சுப. உதயகுமாரன்
[2] உடல்நலம் போற்றல்
உடல் மெலிந்து நலிந்திருந்த மகாத்மா காந்தி 1920-களின் பிற்பகுதியில் பஞ்சாப் மாநிலத்தில் வைத்து உருண்டு திரண்டிருந்த இந்திய மல்யுத்த வீரர் காமா என்பவரை சந்தித்தார். இருவரின் தோற்ற வேறுபாடுகள் குறித்து நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, காமா தன்னோடு மல்யுத்தம் புரிய தயாரா என்று மகாத்மா காந்தி சவால் விட்டார். காந்தியார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த காமா, இப்படி பதில் சொன்னார்: “தன்னந்தனியனாய் நின்று ஒரு பேரரசையேப் புரட்டிப் போட்டிருக்கும் ஒருவரோடு மோதி நான் எப்படி
வெற்றிபெற முடியும்?”
பலம் என்பது வெறும் உடலால் மட்டுமேப் பெறப்படுவதல்ல என்பதை காமா நாசூக்காகக் குறிப்பிட்டாலும், “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்?” என்பதும் உண்மைதானே? எனவே அந்தச் சுவரைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம்தானே?
இந்த உண்மையை நன்கு அறிந்திருந்த மகாத்மா காந்தி 1906-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தான் நடத்திய ‘இந்தியன் ஒப்பினியன்’ இதழில் “உடல்நலத்துக்கான வழிகாட்டி” எனும் தலைப்பில் சில கட்டுரைகள் எழுதினார். பின்னர் அவை ஒரு புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. பல இந்திய, ஐரோப்பிய மொழிகளில் அந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்றது.
அந்த கட்டுரைகளை மேம்படுத்தி எழுதுவதற்கு காந்தியார் விரும்பினாலும், அதற்குரிய நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. பின்னர் 1942-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புனே நகரின் ஆகா கான் அரண்மனையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, மேற்குறிப்பிட்ட நூலின் மூலப்பிரதி இல்லாமலே, அதனை மேம்படுத்தி எழுதி முடித்தார். அந்த புதிய நூலுக்கு “உடல்நலத்திற்கான சாவி” என்று பெயரிட்டார்.
உடல்நலம் குறித்த காந்தியச் சிந்தனையின் சாராம்சம் இதுதான்: “மனித இயந்திரத்தின் உள்ளார்ந்த வேலைகள் வியக்கத்தக்கவை. மனித உடல் என்பது பிரபஞ்சத்தின் சிறு வடிவம். நமது உடலைப் பற்றிய நம்முடைய அறிவு முழுமையானதாக இருந்தால், நாம் பிரபஞ்சத்தை செவ்வனே அறிந்துகொள்ளலாம்.”
காந்தியார் தொடர்கிறார்: “இந்த மனித உடலின் பயன் என்ன? உலகிலுள்ள எல்லாவற்றையும் போல, மனித உடலும் சரியான முறையிலும், தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படலாம். தன்னல நோக்கங்களுக்காக, தனது இன்பங்களுக்காக, இன்னொருவருக்குத் தீங்கு விளைவிப்பதற்காக உடலை பயன்படுத்துவது தவறான பயன்பாடு. நேர் மாறாக, தன்னையேக் கட்டுப்படுத்திக்கொண்டு, இவ்வுலகுக்கு சேவை செய்வதற்காக நம்மை அர்ப்பணிப்பது சரியான பயன்பாடு. …வெறும் மண்ணான இந்த உடலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென்றால், அதை சுத்தமாக, நல்ல நிலையில் வைத்திருப்பது நமது முதற்கடமை ஆகிறது.”
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
அளவான, ஊட்டச்சத்துமிக்க உணவை உண்பது, தேவையற்றவற்றை அறவே புறக்கணிப்பது, மவுனவிரதம், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், நடைபயணம், சிறைவாசம் என ஏராளமான வழிகளில் மகாத்மா காந்தி தன் உடலை நிர்வகித்தார், பயன்படுத்தினார் என்பதை நாமறிவோம். அதே நேரம், நாமெல்லோருமே காந்தியடிகள் போல உடலை ஆயுதமாக ஏந்தி ஓர் ஒப்பற்றப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டியதில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்தைத் திறம்பட நடத்துவதற்கு உடலை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
முதலில், நமது உடலை அதன் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்வது மிக முக்கியம். நமது நிறம், வடிவம், தோற்றம், உடற்பாகங்களின் நிறைகுறைகள் போன்றவை குறித்த தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது, ‘கருப்பாக இருக்கிறேனே’ என்கிற உணர்வு இருந்தது. தோலின் நிறத்தை அழகோடும், அறிவோடும், குணநலன்களோடும் இணைத்துப் பார்க்கும் நமது உலகில், இந்தியாவில், நவீனத் தமிழ்ச் சமூகத்தில், இப்படியான ஓர் உணர்வு ஆச்சரியமளிப்பதல்ல. என்னுடைய இருபத்தொன்றாவது
வயதில், எத்தியோப்பியா நாட்டுக்குச் சென்ற பிறகுதான் இந்த நிறவுணர்வு என்னைவிட்டு முற்றிலுமாக விலகியது. நமது உடலை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அது குறித்து நிறைவும், பெருமையும் அடைவது இன்றியமையாதது.
இரண்டாவதாக, உடலுக்குத் தேவையான உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பானத் தண்ணீர், சுத்தமானக் காற்று போன்றவற்றைப் பெறுவது அடிப்படையானது. உணவு சமைப்பதும், ஊட்டச்சத்துத் தேவைகளை மேலாண்மை செய்வதும் வீட்டுப் பெண்களின் பொறுப்பு என்கிற நிலைமையை மாற்றியமைத்து, நாம் அனைவரும் சமைக்கக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதேபோல, ஒவ்வொருவரும் அவரவரின் உணவு ஒவ்வாமைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை கவனமாகத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்.
உடலோம்புதல் பற்றிப் பாடுகிற பாவேந்தர் பாரதிதாசன் சொல்கிறார்:
கலங்காத நெஞ்சமே பெற்றாலென்ன
கற்றூண் நிகருடல் பெறவேண்டியே
இலங்கு புனல் குளிர் தென்றலும் இல்லமும்
அமைவுணவும் நிறை பெறுமாறே நாம்
(நலம் தேடுவோம் உடலோம்புவோம்)
இதையே கவிமணி வேறு வார்த்தைகளில் சொல்கிறார்:
தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின்உணவும்,
நோயைஓட்டி விடும்,அப்பா!
நூறு வயதும் தரும்,அப்பா!
“எதை உண்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்” எனும் சமற்கிருதச் சொலவடையில் உண்மை ஏதுமில்லை. புல்லைத் தின்னும் மாடு முட்ட வருவதும், புலால் உண்ணும் நாய் பாசம் பொழிவதும் உண்மைதானே? மாமிசம் உண்ணும் மனிதர்கள் எல்லோரும் வன்முறை வயப்படவுமில்லை, சாத்வீக உணவு சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் பிறரை அன்போடும், கண்ணியத்தோடும், சமூகநீதியோடும் நடத்தவுமில்லை.
மூன்றாவதாக, உடலை சுத்தமாக, சுகாதாரமானதாக, போதிய உழைப்பும், ஓய்வும் உடையதாக வைத்திருப்பது மிக
முக்கியமானது. கவிமணி இப்படி அறிவுரைக்கிறார்:
கூழை யேநீ குடித்தாலும்,
குளித்த பிறகு குடி,அப்பா!
ஏழை யேநீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
நான்காவதாக, உடலை நலிவடையச் செய்யும் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் நுகரும் பழக்கம் போன்றவற்றை மேற்கொள்ளாதிருத்தல் வேண்டும். இவற்றை தொடாதிருத்தல் நல்லது; அப்படியேத் தொட்டுவிட்டால், மேலும் தொடராதிருத்தல் அதனினும் சிறந்தது.
உடல்நலம் என்பதை உடல்ரீதியான, மனரீதியான, சமூகரீதியான முழுமையான நல்வாழ்வே என்று வரையறுக்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). உடல்ரீதியாக நமது வாழ்க்கை முழுவதும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
குறிப்பாக, பதின்பருவ இளைஞர்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள்தான் மிகப் பெரிய மாற்றங்கள் எனலாம். உடலில் ஹார்மோன்கள் சுரந்து, உடலின் உள்ளேயும், வெளியேயும் பல மாற்றங்கள் உருவாகின்றன. பருவமடையும் இளம்பெண்ணுக்கு மாதவிடாய் வருவதும், பெண்-சுகாதாரப் பிரச்சினைகள் எழுவதும் இயல்பு. இவற்றினால் தங்கள் உடல்கூறுகள், மாற்றங்கள் பற்றியெல்லாம் இளம்பெண்கள் ஓரளவு அறிந்துகொள்ள
முடிகிறது.
அதேபோல, பதின்பருவ இளைஞர்கள் உடலில் உரோமங்கள் வளருவதும், குரல் மாறுவதும் போன்ற மாற்றங்கள் எழுந்தாலும், அவர்கள் வயதுக்கு வந்த விபரம் அவர்களுக்கேத் தெரியாது. பள்ளிப் பாடங்களோ, வழிபாட்டுத்தல வகுப்புக்களோ, குடும்பம் போன்ற சமூக அமைப்புக்களோ அவர்களுக்கு பெரிதாக உதவுவதில்லை.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பதின்பருவ இளைஞர்கள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். மேற்குறிப்பிட்ட ஹார்மோன்கள் மற்றும் பருவ மாற்றங்களால், இவர்களுக்குள் பாலியல் கவர்ச்சி, கோபம், மகிழ்ச்சி, துக்கம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. தன்னுடனேயே நிறைவின்றி இருத்தல், மனஅழுத்தம்,தர்மசங்கடங்கள், குழப்பமான மனநிலை, பாதுகாப்பு உணர்வின்மை, கருத்துப்பரிமாற்றக் குளறுபடிகள், மற்றவர்களைப் பார்த்து அவ்வாறே நடந்துகொள்ளல் என ஏராளமானப் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
இப்பருவத்தில் தன்னுடைய அடையாளம், பாலியல் விருப்பு வெறுப்புக்கள், கூடிவாழ்தல் குறித்த குழப்பங்கள் என பல்வேறு சிக்கல்கள் மனதில் எழுகின்றன. தனித்திருப்பது, பெற்றோரைத் தவிர்ப்பது, திடீரென வளர்ந்து தோற்றப்பொலிவு பெறுவது, தன்னுடல் பற்றிய தன்னுணர்வுகள் உருவாவது, கேள்விகள் கேட்பது, எதிர்த்துப் பேசுவது, யாரையும் சார்ந்திருக்காமல் தன்காலில் நிற்க விரும்புவது போன்ற செயல்பாடுகளையும் காண முடியும்.
இன்னோரன்ன சங்கடங்களை எதிர்கொள்ளவும், தான் யார், தனது தனித்தன்மைகள் என்ன என்பனவற்றை நிரூபிக்கவும் பல இளைஞர்கள் மதுபானங்கள், போதைப்பொருட்கள், பாலியல் நடவடிக்கைகள், இணையவழி சாகசங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். பதின்பருவத்தைத் தாண்டிய இளைஞர்களும் இம்மாதிரி குழப்பங்களுக்கு உள்ளாகலாம்.
பதின்மூன்று (Thirteen) வயது முதல் பத்தொன்பது (Nineteen) வயது வரையிலான, பதின்பருவம் (Teen Age) இளைஞர்கள் வாழ்வில் மிகவும் சிக்கலானக் காலக்கட்டம். இளைஞர்கள் தங்களை முழுமையாக உணர்ந்துகொள்ளும் இருபதுகளின் பிற்பகுதி வரை, குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும், ஆசிரியர்களும், அனைவரும் அவர்களைப் புரிந்துகொள்வதும், நாசூக்காக அவர்களுக்கு உதவுவதும் மிகவும் முக்கியமானது. அவற்றுள் தலையாய உதவி என்பது கவிமணி அவர்கள் ரத்தினச்சுருக்கமாகச் சொல்லும் இந்தப் பேருண்மையை உணரவைப்பதுதான்:
உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்!
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com)
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 3
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“