சுப. உதயகுமாரன்
<29> குற்றம் புரிதல்
அண்மையில் சில இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரபலமான ஒருவர் காசோலை மோசடி வழக்கில் சிக்கி, ஓராண்டு சிறைத்தண்டனைப் பெற்றிருப்பது குறித்து பேச்சுத் திரும்பியது. “இதெல்லாம் ஒரு குற்றமா? இதற்கு ஓராண்டுச் சிறையா?” என்று அந்த இளைஞர்கள் வியந்தனர்.
சமூகத்தில் அனைவரும் இப்படி போலிக் காசோலைகளைக் கொடுத்து பொருட்கள், சேவைகளை வாங்கிச் சென்றுவிட்டால், மொத்தப் பொருளாதாரமுமே வீழ்ந்துவிடும் என்பதை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான ஒரு நிலை ஏற்படாது தடுப்பதற்காகத்தான் இப்படித் தண்டிக்கிறார்கள் என்று விளக்கிச் சொன்னேன்.
சட்டங்கள் இயற்றுவது குற்றங்கள் நடந்தபிறகு தண்டிப்பதற்காக என்பதைவிட, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காகவும், ஒட்டுமொத்த சமூக மேலாண்மைக்காகவும்தான். அப்படியானால் அவை உரியவர்களுக்கு எளிய முறையில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டாமா? எந்த பள்ளி, கல்லூரியிலாவது ‘சட்ட விழிப்புணர்வுக் கல்வி’ என்று ஒரு வகுப்பு நடத்தப்படுகிறதா? இல்லை! ஒரு தேர்ந்த வழக்கறிஞரைக் கொண்டு அவ்வப்போது ஒரு கலந்துரையாடலாவது நடத்துகிறார்களா? கிடையாது.
ஒரு காவல்துறை அதிகாரி உங்களைக் கைதுசெய்து, பிடித்துச்செல்ல முயன்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முறைகேடான ஒரு பாலியல் உறவுச் சிக்கலுக்குள் நீங்கள் மாட்டிக்கொண்டால், சட்டம் உங்களை எப்படி நடத்தும்? சாதி, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் உங்களை யாராவது வேற்றுப்படுத்தினால், உங்களின் உரிமைகளை எப்படி தக்கவைத்துக்கொள்வது? இம்மாதிரியான ஏராளமான அன்றாட வாழ்வியல் சிக்கல்களிலிருந்து எப்படி நீந்திக் கரையேறுவது, எங்ஙனம் உங்களையும், உங்கள் உற்றார் உறவினரையும் காப்பாற்றிக்கொள்வது?
சட்ட விழிப்புணர்வு பெறுவது ஒன்றே உரிய வழி. பரந்துபட்ட இந்தியச் சட்டத் திட்டங்களைப் புரிந்துகொண்டு, ஐந்தாறு குறிப்பிட்ட ஆவணங்களைப் பற்றி மேலதிகமாக நீங்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
முதலில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையிலானக் குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படிப்பதும், அதன் நகல் ஒன்றை வீட்டில் வைத்திருப்பதும் மிக முக்கியமானது. அரச நெறிமுறைகள், நீதி பரிபாலனம், நம்முடைய உரிமைகள் போன்றவை பற்றியெல்லாம் விலாவாரியாக விவரிக்கும் அந்த ஆவணத்தின் பகுதி IV-அ என்னுடைய மனங்கவர்ந்த ஒன்று.
நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய ‘அடிப்படைக் கடமைகள்’ பற்றிப் பேசுகிறது அந்தப் பகுதி: அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்:
மகளிர்தம் மாண்’பிற்கு இழுக்காகும் பழக்கங்களை விட்டொழித்தல்; காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் இவை உள்ளிட்ட இயற்கைச் சூழலை அழியாது காத்து வளர்த்தல்; உயிரினங்கள்பால் இரக்கங்காட்டுதல்; வன்முறையினை முற்றாக ஒழித்தல் போன்றவை. ஒருவர் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினால்தானே உரிமைகளை உறுதியுடன் கோரிப் பெறமுடியும்?
குற்றவியல் நடைமுறைச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், குடிமையியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், குடும்பச் சட்டம் போன்ற முக்கியமானச் சட்டங்களைப் பற்றி ஆழமான அறிவினைப் பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாதது.
அதேபோல, இந்தியத் தண்டனைச் சட்டத்தைப் பற்றிய பரந்துபட்ட அறிவும் அன்றாட வாழ்வில் அவசியமானதாக இருக்கிறது. அதிலிருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்டப் பிரிவுகளையும், அவற்றின் உள்கிடப்புக்கள் அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டியத் தேவையில்லை. ஆனால் 120, 121, 420 போன்ற சில முக்கியமான பிரிவுகளைப் பற்றிய அடிப்படை அறிவு அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படுபவையாக இருக்கின்றன.
ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இயற்றும் அனைத்துச் சட்டங்களையும், அவற்றில் அவ்வப்போது கொண்டுவரும் மாற்றங்களையும் நாம் கவனமாகப் பின்தொடர்ந்து பாண்டித்தியம் பெற முடியாது, அதற்கானத் தேவையும் இல்லை. ஆனால் அரசுகள் அவ்வப்போது இயற்றும் சர்ச்சைக்குரியச் சட்டங்கள் பற்றியெல்லாம் நாம் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். எடுத்துக்காட்டாக, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்கிற பெயரில் அரசுகள் கொண்டுவரும் தடா, பொடா, ஊபா சட்டங்களைப் பற்றி, சமூகத்தின் மீதான அவற்றின் பொதுவானத் தாக்கங்கள் பற்றியெல்லாம் நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
வாகனங்கள் ஓட்டுகின்ற நீங்கள், சாலை விதிகள் என்னென்ன, சாலை விதிகளை ஏன் பின்பற்ற வேண்டும், விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிந்திருக்க வேண்டும்.
இன்றையை இளைஞர்கள் குறிப்பாக இரண்டு விடயங்களைச் சுற்றி நடக்கும் சட்ட மீறல்கள், பிரச்சினைகள், விளைவுகள் குறித்து பெரும் கவனம் செலுத்தவேண்டியத் தேவை இருக்கிறது. ஒன்று, கைப்பேசி பயன்பாடு; இன்னொன்று, இணையதள நடவடிக்கைகள்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் உங்கள் கைப்பேசியைக் கொஞ்சம் தாருங்கள், ஒருவரை அவசரமாக அழைக்க வேண்டியிருக்கிறது என்று வற்புறுத்திக் கேட்கிறார் என்று வையுங்கள். அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு நீங்களும் உங்கள் கைப்பேசியை அவருக்குக் கொடுக்கிறீர்கள். அவர் ஒரு சமூகவிரோத நடவடிக்கைக்காக, அல்லது தவறான ஒருவரிடம் ஓர் ஆபத்தான தகவலைக் கடத்துவதற்காக. உங்கள் கைப்பேசியை பயன்படுத்துகிறார். இந்த குற்றம் ஒருநாள் வெளிப்பட்டு, தொடர்புடையோர் அனைவரும் விசாரிக்கப்படும்போது, மேற்படி கைப்பேசி அழைப்பையும் காவல்துறை தோண்டியெடுக்கும். அப்போது உங்கள் நிலைமை என்னவாகும்?
அறிந்திராதவர்களிடம் நட்பு ஏற்படுத்துதல், மனம்விட்டுப் பேசுதல், முக்கியமான தகவல்களைப் பரிமாறுதல், சர்ச்சைக்குரிய படங்களைப் பகிர்தல், அவர்களின் விருப்பப்படி இயங்குதல் என ஏராளமானப் பிரச்சினைகள் கட்டற்றக் கைப்பேசி பயன்பாட்டின் மூலமாக எழுகின்றன. சில நேரங்களில் வாழ்க்கையையேப் புரட்டிப் போட்டுவிடும் குழப்பங்களும் நிகழ்கின்றன.
கைப்பேசி போலவே, இணையமும் ஏராளமான பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது. இணையம் கொண்டிருக்கும் அனாமதேயப் பண்புகளும், அது வழங்குகிறத் தனிமையும், ரகசியத் தன்மைகளும் சிலரை கட்டுப்பாடுகளின்றி பேசவும், எழுதவும், இயங்கவும் வைக்கின்றன. வெறுப்பு, வெறித்தனம், வன்முறை, பாலியல் கொடுமைகள் போன்றவற்றில் ஈடுபடும் சமூகவிரோத கும்பல்களோடானத் தொடர்பு மற்றும் நடவடிக்கைகள் பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடுகின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
பொதுவாகவே, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நிறுவனங்களான காவல்துறை, உளவுத்துறை, நீதித்துறை, சிறைத்துறை போன்றவற்றைப் பொறுத்தவரை, “அகலாது அணுகாதுத் தீக்காய்வார் போல்” நடந்துகொள்வதே சிறப்பானது. உதாசீனப்படுத்தாமல், அதே நேரம், உரசல்களோ, நெருங்கிய உறவாடல்களோ இல்லாமல் பார்த்துக் கொள்வதே நல்லது.
ஒருவேளை, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் மேற்படி நிறுவனங்களின் பிடிக்குள் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? உங்கள் தனிமனித ஒழுக்கம், பொருளாதாரச் செயல்பாடுகள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் போன்றவற்றை தூய்மையானவையாக, அப்பழுக்கற்றவையாக வைத்திருக்கும் பட்சத்தில், நீங்கள் எதைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. “நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு” (பாரதி) எனும் ஆயுதங்களோடு, “உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்துகொண்டிருந்தால்” (கண்ணதாசன்), யாராலும் உங்களை எளிதில் துன்புறுத்திவிட முடியாது.
காவல்நிலையக் கொலைகள், சிறைச் சாவுகள், உளவுத்துறை நெருக்கடிகள், பொய் வழக்குகள், நீதி மறுப்பு என சிலர் தங்கள் வாழ்வை இழப்பதும் நடக்கத்தான் செய்கிறது. சாதீயம், மதவெறி, ஏழ்மை, கல்வியறிவின்மை, எளியப் பின்புலம், ஆள் பலமின்மை, அதிகாரமின்மை என்பன போன்ற பல்வேறு காரணங்களால் மேற்படி அவலங்கள் சிலரைத் தாக்கி அழிக்கின்றன.
எனவேதான் மலையாள மகாகவி குமாரன் ஆசானின் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது: “மாற்றுங்கள் சட்டங்களை, இல்லையேல் மாற்றும் அச்சட்டங்கள் உங்களைத்தான்!” சட்டங்கள் சமூகத்தின் சட்டைகளைப் போன்றவை; காலத்திற்கும், நேரத்திற்கும், தேவைக்கும் ஏற்றபடி அடுத்தத் தலைமுறைத் தலைவர்கள் அவற்றை மாற்றியமைக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
தனிமனித வாழ்வில் கவனமும், பொதுவாழ்வில் கரிசனமும் நீங்கள் கொண்டிருந்தால், அந்தப் பெரும் பொறுப்பு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழைப்பை ஏற்றெடுத்து, என் குடியை உயரச் செய்வேன் என்று நீங்கள் களமிறங்கும்போது, ஊழ் தனது ஆடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு தானே முன்வந்து நின்று துணைசெய்யுமாம்:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.