சுப. உதயகுமாரன்
<23> சமூக உறவுகள் அறிவோம்
அதிகாரம் பற்றியும், ஓர் ஆளுமையாக ஆவது பற்றியும் பேசியிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் அடிப்படை சமூக உறவுகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு புகழ்பெற்ற பேராசிரியர் தனது வீட்டிற்கு வந்த ஒரு நண்பரிடம் தான் அப்போது எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தின் பிரதியைக் காட்டினார். அந்த விருந்தினர், “இங்கேப் பாருங்கள், இதில் ஒரு பிழை இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார். அதனை அப்படியே ஏற்றுக்கொண்ட பேராசிரியர் உடனே அதைத் திருத்தினார். அந்த விருந்தினர் விடைபெற்றுச் சென்றதும், அவர்களோடிருந்த பேராசிரியரின் மாணவர், “அது சரிதானே, பிழையேதும் இல்லையே, அப்படியிருந்தும் அதை ஏன் மாற்றினீர்கள்?” என்று பேராசிரியரிடம் கேட்டார்.
பேராசிரியர் சொன்னார்: “நண்பரின் வருகை பணிவையும், மரியாதையையும் கோரும் ஒரு சமூக நிகழ்வு. அது ஆய்வு செய்யும், உண்மையைத் தேடும் சந்தர்ப்பமல்ல. சமூக உறவாடல்களில் ஈடுபடுகிறவர்கள் உண்மைத் தேடலில் நாட்டம் கொண்டிருப்பதில்லை; வெறும் ஒப்புதலையும், அங்கீகாரத்தையும் மட்டுமே நாடுகிறார்கள். நான் அவருடைய ஆசிரியராக இருந்திருந்தால், வேறு விதமாக பதிலளித்திருப்பேன். அறிவற்றவர்களும், படிப்பாளிகளும்தான் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வகுப்பு எடுக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அது தவறான அணுகுமுறை. கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டும்தான் நாம் பாடம் நடத்த வேண்டும்.”
பேராசிரியரின் இந்த நீண்ட விளக்கத்தைக் கேட்ட மாணவருக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. அதாவது சமூகத் திறன் என்பது மக்கள் திறனேயன்றி வேறல்ல. பிறரைத் திறம்படக் கையாளும் திறன்தான் சமூகத் திறன். இது கைவந்தக் கலையாக வாய்க்கப் பெற்றிருப்போர் சமூகத்தில் வெற்றியாளர்களாக, பிரபலமானவர்களாகத் திகழ்கிறார்கள்.
சமூக உறவுகள் அனைத்துக்கும் அடிப்படையானவை இரண்டு விடயங்கள்தான். ஒன்று, அங்கீகாரம்; இன்னொன்று மரியாதை. நாம் ஒவொருவரும் பிறரால் அங்கீகரிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், இணைத்துக்கொள்ளப்பட வேண்டும், அன்போடும், மரியாதையோடும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். இந்த முக்கியமான விதியை ஏற்று நீங்கள் நடந்துகொண்டால், அங்ஙனமே மற்றவர்களை நடத்தினால், உங்கள் சமூக உறவுகள் சுமுகமானவையாக இருக்கும். உங்களுக்கு ஏராளமான நண்பர்கள், ஆதரவாளர்கள் இருப்பார்கள்; நீங்கள் ஒரு வெற்றியாளராகப் பரிணமிப்பீர்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சில ஆண்டுகளுக்கு முன்னால் எனது உறவுக்கார இளைஞர் ஒருவரை சந்திப்பதற்காக சென்னை தியாகராயநகர் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவர் வசித்த வீட்டைக் கண்டுபிடிப்பது சற்றேக் கடினமானதாக இருந்தது. அங்கே நின்றிருந்தோரிடம், வழிப்போக்கர்களிடம், அக்கம்பக்கத்தாரிடம் என ஏராளமானோரிடம் வீட்டு எண்ணைச் சொல்லி, கட்டிடத்தின் பெயரைச் சொல்லி, முகவரியைச் சொல்லி என எப்படியெல்லாமோ விசாரித்துப் பார்த்தேன். யாராலும் முறையாக உதவ முடியவில்லை. பின்னர் அந்தப் பகுதியிலிருந்த துணி தேய்ப்பவரிடமும், தானி (ஆட்டோ) ஓட்டுனர்களிடம் விசாரிக்கலாம் என்றெண்ணி, அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.
இந்த நேரத்தில் நான் பார்க்கப் போயிருந்த இளைஞர் என்னைத் தேடி அங்கே வந்துவிட்டார். அந்த துணி தேய்ப்பவரும், ஆட்டோ ஓட்டுனர்களும் ஏகோபித்தக் குரலில், “அரவிந்தைத்தான் தேடினீர்களா? அவர் பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கலாமே?” என்றனர். நவீனக் கல்வி கற்ற, உயரிய வேலைப் பார்க்கிற, அதிகச் சம்பளம் வாங்குகிற, மிடுக்கான துடுக்கான அந்த இளைஞர் துணி தேய்ப்பவரிடமும், தானி ஓட்டுனர்களிடமும் பரஸ்பரம் பெயர்களைத் தெரிந்துகொள்ளுமளவுக்கு அன்னியோன்யமாகப் பழகியிருப்பார் என்று நான் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை.
சாதி, மதம், இனம், மொழி, வயது, கல்வி, பணம், அழகு, அந்தஸ்து என ஏராளமான அளவுகோல்களைத் தூக்கிச் சுமந்து, அவற்றின் அடிப்படையில் வெகுசிலரை மட்டுமேத் தேர்ந்தெடுத்து, அவர்களுள் பாங்காகப் பயன்படுவோரிடம் மட்டுமேப் பார்த்துப் பார்த்துப் பழகும் பழக்கமுள்ள இந்தப் பாழும் உலகில் இப்படி ஓர் இளைஞரா என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த இளைஞரின் சமூகத் திறன்கள் குறித்து பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
மனிதர்கள் கூடிவாழும் பழக்கம் கொண்ட சமூக மிருகங்கள். நாமெல்லோருமே ஒரு மிகப் பிரமாண்டமான வலைப்பின்னலின் சின்னஞ்சிறு கண்ணிகள். ஜான் டன் என்கிற ஆங்கிலக் கவிஞர் அழகாகச் சொன்னார்: “எந்த மனிதனும் ஒரு தீவு அல்ல. எல்லோரும் ஒரு கண்டத்தின் துண்டுகள்தான். …நான் மனிதகுலத்தின் ஓர் அங்கமானதால், எந்த மனிதனின் மரணமும் என்னைச் சுருக்குகிறது. எனவே யாருக்காக கோவிலில் மணி அடிக்கிறது என்று விசாரிக்காதீர்கள், அது உங்களுக்காவே அடிக்கிறது.”
எல்லோருமே இரண்டற இணைக்கப்பட்டிருக்கிறோம், எல்லோருமே சாகப் போகிறோம் என்பதுதான் கவிதையின் முக்கியக் கருத்து. இதுதான் வாழ்வின் யதார்த்தம் என்றால், இங்கே வாழும் இந்த குறுகியக் காலத்தில் கொண்டாட்டமாகத்தான் இருந்துவிட்டுப் போவோமே? அரவிந்த் போல அனைவரையும் அங்கீகரித்து, அனைவருக்கும் மரியாதையளித்து, அன்பும், அறனுமாக வாழ்ந்து செல்வோமே?
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பிலா தவர்
என்கிறது வள்ளுவம். நீங்கள் பி.எச்.டி. படித்திருக்கலாம், பல மொழிகள் அறிந்திருக்கலாம், பெரும் அறிஞராகத் திகழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அடிப்படையான மக்கள் பண்பு இல்லையென்றால், நீங்கள் வெறும் மரம் போன்றவர்தான்.
தனி மரம் எந்த காலத்திலும் தோப்பாகாது. தோப்பிலும் மரங்கள் கூடிக் குலவாது. மரங்களுக்கு சமூகத் திறன்கள் தேவையில்லை. ஆனால் நீங்கள் எல்லோராலும் அறியப்படுகிறவராக, விரும்பப்படுகிறவராக, வேண்டப்படுகிறவராக, வெற்றியாளராக இருக்க விரும்பினால், உங்கள் சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
தாமாகவே முன்வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்பதால், அருகிலிப்பவரை ஐஸ்கட்டிப் போல அமைதியாகப் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது ஒரு துருவம் என்றால், அறிமுகமே இல்லாத ஒருவர் மீதுப் பாய்ந்து, பிறாண்டி, வயது என்ன, திருமணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா, என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்று அத்தனைத் தனிப்பட்ட விபரங்களையும் துருவித் துருவி விசாரிப்பது இன்னொரு துருவம். இவ்விரண்டு துருவ நிலைகளையுமேத் தவிர்த்து விடுங்கள்.
சமூகத் திறனை வளர்த்தெடுப்பதற்கான சில படிநிலைகளைக் கண்ணுறுங்கள். அறிமுகமில்லாத ஒருவரை ஒரு நிகழ்விலோ, விருந்திலோ, கூட்டத்திலோ சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரின் கண்களைப் பார்த்து, இலேசாகப் புன்முறுவல் செய்து, “நான் இன்னார், இங்கிருந்து வருகிறேன், உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?” என்று ஓர் உரையாடலைத் தொடங்கலாம்.
“உங்களை எங்கோப் பார்த்தமாதிரி இருக்கிறதே?” “நீங்கள் என் நண்பன் ஆனந்தின் உறவினரா?” என ஏராளமான ஒற்றை வரிகளோடு (ஒன் லைனர்) ஓர் உரையாடலைத் தொடங்க முடியும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இப்படியான ஓர் உள்நுழைதலுக்குப் பிறகு, கூர்மையாகச் செவிமடுப்பது, உரிய பதில்களைச் சொல்வது, தொடர்புடையக் கேள்விகள் கேட்பது, பேச விடுவது என்று கலந்துறவாடலாம். மனதுக்கிதமானவராக இருந்தால், தனக்கானவர்களில் ஒருவராய் இணைத்துக்கொண்டு, கலந்துரையாடி நட்பு பாராட்டலாம். ஒருவேளை நட்பு திசைமாறி, சமூக விரோத, ஆபத்தான நடவடிக்கைகளை நோக்கித் திரும்பினால், ‘முடியாது’ என்று சொல்லி, தனக்கென எழுந்து நின்று, தற்காத்துக் கொள்ளவும் வேண்டும்.
உள்நுழைதல், கலந்துறவாடல், நட்பு பாராட்டல், தற்காத்தல் போன்ற படிநிலைகள் தனிப்பட்ட சந்திப்புகளுக்கானவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமானவை. ஒறுத்தல், ஒதுக்குதல், ஓரங்கட்டுதல், ஒடுக்குதல் போன்றவையெல்லாம் சமூகத் திறனுக்கு எதிரான நடவடிக்கைகள்.
மற்றவர்கள் மீதான, அவர்களின் வாழ்க்கைக் குறித்தான உண்மையான ஆர்வம், சமூகப் பரிவர்த்தனைகளில் தணியாதத் தாகம், வாழ்தலின் மீதான முடிவில்லா மோகம், நகைச்சுவை உணர்வோடு வாய்விட்டு, மனம்விட்டுச் சிரிக்கும் பிரியம் போன்றவையே சமூகத் திறனின் அடிப்படைகள்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’ – பகுதி 24
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.