சுப. உதயகுமாரன்
[28] நிதி மேலாண்மைத் திறன் பெறுக
தனியார்மயம்—தாராளமயம்—உலகமயம் எனும் மும்மை இன்றையப் பொருளாதார யதார்த்தத்தை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. இந்த பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது என்கிற புரிதல் இருந்தால்தான், நவீன வாழ்க்கைக்குத் தேவையான நிதி மேலாண்மைத் திறனை நீங்கள் பெற முடியும், அறிவார்ந்த முடிவுகளையும் எடுக்க முடியும். நிதி மேலாண்மைத் திறன் இல்லாதவரை பயப்படுகிறவன், பார்வையற்றவன் என்று பழிக்கிறார் கவியரசு கண்ணதாசன்:
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும், வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்.
மகாத்மா காந்தி விவரித்த ‘தன்னாட்சி சதுரம்’ ஒரு நாட்டின் அடிப்படைகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு நாட்டைக் கட்டியெழுப்புகிறவர்கள் மக்களும், மக்கள் அமைப்புக்களும்தான். இதனை ‘குடிமைச் சமூகம்’ (Civil Society) என்றழைக்கிறோம். அந்த மக்கள் தங்களை வழிநடத்துவதற்காக ஏற்படுத்துகிற இயந்திரம்தான் அரசு (State) என்பது. மக்களும், அரசும் சுமுகமாக இயங்க வேண்டுமென்றால், அதற்கு போதிய பொருளாதாரம் (Capital) இருக்க வேண்டும்.
குடிமைச் சமூகம், அரசு, பொருளாதாரம் எனும் மூன்றும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நாடு, சர்வதேசச் சமூகம் எனும் அமைப்போடு உறவாடி தன்னுடைய அரசியல், பொருளாதார, கலாச்சார நலன்களைப் பேணிக்கொள்கிறது. சர்வதேசச் சமூகம் தனது அங்கீகாரத்தை வழங்கி இந்த நாட்டின் இருப்புக்கும், இயக்கத்துக்கும் பெரிதும் உதவிசெய்கிறது.
பொருளாதார வளையத்தில் உற்பத்தி, விநியோகம், நுகர்வு (Production, Distribution, Consumption) எனும் மூன்று நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கின்றன. இவையனைத்தையும் தங்குத் தடையின்றி நடத்திட, அனைவரின் “கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்” (கண்ணதாசன்) மட்டுமே முடியும்.
இந்த ஓட்டத்தை நடத்தும் நவீன நிதி உபகரணங்கள் பணம், தங்கம், பங்குகள், கடன், அந்நிய முதலீடு போன்றவை. நம்முடைய நிதி அமைப்பு ஒரு மனித உடல் போலவே இயங்குகிறது. நம்முடைய இதயம் இரத்தத்தை உந்தித்தள்ளி உடலெங்கும் அனுப்புவது போல, வங்கிகளும், வங்கிகளல்லாத நிதி நிறுவனங்களும் நிதியை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றன. நம் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் உடலுக்குத் தேவைப்படும் உயிர்க்காற்றையும், சத்துக்களையும் ஒவ்வொரு அவயவத்துக்கும் எடுத்துச்செல்வது போல, நிதியமைப்பு பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் முதலீடுகளை உலகெங்கும் கொண்டு செல்கிறது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
பொருளாதாரத் தேவைகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டு நிற்கும் நாடுகள், குழுமங்கள், நிறுவனங்கள், தனி நபர்கள் போன்றோர் நிதியங்களிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அதேபோல, அந்நிதியங்கள் உற்பத்தித் துறையில் போதுமான நிதியை முதலீடு செய்து, உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. தனிநபர்களும், நிறுவனங்களும் பங்குச்சந்தைகளில் பங்குகள் வாங்கி, விற்று வளமான, பாதுகாப்பான வருங்காலத்தை அமைத்துக்கொள்கின்றனர்.
மொத்தத்தில், நிதி ஒன்றே உலகின் ஆதாரம், அது இல்லாமலிருப்பது பெரும் சேதாரம் என்கிற நிலைமைக்கு முதலாளித்துவம் நமது உலகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. “பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், பிணம் தின்றே தீர வேண்டும்” என்பது போல, நிதி ஒன்றே வாழ்வின் அடிப்படை என்றாகும்போது, அதன் ஏற்ற இறக்கங்களால் நாம் பாதிப்புக்குள்ளாகிறோம்.
“ஆண்டிகள் கூடி மடம் கட்டுகிறார்கள்” என்று நாம் வேடிக்கையாகச் சொல்வது போலவே, கைக்கு வராதக் கடனுடன், கண்ணில்படாதக் காசுடன் பொருட்களை வாங்குகிறோம், விற்கிறோம். சர்வதேச அளவில், பன்னாட்டு நிதியங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஏழை நாடுகளுக்கு கந்துவட்டிக் கடன்களை வாரிக்கொடுத்து, அந்நாடுகளில் “கட்டமைப்பு மாற்றங்களை”க் (Structural Adjustments) கொண்டுவரச் செய்து, சுரண்டிக் கொழுக்கின்றன.
நீடித்த, நிலைத்தத் தன்மையோ, நம்பகத்தன்மையோ இல்லாத ஒரு நீர்க்குமிழிப் பொருளாதாரத்துக்குள் நம் உலகமும், நாமும் சிக்கிக் கிடக்கிறோம். கடந்த 2007—2008 காலக்கட்டத்தில் உலகம் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதன் பிறகு, 2019 – 2021 காலக்கட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நம்மைத் தாக்குவதற்கு முன்னரேத் தொடங்கிய அடுத்த பொருளாதார நெருக்கடி, இன்னும் நம்மை விட்டு அகன்ற பாடில்லை.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் சில இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், உரிய பணி நியமன ஆணையின்றி, அத்துடன் வருகிற உரிமைகள், சலுகைகள், பாத்தியதைகள், பாதுகாப்புக்கள் ஏதுமின்றி, ஒரு தற்காலிகப் பணியாளர் போன்றே வேலையில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாகத் தரப்படுவதாகவும் தெரிவித்தார்.
மணமாகாதவர் என்பதால் தோழர்களுடன் தங்கியிருந்து, வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து போன்றவற்றில் கொஞ்சம் மிச்சம் பிடிப்பதாகச் சொன்னார். திருமணம் செய்துகொண்டு, தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுக்க, மனைவியோடு குடும்பம் நடத்த, குழந்தைகள் பெற்றுக்கொள்ள, அவர்களை வளர்த்தெடுக்க தன்னுடைய வருமானம் போதுமானதாக இருக்காது என்பதால், வருங்காலத்தைக் கனவுகளுடன் வரவேற்பதற்கு பதிலாக, அச்சத்துடனும், மிரட்சியுடனும் கலங்கி நிற்கிறார். ஏராளமான இளைஞர்களின் நிலைமை இப்படித்தான் பரிதாபகரமாக இருக்கிறது.
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதால், போதியப் பொருளை நேர்மையாக, உழைத்துச் சம்பாதிப்பது இளைஞர்களின் முதற்கடமை ஆகிறது. யாரும் எந்தவிதமான உதவிகளும் செய்ய முன்வராத இன்றைய நிலையில், தத்தளித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான் உங்களுக்கு உதவி செய்துகொள்ள வேண்டும். தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்கிறவர்களுக்குத்தான் இயற்கையும் உதவிசெய்கிறது என்கிறது ஓர் ஆங்கில முதுமொழி.
சர்வதேச நிதி அமைப்பு பயன்படுத்துகிற தொழிற்நுட்பம், அறிவு, மொழி என அனைத்துமே வடக்கத்தி நாடுகளில் வாழும் சக்தி வாய்ந்தக் குழுக்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், அவர்களின் செயல்பாடுகள் திறந்தவெளித்தன்மையோ, சனநாயகத்தன்மையோ இல்லாமல் பெரும் மர்மமாக, புரிந்துகொள்ள முடியாதவையாக இருப்பதாலும், உங்களைப் போன்றோர் இவற்றை உடைத்து உள்ளே நுழைவது இயலாத காரியம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஆனால் அதே நேரம், தரமற்றக் கல்வி, தன்னம்பிக்கையற்றத் தன்மை, தகுதியற்ற வேலை, குறைந்த ஊதியம், இருண்ட எதிர்காலம் என்றுழலும் இளைஞர்கள் இந்த அபாயகரமானச் சங்கிலிப் பிணைப்பை உடைத்தெறிந்து வெளியே வருவது உடனடித் தேவையாகவும் இருக்கிறது.
பாரதியின் கருத்தை சற்றே மாற்றியமைத்து, “கட்டுண்டோம், அறுத்தெறிவோம், காலம் மாறும்” என்று களமிறங்குங்கள். கடினமாய் முயன்று உங்கள் தகுதிகளை, திறமைகளை, தன்னம்பிக்கையை கடிதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாத, ஒரு மன்னார் & கம்பெனியில் ஒரு கடைநிலை ஊழியராக காலம் தள்ளிக்கொண்டிராமல், ஒரு தொழில்முனைவோராக மாறுங்கள். தன் காலில் மட்டுமே தனித்து நிற்பதற்குத் தடைகள் இருந்தால், ஒத்தக் கருத்துடையோரை உடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
உலகமயம் செல்வச் செழிப்பை உருவாக்கித்தருவதாகவும், பலரை பணக்காரர்கள் ஆக்குவதாகவும் அதன் ஆதரவாளர்கள் பூரிப்படைகிறார்கள். ஆனால் எதிர்ப்பாளர்களோ உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டி, சூழியல் நலத்தைச் சீரழித்து, உலகின் மீது வணிகத்தன்மையையும், போட்டி மனப்பான்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும், நுகர்வுக் கலாச்சாரத்தையும் சுமத்துகிறது என்கின்றனர்.
அமர்த்யா சென் போன்றோர் முன்வைக்கும் மூன்றாம் பார்வையோ, கல்வி, உடல்நலம் போன்றவற்றுக்கான சமூகச் செலவுகளை அதிகப்படுத்தி, அதையே பொருளாதார வெற்றியின் அடிப்படையாகப் பார்க்கவேண்டும் என்கிறது. மக்களின் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி (ஜி.என்.பி.) போன்றவற்றைவிட, மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகளையே பொருளாதார நலத்தின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
இந்த மூன்றாம் பார்வையோடு முயற்சிகளை முன்னெடுங்கள். சர்வதேச நிதி அமைப்பின் இயக்கம், வங்கிச் செயல்பாடுகள், வரவு-செலவு அறிக்கை (பட்ஜெட்), பங்குச்சந்தையின் செயல்முறை உள்ளிட்ட நுணுக்கங்களைப் பயின்று கொள்ளுங்கள். பொருளாதாரக் கோட்பாடுகள், நெளிவு சுளிவுகள், மொழி மற்றும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். குமரப்பா, நம்மாழ்வார், ஷூமக்கர், மாசனாபு ஃபுக்குவோக்கா போன்றோரின் கருத்துக்களை உள்வாங்குங்கள்.
உங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வில், மறுத்திடு, குறைத்திடு, மறுபடி பயன்படுத்திடு, மறுசுழற்சி செய்திடு (Refuse, Reduce, Re-use, Recycle) எனும் வரைமுறையைப் பின்பற்றுங்கள். எளிமை, இனிமை, இறைமை என்று வாழுங்கள்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).