Advertisment

சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 20

Social Activist Suba Udayakumaran New series about self management in tamil: நவீன வாழ்வில் மன அழுத்தத்தை நம்மால் முற்றிலும் தவிர்த்திட இயலாது. எனவே அதனை திறமையாக மேலாண்மை செய்து, ஒன்றி வாழ்ந்திடப் பழகி, அதனினின்றும் மீள்வதே சிறந்தது.

author-image
WebDesk
New Update
suba udayakumaran’s tamil Indian Express series on self management part - 20

Suba Udayakumaran

சுப. உதயகுமாரன்

Advertisment

<20> மனஅழுத்த மேலாண்மை

இன்றைய இளைஞர்களில் பலர் மனப்பதற்றம் (Anxiety), மனத்தளர்ச்சி (Distress), மனச்சோர்வு (Depression), மன அழுத்தம் (Tension) போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவதால், மனஅழுத்த மேலாண்மைத் திறன் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

மனச்சோர்வு (Depression) என்பது எதிர்மறை உணர்வுகளினின்றும் எழுவது. மிக மோசமான செய்தியைக் கேட்டவுடனோ, யாரையாவது எதையாவது இழந்தவுடனோ, அல்லது தனக்குள் தன்னைப் பற்றி எழுந்த ஐயம், வெறுப்பு, கோபம் இவற்றினாலோ மனச்சோர்வு ஏற்படலாம். இது மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஆழத்தைப் பொறுத்து, சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ இந்த உணர்வு நீங்கலாம். அல்லது மனத்திடமின்மை, வெறுமை, மகிழ்ச்சியின்மை என ஆயுள் முழுவதும் நீடிக்கவும் சாத்தியமுண்டு.

வேலைப் பளு, நீண்டகால நெருக்கடிநிலை உணர்வு, அதீத ஆர்வம் அல்லது பயம் போன்றவற்றால் உடல் பலமும், மன நலமும் பாதிக்கப்படுகின்றன. இதனால் வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சக்தி, மன தைரியம் குறைகிறது. உடலும் உள்ளமும் சக்தியிழக்கும்போது, மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புண்டாகிறது. சத்துணவு இல்லாமையும், கொழுப்பு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதும் உடல் நலத்தைக் கெடுத்து மனநலத்தையும் பாதிப்பதுண்டு. சில உணவுப் பொருட்களின் மேலுள்ள நமது பிடித்தமின்மையும் சில சமயங்களில் மனச் சோர்வையும் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன.

போதிய தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி மூலம் மனச்சோர்வினைத் தடுத்தழித்திடலாம். மனச்சோர்வினால் பீடிக்கப்பட்டுள்ளவர் பூரண நலம் பெற, பிறர் உதவியும் இன்றியமையாதது. அவர் செய்யும் சிறிய காரியங்கள்கூட ஊக்குவிக்கப்பட்டு, அவர் நேர்வழியில் நடத்தி செல்லப்பட வேண்டும். அவரிடமுள்ள திறமைகளும், நுணுக்கங்களும் தற்போது இல்லை என்கிற மாயையைத் தகர்த்தெறிந்து, உண்மையை உணரச் செய்தல் வேண்டும். இத்தகையவர்கள் சோம்பலுடன் வாளாவிருப்பது மிகவும் ஆபத்தான விடயம். சோர்வுற்ற நிலை, ‘தான் ஒரு கையாலாகாதவன்’ என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்து, மனச்சோர்வை அதிகரிக்கச் செய்கிறது.

பலமாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மருந்துகளின் மூலம் சாந்தப்படுத்தினால், தற்கொலை போன்ற விபரீதங்களைத் தடுத்திடலாம். அதிகாலையிலோ, இளமாலையிலோ சிறிய அளவில் உடற்பயிற்சிகள் செய்தல், உலாவச் செல்லுதல், ஆழ்ந்து மூச்சுவிடுதல், குளிர்ந்த நீர் அருந்துதல், மனச்சோர்வு எழக் காரணமாக இருந்த பிரச்சினையை முற்றிலுமாக நீக்குதல், தியானம், பிரார்த்தனை போன்றவை பாதிக்கப்பட்டவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் சில சாலச்சிறந்த மருத்துவங்கள்.

டென்ஷன் எனப்படும் மன அழுத்தம் அளப்பரிய எதிர்பார்ப்பு மற்றும் அமைதியற்ற ஆர்வமிக்க மன நிலையை உருவாக்கி ஒருவித பயத்தினை, படபடப்பினை எழச் செய்கிறது. நீங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவது? டாக்டர் பிராங்க் பினட்டி எனும் அமெரிக்க வல்லுனர் சில கேள்விகள் கொடுத்து, அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு நீங்கள் ‘ஆம்’ என பதிலிறுத்தால், உங்களை மன அழுத்தம் பீடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமென்கிறார்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

<1> சிறிய பிரச்சினைகளும் தோல்விகளும் உங்களை செயலிழக்கச் செய்கின்றனவா?
<2> பிறரோடு கலந்துறவாடுவது கடினமாகப்படுகிறதா?
<3> வாழ்வின் சிறிய மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் உங்களைத் திருப்தியடையச் செய்வதில்லையா?
<4> உங்கள் சிந்தனையோட்டத்தை நிறுத்த முடியாமலிருக்கிறதா?
<5> சங்கடங்களையும், சலனங்களையும், சில சந்தர்ப்பங்களையும் கண்டு பயப்படுகிறீர்களா?
<6> நண்பர்களையும் பிறரையும் சந்தேகிக்கிறீர்களா?
<7> எதற்குள்ளோ சிக்கிக் கொண்டதாக உணர்கிறீர்களா?
<8> சுய சந்தேகத்தினாலும், திறமையானவனல்லன் என்கிற உணர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

எப்போதெல்லாம் உடல் ஓர் உடனடிப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தூண்டப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒருவித ஆர்வமும், அழுத்தமும் நம்மில் எழுவதுண்டு. தவிர்க்க முடியாத இவ்வகை டென்ஷன் நமக்குக் கட்டாயம் தேவை. ஓர் ஓட்டப்பந்தய வீரன் பந்தயத்தின் துவக்கத்திலும், கண்டுபிடிப்பாளர்களும், கலைஞர்களும் தமது உழைப்பின் ஊதியத்தைப் பெறப்போகும் தருவாயிலும், இவ்வகை டென்ஷனுக்கு ஆளாவதுண்டு. ஆனால் இந்த டென்ஷன் சரியாக நிர்வகிக்கப்படாமலும், உபயோகிக்கப்படாமலும் விடப்படும்போது, உடம்பில் தீமையான விளைவுகளை எழச்செய்கிறது. அதிக அளவிலான டென்ஷன் உடலையேத் தாக்கியழிக்கும் வல்லமை வாய்ந்தது.

இதனால் வாயுத் தொந்திரவுகள், வயிற்றுப்புண், அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள், தீராத தலைவலி, நீரழிவு நோய், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற உடல் நோய்களும், மன நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு. நரம்பு மண்டலத்தையும், மனதையும் நேராகத் தாக்கிடும் டென்ஷனால் தற்கொலைகள் அதிகம் நிகழ்வதால், இதனை “இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சாகடிப்பான்” என்றும் குறிப்பிடுகிறோம்.

சாதாரணமான, அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த சந்தர்ப்பமும் மன அழுத்தத்தை எழச்செய்யலாம். பொருளாதார நெருக்கடிகள், வீட்டு அருகாமையில் நடக்கும் கொலை போன்ற குற்றங்கள், இனக்கலவரங்கள், பேரிடர்கள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

இத்தகைய சந்தர்ப்பங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. முதலாவதாக, இழப்பு. மரணத்தினால் குடும்ப உறுப்பினரை இழப்பது, விவாகரத்தினால் வாழ்க்கைத்துணையைப் பிரிவது, வேலையை இழப்பது, உயிர் நண்பனைப் பிரிவது போன்ற தருணங்கள்.

இரண்டாவதாக, அபாயம். அலுவலகத்திலோ, சமூகத்திலோ ஒருவரின் மானம், மரியாதைக்கு இழுக்கு நேர்வது, ஒரு பெண் தன் அழகையும், ஓர் ஆண் தன் வலிமையையும் இழப்பது, வாழ்வின் இலட்சியம் கைகூடாதோ என விரக்தி அடைவது போன்ற விடயங்கள்.

மூன்றாவதாக, மாற்றம். திருமணமாதல், வேலை கிடைத்தல், இடம்பெயர்தல், உடல்நலப் பிரச்சினைகள், வாழ்க்கைத்தரம் தாழ்தல் போன்ற நிகழ்வுகள்.

நவீன வாழ்வில் மன அழுத்தத்தை நம்மால் முற்றிலும் தவிர்த்திட இயலாது. எனவே அதனை திறமையாக மேலாண்மை செய்து, ஒன்றி வாழ்ந்திடப் பழகி, அதனினின்றும் மீள்வதே சிறந்தது. மதுபானங்களாலும், தூக்க மாத்திரையன்ன மருந்துகளாலும் பலர் மன அழுத்தத்தின் பிடியிலிருந்து தப்பினாலும், சிலர் தற்கொலையைத் தேடி ஓடுகின்றனர். மனஅழுத்த மேலாண்மைத் திறன் சில முக்கியமான விடயங்களை உள்ளடக்கியது:

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

<1> நமது உடல்நலத்தை விருத்தி செய்வதே முதல் நடவடிக்கை. உடற்பயிற்சி செய்தல், உலாவச் செல்லுதல், நல்ல உணவு, போதிய ஓய்வு, ஆழ்ந்த தூக்கம் - இவை உடல்நலத்தினைக் காத்திடும் முக்கியமான அம்சங்கள்.

<2> மன அழுத்தம் அதிகமாகும்போது இயற்கையைக் கண்ணுறுவதும், இனிய இசையினைச் செவிமடுப்பதும், குடும்பத்தாரோடுக் கூடிக்களிப்பதும், ஈடுபாடுள்ள புத்தகங்களை வாசிப்பதும் சிறந்தது. அமைதியானச் சூழலில் தியானம், பிரார்த்தனை செய்வதும் நல்லது. மனதை பிரச்சினைகளினின்றும் விடுபடச்செய்து, புறச்சூழலில் மாற்றம் கிடைக்கச்செய்வது மிகவும் முக்கியம்.

<3> உங்கள் பலங்களையும், பலவீனங்களையும் தெரிந்துகொண்டு, உங்களுக்குள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்வது சிறப்பானது. நீங்கள் பெற்றிருக்கும் விடயங்களோடு மன நிறைவு பெறுங்கள். உங்களின் எதிர்பார்ப்பு நீங்கள் பெற்றிருக்கும் விடயங்களைவிட கூடுதலாக இருந்தால், அல்லது இன்னொருவரை மனதிற்கொண்டு நீங்கள் போலியாக வாழ்ந்தால், மன அழுத்தம் எழ வாய்ப்புண்டு. நீங்கள் நீங்களாக இருங்கள். ஏனெனில் இவ்வுலகில் நீங்கள் மட்டும்தான் நீங்கள்.

<4> உங்களின் சிந்தனையோட்டத்தைப் பண்படுத்திக் கொள்ளுதல் இன்னொரு உகந்த வழி. உண்மையான, நேர்மையான, நியாயமான, தூய்மையானச் சிந்தனைகளைப் போற்றுங்கள். எக்காரணம்கொண்டும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடமளிக்காதீர்கள். அமைதியானவராக, மகிழ்ச்சியானவராக உங்களை வைத்திருங்கள். நம்பிக்கை, நன்றியுணர்வு, மரியாதை, பிறர் நலம் பாராட்டல், நட்புணர்வு போன்ற நல்ல குணங்களைப் பெற்றிருங்கள்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

<5> பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, சரியான அறிவார்ந்த முடிவுகள் எடுத்திடப் பழகிக்கொள்ளுங்கள். குழப்ப மனநிலையும், முடிவெடுக்காமல் ஒத்திப்போடுதலும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். நாமெடுக்கும் முடிவுகளும், தெரிவுகளும் நமது வாழ்வினை அமைத்துத் தருவதால், கவனமாக, அமைதியாக ஆலோசித்து முடிவுகள் எடுங்கள். ஆவலும், ஆர்வமும், உத்வேகமும் இன்றியமையாதவை என்றாலும், நிதானத்தோடுச் செயலாற்றுதல் மன அழுத்தத்தைத் தவிர்க்க உதவும்.

ஆம், இந்த வாழ்க்கைப் பந்தயத்தின் அழுத்தங்களையும், பிரயத்தனங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நிற்பது என்பது ஒரு மிக முக்கியமானத் திறன்.

(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 21

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Suba Udayakumaran Stress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment