சுப. உதயகுமாரன்
[22] ஆளுமை ஆவோம்
மனித மனத்தை பலரும் ஒரு குரங்காகத்தான் பார்க்கிறார்கள். வீ. சீதாராமன் ஒரு திரைப்படப் பாடலே எழுதியிருக்கிறார்: மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்.
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது.
உண்மையில், இன்றைய நவீன வாழ்வில் மனித மனத்தை, குறிப்பாக இளையோர் மனங்களை, ஒரு பறவையாகப் பார்க்கவேண்டியத் தேவை எழுந்திருக்கிறது. உங்களுக்குள்ளே இருக்கும் சுதந்திரமான அந்தப் பறவையைப் பிடித்து, அதன் சிறகுகளை உடைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள பலர் அலைந்து திரிகின்றனர்.
இந்தக் கொடுஞ்செயலுக்கு அவர்கள் சாதிவெறி, மதவெறி, இனவெறி, கட்சி வெறி என ஏராளமான வலைகளை தாராளமாக விரித்து வைத்திருக்கிறார்கள். இந்த வெறியாட்டச் சதிகளிலிலிருந்து நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.
நமது அன்றாட வாழ்வில் முக்கியமானப் பேசுபொருட்கள் அரசியல், சினிமா, இசை, காலநிலை போன்றவைதான். அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நமக்கு ஒருவிதமான காதல்-மோதல் அணுகுமுறைதான் இருக்கிறது. அரசியல்வாதிகள் அபளரும் கொள்கையற்றவர்கள், உண்மையற்றவர்கள், ஊழல் பேர்வழிகள் என்றெல்லாம் கரித்துக் கொட்டுகிறோம். ஆனால் அதே நேரம், அரசியல்வாதிகளைப் பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம், பேசுகிறோம். அவர்கள் இல்லாமல் ஒரு சமூகத்தைக் கட்டிக்காக்கவும், வழிநடத்தவும் முடியாது என்பதுதான் உண்மை. சரியான அரசியல் தலைமை இல்லாமல், சோமாலியா, ஈராக், லிபியா, சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான் என ஏராளமான நாடுகள் சிதிலமடைவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கிரேக்கக் கதை ஒன்று சொல்வார்கள். ஓர் ஊரிலிருந்த பெரிய குளம் ஒன்றில் கொஞ்சம் தவளைகள் கூட்டமாக வாழ்ந்தனவாம். அந்த தவளைகளுக்கு தங்களை ஆளத்தெரியாத நிலையில், கிரேக்கக் கடவுளான அப்பல்லோவிடம் சென்று, எங்களுக்கு ஒரு தலைவரை அனுப்பித்தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
தவளைகளின் அறியாமையைக் கண்டு அதிருப்தி அடைந்த அப்பல்லோ, ஓர் உயரமான, பெரிய மரத்தை வெட்டி மலையிலிருந்து உருட்டிவிட்டார். பெரும் ஆர்ப்பரிப்போடு, ஆரவாரத்தோடு, அதிரடியாக வந்திறங்கினார் தவளைகளின் புதிய தலைவர். பிரமாண்டமான தங்கள் தலைவரின் சண்டமாருத வருகையால் தவளைகள் பூரித்துப்போனார்கள். நாட்கள் செல்லச் செல்ல தவளைகளுக்கு ஒருவித விரக்தி ஏற்படத் துவங்கியது. யார் என்ன சொன்னாலும், செய்தாலும், புதிய ஆட்சியாளர் கண்டுகொள்வதே இல்லை. வம்பு வழக்குகள் வந்தாலும், அவர் அலட்டிக்கொள்வதில்லை.
பொறுமையிழந்த தவளைகள் மீண்டும் அப்பல்லோவை சென்று சந்தித்தார்கள். “பிரபு, நீங்கள் அனுப்பித்தந்த ராஜா வெட்டிப்போட்ட மரம் மாதிரி விழுந்துக் கிடக்கிறார். எந்த விடயத்திலும், எந்தவிதமான ஆர்வமும் காட்டுவதில்லை. இவரால் யாருக்கும் எந்தவிதப் பயனும் இல்லை. எனவே எங்களுக்கு வேறொரு தலைவரை அனுப்பியருளுங்கள்” என்று முறையிட்டனர்.
சிரித்துக்கொண்ட அப்பல்லோ, இம்முறை ஒரு நாரையை அனுப்பிவிட்டார். நீண்ட கால்களும், நீளமான கழுத்தும், குறுகுறு பார்வையும், கூரிய அலகும், உயரமும், உற்சாகமுமாய் காட்சியளித்த புதிய தலைவரை தவளைகளுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. தலைவரின் ஆட்சிப் பரிபாலனம் ஆரம்பமாயிற்று.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஒரு தகராறு என்று இரண்டு தவளைகள் அதிபரை அணுகினால், அவர் முதலில் வாதியை விழுங்கினார், அடுத்ததாகப் பிரதிவாதியை விழுங்கினார். தகராறு முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டது. இப்படியாக தலைவர் விழுங்கி, விழுங்கி ஏப்பம்விட, குளத்தில் வாழ்ந்த தவளைகள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் சென்றனர்.
அரசியல் வாழ்வில், வழிநடத்துபவர்கள் இல்லாமல் வழிநடக்க முடியாது. முன்பெல்லாம் நம்மை வழிநடத்தியவர்கள் தொண்டு, தியாகம், துன்பம், துயரம் என்று வாழ்ந்தார்கள். நல்லொழுக்கம், உயரியச் சிந்தனை, மக்கள் சேவை, சமூகச் சீர்திருத்தம், போராட்ட அரசியல் என்றே இயங்கினார்கள். அவர்களின் சிந்தையில், செயலில், நாடும், நாட்டு மக்களுமே முக்கியத்துவம் பெற்றனர். தாங்கள் காணவிரும்பும் மாற்றங்களைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தனர். நல்ல தேர்ந்த திறமையான ஆசிரியர்கள் போல, அரசியல் விழுமியங்களை, கருத்துக்களை, நாட்டு நடப்புக்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களோடு கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டு, பொறுமையாக, நிதானமாக மக்கள் ஆதரவை தங்கள் பக்கம் ஈர்த்தனர்.
ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது. தானும் ஒரு வழிகாட்டி என்று தன்னை எளிதாக, விரைவாக, பலமாக முன்னிறுத்த முனையும் பலர் சாதிவெறி, மதவெறி, இனவெறி போன்ற குறுமதி ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக் கூர்த்தீட்டுகிறார்கள். பணபலம், படைபலம், படாடோபம், பரபரப்பு என்றியங்குகின்றார். அவர்களின் கணக்குகளில், காய்நகர்த்தல்களில் தானும், தனக்கான பலாபலன்களும் மட்டுமே முதன்மையும், முக்கியத்துவமும் பெறுகின்றன. செவிமடுக்கும் தன்மையோ, சொல்லிக்கொடுக்கும் திறனோ, சமத்துவம், சகவாழ்வு, சனநாயகம் போன்ற விழுமியங்களோ ஏதுமற்ற இவர்கள் கருத்துத்திணிப்பில் மட்டுமே குறிப்பாய் இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
எனவேதான் இளையோர் அவரவர் மனப்பறவைகளை மாண்புடன் பாதுகாத்துக்கொள்வது மிக முக்கியமானதாகிறது. ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போல, ‘இளங்குஞ்சு வெறுப்பறியாது.’ உங்கள் நெஞ்சங்களுக்குள் குறுக்குச்சுவர்கள் கட்ட, உங்கள் பார்வையைச் சுருக்கி சுரங்கப்பார்வையாய் மாற்ற, உங்களின் சிறகுகளை உடைத்து உங்களை தங்கள் சுட்டுவிரலில் கட்டிவைத்துக்கொள்ள முனையும் வழிகாட்டிகளை விட்டொழியுங்கள். உங்கள் மனப்பறவைகள் சிறகுகள் விரித்து உயரப் பறப்பதும், உரக்கக் கூவுவதும்தான் உண்மையான மனித வாழ்வு என்பதை எப்போதும் நினைவிற் கொள்ளுங்கள்.
அரசியல் இல்லாத மனித நடவடிக்கைகள் எதுவுமே இல்லை என்பதாலும், அரசியலை நாம் தவிர்க்கவே முடியாது என்பதாலும், அரசியலை ஆயிரங்காலத்துப் பயிர் என்கிறோம். அரசியல்தான் மனித வாழ்வின் அடிப்படை.
ஒரு முறை, ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஓர் அரசியல்வாதி ஆகியோர் உலகின் பழம்பெரும் தொழில் எதுவென்று வாதித்துக் கொண்டிருந்தார்கள். “கடவுள் மனிதர்களைத்தான் முதலில் படைத்தார், அதில் உடற்கூறியல், அறுவை சிகிச்சை என எல்லா மருத்துவ அம்சங்களும் நிறைந்திருந்தன. எனவே எங்கள் தொழில்தான் மூத்தத் தொழில்” என்றார் மருத்துவர். உடனே பொறியாளர், “மனிதர்களைப் படைப்பதற்கு முன்னால், கடவுள் உலகத்தைப் படைத்தார். அது ஒரு பொறியாளர் செய்யும் வேலை என்பதால், எங்கள் தொழில்தான் உலகின் மூத்தத் தொழில்” என்று வாதிட்டார்.
இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அரசியல்வாதி, “கடவுள் உலகத்தைப் படைப்பதற்கு முன்னால், இங்கே என்ன இருந்தது?” என்று கேட்டார். மருத்துவரும், பொறியாளரும் ஒருமித்த குரலில், “குழப்பமும், அமைதியின்மையும் இருந்தது” என்றார்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
“அதை யார் உருவாக்கியது என்று நினைக்கிறீர்கள்? நாங்கள்தான். எனவே அரசியல்தான் உலகின் மூத்தத் தொழில்” என்றார் அவர். “அரசியல் என்பது மனிதகுலத்தின் இரண்டாவது பெரிய தொழில்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், அது முதல் பெரிய தொழிலான விபச்சாரத்தோடு மிகவும் ஒத்துப் போகிறது என்று குத்திக்காட்டினார்.
கட்டிக்கொள்ளவும் முடியாமல், விட்டுத்தள்ளவும் முடியாமல் நாம் தவிக்கும் விடயம்தான் அரசியல். நேர்மையான, உண்மையான, உறுதியான, ஒழுக்கமான அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால், நாம்தான் அவர்களை உருவாக்க வேண்டும்.
நல்ல தலைவர்கள் பிறந்து வருவதில்லை; மாறாக சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள். அப்படியானால் ‘அரசியல்வாதிகள் சரியில்லை’ என்று இருளையேப் பழித்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, ஏற்றமிகு மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும், இன்னும் சொல்லப்போனால், ஏற்றதொரு மெழுகுவர்த்தியாக நீங்களே மாறுவதும் மிக முக்கியம்..
கவிஞர் வாலி சொன்னது போல: ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே, பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு, நல் அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு! இன்றோடு போகட்டும் திருந்திவிடு, உந்தன் இதயத்தை நேர்வழி திருத்தி விடு!
அரசியலிலும், அனைத்துத் துறைகளிலும் ஓர் ஆளுமைப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த காலக்கட்டத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் தலைவர் ஆவது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது!
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’ – பகுதி 23
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil