சுப. உதயகுமாரன்
<4> நடை, உடை, பாவனைகள்
“ஆள் பாதி, ஆடை பாதி” என்பது ஒரு பேருண்மை. ஒருவரை எடை போடுவதற்கு புறத்தோற்றமே மிக முக்கியமான காரணியாக அமைகிறது. அந்த புறத்தோற்றத்தை பெருமளவு அமைத்துக் கொடுப்பது நாம் அணிந்திருக்கும் உடை.
“முதல் ஈர்ப்பே ஆகச்சிறந்த ஈர்ப்பு” என்பது உண்மையானால், உடையில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. விலையுயர்ந்த பகட்டான உடைதான் வேண்டும் என்பதில்லை; எளிமையான, சுத்தமான, முகத்தில் அடித்தாற் போலில்லாத, உங்கள் உடல்வாகுக்கும், தனித்தன்மைக்கும் உகந்த உடை அணிவது சிறந்தது.
ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது, அல்லது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது, உடையில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. ஆண்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானத் தருணங்களில் இஸ்திரியிடப்பட்ட முழுக்கைச் சட்டையும், கால்சட்டையும், அலுவல் காலணியும் ஏற்றவையாக இருக்கும். பெண்கள் இதமான நிறங்களில் சேலை, சல்வார், சூட் போன்றவை அணியலாம். கண்ணைப்பறிக்கும், கவனத்தைத் திசைத்திருப்பும் அலங்காரங்களை, அணிகலன்களைத் தவிர்க்கலாம். கவிமணி அழகாகச் சொல்கிறார்:
கந்தை யானாலும் கசக்கியுடு – என்னும்
கற்பனை போற்றி நடப்பாய், அம்மா!
சுந்தர மேனியுண் டாகும்,அம்மா!-இந்தச்
சுத்தத்தின் நன்மை சிறிதோ? அம்மா!
உடையைப் போலவே, வாழ்க்கையிலும், வேலையிலும் வெற்றி பெறுவதற்கு அடிப்படை நம்முடைய நடத்தை முறைகளும், ஒழுக்கநெறிகளுமே. ‘நன்றி’, ‘தயவுசெய்து’, ‘மன்னியுங்கள்’ போன்ற வார்த்தைகளை, உணர்வுகளை உரிய தருணங்களில் பயன்படுத்தத் தயங்காதீர்கள், தவறாதீர்கள். உங்கள் அலுவலகக் கடைநிலை ஊழியரோ அல்லது உயர் அதிகாரியோ, யாராக இருந்தாலும், ஒருவர் உதவிசெய்யும்போது, அவரிடம் ஓர் உதவித் தேவைப்படும்போது, அல்லது யாருக்காவது எந்தவிதத்திலாவது நீங்கள் தொந்திரவு செய்துவிட்டால், மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை, உணர்வுகளை உண்மையாக, நேர்மையாக பயன்படுத்துங்கள். அப்படிச் செய்யும்போது பெரும் கவனஈர்ப்பு நாடகங்கள் எதுவும் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இம்மாதிரியான மரியாதைமிக்க நடவடிக்கையால், அலுவலகத்தில் உங்கள் மதிப்பு ஓகோவென்று உயர்வதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்த கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் கைகுலுக்குவதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறோம். அலுவலகத்தில் ஒருவரோடு கைகுலுக்கும் தேவை ஏற்படும்போது, அது மென்மையானதாக, ஆனால் உறுதியானதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். கைகுலுக்குவது உயிரற்றதாகவோ, மிகவும் கடினமானதாகவோ இருக்கக் கூடாது. நீங்களாக ஒருவருக்கு கைகொடுத்தாலும், பிறர் கைகொடுப்பதை ஏற்றுக்கொண்டாலும், எழுந்து நின்று, புன்னகைத்து, மற்றவர் கண்களைப் பார்த்து கைகுலுக்குவதுதான் மரியாதையாக இருக்கும். நீங்கள் ஆணாக இருந்து, உங்களுக்கு எதிரே நிற்பவர் ஒரு பெண்ணாக இருந்தால், அவராகவே முன்வந்து கைகொடுத்தால் மட்டுமே அதை ஏற்றுக் கைகுலுக்குங்கள். நீங்களாக வலிந்துசென்று உங்கள் கையை அந்தப் பெண் மீது திணிக்காதீர்கள். கைகுலுக்கும்போது, உங்கள் உள்ளங்கை ஈரமாக இல்லாமலும், நகங்கள் அசுத்தமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
நீங்கள் உங்கள் நெருக்கமான நண்பர்களைத் தொட்டுப்பேசும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும், அலுவலகத்தில் பெண்களை சந்தித்துப் பேசும்போது எக்காரணங்கொண்டும் அவர்களைத் தொட்டுப் பேசாதீர்கள். ஆண்களிடம் பேசும்போதும், கட்டியணைப்பது, தோள்களைத் தட்டுவது போன்ற தொடுதல் நடவடிக்கைகளை கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். வேற்றுமொழி பேசும் சக ஊழியர்களோடு ஆங்கிலத்திலோ அல்லது வேறொரு பொது மொழியிலோ பேசிக்கொண்டிருக்கும்போது, உங்கள் நண்பரையோ, உறவினரையோப் பார்த்ததும் உடனே உங்கள் தாய்மொழியில் பேச எத்தனிக்காதீர்கள்.
ஒரு வரிசையில் நிற்கும்போது, உங்களுக்கு முன்னால் வந்து காத்திருப்பவர்களை அவமதித்துவிட்டு, அவர்களை முந்திச்செல்ல முயற்சிக்காதீர்கள். உங்கள் முறை வரும்வரை பொறுமையாகக் காத்திருங்கள். அதேபோல, அலுவலக மின்உயர்த்தியில் (lift) நுழையும்போது, பெண்களுக்கு முதலில் வழி விடுங்கள். ஒரு வாசல் வழியாக ஓர் அலுவலகத்துக்குள் அல்லது அறைக்குள் நுழையும்போது, பின்னால் வருகிறவர்களுக்காக கதவைத் திறந்துவைத்து அவர்கள் உள்ளே நுழைய உதவுங்கள். ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு உட்காரும்போது, அதை தரதரவென்று இழுத்து பெருத்த ஒலியை எழுப்பாமல், இரண்டு கைகளாலும் ஓசையின்றி தூக்கிப் போட்டுவிட்டு அமருங்கள். கால்களை அகல விரித்து அமர்வதையும், கால் மேல் கால் போட்டு உட்காருவதையும் தவிர்த்துவிடுங்கள்.
அமெரிக்காவில் வசிக்கும்போது கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கத்தைப் பெற்றிருந்த நான், இந்தியாவுக்குத் திரும்பிய பிறகும் அதனைத் தொடர்ந்தேன். ஒரு பொதுமேடையில் நான் அப்படி உட்கார்ந்திருக்கும்போது, எனதருகே அமர்ந்திருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய வெள்ளையன் ஐயா அவர்கள் என்னைத் திருத்தினார். கீழே அமர்ந்திருக்கிறவர்களுக்கு அது அவமரியாதையாகத் தோன்றலாம் என்பதை அன்புடனும், உரிமையுடனும் சுட்டிக்காட்டினார். அன்றிலிருந்து நான் அப்படி உட்காருவதேயில்லை. உள்ளூர் கலாச்சாரத்திற்கேற்ப ஒழுகுவது மிகவும் இன்றியமையாதது.
அமெரிக்காவைச் சார்ந்த இரண்டு பேர் ஓர் அரபு வணிகருடன் வியாபார ஒப்பந்தம் பற்றிப் பேசுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றார்கள். பேச்சுவார்த்தையின்போது ஓர் அமெரிக்கர் தன்னுடைய கால் ஒன்றை மடித்து மற்றொரு காலின் மீது போட்டவாறே, தன்னுடையச் செருப்பின் அடிப்பாகம் அந்த அரேபியரை நோக்கி இருப்பது போன்ற நிலையில் அமர்ந்திருந்தார். வியாபாரத்தின் வணிக அம்சங்கள் சாதகமாக இருந்தாலும், செருப்பைப் பார்த்து கோபம் கொண்ட அரேபியர் ஒத்துப்போகாததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
அலுவலகத்திலோ, வெளியிலோ, எங்கேயானாலும், எப்போதானாலும், தொலைப்பேசி நாகரிகத்தைக் கடைபிடியுங்கள். போனை எடுக்கும்போது, ‘வணக்கம்’ அல்லது ‘ஹலோ’ என்று சொல்லி, “நான் மோகன் பேசுகிறேன்” என்று சொல்லித் தொடங்குவது சிறந்தது. ஒருவரோடான நேரடி உரையாடலின்போது நாம் பேசுவதைவிட, தொலைப்பேசியில் பேசும்போது சத்தமாகப் பேசுகிறோம். இதை கவனமாகத் தவிர்ப்பது நல்லது. பொது இடங்களில், நிகழ்வுகளில், கூட்டங்களில் இருக்கும்போது, கைப்பேசியை அணைத்து வைப்பது, அல்லது அதிர்வு முறைக்கு மாற்றிவைப்பது முக்கியமானது. பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது, கேட்பொறி இல்லாமல் அனைவரும் கேட்கும்படியாக சத்தமாகப் பாடலை ரசிப்பது, சினிமாப் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது சிறந்தது.
நேருக்கு நேர் ஒருவரைப் பார்த்துப் பேசும்போது, அவரின் உள்ளக்கிடக்கையை, அணுகுமுறையைப் புரிந்துகொள்ள அவரது உடல்மொழி, முகபாவனைகள், குரலின் ஏற்றத்தாழ்வுகள் என பல விடயங்கள் நமக்கு உதவுகின்றன. ஆனால் மின்னணுச் சாதனங்களின் வழியாக நாம் உரையாடும்போது, இவை எதுவும் நமக்கு வாய்க்கப்பெறாது. எனவே மின்னஞ்சல், வாட்சப், டெலகிராம் போன்றவை வழியாக உரையாடும்போது, குழப்பங்கள் எழவும், தவறானப் புரிதல் ஏற்படவும் வாய்ப்புக்கள் இருப்பதால், நமது வார்த்தைகளைத் தேர்ந்து, தெளிந்து பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
அலுவலகத்திலோ, வெளியிலோ ஒருவரை புதிதாக சந்திக்கும்போது, உங்கள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திகொண்டு, “உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று சொல்வது சிறந்தது. அவரோடான உரையாடலைத் தொடர்ந்து நடத்துவதற்கு அரசியல், மதம் போன்ற சிக்கலான விடயங்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. சினிமா, கிசுகிசுக்கள் பற்றி எதையாவதுப் பேசினால், அது உங்களின் தரத்தைக் குறைத்துவிடும்
அபாயம் தொக்கி நிற்கிறது. எனவே அம்மாதிரிச் சூழலில் காலநிலை, விளையாட்டு, பொருளாதாரம் போன்றவை பற்றிப் பேசுவது உசிதமானதாக இருக்கும்.
மற்றவர்கள் மனம் புண்படும்படியாக எதையும் எப்போதும் பேசாதீர்கள், செய்யாதீர்கள்.
பிறருடையப் பொருட்கள் சேதமடையும், நாசமாகும் வகையில் எதையும் செய்யாதீர்கள்.
பிறர் பேசும்போது கவனமாகக் கேளுங்கள்; அவர்கள் பேசி முடிக்கும்வரைப் பேசாதிருங்கள்.
பிறர் தூங்கும்போது, ஓய்வெடுக்கும்போது, பேசிக் கொண்டிருக்கும்போது, அல்லது சிந்தித்துக் கொண்டிருக்கும்போது மவுனமாக இருங்கள்.
மரியாதையின்றி நடப்பவர்கள், தன்னைப்போலவே பிறரும் முக்கியமானவர்கள் என்று கருதாதவர்கள், ‘நான்தான் முதலில்’ என்று வலியுறுத்துகிறவர்கள், ‘சிறந்தது எனக்குத்தான்’ என்று நிர்ப்பந்திக்கிறவர்கள், ‘எனக்குத்தான் அதிகம் வேண்டும்’ என்று பேராசைப்படுகிறவர்கள், தன்னை மட்டுமே அனைவரும் பார்க்க வேண்டும், வேறு யாரையும் பார்க்கக்கூடாது என்று அதீத கவனம்பெற முயற்சிக்கிறவர்கள், ‘நான் சொல்வது போலவே நடக்கவேண்டும்’ என்று வற்புறுத்துகிறவர்கள் எல்லோருமே மரியாதைக்குறைவாக, முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறவர்கள் என்பதை எளிதில் கண்டுணரலாம். அப்படிப்பட்டவர்கள் தன்னலவாதிகளாக, கருணையற்றவர்களாகவே இருப்பார்கள். அவர்களோடு ஒட்டி உறவாட, நட்பு பாராட்ட யாரும் விரும்பமாட்டார்கள்.
பணியிடமோ, பொது இடமோ எங்கேயானாலும், உங்கள் பொது அறிவை பயன்படுத்தி சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் கைக்கொள்ள வேண்டிய ஓர் எளிய விதிமுறை இதுதான்: மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படியே அவர்களை நீங்கள் நடத்துங்கள்! கவிமணியின் கரிசனமிக்க அறிவுரையும் அதுதான்:
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com)
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 5
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.