சுப. உதயகுமாரன்
<24> உங்களோடான உறவு
சமூக உறவுகள் அனைத்திலும் மிக மிக முக்கியமானது உங்களோடான உங்களின் உறவுதான். நம்மில் பலர் நம்மிடம் இரக்கம் காட்டுவதில்லை, நம்மை கரிசனத்தோடு நடத்துவதில்லை, நம்முடைய தவறுகளை மன்னிப்பதில்லை. சிலர் ஆகப்பெரும் தண்டனையான (தற்)கொலைத்தண்டனையையும் வழங்கிவிடுகிறோம்.
உங்களை உங்களின் நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றும் சர்வ வல்லமையும் பொருந்திய சூப்பர்மேன் அல்ல. சாதாரண மனிதன்தான். வாய்ப்புக்களை தவற விடலாம். தவறுகள் இழைக்கலாம். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் நீங்கள் போடும் கணக்குகள் தவறாக முடியலாம்.
வாழ்க்கையில் உயரிய அளவுகோலை ஏற்படுத்திக் வைத்துக்கொண்டு அதற்கொப்ப வாழ முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் நாம் நினைப்பது போல சில விடயங்கள் சில வேளைகளில் நடக்காமல் போகும்போது, உங்களிடமே நீங்கள் கடுமையாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல. உங்களை மன்னிக்கப் பழகுங்கள். “என்னாலானதை உண்மையாகச் செய்தேன், இனி எப்படியோ ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு கடந்து செல்லுங்கள்.
கேரள மாநிலம் கொச்சிப் பகுதியிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் கற்பிக்கச் சென்றிருந்தேன். அன்று மாலை அந்த கல்லூரியின் தாளாளர் என்னை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவருடைய அறைக்குச் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அறையின் மூலையில் இருந்த ஒரு நாற்காலியைக் காட்டி, தான் ஏதாவது தவறிழைத்தால் அதில் உட்கார்ந்தவாறே அங்கிருந்த ஒரு குச்சியால் தன்னை அடித்துக்கொள்வதாக அவர் சொன்னார். அது எனக்கு அதிர்ச்சியாகவும், மிரட்சியாகவும் இருந்தது. எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு மனநோய் என்றே எனக்குத் தோன்றியது. எவ்வளவு நாளாக இப்படிச் செய்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்துவிட்டு, ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பாருங்கள் என்று அறிவுரைத்தேன்.
நம்மில் பலர் நம்மை கரிசனத்தோடு நடத்துவதில்லை. உள்ளத்தை மட்டுமல்ல, உடலைக்கூட கவனமாகக் கையாள்வதில்லை. மது, புகையிலை, போதைப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர். தற்போது புகையில்லாத புகையிலைப் பொருட்களான உதட்டுக்குள் வைக்கும், மெல்லும், விழுங்கும், உறிஞ்சும் பொடிகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் உதடுகள், வாய், ஈறு, நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் புற்றுநோய் வந்து பலரும் துன்புறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சிலர் ஆகப்பெரும் தண்டனையான (தற்)கொலைத் தண்டனையை தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்கின்றனர். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடந்தேறும் அத்தனை தற்கொலைகளும் பதிவு செய்யப்படுவதில்லை. குடும்ப கவுரவம், சமூக யதார்த்தங்கள், சட்டப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு காரணங்களால் பல தற்கொலைகள் மறைக்கப்படுகின்றன. அதேபோல, ஆணவக்கொலைகள் உள்ளிட்ட பல கொலைகள் தற்கொலைகளாகத் திரிக்கப்படுவதும் நடக்கிறது.
குடும்பப் பிரச்சினை, குடிப்பழக்கம், கள்ளக்காதல், பாலியல் குறைபாடு, தேர்வுத் தோல்வி, தொழில் நட்டம், கடன் தொல்லை, தீராத நோய், தனிமை, கேவல உணர்வு, கவலைகள் இவற்றால் எழும் மன அழுத்தம் போன்ற ஏராளமான காரணங்களால் தற்கொலைகள் நடக்கின்றன. தங்களுக்குப் பிடித்த ஒரு கட்சியின் மீதான அல்லது தலைவரின் மீதான அதீத அரசியல் ஆதரவைத் தெரிவிக்கவும் மற்றும் தீவிரவாதச் செயல்களுக்காகவும்கூட சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 1.53 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுள் மூன்றில் ஒரு பங்கு பேர் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மூன்று மாநிலங்களைச் சார்ந்தவர்கள். தினசரிக் கூலிகள், மாணவர்கள், வீட்டுப் பெண்கள் அதிகம் பேர் இப்படி மாண்டிருக்கின்றனர். அதே 2020-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக ஒரு நாளில் 36 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்தது (இந்தியன் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 5, 2020).
வாழவேண்டிய வயதில், சாதிக்க வேண்டியப் பருவத்தில் இளங்குருத்துக்கள் தற்கொலை செய்துகொண்டு அகால மரணமடைவது என்பது ஒரு குறிப்பிட்ட நபரின், குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் இழப்பு. காரணம் அந்த இளைஞர்களில் பலரும் சிந்தனையாளர்களாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, கலைஞர்களாக, தலைவர்களாக உருவெடுத்து சமூகத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கக் கூடும்.
உப்புப் பெறாத விடயங்களுக்காக இளைஞர்கள் தற்கொலை செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதற்கு அம்மா திட்டினால், முடிவெட்டாமல் திரிவதற்காக அப்பா கடிந்துகொண்டால், பொதுவெளியில் யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் - என பொருட்டேயில்லாத விடயங்களுக்காக பல இளையோர் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
அதேபோல, உயர்கல்வி வாய்ப்புக்கள் கைநழுவிப் போனால், நுழைவுத் தேர்வுகளில் தோற்றுப் போவோம் என்கிற அச்சம் எழுந்தால் பல இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொள்கின்றனர். பல பெற்றோரும் தங்களுடைய தனிப்பட்ட இலட்சியத் தோல்விகளை தங்கள் குழந்தைகளின் மீது திணித்து, அவர்கள் அவற்றை சாதித்துத் தர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த குடும்பக் கனவுகள் நிறைவேறாமல் போகும்போது, தோல்வியுற்ற இளையோர் சிலரின் வாழ்க்கை அகால முடிவுக்கு வருகிறது.
தற்கொலை செய்கிறவர்கள் பெரும்பாலானோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, அதனின்றும் மீண்டு வெளியே வர வழி தெரியாமல் மரணத்தைத் தழுவுகின்றனர். இவர்கள் தூக்கமின்மை, பசியின்மை, எதிலும் ஈடுபாடின்மை, தனித்திருப்பது, அமைதியாக இருப்பது, சோகமாக இருப்பது, தோற்றத்தில் கவனமின்றி இருப்பது, அழுவது, வாழ்வில் தோல்வியடைந்துவிட்டதாக கருதுவது என பல அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.
அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்கள் பலவற்றை அவதானிக்க முடியும். அவர்கள் போற்றிப் பாதுகாத்தப் பொருட்களை பிறருக்குக் கொடுப்பார்கள், நீண்ட பயணம் ஒன்றுக்கு போவது போன்ற முன் தயாரிப்புக்களைச் செய்வார்கள், திடீரென மது அருந்தத் தொடங்குவார்கள், தற்கொலைக் குறிப்பு எழுதுவார்கள், தற்கொலை செய்வதற்கு ஒத்திகைச் செய்து பார்ப்பார்கள்.
அவர்கள் பேசும் வார்த்தைகளில் அவர்களின் தற்கொலைத் திட்டம் அவ்வப்போது வெளிப்படும். “செத்துவிடலாமா என்றிருக்கிறது; இந்த வாழ்க்கை போதுமென்று தோன்றுகிறது; சாவதுதான் ஒரே வழி; வாழ்க்கை அர்த்தமற்றது; நான் யாருக்கும் தேவையில்லை” என்பன போன்ற சொற்றொடர்கள் வெளிப்படும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
உடனிருப்பவர்கள் மேற்படி அறிகுறிகளைக் கண்டுணர்ந்து தகுந்த ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல தற்கொலைகளைத் தடுக்கலாம். ஆனால் ஏறத்தாழ 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் ஒன்பதாயிரம் மனோதத்துவ நிபுணர்களே உள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கிறது. ஆண்டொன்றுக்கு நாடெங்குமிருந்து வெறும் 700 பேர் மட்டுமே மனநல மருத்துவர்களாக தேர்ச்சிப் பெற்று வெளிவருகின்றனர். இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், ஒரு லட்சம் மக்களுக்கு வெறும் 0.75 மனநல மருத்துவரே இருக்கிறார்.
தற்கொலை செய்ய நினைக்கிறவர்களுக்கு, முயல்கிறவர்களுக்கு உரியநேரத்தில் உரிய உதவிகள் செய்யத் தவறுகிற ஒன்றிய, மாநில அரசுகள் அவர்களைத் தண்டிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது மிகப் பெரும் கொடுமை. தற்கொலைக்கு முயற்சிக்கிறவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309-ன் படி ஓராண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். பல ஐரோப்பிய நாடுகள் இம்மாதிரிச் சட்டங்களை விலக்கிக்கொண்டாலும், இந்தியாவில் இது இன்னும் அமலில் இருக்கிறது.
இளைஞர்களாகிய நீங்கள் சில வாய்ப்புக்களை இழக்கலாம், சிலரால் நிராகரிக்கப்படலாம், ஏமாற்றப்படலாம், இம்மாதிரி நிகழ்வுகளால் வாழ்வில் சலிப்படையலாம். இவையனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் நடக்கும் வாழ்வியல் யதார்த்தங்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இவற்றுக்கான தீர்வு பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதுதானே தவிர, தப்பித்து ஓட முயற்சிப்பதல்ல.
எந்த மாதிரியான பிரச்சினைகள் வந்தாலும், நெருக்கடிகள் எழுந்தாலும், உங்கள் வாழ்வை நேசியுங்கள். பிரச்சினைகள், நெருக்கடிகள், துன்பங்கள் குறுகிய காலவரையறை கொண்டவை என்பதையும், வாழ்க்கை நீண்டகாலம் நீடிப்பது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
பிறரோடான உங்களின் உறவைப் பேணிக் கொள்ளுங்கள். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது பழமொழி. உங்களுக்குப் பிடித்த ஒருசில உறவினர்களிடமாவது மனம்விட்டுப் பேசுங்கள். அல்லது உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் நம்பகத்தன்மை கொண்ட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த உறவினர்கள், நண்பர்களை முடிவுகள் எடுக்க அனுமதிக்க வேண்டாம், ஆனால் அவர்களுடன் பேசுவது சில தேர்ந்த முடிவுகள் எடுக்க உங்களுக்கு உதவலாம்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’ – பகுதி 25
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.