சுப. உதயகுமாரன்
<6> உடல்மொழி அறிவோம்
உலகிலுள்ள அத்தனை காதல் கதைகளையும், காதல் சினிமாக்களையும் தூக்கி விழுங்கி ஏப்பம் விடும் விதத்தில், வெறும் நான்கே வார்த்தைகளில் கம்பன் ஒரு கண்டதும் காதல் அனுபவத்தை விவரிக்கிறார்: “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.”
அதையே திருவள்ளுவர்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
என்று சொன்னார். கண்கள் தமக்குள் காதலைப் பரிமாறிக்கொண்டால், அங்கே மொழிகளுக்கோ, வார்த்தைகளுக்கோ இடமும் இல்லை, தேவையும் இல்லை. இதுதான் உடல்மொழி!
அன்றாட வாழ்வில் நமது உணர்வுகளை, நோக்கங்களை, தகவல்களை பிறருக்கு வெளிப்படுத்த வார்த்தைகளற்றப் பரிமாற்றங்கள் பலவற்றை நாம் பயன்படுத்துகிறோம். சிணுங்கல், முனகல், கனைத்தல் போன்ற குரல் சமிக்ஞைகள்; கைகூப்பி வணங்குவது, கையால் வாழ்த்துவது போன்ற சின்னங்கள்; கைகுலுக்குதல், அணைத்தல், முத்தமிடுதல் போன்ற தொடுதல்கள்; கண்ணடித்தல், நகைத்தல் போன்ற தொடாதப் பரிமாற்றங்கள்; திரும்பி நிற்றல், விலகிச் செல்லல் போன்ற மொத்த உடலின் அசைவுகள் என உடல்மொழியின் பல பரிமாணங்களை நாம் காணலாம்.
கணவன்-மனைவிக்குள் நடக்கும் மவுன யுத்தம், வேண்டாத ஒருவரை முறைத்துப் பார்த்தல், முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல், கண்டுகொள்ளாமல் இருத்தல் என ஏராளமான வழிகளில் இந்த உடல்மொழி பேசப்படுகிறது. இப்படியாக உடல்மொழி நேர்மறையானதாகவும் (வெளிப்படையான), எதிர்மறையானதாகவுமான (மூடப்பட்ட) இருவேறு கூறுகளைக் கொண்டிருக்கிறது.
ஆக, உடல்மொழி என்பது நமது தனிப்பட்ட நடத்தை முறைகளாலும், முகபாவனைகளாலும், அங்க அசைவுகளாலும் வார்த்தைகள் ஏதுமின்றி நடக்கும் அனிச்சையானப் பரிமாற்றம். சமூகத்தில் நாம் பிறரோடுப் புழங்கும்போது, வார்த்தைகளற்ற சமிக்ஞைகளைத் தொடர்ந்து வழங்குகிறோம், வாங்கிக் கொள்கிறோம்.
ஒருவரின் முகத்தை கவனிப்பதன், அவதானிப்பதன் மூலம், அவருக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள உணர்வுகளை, உள்ளக்கிடக்கையை உற்றுநோக்குகிறோம். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்கிறது தமிழ்ப் பழமொழி. இதையேத்தான் திருவள்ளுவரும்,
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.
என்று சொன்னார். “மோப்பக் குழையும் அனிச்சம்” மலர் போல, வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர் “முகந்திரிந்து நோக்கக் குழையும்” என்று விவரித்தார் வள்ளுவர். “பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?” என்று கேட்டார் கவிஞர் கண்ணதாசன்.
ஒரு கலந்துரையாடல் நிகழ்விலோ, ஓர் அலுவலகக் கூட்டத்திலோ, ஒரு பேரப்பேச்சின்போதோ, புதிதாக ஒருவரை சந்திக்கும்போதோ, உங்களின் உடல்மொழி பாண்டித்தியம் அந்தச் சூழலை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதேபோல, சரியான உடல்மொழியை நீங்கள் கைக்கொண்டால், உங்களை ஆயாசமானவராக வைத்திருந்து, பிறர் உங்களை நெருங்கி உறவாடவைக்க முடியும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சுருக்கமாகச் சொன்னால், இந்த உடல்மொழியை சரியாக மேலாண்மை செய்யத் தெரிந்தவர்கள், அதனை அவதானித்து துல்லியமாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் தங்கள் உறவுகளைப் பேணிக்கொள்கிறார்கள், வேலைகளில் மிளிர்கிறார்கள், நல்வாய்ப்புக்களை பெறுகிறார்கள், வாழ்வில் உயர்கிறார்கள்.
உடல்மொழியின் உயிரெழுத்துக்களான கண், புருவம், வாய், உதடு, காது, கன்னம், நெற்றி, மூக்கு எல்லாமே முகத்தில்தான் அமைந்திருக்கிறன. தலையும், கழுத்தும்கூட முக்கியமானவை. நமது திரைப்படங்களில் கதாநாயகிகள் கண்ணால் சிரிப்பதையும், கீழ்உதட்டைக் கடிப்பதையும், ஆடலழகிகள் கழுத்தைச் சரித்து கவனத்தைக் கவர்வதையும் காட்டி இயக்குனர் பல விடயங்களை நாசூக்காகச் சுட்டுவதை கவனித்திருப்பீர்கள்.
கருத்துப்பரிமாற்றம் நடத்த, கவனமாகக் கேட்க, இணக்கத்தைத் தெரிவிக்க என நாம் கண்களை பலவாறாக பயன்படுத்துகிறோம். ஒருவரின் நேர்மையை, உண்மைத்தன்மையை, நம்பகத்தன்மையை மேம்படுத்திக்கொள்ளவும் கண்ணைப் பார்ப்பது பெரிதும் உதவுகிறது.
ஒருவரை சந்திக்கும்போது அல்லது பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கண்ணைப் பார்த்துப் பேசுவது நல்லது. மேலோட்டமாகப் பார்க்க வேண்டுமே தவிர, அவரையே வெறித்துப் பார்ப்பது தவறு. வெறித்துப் பார்ப்பது அச்சமூட்டுவதாகவும், சங்கடமானதாகவும் இருக்கும். ஒருவர் ஈடுபாட்டுடன் நம்மை உற்றுநோக்கினால், அவருக்கு நம்மைப் பிடித்திருக்கிறது என்பதை நாம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
ஒருவர் புருவத்தை உயர்த்தி உங்களைப் பார்க்கிறார் என்றால், உங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். பொதுவாக, ‘ஆம்’ என்று இணக்கம் தெரிவிக்கவும், ‘உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்று சொல்வதற்கும், பாலியல் கவர்ச்சியைத் தெரிவிக்கவும் புருவத்தை உயர்த்துகிறோம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆசிரியர்கள், பேச்சாளர்கள் போன்றோர் கேட்பவரின் கவனத்தைப் பெறுவதற்காக புருவத்தை உயர்த்திப் பேசுகிறார்கள்.
கண்களால் சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு. போலிச் சிரிப்பு திடீரென்று தோன்றி சட்டென்று மறையும். உண்மையானச் சிரிப்பில் வாயின் ஓரங்கள் உயரும், கன்னங்கள் மேலெழும், கண்களின் ஓரங்கள் சுருங்கும், அது நீடித்தத் தன்மை கொண்டதாக இருக்கும். அதேபோல, வெறுப்பைக் காட்டுவதற்கு கண்களைச் சுருக்கி, மேலுதட்டை உயர்த்தி, மூக்கைச் சுருக்கி, முகத்தைச் சுளிக்கிறோம்.
கைகுலுக்குவதில் சில முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. கண்ணைப் பார்த்து, இதமாக நகைத்து, முழங்கையை சற்றே மடக்கி, விரல்கள் இலேசாக தரையை நோக்கி இருப்பதுபோல வைத்துகொண்டு, உடலின் மேற்பகுதியை கொஞ்சம் வளைத்து கையை நீட்டுவதுதான் உரிய முறை. அடுத்தவரின் கையை மிகவும் கடினமாக நெரிக்காமலும், உயிரோட்டமேயின்றி பட்டும்படாமல் கையைக் கொடுக்காமலும், சீரான அழுத்தத்துடன் கைகுலுக்கிவிட்டு, ஓரிரு வினாடிகள் கழித்து விலக்கிக்கொள்வது சிறந்தது.
ஒரு சரியான கைகுலுக்கல் தன்னம்பிக்கையையும், திறந்தவெளித்தன்மையையும், சக்தியையும் தெரிவித்து, இரு தரப்பையும் இதமாகவும், இனிமையாகவும் உணரவைக்கிறது. ஆனால் ஜப்பான் போன்ற சில கலாச்சாரங்களில் குனிந்து வணங்குவதும், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கன்னத்தில் முத்தமிடுவதும்தான் ஏற்றுக்கொள்ளப்படும் நடைமுறைகளாக இருக்கின்றன.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
கைகளைக் கட்டிக்கொள்வது கோபம், பதற்றம், மனஅழுத்தம் போன்றவற்றை மறைக்கும் உத்தியாகப் பார்க்கப்படுகிறது. நாம் தனியாக இருக்கும்போது பெரும்பாலும் கைகட்டிக் கொள்வதில்லை, பொது இடங்களில் இருக்கும்போதுதான் கைகட்டுகிறோம். பல் மருத்துவரைப் பார்க்கப் போகும்போது, ஒரு தேர்வுக்காகக் காத்திருக்கும்போது, முதன்முறையாக விமானத்தில் ஏறும்போது என பல சந்தர்ப்பங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதைப் போலவே, கால் பாதங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து இணைத்துக் கொள்வதும் பதற்றத்தின் ஒரு வெளிப்பாடாகவேப் பார்க்கப்படுகிறது.
இப்போதெல்லாம் இளைஞர்கள் தோள்களை தொங்கவிட்டுக் கொண்டு, கூனிக் குறுகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு காரணம், தொடர் கைப்பேசி மற்றும் மடிக்கணினி பயன்பாடு. தோல்வி மனப்பான்மை கொண்டவர்கள், மனச்சோர்வினால் துன்புறுகிறவர்கள், அடிமைத்தனம் மிக்கவர்கள் இப்படி கூனிப்போய் நடக்கிறார்கள்.
வாயில் பேனா, கண்ணாடி, விரல்நகம் போன்ற பொருட்களை வைத்துக் கடிப்பது ஒருவரின் பதற்றத்தைக் காட்டுகிறது. கோபப்படுகிறவர் பெரும்பாலும் முன்நோக்கி வளைவதையும், கண்புருவங்களை கீழே இறக்குவதையும், கைகளை இடுப்பின் மீது வைத்துக்கொள்வதையும் பார்க்கலாம். உண்மைத்தன்மையை, உள்ளார்ந்த அன்பைத் தெரிவிக்க உள்ளங்கையை தன்னுடைய நெஞ்சில் வைத்துக்காட்டும் பழக்கம் பல கலாச்சாரங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
தன் முன்னால் நிற்பவர் செய்வது போலவே ஒருவர் செய்தால், அதாவது அவரைப் போலவே சிரித்து, கைகளை அசைத்து, கட்டியணைத்துக் கொள்கிறார் என்றால், உள்ளார்ந்த அன்பையும், நட்பையும் காட்டுகிறார் என்று பொருள்.
சாவி, சில்லறை, பேனா, மோதிரம் போன்ற ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்து ஒருவர் உருட்டிக் கொண்டிருந்தால், அவர் சலிப்படைந்திருக்கிறார், அல்லது உங்களில், உங்களோடான உரையாடலில் அவருக்கு ஈடுபாடு இல்லை என்றே அர்த்தமாகிறது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
உடல்மொழி பற்றி நாம் பள்ளி, கல்லூரிகளில் கற்பிப்பதில்லை. மக்களோடான உறவில் வெற்றி பெறுவதற்கு உடல்மொழி அறிந்திருப்பது மிகவும் முக்கியம். ஆனால் உடல்மொழிதான் அனைத்துமானது என்று கருதி அதற்கு அபரிமித முக்கியத்துவம் கொடுப்பதும் சரியாகாது. எடுத்துக்காட்டாக, ஒருவர் கைகட்டிக் கொண்டு உங்களிடம் பேசுகிறார் என்றால், அவர் குளிராக உணரலாம், அல்லது கைகளை ஆயாசமாக வைத்திருக்கலாம், அல்லது காரணம் எதுவுமே இல்லாமல் இருக்கலாம். எனவே இடத்துக்கு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடல்மொழியைப் புரிந்துகொள்வது முக்கியமானது. நம்மில் ஒவ்வொருவருக்கும் தனித்த பழக்கவழக்கங்கள் இருப்பதையும் மறந்துவிடக் கூடாது.
அதே போல, ஒவ்வொரு ஊருக்கும், நாட்டுக்கும் தனியான கலாச்சாரம் உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். உடல்மொழியை சரியாக பயன்படுத்த அறிந்துவைத்திருப்பதும், புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவதும் மிகவும் முக்கியமானவை. இன்று முதல் ஒருவரை சந்திக்கும்போது, அவரது உடல்மொழியை அவதானியுங்கள். நீங்களும், பாரதியார் சொல்வது போல,
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்” கொண்டு உயர்ந்து நில்லுங்கள்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com)
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 7
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.