சுப. உதயகுமாரன்
<27> நகைச்சுவைத் திறன்
வாழ்க்கையை நிம்மதியாக வாழவும், உறவுகளை திறம்படப் பேணவும் நகைச்சுவைத் திறன் மிகவும் முக்கியம். போட்டி, பொறாமை, கோபம், வெறுப்பு, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளோடு நிம்மதியின்றி வாழ்வது வாழ்க்கையே அல்ல. கவிஞர் புலமைப் பித்தன் சொல்வதைத்தான் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டியங்க வேண்டும்: “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!”
சிரித்து வாழ வேண்டுமென்றால், நகைச்சுவை உணர்வு வேண்டும். எளிதில் சிரிப்பதும், பிறரை சிரிக்க வைப்பதும்தான் நகைச்சுவை உணர்வு. உரையாடும் வார்த்தைகளை, சந்தர்ப்பச் சூழ்நிலைகளை என எல்லாவற்றையும் சிரிக்கும் தருணமாக மாற்றும் வல்லமை கொண்டிருப்பதுதான் நகைச்சுவை உணர்வு. நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பது என்பது விழிப்புடன், இலகுவானவராய், கள்ளங்கபடமற்றவராய் இருப்பதுதான்.
“வாக்கு சாமர்த்தியம்”அதாவது வார்த்தைகளை வைத்து விளையாடும் திறன் பெற்றிருந்தால் பிறரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முடியும். ஒற்றை வரிகள் (one-liners), பழமொழிகள், சிலேடைகள், கவிதைகள் போன்றவற்றை இடம், பொருள், ஏவல் அறிந்து சொல்வது நகைச்சுவை உணர்வைப் பெருக்கிக்கொள்ள உகந்தது. இந்த வார்த்தை சித்தர்கள் ஒரு சின்ன வார்த்தையை வைத்து பிறரின் இதயங்களை எளிதாகத் திறந்துவிடுகிறார்கள்.
“என்ன, புது வீடு கட்டுறீங்களா?” என்று ஒருவர் கேட்கிறார். வார்த்தை சித்தர் உடனே பதில் சொல்கிறார்: “ஆமாம், பழைய வீட்டைக் கட்டமுடியாதே*”
“உங்க ஊர்ல யாராவது பெரிய மனுசங்க பிறந்திருக்காங்களா” என்று ஒருவர் கேட்க,“இல்லீங்க, எங்க ஊர்ல எல்லோரும் சின்னக் குழந்தைகளாகத்தான் பிறக்கிறாங்க” என பதில் சொல்லும்போது எழும் நகைப்பும், நட்பும் அந்த உறவுக்கு பலமூட்டுகின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் எழுத்தாளர் மாநாடு ஒன்றில் இப்படி பேசினார்: “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.”
“இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.” இதைக் கேட்டதும் கூட்டத்தில் பலத்தக் கைதட்டல் எழுந்தது. “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவை தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“யாகவும், உரி“மை“யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
அதேபோல, கடினமான, இறுக்கமான ஒரு சூழலில் தன்னுடனிருப்போரை தனது நகைச்சுவை உணர்வால் ஒருவர் சிரிக்க வைத்து விட்டால் அந்த ஒட்டுமொத்தச் சூழலும், மனிதர்களும் அவருக்குச் சாதகமாக மாறிவிடுவதை கண்கூடாகப் பார்க்கலாம். சிரிப்பின் வழியே சீரிய கருத்துக்களைச் சொல்வது கசப்பு மருந்தை இனிப்புத் தடவிக் கொடுப்பது போன்றது. மிகவும் ஆபத்தான நெருக்கடியான நிகழ்வுகளைக் கூட சிரிப்பால் எளிதாக்கிச் சொல்லிவிடலாம். அந்த சிரிப்பு நம்மை சிந்திக்கச்செய்து, செம்மையான வழியில் நடத்தும்.
ஒரு செர்ஃப் இனத்தவரும், ஒரு குரோவாட் இனத்தவரும், ஒருபாஸ்னியன் இனத்தவரும் மூவருமாக மீன்பிடிக்கச் சென்றார்கள். அப்போது அங்கே ஒரு தவளை வந்தது. அது தன்னை மீட்டு விடுவித்தால், அவர்கள் மூவருக்கும் மூன்று வரங்களைத் தருவதாகச் சொன்னது. எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இனத்தவராதலால், இது பற்றியும் அவர்கள் நீண்டநேரம் சண்டை போட்டார்கள். இறுதியில் ஆளுக்கொரு வரமாகப் பிரித்துக்கொள்வது என்று முடிவு செய்தார்கள்.
செர்ஃப் இனத்தவர் “குரோவாட் இன மக்கள் அனைவரும் சாக வேண்டும்” என்கிற வரத்தைக் கேட்டார். தவளை அந்த வரத்தை அருளியது. அடுத்து குரோவாட் இனத்தவர் “செர்ஃப் இன மக்கள் அனைவரும் செத்தொழிய வேண்டும்” என்கிற வரத்தைக் கேட்டார். தவளை அந்த வரத்தையும் அப்படியே நிறைவேற்றியது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்னிய இனத்தவர் தவளையிடம் கேட்டார்: “அவர்கள் இருவரும் கேட்ட வரங்களை அப்படியே நிறைவேற்றி விட்டாயா? ‘ஆம்’ என்றது தவளை. “அத்தனை செர்ஃப் இனத்தவரும், அத்தனை குரோவாட் இனத்தவரும் இறந்து விட்டார்களா?” என்று மீண்டும் கேட்டார். “ஆமாம். உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்றது தவளை. பாஸ்னியன் சொன்னான்: “எனக்கு ஒரு கப் காஃபி மட்டும் கொடு.”
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பது பழமொழி. நோயே விட்டுப் போகுமென்றால், சிரிப்பு பல சிக்கல்களை எளிதில் போக்கிவிடும். மனைவி ஜோக்ஸ், வக்கீல் ஜோக்ஸ், சர்தார்ஜி ஜோக்ஸ், அரசியல் ஜோக்ஸ் என ஏராளமான நகைச்சுவைத் துனுக்குகள் புழக்கத்தில் உள்ளன.
ஒரு தெருவில் வாழ்ந்தவர்களின் வீடுகளில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறுகள் எழுந்தன. ஆனால் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் கணவனும்-மனைவியும் எப்போதும் உரக்கச் சிரிக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. பொறாமை கொண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் நேரடியாகவே கேட்டார்கள். அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் சண்டையிடும்போது, கையில் கிடைப்பதைத் தூக்கி எறிவோம். குறிதவறாமல் தாக்கினால், எறிந்தவர் சிரிப்பார்; குறி தவறும்போது, தப்பித்தவர் சிரிப்பார்.”
ஒரு ஞானி இப்படி எச்சரிக்கிறார்:
மனைவி கணவனைத் திட்டுவது குளத்தில் கல் எறிவது போல! ஆனால் கணவன் மனைவியைத் திட்டுவது தேன்கூட்டில் கல் எறிவது போல!
இன்னொருவர் இப்படி அறிவுரைக்கிறார்: சாலையில் தனியாகப் பேசிக்கொண்டு நடப்பவரை ‘பைத்தியம்’ என்று கருதவேண்டாம். அவர் தன் மனைவியிடம் ஏதோ சொல்வதற்காக ஒத்திகை பார்ப்பவராகவும் இருக்கக்கூடும்.
ஒரு திரைப்பட இயக்குனர் ஒரு நடிகரிடம் சொல்கிறார்:
“படத்துல உங்களுக்கு வசனமே கிடையாது சார்!”
நடிகர் கேட்கிறார்: “ஊமையா நடிக்கிறேனா சார்?”
இயக்குனர் சொல்கிறார்: “இல்ல, .நீங்க ஒரு குடும்பத் தலைவன்.”
திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் அனைவருக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். ஐம்பது, அறுபது ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோரை “வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்று முடிவு செய்ய வேண்டும். பொன்விழா, வைரவிழா காணும் தம்பதியரின் கால்களில் அனைவரும் விழுந்து வணங்குவதன் காரணம் என்ன தெரியுமா? “உங்களுக்கிருக்கும் பொறுமை, நிதானம், பக்குவத்தில் இத்தனூண்டு எனக்கும் தாருங்கள் தெய்வங்களே” என்று வேண்டிக் கொள்வதுதான்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
மீளிணக்கம் (reconciliation) என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கணவன்-மனைவி உறவாகத்தான் இருக்க முடியும். தினமும் சண்டை போடுகிறோம், பின்னர் மீளிணக்கம் செய்து கொள்கிறோம். சிகரெட் பிடிப்பவர் ஒருவர் சொன்னாராம், “சிகரெட்டை விடுவது என்பது மிகவும் எளிதானது, நான் எத்தனை முறை விட்டிருக்கிறேன் தெரியுமா?” அதேபோல, மீளிணக்கம் செய்வது என்பது எவ்வளவு எளிதானது தெரியுமா? நானும் என் மனைவியும் அடிக்கடி செய்துகொள்கிறோம் என்கிறார்கள் பல கணவன்மார்கள்.
ஆகவே சிரியுங்கள், சிந்தியுங்கள். கவிஞர் மருதகாசி எழுதி கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் அம்மா ஆகியோர் பாடிய புகழ்பெற்ற திரைப்படப் பாடல் இப்படிச் சொல்கிறது:
சிரிப்பு…. …. …. … இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பது நமது பொறுப்பு!… கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு -- மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு
இது களைப்பை நீக்கி கவலையைப் போக்கி, மூளைக்குத் தரும் சுறு சுறுப்பு …. துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு ! இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனி செழிப்பு !
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு! வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு !
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.