சுப. உதயகுமாரன்
<21> அதிகாரம் பயில்வோம்
<> வணக்கம். இன்று அதிகாரம் பற்றி கொஞ்சம் பேசுவோமே? எங்கே பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும், தரணியெங்கும் தாண்டவம் ஆடும் இந்த அதிகாரத்தை எப்படிப் புரிந்துகொள்வது? அதிகாரம் என்றால் என்ன?
தான் விரும்புகிற வகையில் இன்னாருவரை இயங்க வைப்பதுதான் அதிகாரம். கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி, மிரட்டி, கட்டுப்படுத்தி, கட்டாயப்படுத்தி – இப்படி பல வழிகளில் பிறரைக் கட்டுக்குள் வைத்து காரியம் நடத்துவதுதான் அதிகாரம்.
<> நான் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இப்படிச் செய்தே தீரவேண்டும் என்று நிர்பந்திக்கவில்லையே?
நிர்ப்பந்திப்பது முரட்டுத்தனமான அதிகாரம். உங்களுக்கு மிகவும் தேவையான ஒன்றைத் தருவதன் மூலம் உங்களை எனக்கேற்ற மாதிரி இயங்க வைக்கலாம். நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை தர மறுப்பதன் மூலமும் உங்கள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். இவை எல்லாமே அதிகார விளையாட்டுக்கள்தான். அதிகாரத்தின் முக்கிய அம்சமே இந்தக் கட்டுப்படுத்தும் வல்லமைதான்.
<> இந்த அதிகாரத்துக்குத்தான் நாம் எல்லாம் அலைகிறோமா?
இன்னும் ஒன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மனிதர்களில் பெரும்பாலானோர் சமூக அங்கீகாரத்துக்காக, மரியாதைக்காகவே பெரு முயற்சிகள் எடுக்கிறோம். பிறர் பார்வையில் உயர்ந்து தோற்றமளிக்க வேண்டும், அவர்கள் நம்மை மதிக்க வேண்டும், நம்மை சேர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற உணர்வுகளின், ஆசைகளின், எதிர்பார்ப்புக்களின் கூட்டுக்கலவைதான் முக்கியமான சமூக உந்துசக்தியாக இருக்கிறது. அந்த சமூக அங்கீகாரத்தை, மரியாதையைப் பெறுவதற்கு அதிகாரம் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறோம், முனைகிறோம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
<> அது சரிதான். பணம், சொத்து, பதவி, புகழ், அந்தஸ்து போன்றவை மூலம் அந்த அதிகாரம் கிடைக்காதா என்று தேடுகிறோம், அப்படித்தானே?
உறுதியாக! இவற்றில் ஏதாவது ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ இருந்தால் அதிகாரம் வந்து சேர்கிறது. அதிகாரம் என்பது ஒரு முதன்மை தொகுப்பு (super set), மற்றவையெல்லாம் அதனுள்ளே அமைந்திருக்கும் துணைத் தொகுப்புக்கள் (sub sets).
<> பணத்துக்காக அலைகிறவர்களும் அதிகாரத்துக்காகத்தான் அலைகிறார்களா?
பணவெறி என்பது உலகமயமாதலால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒருவித மனநோய். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியான பிறகும், சிலர் மேலும் மேலும் பணம் என்று அலைவதற்கு காரணம் என்ன? ஒரு தொழிலில் ஈடுபட்டவாறே பிற தொழில்களுக்கும் தாவுவதற்குத் தேவையென்ன? கார்ப்பரேட் உலகில் வாங்குவதும் இணைப்பதும் (acquisition and merger) என்கிற பெயரில் சின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்கக் காரணமென்ன? வெறும் பணவெறி மட்டுமல்ல. பணம் தருகிற அதிகாரமும்தான்.
<> பண ஆசை போன்றதுதானே மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எல்லாம்?
நிச்சயமாக! மண்ணாசைக்குப் பின்னால் இருப்பதும் அதிகார வெறிதான். அதிகமாக சொத்து இருந்தால் சமூக பாதுகாப்பு, அந்தஸ்து அதிகரிக்கிறது. அதிகாரம் வந்து சேர்கிறது. கழுத்து நிறைய, மார்பு மறைய பொன்னால் அலங்கரிப்பதற்கு பின்னாலுள்ள உளவியல் என்ன? இதேதான்! என்னிடம் இருக்கும் நகைகளைப் பார், அவற்றின் எண்ணிக்கையைப் பார், நவீன வடிவமைப்புக்களைப் பார், விலைகளைப் பார், என் அந்தஸ்தைப் பார் என்பதுதானே? அதிகாரம் பெறுகிற ஒரு மனப்பான்மைதானே?
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
பென்பித்தும் ஓர் அதிகாரத் தேடல் கலந்த உளவியல் சிக்கல்தான். பெண்களைப் படுக்கையில் தள்ளும்போது ஒருவித அதிகாரம் கிடைப்பதாக சிலர் உணர்கிறார்கள். ஒரு நாட்டை இன்னொரு நாட்டு இராணுவத்தினர் கைப்பற்றிச் சூறையாடும்போது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது எதனால்? பெண்களின் கண்ணியத்தை மீறுவது ஒருவித அதிகார வெளிப்பாடுதான். பெண்பித்துப் பிடித்து அலைபவர்களும் ஒருவிதத்தில் அதிகார வெறியர்கள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
<> அப்படியானால் நாம் எல்லோருமே அதிகாரத்துக்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோமா?
ஒவ்வொருவரும் தனது தகுதிக்கும், திறமைக்கும், புறச் சூழலுக்கும் ஏற்ப ஒரு வழியைத் தேர்ந்து, அதன் மூலம் தேவையான அதிகாரத்தையும், சமூக மரியாதையையும் பெற முயற்சிக்கிறோம்.
<> அதிகாரமே வேண்டாம் என்று நினைக்கிற மனிதர்கள் யாருமே இல்லை என்கிறீர்களா? முற்றும் துறந்தவர்கள் எப்படி அதிகாரத்தைப் பார்க்கிறார்கள்?
முற்றும் துறந்தோர் எனும் சாமியார்கள்தான் அதிகாரத்தின் பின்னால் அடக்க முடியாத ஆசையுடன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மடங்களும், ஆசிரமங்களும், திருச்சபைகளும், ஜமாத்துக்களும் அதிகாரத்தில் ஊறித் திளைக்கின்றனவே? பொதுமக்களின் மீது அதிகாரம் செலுத்துவதில் மத நிறுவனங்கள், மதத் தலைவர்கள் என அனைவரும் குறியாக இருக்கின்றனரே?
<> அரசியல் அதிகாரத்தை எப்படி வரையறுப்பது?
ஒரு நாட்டின் அரசை, அரசமைப்பை வழிநடத்தும் வல்லமையைப் பெறுவது ஆட்சி அதிகாரம். அதைச் சுற்றி நடக்கும் அரசியல் விளையாட்டுக்களை அரசியல் அதிகாரம் என்று கொள்ளலாம். ஆட்சி அதிகாரம் மையம் என்றால், அரசியல் அதிகாரம் சுற்றுவெளி. அது அகம், இது புறம். உள்ளே இருப்பவர்கள் தொடர்ந்து உள்ளேயே இருக்கவும், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். வெளியே களமாடுபவர்கள் உள்ளேப் போக பகீரதப் பிரயத்தனங்கள் செய்கிறார்கள். ஆளும் வர்க்கம் பல வழிகளில் தனது அதிகாரத்தை நியாயப்படுத்துகிறது. உயர்ந்த சாதி, உயர்ந்த இனம், பணம், சொத்து, உற்பத்தித் திறன், தகவல், தொழிற்நுட்பம், இராணுவம், வன்முறை போன்ற பல ஆயுதங்கள் இங்கே பிரயோகிக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
<> இந்த அரசியல் அதிகாரத்தின் மூலங்கள் என்ன?
பல மூலங்கள் உள்ளன. தனிப்பட்ட அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட தலைவர் தனது அரசியல் திறமைகள், உழைப்பு, தொண்டு, தியாகத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயம், செல்வாக்கு, நம்பிக்கை, நன்மதிப்பு, புகழ் போன்றவற்றை உருவாக்கி அதன் மூலம் தனக்கான ஓர் அதிகாரம் பெற்றிருப்பதை தனிப்பட்ட அதிகாரம் என்று கொள்ளலாம். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் என ஏராளமான தலைவர்கள் அரசாளும் அதிகாரத்தைப் பெறவில்லை, அதற்கு முயற்சிக்கவும் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் இன்றளவும் அதிகாரம் மிக்கவர்களாக விளங்குகிறார்களே?
நாட்டின் தலைமைப் பதவியைப் பிடித்தால்தான் ஒரு தலைவர் தனிப்பட்ட அதிகாரம் பெற முடியும் என்பது உண்மையல்ல. ஆனால் அதே நேரம் ஆட்சி அதிகாரம் தனிப்பட்ட அதிகாரம் பெற உதவுகிறது என்பது உண்மை. இதற்கு ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற ஏராளமானத் தலைவர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகிறார்கள்.
<> வேறு எப்படியெல்லாம் அரசாளும் அதிகாரத்தைப் பெற முடியும்?
அதிகாரம் முகிழ்க்கும் மூலங்கள் பல இருக்கின்றனவே? துப்பாக்கிகள் உதவியோடு ஒரு தீவிரவாதக் குழுவோ, அல்லது ஓர் இராணுவமோ ஆட்சி அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளலாம். ஒரு மதத்தை பயன்படுத்தி மதகுருமார்கள் குழு ஒரு நாட்டின் அரசமைப்பை ஏற்று நடத்தலாம். ஒரு சக்தி வாய்ந்த அரசியல் இயக்கம் மக்களை ஒன்று திரட்டி, புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை ஏற்றெடுக்கலாம். ஒரு சனநாயக நாட்டில் தேர்தல் மூலம் முறைப்படி சட்டரீதியாக அரச அதிகாரத்தைப் பெறலாம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
<> இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
“தன்னை தானும் அறிந்துகொண்டு, ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?” என்று கவிஞர் கண்ணதாசன் பாடுகிறாரே? இளைஞர்கள் அதிகாரத்தை விரும்ப வேண்டும், அதிகாரத்தைத் தேடிப்போக வேண்டும், அதிகாரத்தை அடைய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். அதிகாரத்தைக் கண்டு பயப்படக்கூடாது. சரியான தருணத்தில், சரியான காரணங்களுடன், சரியான பயனாளிகளுக்காக, சரியான முறையில் பயன்படுத்தப்படும் அதிகாரம்தான் விடுதலை செய்யும் அதிகாரம். அதிகாரம் என்பது அதை செலுத்துபவரையும், செலுத்தப்படுபவரையும், சேர்ந்தாங்கு இயங்குபவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதிகாரம். யாரும் யாரையும் கட்டுப்படுத்துவது, அடிமைப்படுத்துவது என்றில்லாது, அனைவரும் “முதிர்ச்சி, வளர்ச்சி, மகிழ்ச்சி” பெறுவது எனும் இலக்கை நோக்கி முன்னேறுவதாக இருக்க வேண்டும்.
<> ஆனால் அதிகாரம் பெரும்பாலான மனிதர்களை மாற்றி விடுகிறதே?
நான் அதிகார கர்வப் பெருக்கால் அடித்து செல்லப்பட மாட்டேன் எனும் உண்மையும், உறுதியும், ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், பணிவும் இருந்தாக வேண்டும். பலவீனமானவர்கள், பேராசைக்காரர்கள், தன்னை உணராதவர்கள், அதிகாரம் எனும் கொழுகொம்பின் மீது படர்ந்துதான் தன்னை நிலைநிறுத்த முடியும் எனும் பரிதாப நிலையில் இருப்பவர்கள் அதிகாரத்தால் வீழ்ந்து விடுகிறார்கள். பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, அய்யா கக்கன், தோழர் ஜீவா போன்றோர் அதிகாரத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினார்கள். அதிகாரம் அவர்களை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அனுமதிக்கவில்லை.
<> அரசியல், ஆட்சி, அதிகாரம் குறித்தெல்லாம் உலக அறிஞர்கள் பலரும் பல நூறு புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் கருத்தூன்றி படிக்கப்பட வேண்டியவர்கள் யார், கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சிந்தைனகள் எவை?
அந்தப் பெருங்கடலின் ஒரே ஒரு நீர்த் திவலையைத்தான் நான் தொட்டிருக்கிறேன். திருவள்ளுவர், காரல் மார்க்ஸ், அன்டோனியோ கிராம்சி, மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ், தந்தை பெரியார், ஹன்னா ஆரன்ட், ஆடம் மிஷ்னிக், வாஸ்லவ் ஹாவல், வெண்டல் பெர்ரி என ஒரு நீண்ட பட்டியலையே நாம் தயாரிக்க முடியும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இவை அனைத்திலும் மகாத்மா காந்தியின் சூத்திரம் ஒன்றைத்தான் தாரக மந்திரமாக நாம் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. அதை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்கிறேன்: “நான் உங்களுக்கு ஒரு சூத்திரம் தருகிறேன். உங்களுக்குச் சந்தேகம் எழும்போதெல்லாம், அல்லது உங்களின் அகங்காரம் அதிகமாகும்போதெல்லாம், கீழ்க்காணும் சோதனையை மேற்கொள்ளுங்கள். நீங்கள் சந்தித்திருக்கும் மிகவும் ஏழையான, பலவீனமான மனிதரின் முகத்தை நினைவுகூர்ந்துவிட்டு, நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை அவருக்கு உதவிகரமாக இருக்குமா என்று உங்களையேக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் நடவடிக்கையால் அவர் ஏதாவது பலன் பெறுவாரா? அவரது வாழ்வின் மீது, ஊழின் மீது அவருக்கு ஏதேனும் அதிகாரத்தை அது பெற்றுத் தருமா? வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பசித்திருப்போரையும், ஆன்மத்தவிப்பில் இருப்போரையும் விடுதலைக்கு இட்டுச் செல்லுமா என்று பாருங்கள். அப்போது உங்கள் சந்தேகங்களும், உங்கள் அகங்காரமும் உருகிப்போவதை உணர்வீர்கள்.”
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் பகுதி – 22
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.