சுப. உதயகுமாரன்
[5] நடத்தை முறைகள்
உங்களின் பணிவு (manners), பழக்கவழக்கம் (mannerisms), நடத்தை (behavior), சமூக ஆசாரங்கள் (etiquettes) அனைத்தையும் ஆங்கிலத்தில் வெவ்வேறு வார்த்தைகளில் குறித்தாலும், தமிழில் பொதுவாக ‘நடத்தை’ எனும் ஒரு பரந்துபட்டச் சொல்லுக்குள் அடக்கிவிடுகிறோம்.
பணிவு அல்லது பவ்வியம் என்பது அன்றாட வாழ்வில் நீங்கள் பிறரிடம் நடந்துகொள்ளும் விதத்தைக் குறிக்கிறது. ‘அடக்கமானப் பெண்’, ‘அமைதியானப் பையன்’ என்றெல்லாம் நாம் ஒருவரை குறிக்கும்போது, அவருடைய நடத்தையின் பண்பை கோடிட்டுக் காட்டுகிறோம்.
பழக்கவழக்கம் என்பது நீங்கள் உடலாலும், பேச்சாலும், நடத்தையாலும் அனிச்சையாக செய்யும் தனித்துவமான சில நடவடிக்கைகள். எடுத்துக்காட்டாக, தாடையைத் தடவிக்கொள்வது, சட்டையை சரிசெய்து கொள்வது, தொண்டையைக் கனைப்பது, நகத்தைக் கடிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் நம்மில் பலர் ஈடுபடுகிறோம்.
நடத்தை என்பது உங்களுடைய இயற்கையான குணாதிசயம். நேர்மை, நல்லொழுக்கம், அஞ்சாமை, அன்பு பாராட்டல் போன்ற உங்களின் குணநலன்களை நடத்தை என்று குறிப்பிடுகிறோம்.
சமூக ஆசாரங்கள் என்றால் அன்றாட வாழ்வின் சில சந்தர்ப்பங்களில் சமூக எதிர்பார்ப்புக்களை மதித்து நடந்துகொள்ளும் விதத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, தொலைபேசியில் பேசும் விதம், வழிபாட்டுத் தலத்தில் அமைதிகாத்தல் என்று பல விடயங்களைச் சுட்டலாம்.
பிறரைப் பார்த்து சில நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொள்வதும், பிறரிடமிருந்து புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதும் நல்லதுதான். சமூக விலங்குகளான நாமனைவருமே அப்படித்தான் பயில்கிறோம். ஆனாலும் உங்கள் அடிப்படை இயல்புகளை விட்டுவிடத் தேவையில்லை. இன்னொருவரின் பண்புகளை, பழக்கவழக்கங்களை, நடத்தைகளை அப்படியேப் பின்பற்ற முனைவது, அவரைப் போலவே போலியாக நடிப்பது போன்றவை ஆரோக்கியமான நடவடிக்கைகள் அல்ல. நீங்கள் நீங்களாக இருங்கள், காரணம் இவ்வுலகில் நீங்கள் மட்டும்தான் நீங்கள்.
நாம் பிறந்து வளர்ந்த நாட்டின் கலாச்சாரம், ஊரின் பழக்கவழக்கங்கள், வீட்டின் நடைமுறைகள் போன்றவை நமது நடத்தையின்மீது பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டில் பாரம்பரிய பழக்க வழக்கங்களின், பண்பாட்டின் அடிப்படையிலான ஆச்சாரங்கள் நாடெங்கும் கண்ணுங்கருத்துமாய் பின்பற்றப்படுகின்றன. பொதுவெளியில் உரக்கப் பேசுவது, கூச்சலிடுவது, நடந்துகொண்டே சாப்பிடுவது போன்றவை அங்கே மோசமான செயல்களாகப் பார்க்கப்படுகின்றன. முதியோரை மரியாதையாக நடத்துவது, குனிந்து தலைவணங்குவது, இன்னொருவரின் வணக்கத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்வது என பல ஆச்சாரங்களை அத்தனை ஜப்பானியரும் அப்படியே கடைபிடிக்கின்றனர்.
அதேபோல, நாம் இயற்றும் சட்டத்திட்டங்களும் நமது நடத்தையைப் பெரிதும் நிர்வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, துபாயில் பொதுவெளியில் சத்தமாக இசை ஒலிப்பது, நடனமாடுவது, முத்தம் கொடுப்பது, கைகோர்ப்பது போன்ற செயல்கள் சிறப்புச் சட்டங்களால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில்கூட கல்விக்கூடங்கள், பணியிடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றில் வரம்புமீறிய பகிரங்கமான அன்புகாட்டல் நடவடிக்கைகளுக்கு (Public Display of Affection) தடைவிதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்த எனக்கு கையால் சாப்பிட்டுத்தான் பழக்கம். நாம் சாப்பிடும் உணவு விரல்களின் முதல் ரேகை மடிப்புக்களைத் தாண்டி விரல்களின் மேல்பகுதிக்கோ, அல்லது உள்ளங்கைக்கோ வரவே கூடாது என்பது விதி. அதேபோல, உணவை இலாவகமாக விரல் நுனிகளால் அள்ளியெடுத்து வாய்க்குள் வைக்க வேண்டுமே தவிர, அத்தனை விரல்களாலும் உணவை உருட்டி வாய்க்குள் தூக்கி எறியக்கூடாது. இவையெல்லாம் வீட்டில் பாட்டி, அம்மா, அத்தைமார் கற்பித்த உணவு உண்ணும் நுணுக்கங்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
என்னுடைய இருபத்தியொன்றாவது வயதில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுவதற்காக நான் எத்தியோப்பியா நாட்டுக்குச் சென்றபோது, முதன்முதலாக ஒரு பெரிய முறைசார் விருந்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. மேற்கத்திய உணவு பரிமாறப்பட்ட அந்த விருந்தில் கத்தியையும் (knife), முள்கரண்டியையும் (fork) பயன்படுத்தி எப்படிச் சாப்பிடுவது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நல்ல வேளையாக எனதருகே அமர்ந்திருந்த லக்னோ நகரைச்சார்ந்த ஓர் இசுலாமிய நண்பன் கத்தியை வலதுகையால் பிடித்து, உணவை வெட்டி வைத்துவிட்டு, இடது கையில் இருக்கும் முள்கரண்டியால் எடுத்து வாயில்போட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லித்தந்தான்.
உணவு உண்பதைப் பொறுத்தவரை, மேற்கத்தியக் கலாச்சாரத்தில் ஏராளமான எழுதப்படாத விதிகள் இருக்கின்றன. உணவகத்தில் உணவருந்தப் போகும்போது, நாப்கினை உங்கள் மடிமீது விரித்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தப்படாத வேளைகளில் நாப்கின் உங்கள் மடிமீதுதான் இருக்க வேண்டும். வாயை இலேசாகத் துடைப்பதற்கு மட்டும்தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, முகத்தைத் துடைப்பதற்கோ, மூக்குச் சீந்துவதற்கோ அதை உபயோகிக்கக் கூடாது.
உணவருந்திக் கொண்டிருக்கும்போது, எழுந்து செல்ல நேரிட்டால், நாப்கினை உங்கள் தட்டின் இடதுபக்கம் வைத்துச் செல்லுங்கள். தட்டு ஏற்கனவே எடுத்துச்செல்லப்பட்டு விட்டால், நாப்கினை மேசையில் உங்களுக்கு முன்னால் வைத்துச் செல்லலாம். உணவருந்தி முடித்துவிட்டு எழும்போது, நாப்கினை மடித்து வைக்க வேண்டியத் தேவையில்லை. அழுக்கு வெளியே தெரியாமல் அப்படியே வைத்தால் போதும்.
முன்னர் குறிப்பிட்டது போல, கத்தியை வலதுகையில் வைத்துக்கொண்டு உணவை வெட்டிவிட்டு, இடதுகையிலுள்ள முள்கரண்டியால் அதனை எடுத்து வாயில் வைத்து சாப்பிடுவது வழக்கம். கத்தி, முள்கரண்டி போன்றவற்றை பயன்படுத்தும்போது, அவை தட்டில் சத்தம் எழுப்பாமல் அவற்றைக் கையாள்வது மிக முக்கியம்.
முழங்கையை சாப்பாடு மேசையின்மீது ஊன்றிச் சாப்பிடாதீர்கள். அருகிலிருந்து சாப்பிடுபவரின் தட்டின்மீது கையைநீட்டி மேசையிலிருக்கும் ஒரு பொருளை எடுக்க முயற்சிக்காதீர்கள். அருகில் இருப்பவரிடம் அதனை எடுத்துத் தருமாறுக் கேட்டுக்கொண்டு, நன்றி தெரிவியுங்கள். வாயில் உணவை வைத்துகொண்டு பேசுவது, கையில் முள்கரண்டி அல்லது உணவை வைத்துகொண்டு அந்தக் கையை நீட்டிப் பேசுவது போன்றவை அருவருக்கத்தக்க விடயங்கள். பல்லில் சிக்கியிருக்கும் உணவை அனைவர் முன்னாலும் பிடுங்கிக் கொண்டிருக்காதீர்கள். கைகழுவும் இடத்துக்கோ அல்லது கழிப்பறைக்கோச் சென்று சுத்தம் செய்யுங்கள்.
உணவைச் சவைக்கும்போது சத்தம் எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேகவேகமாக சாப்பிடாமல் மெதுவாகச் சாப்பிடுங்கள். அது உணவுச் செரிமானத்துக்கு ஏற்றது என்பது மட்டுமல்லாமல், உணவை ரசிக்கிறீர்கள், நண்பர்களின் துணையை மெச்சுகிறீர்கள் என்பதை அது விருந்தளிப்பவருக்குத் தெரிவிக்கும்.
ஒயின் குடிக்கும் குவளைகளில் நீண்ட தண்டுப்பகுதியை அமைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. குவளையைத் தொட்டு நீங்கள் ஒயின் குடித்தால், உங்கள் உடலின் சூடு பட்டு ஒயினின் தன்மை, ருசி போன்றவை மாறிவிடும் என்பதால், அந்த தண்டுப்பகுதியைப் பிடித்துத்தான் குடிக்க வேண்டும்.
நீங்கள் உணவருந்தி முடித்துவிட்டீர்கள் என்பதைக் குறிக்க உங்கள் கத்தி மற்றும் முள்கரண்டி இரண்டையும் சேர்த்து தட்டின் வலப்பக்கம் ஒரு கோணத்தில் வைத்து விடுங்கள். அதேநேரம், சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இரண்டு கடிகளுக்கு இடையில் கத்தி, முள்கரண்டி இரண்டின் முனைகளையும் தட்டின் விளிம்பில் படுமாறு (தலைகீழான ஆங்கில ‘வி’ எழுத்தின் வடிவத்தில்) வைத்துக் கொள்ளலாம். ஒருவரின் வீட்டில் உணவருந்தும்போது, அல்லது ஒருவரின் விருந்தில் கலந்துகொள்ளும்போது, உணவின் சுவை குறித்துப் பாராட்டவும், நன்றி தெரிவிக்கவும் மறக்காதீர்கள்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
உணவு உண்ணும்போது போலவே, சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போதும் சில ஆச்சாரங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்தின் ஓட்டத்தோடுச் செல்லாமல், மிகவும் மெதுவாக வாகனத்தை ஓட்டி தடை ஏற்படுத்துவது மரியாதையற்றச் செயலாக பார்க்கப்படுகிறது. வாகனத்தின் பிரகாசமான விளக்கை எரியவிட்டு, அதிக வெளிச்சத்தை (ஹை பீம்) உமிழ்ந்து, எதிரே வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுத்துவது தவறான செயல். அதேபோல, அவ்வப்போது ஒலி எழுப்பி பிறருக்கு சிரமம் கொடுப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. காரில் மிக அதிக சத்தத்தோடு இசையை ஒலிக்கவிட்டு வலம்வருவது ஒரு குற்றச் செயல். ஒரு பக்கம் திரும்பும்போது, அல்லது உங்கள் வழித்தடத்தை (lane) மாற்றும்போது, பின்னால் வருகிறவர்களுக்கு அதைத் தெரிவிப்பதற்காக சுட்டிக்காட்டும் விளக்குகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
கவிமணி தேசிகவிநாயகம் ஐயா அழகாகச் சொல்கிறார்:
ஒளியை நோக்கிடவே–விளக்கின்
உதவி வேண்டுவதேன்?
தெளிய உள்ளத்தில்-ஞான
தீபம் ஏற்றுவையே.செம்மையிற் பெற்ற குணங்களெலாம்-நீங்கள்
செய்வினை யாலே திருத்துவீரேல்,
இம்மைக் கடன்கள் முடித்திடவே-முத்தி
எய்திச் சுகமா யிருப்பீரே.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com)
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 6
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“