சுப. உதயகுமாரன்
<3> உயிர்காத்தல்
உயிர்காத்தல் எனும் கோட்பாடு உயிர்நேயம், மாந்தநேயம், வாழ்வினை வணங்குதல், கொல்லாமை போன்ற பல முக்கியமான விழுமியங்களைச் சார்ந்திருக்கிறது. அதேபோல, உயிர்காத்தலில் இரண்டு படிநிலைகளும் உள்ளன. முதலாவது, உங்கள் உயிரை முதலில் காத்துக்கொள்வது; இரண்டாவதாகவே பிறரின் உயிர்களைக் காக்கும்நடவடிக்கைகளை மேற்கொள்வது.
விமானத்தில் பயணிக்கும்போது, உள்ளே உயிர்க்காற்றுக் குறைவு ஏற்பட்டு, விமானி ஆக்சிஜன் குழாய்களை பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளும்போது, ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வார். அதாவது உங்களுக்கான ஆக்சிஜன் குழாயை முதலில் பொருத்திக்கொண்ட பிறகே, உங்கள் குடும்பத்தாருக்கு உதவுங்கள் என்பார். உங்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காதபட்சத்தில் நீங்கள் மயக்கமடைந்துவிட்டால், உங்களால் மற்றவர்களுக்கும் உதவ முடியாமல் போகுமே என்கிற அச்சம்தான் இந்த வேண்டுகோளின் அடிப்படை. உங்கள் குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கும்போது நீங்கள் மயங்கி விழுந்து விட்டால், உங்களால் உங்களையும் காப்பாற்றிக்கொள்ள இயலாது, உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியாமற் போகும்.
இந்தியா தற்கொலைகளின் தலைநகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு மட்டும் 1,53,052 பேர் தற்கொலை செய்திருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக, நம்முடைய தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 13,493 பேர் தங்கள் உயிர்களை தாங்களே மாய்த்துக் கொண்டார்கள். இவர்களில் பலரும் வாழவேண்டிய இளங்குருத்துக்கள் என்பது மிகவும் வேதனையான விடயம்.
தரமான கல்வியின்மை, கல்விக்கேற்ற வேலையின்மை, வேலைக்கேற்ற வருமானமின்மை, “ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று துவண்டு கிடக்கும் இளைஞர்கள், குடும்பத்தின் ஆதரவோ, சமூக அரவணைப்போ இல்லாத நிலையில் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். இப்படியான ஒவ்வோர் உயிரின் இழப்புக்கும் ஒட்டுமொத்தச் சமூகமும் பொறுப்பாகிறது.
தன்னையேக் காத்துக்கொள்ள இயலாத ஒருவர் எப்படி அடுத்தவரை காத்துநிற்க முடியும்? உயிர்காக்கும் திறன் இங்கே பெரும்பாலானவர்களிடம் இல்லை. நமது கல்வித்திட்டம் அது குறித்து கவலைப்படவுமில்லை. முதலுதவி சிகிச்சைக் கல்வி என்பது பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, வழிபாட்டுத் தலங்களிலோ, பணியிடங்களிலோ எங்குமே கிடையாது. ஆறுகளில், குளங்களில், கடலில் விழுகிறவர்களை காக்கப்போய் உயிரிழப்போர் எண்ணிக்கை மிக அதிகம்.
சாலை விதிகள் பற்றி, ஒரு விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி, விசக்கடிகளிலிருந்து தப்பிப்பது பற்றி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி செய்வது பற்றி, தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றியெல்லாம் இங்கே யாராவது யாருக்காவது எப்போதாவது எந்தவிதத்திலாவது பயிற்சிகள் கொடுக்கிறோமா? இவை எதையுமே கற்றுத்தராத கல்வியினால் ஆன பயன்தான் என்ன? சக மனிதனுக்கு ஓர் ஆபத்து ஏற்படும்போது, அவருக்கு எந்தவிதத்திலும் உதவ முடியாமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர் எப்படி கற்றறிந்தவர் என்று தன்னைக் கருதிக்கொள்ள முடியும்? வெறும் காகிதப் பட்டங்களை வைத்துக்கொண்டு அதிகச் சம்பளம் வாங்க முயல்வதுதான் கல்வியின் ஒரே நோக்கமா?
நாம் அனைவருமாகச் சேர்ந்து கட்டமைத்திருக்கும் சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகள் குறித்து நாம் சிந்தித்தாக வேண்டும். மண்ணை விட்டு நாம் விலகும்தோறும், ப(உ)யிர்களை போற்றிப் பாதுகாத்து வளர்க்கத் தவறும்தோறும், கார்ப்பரேட் கலாச்சாரத்துக்குள் சிக்கியிருக்கும்தோறும், தற்கொலை, கொலை, கூலிப்படை அழித்தொழிப்பு, சாலை விபத்து, சாராயச் சாவு என அனைத்தும் அதிகரிக்கவே செய்யும். கோட்பாடுகள், தேற்றங்கள் என்றெல்லாம் அறிவுபூர்வமாகப் பேசி, நாம் கட்டமைத்து வைத்திருக்கும் கல்வித்தளம் நம்மை மண்ணைவிட்டு, மரத்தைவிட்டு, மாந்தநேயத்தை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. இன்று நோய்த்தொற்று, தடுப்பூசி, படுக்கை, பிராண வாயு என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். விதைப்பதைத்தானே அறுக்க முடியும்?
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1915-ஆம் ஆண்டு வாக்கில் மனிதப் பண்பாட்டின் குறைபாடுகள் குறித்து வெறுமனே விமரிசனம் செய்தால் மட்டும் போதாது, நேர்மறையாகக் கடமையாற்றவேண்டும் என்றெண்ணிய பிரான்சு நாட்டு மருத்துவர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் (1875—1965) “வாழ்வினை வணங்குவோம்” (Reverence for Life) எனும் முழக்கத்தை முன்வைத்து இயங்கினார். இந்த கொள்கையோடு ஆப்பிரிக்காவில் மருத்துவச் சேவையாற்றிய அவருக்கு 1952-ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஸ்வைட்சரின் கொள்கை நம்முடைய பாரதியாரின் (1882—1921) ஃபார்முலாவேதான்: “உயிர்களிடத்தில் அன்பு வேணும்!” உயிர்களிடத்தில் அன்பு பாராட்டுவதற்கு ஈரமான இதயமும், குளிர்ந்த மனமும், கனிந்த அறிவும் மட்டும் இருந்தால் போதும். இன்னொரு உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், நாம் பெற்றுள்ள அறிவினால் என்ன பயன் என்று கேட்கிறார் வள்ளுவர்:
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.
உங்கள் தலைக்கும் இதயத்துக்கும் இடையே ஓர் இழுபறி ஏற்பட்டால், உங்கள் இதயம் சொல்வதையேக் கேளுங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர். காரண காரியங்களைப் பார்க்கும் தலையைவிட, கருணையோடு இயங்கும் இதயமே மேலானது. சில ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்திலுள்ள மான்மத் பல்கலைக்கழக உணவு விடுதியில் நண்பர்களோடு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், அங்கே உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஓர் அமெரிக்க இளைஞன் திடீரென வெட்டிப்போட்ட மரம் மாதிரி தடாலென கீழே விழுந்தான். கைகால்கள் இழுத்துக் கொண்டிருந்தன. செய்வதறியாது அனைவரும் திகைத்து நிற்க, நான் ஓடிச்சென்று அவனைப் புரட்டி, பக்கவாட்டில் படுக்கவைத்து, அவனது வாய்க்குள் கொஞ்சம் திசுக் காகிதங்களைத் திணித்து, வாயைத் துடைத்து விட்டேன்.
என்னுடைய அமெரிக்கத் தோழர்கள் சிலர் நான் செய்தது மிகவும் ஆபத்தான செயல் என்றும், அந்த இளைஞனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், என் மீது வழக்குத் தொடுக்கப்படலாம், நான் பெருத்த இழப்பீடு கொடுக்கவேண்டி வரலாம் என்றும் எச்சரித்தார்கள். ஆனால் எனக்கு உயிர்நேயம் போற்றும் திறனும், உயிர்காக்கும் திறனும் எப்படி குற்றச்செயல்களாக இருக்க முடியும் என்பது விளங்கவேயில்லை.
கருணையை அடிப்படையாகக் கொண்டியங்கும் மேற்படித் திறன்களை உங்கள் கல்வியில் சேர்க்கத் தவறிய குற்றத்தை என்னுடைய தலைமுறை செய்திருக்கிறது. ஆறுகளில், குளங்களில், கடலில் விழுகிறவர்களைக் காப்பாற்றப்போய் ஒருவர் உயிரிழக்கும்போது, மனம் உடைந்து போகிறது. மாரடைப்பால் அவதியுறும் ஒருவரை மீட்டெடுக்க முடியாமல் அருகிருப்போர் கையறு நிலையில் கைகளைப் பிசைந்து நிற்கும்போது, உள்ளம் துவண்டு போகிறது. நீச்சல் பயிற்சி, முதலுதவிக் கல்வி, உயிர்காக்கும் திறன் போன்ற பாடங்கள் இல்லாத பயனற்றப் படிப்பை உங்கள்மீது திணித்திருக்கிறோம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவவில்லை.
கடந்த 2014 செப்டம்பர் மாதம் தில்லி உயிரியல் பூங்காவில் அமைந்திருந்த ஒரு புலி வளையத்துக்குள் ஓர் இளைஞன் தவறி விழுந்துவிட்டான். மேலே ஏறி வரவும் முடியாமல், உள்ளே எங்கும் ஓடித் தப்பிக்கவும் இயலாமல், அங்கிருந்த புலியை நோக்கி கைகுவித்துக் கும்பிட்டவாறே நடுங்கிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். பரிதவித்த அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்று பார்வையாளர்களில் யாருக்கும் நம் கல்வி முறை கற்றுத்தந்திருக்கவில்லை.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
பார்வையாளர்கள் பள்ளத்துக்குள் நின்றிருந்த அந்தப் புலியின் மீது கல்லெறிந்தார்கள். அதுகாறும் வாளாவிருந்த புலியோ கோபம் கொண்டு, பார்வையாளர்களைப் பார்த்து உறுமியது. பார்வையாளர்கள் விடாமல் கல்லெறிந்து, கூச்சலிட்டார்கள். பொறுமையிழந்த புலியோ அந்த இளைஞனின் கழுத்தைக் கவ்விப்பிடித்து, தன்னுடைய இடம் நோக்கி தரதரவென்று இழுத்துச்சென்றது.
அந்த இளைஞனிடம் புலியின் கண்களில் கொஞ்சம் மண்ணைத் தூவச் சொல்லியிருந்தால், அது அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கும். விலங்குகள் கூச்சல் குழப்பத்தால் மிரளும் என்பதும், கல்லால் அடித்தால் கோபம் கொள்ளும் என்பதும், ஆனால் நெருப்பைக் கண்டால் அஞ்சி விலகியோடும் என்பதும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அங்கே கூடியிருந்த பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பைப் பற்றவைத்து, அதை அந்த இளைஞனிடம் எறிந்திருந்தால், புலி மிரண்டு ஓடிப்போயிருக்கும். இரண்டு உயிர்களுமே எந்தவிதமானத் துன்பமுமின்றி பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். கோட்பாடுகளும், தேற்றங்களும், உயர் விழுமியங்களும் ஒருபக்கம் இருக்கட்டும்; உயிர்காக்கும் வித்தைகளை ஒவ்வொருவரும் அறிந்திடுவோம், வளர்த்தெடுப்போம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 4
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.