தில்தான் ஐந்தவிக்கும் திறன் அவசியம் தேவைப்படுகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களின் மேலாண்மை இப்பருவத்தில் இன்றியமையாததாக இருக்கிறது. தொடுவது, உண்பது, குடிப்பது, பேசுவது, பார்ப்பது, முகர்வது, கேட்பது என அனைத்திலும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
இளமைப்பருவத்தில் பலர் ஈர்ப்பு (crush), மோகம் (infatuation), காதல் (love), காமம் (lust) என பல்வேறு வழிகளில் எதிர்பாலரால் கவரப்படுகிறீர்கள். சிலர் ஒருதலைக்காதல், பொருந்தாக்காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் சிக்கலான விடயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறீர்கள். உணர்வுகளைத் தூண்டும் பத்திரிக்கைப் படங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், திரைப்படக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையதளங்கள் என இளைஞர்கள் பல்முனைத் தாக்குதலுக்கும் உள்ளாகிறீர்கள்.
வலுவான குடும்பப் பின்னணி இல்லாதவர்கள், தேர்ந்த வளர்ப்பு முறை வாய்க்காதவர்கள், பலவீனமானவர்கள், பொறுப்பற்றவர்கள் பலரும் சிக்கல்களுக்கு உள்ளாகும் அவலம் நிகழ்கிறது. வேலையின்றி, வருமானமின்றி, உரிய மனப்பக்குவமின்றி, பல்வேறு குடும்பப் பொறுப்புக்களை நிறைவேற்றும் வழிகளின்றி, கண்களை மூடிக்கொண்டு காதலில் விழுவோர், காமத்தில் சிக்குவோர் நிலை பரிதாபகரமாகிப் போகிறது. இதனால் பெண்களைப் பின்தொடர்தல், கேலி செய்தல், பாலியல் தொந்திரவுகளில் ஈடுபடுதல், காதல் வயப்படுதல், ஓடிப்போதல், பதின்பருவ கர்ப்பம், கருக்கலைப்பு, தற்கொலை, ஆணவக்கொலை என ஏராளமானப் பிரச்சினைகள் எழுகின்றன.
இன்றைய இளைஞர்களுக்கு யாரும் பெரிதாக உதவிகள் எதுவும் செய்வதில்லை. பெரும்பாலானப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு பாலியல் பற்றி மட்டுமல்ல, எதைப்பற்றியும் பேசுவதே இல்லை. கூட்டுக்குடும்பம், குடும்ப நண்பர்கள், வயதான வழிகாட்டிகள் போன்ற ஆதரவு அமைப்புக்கள் எல்லாம் அருகிக்கொண்டிருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில், பல இளைஞர்கள் தனித்து விடப்படுகிறீர்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வி கற்றுக் கொடுப்பதில்லை. அங்கே ஆற்றுப்படுத்துனர் யாரையும் பணிக்கு அமர்த்துவதில்லை. ஆசிரியர்களுக்கு பதின்பருவத்தினரோடுப் பழகும் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. கருணை, கரிசனம், கடமையுணர்வு போன்ற விழுமியங்கள் ஏதுமில்லாத அரசுத் துறைகள் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகளை வெறும் ‘கேஸ்கள்’ (cases) என்றே பார்க்கின்றன.
நேர்மறை ஆதரவு அமைப்புக்களுக்குப் பதிலாக, எதிர்மறை அழிவுசக்திகள் ஆட்டம் போடுகின்றன. வேடதாரி மதகுருமார்களும், பொல்லாப் பிரமுகர்களும், போலி மருத்துவர்களும், தன்னல வழக்குரைஞர்களும், நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களும் பிரச்சினைக்கு உள்ளானவர்களிடமிருந்து பிடுங்கித் தின்று, அவர்களைப் பிய்த்து எறிகின்றனர். இறுதியில் ஒவ்வொரு கதையும் கட்டப்பஞ்சாயத்து, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், ஆள்கடத்தல், ஆணவக்கொலை என ஒவ்வொருவிதமான முடிவை நோக்கிச் செல்கின்றன. கையறுநிலைக்குத் தள்ளப்படும் சில இளைஞர்கள் பெற்றோரிடமிருந்து, உற்றாரிடமிருந்து, சமூகத்திடமிருந்து விலகியோடி, தங்களை மாய்த்துக்கொள்ளவும் செய்கின்றனர்.
இப்படி ஊரார் இகழும் ஒருவராக வாடி அழிய வேண்டுமா, அல்லது உலகத்தார் புகழும் ஓர் ஆளுமையாக வாழ்ந்துத் தழைக்க வேண்டுமா என்பது முழுக்க முழுக்க உங்கள் கைகளில் இருக்கும் விடயம். இந்த மாபெரும் பொறுப்பை எப்படி கையாளப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. காதலும், காமமும் வாழ்வின் அடிப்படையானவைதான் என்றாலும், அவை காலம்கருதி, கவனமாக மேலாண்மை செய்யப்பட வேண்டியவை.
காதலையும், காமத்தையும் முற்றிலுமாக மறுத்து, அதனை முழுக்க நசுக்கி அழித்துவிட எத்தனிப்பது அறிவார்ந்த விடயமல்ல. தண்ணீருக்குள் அமுக்கப்படும் பந்துபோல, அது இன்னும் வீரியமாக மேலெழுந்து வரும். அதேநேரம், அவற்றுக்கு இரையாகிவிடுவதும் ஏற்புடையதல்ல. அறிவார்ந்த ஒரு மையப்புள்ளியில் நிலைத்து நின்று பயணிப்பதுதான் சாலச்சிறந்த வழி.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஈர்ப்பு, மோகம், காதல், காமம் போன்றவை நம்மில் யாரையும், எப்போதும், வாழ்வின் எந்த காலக்கட்டத்திலும் தாக்கலாம். உண்மையில், விழித்திருக்கும் வேளையெல்லாம் ஆண்களும், பெண்களும் காமம் பற்றி பலமுறை சிந்திப்பதாக உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த காதல்/காம உணர்வுகளின் பின்னால் ஓடுவதற்கு நாமொன்றும் விலங்குகளல்லவே?
காதல், காமம் போன்ற உணர்வுகளுக்கு உள்ளாகும்போது, ஒருகணம் உங்கள் அகக்கண்ணை அகலத் திறந்து உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்கள் தனிப்பட்ட நிலைமை, நிதி நிலைமை, குடும்ப நிலைமை, பொறுப்புக்கள், வருங்காலத் திட்டங்கள், கனவுகள் என எல்லாவற்றையும் கொஞ்சம் அலசுங்கள். இவற்றை எட்டிப்பிடிக்க, மேம்படுத்த, உயர்ந்தெழச் செய்ய அவ்வுணர்வுகள் உதவுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.
காதலில் விழுவது என்பது இப்படி அறிவினால் அலசப்படக்கூடிய ஒன்றல்ல, அது “கண்டதும்” நிகழ்வது, “விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவு” அது என்றெல்லாம் நீங்கள் நம்பினால், உங்களின் ‘காதல் தேவதை’ அல்லது ‘காதல் இளவரசன்’ அந்த காதலுக்கு தயாரா என்று முதலில் பாருங்கள். இல்லையென்றால், அப்படியே விட்டு விலகும் பக்குவத்தைப் பெறுங்கள்.
“நான் காதலித்தால், நீயும் காதலித்தே ஆக வேண்டும்” என்று நிர்பந்திப்பது கயமையிலும் கயமை, கடைந்தெடுத்தக் குற்றம். “எனக்கு கிடைக்காதது இன்னொருவருக்கு கிடைக்கக் கூடாது” என்று சினிமா வசனம் பேசி, குணநலன் அவதூறு (character assassination) பேசுவது, ஆசிட் வீசுவது, பலாத்காரம் செய்வது, கொன்றொழிப்பது போன்றவை கொடூரமான குற்றச் செயல்கள். எள்ளளவும் காதலோ, அன்போ, மனிதத்தன்மையோ இல்லாத மிருகச் செயல்கள். “இல்லை, வேண்டாம், முடியாது” என்றெல்லாம் பதில் சொல்லும் உரிமை அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கும், இருக்கிறது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஒருவேளை, உங்கள் கூட்டாளியும் அணியமாக இருந்தால், இருவருமே உடலளவில், மனத்தளவில், சட்டரீதியாக, பொருளாதார ரீதியாக, குடும்ப ரீதியாக புதிய வாழ்க்கைக்கு உசிதமானவர்களா என்று உங்களையேக் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், அதற்கான காலம் கனியும்வரைக் காத்திருக்கும் பொறுமையை, முதிர்ச்சியை கைக்கொள்ளுங்கள்.
உங்கள் உணர்வு வெறும் பாலியல் கவர்ச்சி என்றால், ஓடிக் கடந்துவிடுவதுதான் ஒரே வழி. இல்லையேல் குற்ற வழக்குகளில் சிக்கி, சிறைக்குச் செல்லும் வாய்ப்புக்கள் உருவாகிவிடும் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
அண்மையில் ஒரு நாள் ஒரு வெளியூர் பயணத்துக்காக அதிகாலை நான்கு மணியளவில் தனியாக நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது தளதளவென்று சேலைக் கட்டிய, தலைநிறைய பூ வைத்திருந்த ஓர் அழகான இளம்பெண் மெல்லிதாக சிரித்தவாறே என்னை நோக்கி நடந்து வந்தார்.
“யார் இது, தெரிந்த பெண்ணா, பெயர் என்ன, எங்காவது கூட்டங்களில் சந்தித்திருப்போமோ” என்றெல்லாம் சிந்தித்தவாறே நான் நின்றிருந்தேன். என்னருகே வந்ததும் அந்தப் பெண், உடலையும், தலையையும் நளினமாக அசைத்தவாறே, “என்ன, தூரமா?” என்றார்.
“நீங்க யார்னு எனக்கு தெரியல்லையே?” என்றேன் நான்.
அந்தப் பெண் மேலும் ஓரடி என்னிடம் நெருங்கிவந்து, கிசுகிசுக் குரலில் “போவோமா?” என்றார். எனக்கு விடயம் புரிந்தது. ஆனால் காமமெல்லாம் தோன்றவில்லை; மாறாக, இந்த கையாலாகாச் சமூகத்தில் ஓர் இளம்பெண் இப்படி வாழ வேண்டியிருக்கிறதே என்கிற குற்றவுணர்ச்சியே மேலோங்கியது.
அவர் தோளை இலேசாகத் தொட்டு, “இல்லம்மா” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
வயதான ஒருவருக்கே இப்படியெல்லாம் நடக்கிறது என்றால், இளைஞர்கள் எவ்வளவு பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாவீர்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நீட்டிமுழக்கும் நம்முடைய பத்தாம்பசலித்தனமானச் சமூகத்தில் பாலியல் விடயங்கள் பற்றி யாரும் யாரிடமும், எதுவும் பேச மாட்டோம்.
ஒருவரின் பாலியல் தன்மை (sexuality), பாலியல் ஈடுபாடுகள் (sexual preferences), காதல் வாழ்க்கை (sex life) பற்றியெல்லாம் நாம் மூச்சுக்கூட விடுவதில்லை. குறிப்பாக நம் சமூகத்தில் ஒரு பெண் இவை பற்றியெல்லாம் பேசவே முடியாது, தனது கணவனிடம்கூட பேச முடியாது. பேசினால், அவளது கற்பு, ஒழுக்கம் உடனே கேள்விக்குள்ளாக்கப்படும்.
இவற்றையெல்லாம் இளைஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். இங்கே ஒரு பாலியல் புரட்சி (sexual revolution) நடந்தாக வேண்டும். இதனை பெண்கள் முன்னெடுக்க வேண்டும். இப்படிச் சொல்வதன் அர்த்தம் அனைவரும் ஒழுக்கக்கேடாக நடக்க வேண்டும் என்பதல்ல; உள்ளொன்று வைத்து வெளியொன்று காட்டும் கபடதாரிகளாக அல்லாமல், ஒளிவுமறைவின்றி பேசிப் பழகி, வாழவேண்டும் என்பதுதான். பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினருக்கும் பாலியல் கல்வி (sex education) தேவைப்படுகிறது. அதேபோல, மக்களின் பாலியல் நலம் (sexual health) குறித்த பொது விவாதங்களும் தேவைப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
நமது பண்டைச் சமூகத்தில் காமத்தைக் கொண்டாடினோம். சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்களே இதற்கு சான்று. இப்போது சினிமா நடிகையரை மட்டும் காட்சிப் பொருளாக்கி விட்டு, அதற்கு அப்பால் காமம் என ஒன்று வாழ்வின் முக்கிய அம்சமாக இருப்பதையே மறுக்க, மறைக்க முயல்கிறோம். பசி/தாகத்துக்கு அடுத்த முக்கிய மனித உணர்வு காமம்தான்.
பசி/தாகம் தீர்க்க வீடும், ஆயிரமாயிரம் உணவகங்களும் உள்ளன. ஆனால் காமம் தீர்க்க சில வக்கிரமான ஆண்கள் பலவீனமான, எதிர்க்கும் சக்தியற்ற இளம் குழந்தைகளைத் தேடுகின்றனர். அல்லது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் படிக்கும், வேலைப்பார்க்கும், கட்டுக்குள் இருக்கும் பெண்களை வீழ்த்தப் பார்க்கின்றனர்.
பெண் என்பவள் ஆணுக்குத் தேவைப்படும்போதெல்லாம் திறந்து எடுத்துக்கொள்ளும் மிட்டாய்ப் பெட்டி (ஸ்வீட் பாக்ஸ்) அல்ல எனும் புரிதல் வேண்டும். அவளுக்கும் விருப்பு வெறுப்புக்கள், கனவுகள், தெரிவுகள், முடிவெடுக்கும் திறன் போன்றவை இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒத்திசைவானக் காமம் (consensual sex) அங்கீகரிக்கப்பட வேண்டும். பொதுச்சமூகமோ, போலீசோ ரெய்டு நடத்தவோ, தலையிடவோ எந்த உரிமையும் இல்லை என்றாக வேண்டும். தங்கும் விடுதிகளில் போய் ஆட்களைப் பிடிப்பது, பெண்கள் மீது மட்டும் விபச்சார வழக்குப் போடுவது, காமம் என்பதை மாபெரும் குற்றமாக்குவது போன்ற நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானவை. பாலியல் தொழிலை அங்கீகரிப்பது, ஓரினச் சேர்க்கையாளர்களை வெறுத்தொதுக்காமல் இருப்பது, பாலியல் பொருட்களுக்கானக் கடைகள் அமைப்பது போன்ற பல முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
திருமண உறவு, நம்பிக்கை, கண்ணியம் போன்றவை கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனாலும் குடிகாரன், பெண் கொந்தன், கிரிமினல் போன்றோருடன் அவன் மனைவி வாழ்ந்தே தீர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது. அவனை மணவிலக்கு செய்துவிட்டு, இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 17
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.