சுப. உதயகுமாரன்
[17] வெறுப்பு மேலாண்மை
வெறுப்புப் பேச்சு, வெறுப்பரசியல், வெறுப்புக் குற்றங்கள் என்று நமது உலகம் வெறுப்பாளர்களாலும், வெறுப்புணர்வாலும் பீடிக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், இந்த வெறுப்புப் பொறிக்குள் விழாமல் தப்பித்துக்கொள்வது இன்றைய இளைஞர்களாகிய உங்களுக்கு பெரும் சவாலாகவே அமைகிறது.
தேசம், சாதி, மதம், இனம், மொழி, பால், பாலியல் விருப்பு, வகுப்பு, தலைமுறை என ஏதாவதொன்றின் அடிப்படையில் சகமனிதர்களை வெறுப்போடு அணுகும் அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இடம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள், வெளிநாட்டவர், சிறுபான்மையினர் என யாரையும் வெறுப்பு விட்டுவைப்பதில்லை.
பல ஐரோப்பிய நாடுகளில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களை ஒரு கலாச்சார ஆபத்தாக, வளங்களைத் திருடவந்த திருடர்களாக, தாழ்வானவர்களாகவே பலரும் பார்க்கின்றனர். பல நாடுகளில் இசுலாமியர்களுக்கு எதிரான ‘இசுலாமோஃபோபியா’ எனும் வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. இணையத்தில் ஆபாசத் தளங்களைவிட வெறுப்புத் தளங்களே அதிகம் இருக்கின்றன.
வெறுப்பு என்பது ஒரு சிந்தனை முறை. அது சமூகத்தை ‘நாம்—அவர்கள்’ என்று பிரிக்கிறது. ‘நாம்’ அனைவரும் நல்லவர்கள், வல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று உறுதிபட ஏற்றுக்கொள்ளும் இந்த மனப்பாங்கு, ‘அவர்கள்’ அனைவரும் மோசமானவர்கள், நாசமானவர்கள், தாழ்ந்தவர்கள் என்று தீவிரமாக நம்புகிறது. ‘நாம்’ எந்தவிதமான சுயவிமரிசனத்துக்கும் உள்ளாக்கப்பட முடியாதவர்கள்; அதேபோல, ‘அவர்கள்’ எந்த கருத்துப்பரிமாற்றத்துக்கும், கலந்துரையாடலுக்கும் லாயக்கற்றவர்கள் என்று கருதுகிறது.
வெறுப்பு என்பது எண்ணங்களின், கருத்துக்களின், உணர்வுகளின் மூடப்பட்ட ஓர் அமைப்பு. அது மிக எளிதாக, விரைவாக பொதுமைப்படுத்துகிறது. அதாவது எந்தவிதமான நேரடி அனுபவங்களோ, நிரூபணங்களோ, சாட்சியங்களோ இல்லாமல், பொத்தாம்பொதுவாக ‘அவர்கள்’ நம்பமுடியாதவர்கள், தூய்மையற்றவர்கள், எமாற்றுக்காரர்கள் என்றெல்லாம் கருதுகிறது, கடிதில் பரப்புகிறது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இப்படியாக நாம் யார், நமது எதிரி யார், நமக்கு என்ன வேண்டும் என்பவற்றையெல்லாம் தெளிவாக்கிய பிறகு, வெறுப்பு அரசியல் முழுவீச்சில் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கேற்ப, அங்கே நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப, காலத்தின் தேவைகளுக்கேற்ப வெறுப்பரசியல் தன்னை உருமாற்றிக்கொண்டு உலா வருகிறது.
‘எதிரி’யின் சிறுமையைப் பற்றிப் பேசும்போது, நமது பெருமை முக்கியமாகிறது. இன அறிவியலை போதித்து நாம் எப்படி உயர்ந்தவர்கள், மேன்மையானவர்கள் என்பதையெல்லாம் அவர்கள் விவரிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இன வெறியை ஊட்டுவார்கள். நம் இனத்தின் இரத்த சுத்தத்தைப் பேணுவோம் என்பார்கள்; இல்லாத வரலாற்றுப் பெருமைகளை மீட்போம் என்பார்கள் இவை அனைத்தையும் செவ்வனேச் செய்துமுடிக்க, தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று கோருவார்கள்.
இப்படியாக சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பை “சரிசெய்ய” முனையும் இந்த வெறுப்பு அதிகாரத்தைத் தேடுகிறது. அதேபோல, அதிகாரம் பெறுவதற்கும் இந்த வெறுப்பு பெரும் துணையாக அமைகிறது. சிறுபான்மையினர், வந்தேறிகள், கருப்பானவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், நாடோடிகள், அரசியல் எதிர்த்தரப்பினர் என எல்லோருமே எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்கள்.
இனப்படுகொலை நடந்த பல நாடுகளில் அதிகாரம் கொண்டோர் தங்கள் கொலைபாதகத்தை நியாயப்படுத்த எதிர்த்தரப்பை கரப்பான் பூச்சிகள், கரையான்கள் என்றெல்லாம் அழைத்து, அவர்களின் மனிதத்தை மறுத்தார்கள். எதிரே நிற்பவர்கள் கரப்பான்பூச்சிகளாகப் பார்க்கப்படும்போது, அவர்களைக் கொலை செய்வது எளிதாகிறது.
வெறுப்புணர்வு தாங்கள் வெறுக்கும் மனிதர்கள் குறித்த பல்வேறு தப்பெண்ணங்கள், முற்கோள்கள், முன்முடிவுகளோடு இயங்குகிறது. தனிநபர்களை ஒரு மனிதராகப் பார்க்காமல், தாங்கள் வெறுக்கும் குமுகத்தின் அங்கத்தினராக மட்டுமேப் பார்த்து வெறுத்தொதுக்குகிறது.
வெறுப்பாளர்கள் தங்களின் ‘எதிராளிகளை’ப் பற்றி தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு, வேற்றுப்படுத்துவது, விலக்கிவைப்பது, வெறுத்தொதுக்குவது என்றே இயங்குகின்றனர். இந்த மாந்தநேயமற்ற அணுகுமுறைக்கு அரசியல் காரணங்கள், பொருளாதாரக் கணக்குகள், மனோதத்துவ பிரச்சினைகள் என பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, பாலியல் வெறுப்பு கொண்டோர் பெண்களை மோசமானவர்கள், ஆபத்தானவர்கள், தீட்டானவர்கள், தீங்கானவர்கள் என்று வெறுத்து ஒதுக்குகின்றனர். வெள்ளையின இனவெறியர்கள் வெள்ளையர் மேலாதிக்கம் பற்றிப் பேசி நாசிக் கொள்கைகளோடும், செயல்பாடுகளோடும் இயங்குகின்றனர். இப்படியாக தங்கள் மனநோய்க்குத் தக்கவாறு, எதிர்த்தரப்பை இவர்கள் வார்த்து, வகைப்படுத்தி, பலிகடா ஆக்கி, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிகள் சுமத்துகின்றனர்.
இம்மாதிரியான வெறுப்புக் குழுக்கள், அமைப்புகள், கட்சிகள் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளுக்கு பலிகிடாக்களைத் தேடுகிறார்கள். தாங்கள் ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தலாய் கருதுபவர்களை அழித்தொழிக்க முனைகிறார்கள். குறிப்பிட்ட சமூக அவலம் ஒன்றை துடைத்தெறிய வந்த தூதுவர்களாக தங்களைக் கருதிக்கொண்டு, தங்களின் மனநோயை பிறர் மீது சாமர்த்தியமாகத் திணிக்கிறவர்கள் இவர்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
வெறுப்பு என்பது நம்முடைய நவீன உலகில் ஓர் அரசியல் உபகரணமாக மாற்றப்பட்டிருக்கிறது. பசியும், பஞ்சமும், ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார நெருக்கடிகளும், அரசின் சிக்கன நடவடிக்கைகளுமாக ஒரு சமூகம் திண்டாடும்போது, குற்றம் கண்டுபிடிப்பதற்கும், குறை சொல்வதற்கும், பழிபோடுவதற்கும், பகையைத் தீர்த்துக்கொள்வதற்கும் ஒரு பலியாடு தேவைப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை வெறுப்பதும், வேற்றுப்படுத்துவதும், விரட்டியடிப்பதும், வேரறுப்பதும்தான் மீட்சிக்கான ஒரே வழி என்று வெறுப்பாளர்கள் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஆயிரம் வழிகளில் அதை மீண்டும் மீண்டும் நிறுவுவார்கள். திரும்பும் திசையெல்லாம் நின்று தினமும் கூவி மக்களை நம்பச் செய்வார்கள்.
ஏழை நாடுகளில் மட்டுமல்ல, பணக்கார நாடுகளிலும் வயிறார உண்டு, வாழ்வின் அனைத்து வாய்ப்பு வசதிகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறவர்களும் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். அமெரிக்காவில் வெறுப்பு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
தாமஸ் ஜெபர்சன் என்கிற முன்னாள் அதிபர் கறுப்பின மக்கள் சபிக்கப்பட்டவர்கள், மோசமான துர்நாற்றம் கொண்டவர்கள், கலைப்படைப்புக்கள், கவிதைகள் செய்யும் திறன் இல்லாதவர்கள் என்றெல்லாம் வசைபாடினார். இவர் ஏராளமான அடிமைகளை வைத்து பொருளீட்டியவர், பாலியல் பலாத்காரம் செய்தவர். ரிச்சர்ட் நிக்சன் எனும் அதிபர் “இந்த சின்ன நீக்ரோ வேசிமகன்கள்” (“these little Negro bastards”) என்று இழிவாகப் பேசினார்.
லிண்டன் ஜாண்சன் எனும் முன்னாள் அதிபர் கருப்பின மக்களை இனவெறிச் சொற்களால் பொதுவெளியில் நிந்தித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு அமெரிக்க நாடாளுமன்றத் தொகுதியை “பெருச்சாளிகளும், எலிகளும் மிகுந்த குழப்பம்” என்று வர்ணித்தார். ரொனால்ட் ரீகன் எனும் அதிபர் ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களையே குரங்குகள் என்றழைத்தார்.
வெறுப்பு வெறிகொண்டு அலையும் நபர்களிடம், குழுக்களிடம் அகப்பட்டுக்கொள்ளாதீர்கள்; அவர்களை அருகே அண்ட விடாதீர்கள். அவர்கள் உங்கள் பார்வையைக் குறுக்கி, உங்கள் இதயத்தைச் சுருக்கி, உங்கள் உணர்வுகளை இறுக்கி, உங்கள் உயிரை சிறுகச் செய்துவிடுவார்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
உங்களைச் சுற்றி, வாழ்விடத்திலோ, பணியிடத்திலோ, வழிபாட்டுத்தலத்திலோ வெறுப்புச் பேச்சு, வெறுப்பு அரசியல், வெறுப்புக் குற்றங்கள் நடந்தால், அவற்றை இனம் கண்டுகொள்ளுங்கள். அதைப் பற்றி உங்கள் குடும்பத்தாரோடு, உற்றார் உறவினரோடுப் பேசுங்கள். உங்கள் பகுதியில் குமுக உணர்வைப் பரப்பி, அதை நேர்மறைக் கதையாடல்கள் மூலம் நிலைநிறுத்தி, வெறுப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குங்கள். வெறுப்புக் குழுக்கள், வெறுப்பு ஆளுமைகள், பேச்சுக்கள், நடவடிக்கைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துங்கள்.
உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மறை விமரிசனத்திற்கும், எதிர்மறை விமரிசனத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளுங்கள். நேர்மறையாக விமரிசிக்கிறவர்கள் உங்கள் கருத்தை, செயல்பாட்டை உங்களுக்கு உதவும் வகையில் திறனாய்வு செய்கிறார்கள்; திறம்பட மாற்றியமைக்க உதவுகிறார்கள். அந்த ஆக்கபூர்வ விமரிசகர்கள் உங்கள் மீதான தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதில்லை. நீங்கள் இன்னும் உருப்படவும், உயரவும் வழிவகைகள் செய்திட விழைகிறார்கள். இப்படி மெய்யாக விமரிசிக்கிறவர்கள் பொய்யாகப் புகழ்கிறவர்களைவிட பன்மடங்கு மேலானவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஆனால் உங்களை வெறுக்கிறவர்களோ உங்கள் கருத்துக்களை, செயல்திட்டங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி, தடுமாறச் செய்கிறார்கள். அவர்கள் உங்கள் பலங்களைக் கண்டுகொள்ளாமல், பலவீனங்களை மிகைப்படுத்துகிறார்கள்.
இம்மாதிரியான தனிப்பட்ட வெறுப்புத் தாக்குதல்களை நேர்மறையாகக் கையாளும் வித்தையை அறிந்து கொள்ளுங்கள். எட்டையபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்கிற புகழ்பெற்ற புலவர் ஒருவர் இருந்தார். தனக்குப் போட்டியாக வளர்ந்துவந்த சுப்பையா (எ) சுப்பிரமணிய பாரதி எனும் சிறுவன் மீது அந்த அரசவைக் கவிஞருக்கு போட்டியும் பொறாமையும், வெறுப்பும் எழுந்தன.
ஒரு நாள் அரசவையில் ஒரு கவிதைப் போட்டி நடந்தது. ஒரு கவிஞர் பாடலின் கடைசி வரியை மட்டும் சொல்ல, இன்னொரு கவிஞர் அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்தப் போட்டி. பாரதிக்கு கடைசி வரியை எடுத்துக்கொடுக்கும் வாய்ப்பு காந்திமதிநாதனுக்குக் கிடைத்தது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
“பாரதி சின்னப்பயல்” என்கிற வரியோடு முடியும் கவிதையைப் பாடும்படி எகத்தாளமாய் காந்திமதிநாதன் சொல்ல, அரசவையே ஏளனமாய் சிரிக்க, வருங்காலத்தில் ‘மகாகவி’ என்று உலகமே பாராட்டவிருந்த பாரதியார் இப்படிப் பாடினார்: ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால் ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதிநாதனைப் பாரதி சின்னப்பயல்.
தன்னைவிட வயதில் இளையவன் என்கிற அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்து, மாண்பற்ற கருமையான இருள் போன்ற உள்ளத்தைக் கொண்ட காந்திமதிநாதனைப் பார், அதி (மிகவும்) சின்னப்பயல் என்று பாரதி பாடியதும், அரசவைக் கவிஞர் அவமானப்பட்டுப் போனாராம்.
அன்பும், அறிவும், அறமுமாய் வாழும் மனிதர்கள் சமூகத்தில் வெறுப்புக்கு எங்கும், எப்போதும் எள்ளளவும் இடம் கிடையாது என்றுணருங்கள். உங்கள் வாழ்க்கையை, வருங்காலத்தை அப்படியே தகவமைத்துக் கொள்ளுங்கள்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 18
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil