சுப. உதயகுமாரன்
<26> வாழ்க்கைத் துணை
இளையோரான நீங்கள் வாழ்க்கையின் இந்த காலக்கட்டத்தில் எதிர்கொள்ளும் பெரிய சவால் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதும், சுமுகமான திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான்.
முதலாவதானதும், மிகப் பெரியதுமான கேள்வி ‘யாரை திருமணம் செய்து கொள்வது’ என்று தீர்மானிப்பது. நீங்கள் சந்திக்கும், உங்கள் மனதுக்குப் பிடித்திருக்கும் ஒவ்வொருவரையும் உள்மனது “இவர் வாழ்க்கைத் துணையாகத் தகுதியானவரா” என்று சற்றேனும் சீர்தூக்கிப் பார்க்கும். அந்நேரம் ‘உங்களுக்கு என்ன வேண்டும்,’ ‘உங்களின் எதிர்பார்ப்புக்கள் என்னென்ன’ என்பன போன்ற கேள்விகளுக்கு உங்களிடம் தெளிவான விடைகள் இருந்தால், உங்களால் தகுதியானவரைக் கண்டுபிடிக்க முடியலாம்.
நிறம், அழகு, கல்வித்தகுதி, சொத்து, பணம், அந்தஸ்து போன்ற புறக்காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கைத் துணையைத் தேடினால், நீங்கள் ஒரு பெரும் பேரிடருக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கைத் துணை என்பவர் வாழ்க்கையை பிறருக்குக் காட்டுவதற்காக அல்ல, உங்களுக்குள் நிம்மதியாக வாழ்வதற்காக என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். உண்மையில், உடல்நலம், மனநலம், குணநலம் போன்ற அகக்காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கைத் துணையைத் தேடுவதே அறிவார்ந்த அணுகுமுறை.
ஒரு சராசரியான திருமண உறவில் ஓர் ஆண் ‘உணவு, உணர்வு, உறவு’ எனும் மூன்று விடயங்களை பெண்ணிடம் எதிர்பார்க்கிறான். உணவு தயாரிப்பது பெண்ணின் வேலை மட்டுமே எனும் நிலை தற்போது ஒரளவு மாறிவிட்டாலும், அடுக்களை இன்னும் பெண்ணின் வெளியாகவே இருக்கிறது. ஆங்கிலத்தில் The quickest way to a man's heart is through his stomach என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். அதாவது, ஓர் ஆணின் இதயத்தை அடைவதற்கான விரைவான வழி அவன் வயிற்றினூடே செல்கிறதாம். உணவின் முக்கியத்துவத்தை இதைவிட சிறப்பாகச் சொல்ல முடியாது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
அடுத்து, ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் ஆழமாக இணைப்பது அவர்களின் பாலியல் உணர்வுகள். வேறு எந்த உறவிலும் இத்தனை ஆழமான, அந்தரங்கத் தொடர்புகள் இருப்பதில்லை. இவற்றை போற்றிப் பாதுகாக்கும் பாலியல் நலம் இனிமையான, வெற்றிகரமான மண வாழ்க்கையை அமைத்துத் தருகிறது. மூன்றாவதாக, வெறும் உணவும், உணர்வும் மட்டுமே இல்வாழ்க்கையாக முடியாது, குடும்ப, சமூக உறவுகளைப் பேணிக்காத்து, பெருக்கிக் கொள்வதும் மிக முக்கியம்.
ஒரு பெண் ஓர் ஆணிடமிருந்து அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு என்பவற்றை எதிர்பார்க்கிறாள். கணவன் தன் மீது நிபந்தனையற்ற அன்பினைப் பொழிய வேண்டும், தன்னை அரவணைத்து வாழ்க்கை நடத்த வேண்டும், தன்னோடான உறவின்மீது அர்ப்பணிப்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
இன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில் திருமணம் என்பது பெண்கள் மீது ஆண்கள் அதிகாரம் செலுத்தும் உறவாகவே இருக்கிறது. பெண்களைப் பற்றிய அடிப்படைப் பார்வையிலிருந்தே அது தொடங்கிறது. எடுத்துக்காட்டாக, பெண்களுக்குரிய இயல்பாக நாலடியார் பாடலொன்று கூறுவதைக் கேளுங்கள்:
கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் – உட்கிஇடனறிந் தூடி இனிதின் உணரும்மடமொழி மாதராள் பெண்.
அதாவது, கண்ணுக்கு இனிதான உடல் வனப்பை உடையவளாகவும், தன் காதலனின் விருப்பத்திற்கேற்ற வகையில் தன்னை அலங்கரித்துக் கொள்பவளாகவும், அச்சம் உடையவளாகவும், ஊரிலுள்ள பிற ஆண்கள் அஞ்சி ஒதுங்கும் இயல்பினை உடையவளாகவும், தன் கணவனுக்கு அஞ்சி, பணிந்து, காலமறிந்து அவனோடுப் பிணங்கிநின்று பின்னர் இன்பம் உண்டாகும்படி ஊடல் தீர்க்கிறவளாகவும், கபடமில்லாதப் பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே சிறந்த மனைவியாவாள் என்கிறது இந்தப் பாடல்.
இதை எழுதியவர் ஓர் ஆண் என்பதும், இது அண்மைக்காலத்தில் எழுதப்பட்டதல்ல என்பதும் உங்களுக்கு எளிதில் விளங்கும். கணவன்-மனைவி உறவின் தன்மை குறித்து நம் காலத்து பாரதியார் இப்படிச் சொல்கிறார்:
காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!
கணவன் காரியத்தில் மட்டுமே மனைவி கைகொடுத்து வாழவேண்டும் என்பதும், மனைவிக்கான காரியங்கள் பற்றி கணவன் கண்டுகொள்ள வேண்டாமென்பதும் நவீன பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
மணவாழ்க்கையின் இரண்டாவது முக்கியமான அம்சம் அதனைத் தொடங்குவது மற்றும் தொடர்வதில் எதிர்கொள்ளவிருக்கும் ஏராளமான மாற்றங்கள், சீராக்கல்கள், செம்மைப்படுத்தல்கள் போன்றவை. இன்னொருவரோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்வதிலிருந்து மாற்றங்கள் தொடங்குகின்றன. இம்மாற்றங்களை மேலாண்மை செய்ய உங்கள் வாழ்க்கைத் துணையோடு நீங்கள் தொடர் கருத்துப்பரிமாற்றம் நடத்த வேண்டியத் தேவை எழுகிறது. அதற்குரிய பொறுமை, செவிமடுக்கும் திறன், விட்டுக்கொடுக்கும் தன்மை, கூடிமுடிவெடுக்கும் திறன் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டாக வேண்டும்.
மூன்றாவது அம்சம் திருமண வாழ்க்கையால் முகிழ்க்கும் புதிய உறவுகள், பொறுப்புக்கள், கடமைகள், அவற்றால் எழும் சிக்கல்கள், தகராறுகள் போன்றவற்றை திறம்பட மேலாண்மை செய்வது. நன்கு அறிமுகமான இளம் தம்பதியினரிடம் நான் பேசும்போது, அவர்களின் ‘முதல் சண்டை’ (First Fight) பற்றி கேட்பதுண்டு. “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பது நம் முன்னோர் வகுத்த இலக்கணம். அப்படி தொண்ணூறு நாட்கள் தாண்டிய பிறகாவது சண்டைகள் நிச்சயம் தலைதூக்கும். சில துர்பாக்கியம் கொண்டவர்களுக்கு முதல் நாளே சண்டைத் தொடங்கிவிடுகிறது.
எங்களுக்கிடையே சண்டைகளே வருவதில்லை என்று ஒரு கணவனோ அல்லது மனைவியோ சொன்னால், அது உண்மையல்ல, நல்லதல்ல என்பதை உணருங்கள். உண்மையில் ஒரு திருமண உறவு நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றால், சண்டைகள் நடந்தே ஆக வேண்டும். வார்த்தை வடுக்களற்ற, வன்முறையற்ற தகராறுகள்தான் திருமண உறவை சிமென்ட் போல உறுதிப்படுத்துகின்றன.
“தில்லிக்கு ராஜாவானாலும், வீட்டுக்குப் பிள்ளைதானே” என்பது போல, நாட்டுக்கு ராணியென்றாலும், வீட்டுக்கு மனைவிதானே? பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவுக்கும், அவரது கணவர் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் ஒரு தகராறு எழுந்தது. வார்த்தைகள் தடித்து, ஒரு கட்டத்தில் ஆல்பர்ட் தனது அறைக்குள் சென்று கதவை ஓங்கியறைந்து மூடிக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ராணியார் அவர் பின்னால் ஓடிச்சென்று, கதவைத் திறக்கச்சொல்லி மன்றாடினார். கத்தினார், கதவைத் தட்டினார், கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். எதுவும் பலனளிக்கவில்லை. “நான் --இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து நாடுகளின் ராணி, இந்தியா உள்ளிட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரரசி, பிரிட்டானியப் படைகளின் தலைமைப் படைத்தலைவர்— கதவைத் திறக்க ஆணையிடுகிறேன்!” என்று உத்தரவிட்டார். எதிர்வினை ஏதுமிருக்கவில்லை. இறுதியில், ராணியார் அன்பானக் குரலில், “ஆல்பர்ட், நான் மிகவும் வருந்துகிறேன். உங்களை உளமார நேசிக்கிறேன்” என்று சொன்னார். கதவு திறந்தது.
திருமண உறவில் எழும் தகராறுகளால் தற்காலிகமான ‘அமைதி சிகிச்சை’ (silent treatment) முதல் நிரந்தரமான ‘விட்டு விலகல்’ (total separation) வரை எதுவும் நடக்கலாம். ‘சந்திரோதயம்’ எனும் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதியப் பாடலைக் கேளுங்கள்:
காசிக்கு காசிக்கு காசிக்குப் போறேன் ஆள விடு, என்னை இனிமேலாவது வாழ விடு! ஆதரவான வார்த்தையைப் பேசி அருமைமிகுந்த மனைவியை நேசி; அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி, அவளை விடவா உயர்ந்தது காசி?
மணவாழ்வின் நான்காவது அம்சம் வருங்காலத்தை வகுத்துக்கொள்வது. இரண்டு தனிநபர்கள் தங்களின் இணைந்தப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து, வருங்காலப் பாதுகாப்புக்கு ஆவன செய்து, குழந்தைகள் பெற்றெடுத்து, அவர்களை ஆளாக்குவதற்கான திட்டங்கள் வகுத்து, வாழ்வாங்கு வாழ்வது. ஆக திருமணம் என்பது ஒரு வருங்காலவியல் சார்ந்த செயல்பாடு.
நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் கோடிகளைக் கொட்டி பிரம்மாண்டமாக படாடோபமாக திருமணம் நடத்தும் நாம், ஓராயிரம் ரூபாய் செலவழித்து மணமகனை, மணமகளை ஒரு மருத்துவரிடம், வழக்கறிஞரிடம், மணவாழ்வு ஆலோசகரிடம் அழைத்துச்சென்று பேசவைப்பதில்லை. ஒரு நீண்ட நெடிய உறவுப்பயணத்தைத் தொடங்கப்போகும் அந்த இரண்டு இளையோருக்கு எந்தவிதமான முன்தயாரிப்பும் வழங்குவதில்லை. சில மத நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாத பயிற்சிகளை வழங்கினாலும், அவற்றின் நோக்கம் புதுமணத் தம்பதியரை தங்களுக்கு விசுவாசமாக இருக்கச்செய்வது மட்டும்தான்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்த நான் ஏராளமான ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கிப் படித்தேன். ஆனாலும் நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்துக்கு உகந்த தகவல்கள், அறிவுரைகள் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. எனவே தகராறு தீர்வு மற்றும் வருங்காலவியல் வல்லுனரான நான், ‘திருமணக் கல்வி’ (Marriage Education) என்று ஒரு பாடத்திட்டத்தையே உருவாக்கி, இளையோருக்கு பயிற்சிகள் அளித்தேன். “ஒற்றைக் குடும்பந்தனிலே – வீடுதோறும் கலையின் விளக்கம்” என்றொரு புத்தகமும் (காலச்சுவடு பதிப்பகம்) எழுதி வெளியிட்டேன். “நாட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பது குறித்து இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.