Advertisment

சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’ – பகுதி 25

நம் தமிழ் மக்களின் இன்றைய நிலை, நாய் வேடம் போட விரும்புகிறோம், ஆனால் நாய் போல குரைக்க விரும்பவில்லை என்பதாகவே இருக்கிறது.

author-image
WebDesk
New Update
suba udayakumaran’s tamil Indian Express series on self management part - 25

Social Activist Suba Udayakumaran New series about self management in tamil

சுப. உதயகுமாரன்

Advertisment

<25> ஆண்-பெண் உறவுகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உறவுச் சிக்கல்களுக்கான காரணம் இவ்விரு பாலருக்கிடையேயான அடிப்படை மனோதத்துவ வேறுபாடுகள்தான் என்று ஜான் கிரே எனும் அமெரிக்கர் 1992-ஆம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார். ஆண்கள் செவ்வாய் கிரகத்தவர்கள் என்றும், பெண்கள் வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், இருவரும் இருவேறு கிரகங்களின் சமூகங்களிலிருந்து, பழக்கவழக்கங்களிலிருந்து வருகிறவர்கள் போலவே இயங்குகின்றனர் என்று குறிப்பிட்டார். Men Are from Mars, Women Are from Venus எனும் அவரது புத்தகம் பதினைந்து லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது.

மனித உறவுகள் மலினமாகிக் கொண்டிருக்கும் நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகிக் கொண்டிருக்கின்றன. தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் கைபேசிகளுடனும், மடிக்கணினிகளுடனும் தனித்தனியாக வாழ்கின்றனர். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நண்பர்கள், வயதான வழிகாட்டிகள் யாரும் இல்லை வீட்டார் கூடி உண்பதும், குலாவிப் பேசுவதும் மிகவும் அரிய நிகழ்வுகளாக மாறிவிட்டன. பல வேலைகள் செய்து பணத்திற்குப் பின்னால் ஓடினால்தான் தப்பிப்பிழைக்க முடியும் என்கிற இன்றைய சமூக-பொருளாதார யதார்த்தத்தில், குடும்ப உறவுகளுக்குத் தேவையான கவனமோ, முக்கியத்துவமோ கொடுக்கப்படுவதில்லை.

வீட்டில் கருத்துப்பரிமாற்றங்கள் குறையும்போது, தேவையான அன்பும், கவனமும் கிடைக்காமலாகும்போது, பிளவுகள், பிரச்சினைகள் எழுகின்றன. இம்மாதிரியான உறவுப் பிரச்சினைகளில் உதவி செய்வதற்கு கல்விக்கூடங்களிலோ, பணியிடங்களிலோ, பொதுச் சமூகத்திலோ தேவையான அமைப்புக்கள், நடைமுறைகள் பெரும்பாலும் இல்லை. பாதிப்புக்குள்ளாகும் இளையோர், குறிப்பாக இளம்பெண்கள், அன்பையும், அமைதியையும் வெளியில் தேடிச் செல்கிறார்கள். சில கள்ளங்கபடம் நிறைந்த இளைஞர்கள் இவ்விளம் பெண்களை தங்களின் பொழுதுபோக்குக்கும், காமப்பசிக்கும் பலிகிடா ஆக்குகிறார்கள்.

ஓடிப்போதல், திட்டமிடா கர்ப்பம், பொருளாதாரப் பிரச்சினைகள், சண்டைச் சச்சரவுகள் என வாழ்க்கை திசைமாறிப் போகிறது. பொறுப்பான இளைஞர்கள், பிடிவாதமான இளம்பெண்கள் கூட்டுசேர்ந்தால், தங்கள் பெற்றோரின் ஒத்துழைப்புடனோ அல்லது தனியாகவோ ஒரு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். ஆனால் பொறுப்பற்ற இளைஞர்களும், பலவீனமான இளம்பெண்களும் ஒன்றிணைந்தால், வாழ்க்கைச் சுழலில் சிக்கிச் சீரழிந்து, தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்கள். சாதிப் பிரச்சினை, குடும்ப கவுரவம் என்பன போன்ற கூடுதல் குழப்பங்கள் சேரும்போது, ஆணவக்கொலைகள் நிகழ்கின்றன. இப்படியாக மலர்ந்து மணம் வீச வேண்டிய இளம் மொட்டுக்கள் கருகிச் சிதைகின்றன.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

ஆணையும், பெண்ணையும் இணைத்து வாழவைக்கும் காதலை, கல்யாணத்தை எடுத்துக்கொள்வோம். மணமாகாத ஓர் இளைஞனும், ஓர் இளம்பெண்ணும் ஒரு நாள் குறித்து உணவருந்தி, உலாவச்சென்று, உளமாரப் பேசி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அந்த உறவைத் தொடர்வது, அல்லது துண்டிப்பது என்று இயங்குவதை ‘டேட்டிங்’ (dating) என்றழைக்கின்றனர் அமெரிக்கர்கள். அமெரிக்காவில் நிகழும் பெரும்பாலான திருமணங்கள் டேட்டிங் செய்யும் ஆண் மற்றும் பெண்ணால் தங்களுக்குள் ஏற்பாடு செய்துகொள்ளப்படுபவை.

அமெரிக்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகள் யாரையும் டேட்டிங் பண்ணவில்லையே என்றுதான் கவலைப்படுவார்களே தவிர, கட்டுப்பாடுகள் விதித்து, பொத்திப் பாதுகாக்க முனைய மாட்டார்கள். ஒருவர் ஒரு நூறு பேரை ஓராயிரம் முறை டேட்டிங் செய்யலாம், எந்தவிதமானக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அக்கம்பக்கத்தார், அண்டைவீட்டார் நியாயத்தராசைத் தூக்கிவைத்துக் கொண்டு அவர்களை அவதானித்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ இனிமேல் உன்னோடு டேட்டிங் செய்ய விரும்பவில்லை என்று சொல்லிவிட்டால், அப்படியே விட்டு விலகும் முதிர்ச்சியும், பக்குவமும் உடையவர்கள் அவர்கள். பாலியல் அத்துமீறல்கள், டேட்டிங் ரேப் போன்றவை அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும், ஆசிட் வீசுவது, கொடூரமாய்த் தாக்குவது, கொலை செய்வது போன்ற குற்றச்செயல்கள் நடப்பதில்லை. கோபம், வெறுப்பு, குற்றவுணர்வு, பழிவாங்கல், தண்டித்தல் போன்ற வெளிப்பாடுகள் எழுவதில்லை.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

இன்றைய நவீன, உலகமயமாக்கப்பட்ட உலகில் பொருளாதாரம் மட்டுமல்ல, சமூக ஏற்பாடுகளும் அமெரிக்க மயமாக்கப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த டேட்டிங் பழக்கம் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்து சேர்ந்திருக்கிறது. உடன்போதல், கூடப்போதல், களவளாவல் என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும் இதனை எப்படி அழைப்பது என்பதல்ல நம்முடைய பிரச்சினை. இந்த டேட்டிங் கலாச்சாரத்தின் நடைமுறை சிக்கல்களை எப்படிக் கையாள்வது என்பதுதான் நமது தலைவலியாக அமைகிறது.

நமக்கு அமெரிக்க நடைமுறைப் பிடித்திருக்கிறது. ஆனால் அது இந்திய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நம் நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரும், உற்றோரும் சேர்ந்து சாதி, மதம், குலம், கோத்திரம் பார்த்து, தரகர், தகவல் நிலையம் போன்றவற்றின் உதவியோடு நிச்சயிக்கப்படுபவை. இந்நிலையில் ஓர் ஆண், ஒரு பெண்ணை ஒரே ஒரு முறை மட்டுமேப் பார்த்து, சாதி மதம் போன்ற சமன்பாடுகளை சரியாக அமைத்துக்கொண்டு, “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” என்கிற பாணியில் கண்டதும் தலைகுப்புற காதலில் விழுந்து, சினிமாப் பாணியில் ஒரே டேட்டிங் நிகழ்ந்து, மீதியை திருமண மண்டபத்தில் காண்க என்று சுபமாக முடிய வேண்டும்.

நம் தமிழ் மக்களின் இன்றைய நிலை, நாய் வேடம் போட விரும்புகிறோம், ஆனால் நாய் போல குரைக்க விரும்பவில்லை என்பதாகவே இருக்கிறது. ஒரு புறம் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என்று கதைவிடும் நாம், இன்னொரு புறம் பாலியல் பத்தாம்பசலிகளாகவே இருக்கிறோம். அண்மையில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புத் துறை நாடுதழுவிய ஓர் ஆய்வை நடத்தி, இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக பாலியல் நண்பர்களைப் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறிந்திருக்கிறது (தினகரன், ஆகஸ்ட் 19, 2022).

ஒட்டுமொத்த உலகமும் இணையத்தில் புதைந்து கிடக்கும் இன்றைய யதார்த்தத்தில், காதலுக்கு, கள்ளக்காதலுக்கு, காமத்துக்கு என எல்லாவற்றுக்கும் ஏராளமான கைப்பேசிச் செயலிகள் வந்துவிட்டன. இவற்றை நம்பி ஏமாறுபவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. குற்றவாளிகளும், குற்றச்செயல்களும் மலிந்து கிடக்கும் இம்மாதிரி செயலிகளில் சிக்கிக் கொண்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும். இவற்றால் எழும் நேர விரயம், பண விரயம், மானம் மரியாதை இழப்பு, உயிரிழப்பு போன்ற விபரீதங்கள் சொல்லி மாளாதவை.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

இணையத்தளத்தில் ஒருவருக்கு கிடைக்கும் முழுமையான தனிமையும், இரகசியத் தன்மையும், ஒருவித அசட்டுத் தைரியமும் பலரையும் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்க வைக்கின்றன. ‘இளங்கன்று பயமறியாது’ என்பது இணையத்தள உலகுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. பலருக்கும் பாலியல் கவர்ச்சி பகுத்தறிவை மறைத்து விடுகிறது.

ஆண்-பெண் உறவு என்பது பல்வேறு சிக்கல்களை தன்னகத்தேக் கொண்டது. அது நேருக்கு நேர் பார்த்து, உணர்வுரீதியாக மேலாண்மை செய்யப்பட வேண்டியதே தவிர, இணையத்தில் ‘சாட்’ மூலமாகவும், படங்கள், வீடியோக்கள் பகிர்வதன் மூலமாகவும் நடத்தப்படக்கூடிய ஒன்றல்ல.

ஓர் ஆண் ஒரு பெண்ணால் நம்பப்படுவதை, ஏற்றுக்கொள்ளப்படுவதை, மதிக்கப்படுவதை, மெச்சப்படுவதை விரும்புகிறான். அதே போல, ஒரு பெண் ஓர் ஆணால் அன்பு செலுத்தப்படுவதை, புரிந்துகொள்ளப்படுவதை, மரியாதை செலுத்தப்படுவதை, முதன்மைப்படுத்தப்படுவதை எதிர்பார்க்கிறாள். இவற்றையெல்லாம் இணையத்தில் எப்படி செய்ய முடியும்?

இணையம் பொழுதுபோக்கிற்கானதே தவிர, வாழ்க்கைக்கானதல்ல. அந்த பொழுதுபோக்கும் வாழ்க்கையைக் கெடுக்கக்கூடியதாக இருத்தலாகாது. இணையத்தில் ஆண்-பெண் காதல் உறவு தொடர்பான பரிவர்த்தனைகளை முற்றிலுமாக தவிர்ப்பதுதான் சாலச் சிறந்தது. ஏராளமான இளம்பெண்கள் எளிதில் ஏமாறுவதும், பணம், நகைகள் போன்றவற்றை அறிமுகமில்லாதவர்களுக்கு அள்ளித் தருவதும் பெரும் மடமை.

இரண்டாவதாக, எக்காரணம் கொண்டும், உங்களைப் பற்றிய, உங்கள் குடும்பத்தார் குறித்த தனிப்பட்டத் தகவல்களை இணையத்தில் யாருக்கும் தராதீர்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது யார், அவரது பின்னணி என்ன என்றெல்லாம் எதுவும் தெரியாமல், இம்மாதிரி தனிப்பட்டத் தகவல்களை பகிர்ந்து கொள்வது, உங்களின், உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கே குந்தகமாக வந்து முடியலாம்.

மூன்றாவதாக, இணையத்தில் வங்கிகள் மற்றும் நம்பகமான நிறுவனங்கள் தவிர்த்து, வேறு யாருடனும், எந்த காரணத்திற்காகவும் பணப்பரிமாற்றம் நடத்தாதீர்கள். காதல், காமம் பேசி காசு கறக்கும் வேலைகள் அதிகம் நடக்கும் இடமாக இணையம் இருப்பதால், இம்மாதிரி தவறுகளைச் செய்யாதீர்கள்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

நான்காவதாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே திருவள்ளுவர் எழுதிய டிவீட் ஒன்றை எப்போதும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இதை உங்கள் ஆழ்மனதின் டிபி-யில் நிரந்தரமாக வைத்துக்கொள்ளுங்கள்:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

ஆண்-பெண் உறவு தீயதல்ல, ஆனால் அதனை இணையத்தில் கண்டெடுக்க முனைவதும், கடிதில் நடத்துவதும் தீது.

(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’ – பகுதி 26

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Suba Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment