Advertisment

சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 8

Social Activist Suba Udayakumaran New series about self management in tamil: தற்சார்பு என்பது உங்களுடைய வாழ்க்கைக்கு, அதன் வெற்றி தோல்விகளுக்கு, நிறை குறைகளுக்கு, ஏற்ற இறக்கங்களுக்கு நீங்களே முற்றிலுமாக பொறுப்பேற்றுக் கொண்டு, உங்களையே முழுவதுமாகச் சார்ந்திருப்பது.

author-image
WebDesk
New Update
suba udayakumaran’s tamil Indian Express series on self management part - 8

Suba Udayakumaran

சுப. உதயகுமாரன்

Advertisment

<8> தற்காத்துக் கொள்வோம்

மனிதர்களாகிய நாம் சமூக மிருகங்கள். தனிமரம் தோப்பாகாது என்பது போல, தனிமனிதனாக நம்மால் திறம்பட இயங்க முடியாது. “எந்த மனிதனும் ஒரு தீவு அல்ல” என்றார் ஆங்கிலக் கவிஞர் ஜான் டன். பிறரோடு சேர்ந்துதான் நாம் இயங்கியாக வேண்டும். ஆனால் அதுதான் இப்போது பெரும் கடினமான விடயமாகவும் மாறிவிட்டிருக்கிறது.

கடும் போட்டியும், பொறாமையும், சூழ்ச்சிகளும், நெருக்கடிகளும் நிறைந்த இன்றைய உலகில் உங்களை திறம்படக் காத்துக்கொள்வது உங்களின் மிக முக்கியமான கடமையாக இருக்கிறது. ‘தாயும் பிள்ளையுமே ஆனாலும், வாயும் வயிறும் வேறு’ என்று சொல்வதுபோல, உங்கள் பெற்றோர், உடன்பிறப்புக்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருமே உங்களுக்குள் நுழைந்து நீங்களாக மாற முடியாது.

உங்களை உருவாக்குவது, காத்துக்கொள்வது, (உலகுக்கு) வழங்குவது எனும் மூன்று தலையாயக் கடமைகளை நீங்கள் மட்டும்தான் செய்தாக வேண்டும். பிறர் உங்களுக்கு உதவலாமே தவிர, உங்கள் இடத்தை ஆக்கிரமித்து உங்கள் கடமையை ஆற்ற யாராலும் முடியாது. மேற்படி மூன்று கடமைகளையும் தற்சார்பு, தற்காப்பு, தற்பெருமை என்று அடையாளப்படுத்துவோம்.

பெண்ணைப் பற்றிப் பேசும் திருவள்ளுவர்,

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்கிறார். அதாவது, தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் பேணி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ வேண்டும் என்கிறார். இது இன்றைய இளைஞர்களாகிய உங்களனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

தற்சார்பு என்பது உங்களுடைய வாழ்க்கைக்கு, அதன் வெற்றி தோல்விகளுக்கு, நிறை குறைகளுக்கு, ஏற்ற இறக்கங்களுக்கு நீங்களே முற்றிலுமாக பொறுப்பேற்றுக் கொண்டு, உங்களையே முழுவதுமாகச் சார்ந்திருப்பது. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனும் புறநானூற்றுக் கொள்கையை ஏற்று ஒழுகுவது. உங்கள் வாழ்க்கையை உங்களையன்றி யாராலும் உருவாக்கவும் முடியாது, உருக்குலைக்கவும் இயலாது என்பதுதான் உண்மை. உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் மட்டுமே இருக்கிறது.

இது ஒரு மிகப் பெரியப் பொறுப்பு. இன்றைய நவீன உலகில் இது ஒரு பெரும் போராட்டம் என்பதுதான் உண்மை. மனிதனாய்ப் பிறக்கும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சிக்கல்தான் இது. சிலர் கவனமாக நடந்து வெற்றி பெற்றாலும், பலர் இச்சுழலில் சிக்கிச் சீரழிந்து விடுகிறார்கள். நான் என்னுடைய 21-வது வயதில் எத்தியோப்பியா நாட்டில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றச் சென்றேன். அந்நாட்டின் வடக்குப் பகுதியில் மலைகளும், பாலைவனமுமாய் காட்சியளிக்கும் டிக்ரை மாநிலத்திலுள்ள மைச்சோ எனும் ஒரு குக்கிராமத்துக்கு ஆங்கில ஆசிரியராக என்னை அனுப்பியது எத்தியோப்பிய கல்வி அமைச்சகம்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

அடிஸ் அபாபா – அஸ்மாரா தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டிருந்த குடிசைகளும், கடைகளும்தான் மைச்சோ எனும் அந்த கிராமம். மைச்சோவோடு ஒப்பிடும்போது, இந்தியாவிலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமம்கூட பெரிய நகரம் போலவேத் தோன்றும். அந்த அளவு பின்தங்கிய கிராமம் மைச்சோ.

டிக்ரை மக்கள் விடுதலை முன்னணி எனும் ஆயுதப்படை எத்தியோப்பிய அரசோடு போர் புரிந்துகொண்டிருந்ததால், நெடுஞ்சாலை எப்போதும் மூடியே இருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒருநாள் மட்டுமே சாலைப் போக்குவரத்து இராணுவ உதவியுடன் நடக்கும். எனவே அந்த ஊரை விட்டு யாரும், எங்கேயும் போக முடியாது.

இந்தியாவிலுள்ள குடும்பத்தாரோ, உறவினர்களோ, நண்பர்களோ யாரும் என்னைப் பற்றி எந்தத் தகவலையும் அறிய முடியாது எனும் அளவுக்கு உச்சபட்சத் தனிமை கிடைத்தது. உடனிருக்கும் யாரும் எந்தவிதத்திலும் என்னைக் கட்டுப்படுத்தாத முழு சுதந்திரமும் இருந்தது. வெளிநாட்டு ஆசிரியர்களுக்கு அந்நாடு அதிகச் சம்பளம் வழங்கியதால், கை நிறையக் காசும் இருந்தது. மொத்தத்தில் ஓர் 21-வயது இளைஞனுக்கு என்னென்ன இருக்கக் கூடாதோ, எல்லாமும் எனக்கு வாய்த்தது.

கரைபுரண்டோடும் காட்டாறு போல என்னைச் சுற்றிலும் மதுபான வெள்ளம் நிரம்பி வழிந்தது. ஏழ்மை, வறுமை, போர், இராணுவமயமாக்கல், சிதைந்த குடும்பங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்திருந்த கலாச்சாரம் என்பதால், எந்தப் பெண்ணையும் அணுகி, விருப்பத்தைத் தெரிவித்து, இணங்கினால் உடனிருக்கலாம் எனும் எளிதான நிலை நிலவியச் சமூகம் அது.

உடலும், உணர்வுகளும், இளமையும், எந்தவிதக் காவலுமில்லா நிலைமையும் என்னை ஒரு பக்கம் இழுத்தாலும், மது, மாது, மகிழ்ச்சி என்றலைந்து வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது எனும் தற்சார்பு என்னை தக்கவைத்துக்கொள்ளப் பெரிதும் உதவியது. கல்லூரிப் பருவத்திலேயே திருக்குறள், பாரதியார் கவிதைகள், சுவாமி விவேகானந்தர் எழுத்துக்கள் போன்றவற்றை நான் அதிகம் படித்திருந்தேன்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்

எனும் குறள் ஒன்றே பல்வேறு தருணங்களில் உற்ற முடிவினை எடுக்க, தற்காத்துக்கொள்ள மிகவும் உதவியது. நம்முடைய தீய பழக்கவழக்கங்கள் உள்ளார்ந்த ஆற்றல்களை, அவற்றின் சக்திமிக்க வெளிப்பாடுகளை அழித்தொழித்து, நம்மைச் சுருக்கி, கூனிக்குறுகச் செய்துவிடும் என்பார் சுவாமி விவேகானந்தர். இப்படியாக குடிப்பதற்கோ, பெண்களோடுக் கூடுவதற்கோ யார் அழைத்தாலும், உறுதியாக நின்று என்னைக் காத்துக்கொள்ள முடிந்தது. தற்சார்பு என்பது யாருடைய வேண்டுதலையும், தூண்டுதலையும், முடிவெடுத்தலையும் சாராமல், உங்களை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பது. உங்கள் ஈடுபாடுகளைக் காத்துக்கொள்வதில் உங்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து களமாடுங்கள். You are in charge of your life!

தற்சார்போடு நெருக்கமானத் தொடர்புடையது தற்காப்பு. உங்கள் உடலையும், உள்ளத்தையும், உயிரையும், உற்றநல் ஒருமைப்பாட்டையும் கடிதில் காத்துக் கொள்வதுதான் தற்காப்பு.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

மனித வாழ்வின் இன்றியமையாத அம்சங்களாக கீழ்க்காணும் நான்கையும் கொள்ளலாம்: உயிர்ப் பிழைத்திருத்தல், நல்வாழ்வு வாழ்தல், அடையாளம் கொண்டிருத்தல், விடுதலையோடிருத்தல். உயிர்ப் பிழைத்திருத்தல் என்பது உடல்நலம், மனநலம், உயிர்நலம் போன்றவற்றை பேணிக்கொள்வதாகும். நீச்சல் தெரிந்திருத்தல், முதலுதவி அறிவு கொண்டிருத்தல், பாதுகாப்புக் கலைகள் அறிந்திருத்தல், பேரிடர் மேலாண்மைத் திறன்கள் பெற்றிருத்தல் போன்றவற்றை முக்கியத் திறன்களாகக் கொள்ளலாம்.

நல்வாழ்வு வாழ்தல் என்பது சமூக—பொருளாதார-அரசியல் பரிவர்த்தனைகளில் நேர்மையோடிருத்தல், உங்கள் மானம் மரியாதையை, கவுரவத்தைக் காத்துக் கொள்ளல், காவல் துறை மற்றும் நீதித்துறை போன்ற அரசுத் துறைகளோடான உறவுகளில் தலைநிமிர்ந்து நிற்றல் போன்றவற்றை உள்ளடக்கியது எனலாம்.

அடையாளம் கொண்டிருத்தல் என்பது உயிர்நேயம் மற்றும் மாந்தநேயம் போற்றும் அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கிடையேத் திறமையுடன் ஊடாடி, உங்களை உறுதியாக நிறுவிக்கொள்வதும், நிலைநிறுத்திக் கொள்வதும்தான்.

விடுதலையோடிருத்தல் என்பது உங்களுடைய அடிப்படை உரிமைகளை, பாத்தியதைகளை, சுவாதீனங்களைப் பாதுகாத்துக்கொள்வதை உள்ளடக்குகிறது இன்னோரன்ன வாழ்வியல் அம்சங்களை அறிந்துணர்ந்து உங்களை தற்காத்துக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் எளிதில் இடறிவிடுவீர்கள். சிறு இடறல்கள் பெருந்தோல்விகளுக்கு இட்டுச்செல்லும் ஆபத்து எப்போதுமே தொக்கி நிற்கிறது. அவற்றிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.

மூன்றாவதாக, தற்பெருமை! உங்களைப் பற்றி நீங்கள் பெருமையாக உணர்வது மிக மிக முக்கியமானது. நீங்கள் உங்களை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படித்தான் வெளியுலகம் உங்களைப் பார்க்கிறது. உயர்கல்விக்காக, வேலை வாய்ப்புக்களுக்காக, பதவி உயர்வுக்காக, சம்பள உயர்வுக்காக பிறருடன் போட்டியிடும்போது, உங்களைப் பற்றி உரியவர்களிடம் தகுந்த தரவுகளுடன் எடுத்துச்சொல்லி, உங்களுக்கான வாய்ப்பினை, உரிமைகளைக் கேட்டுப் பெறுவது முற்றிலும் சரியானது. அத்தகையத் தருணங்களில் உங்களின் அறிவை, ஆற்றல்களை, தகுதிகளை, சாதனைகளை நீங்கள்தான் பிறருக்குச் சொல்லியாக வேண்டும்.

ஆனால் தேவையற்ற இடங்களில், தேவையற்ற நபர்களிடம் உங்கள் அருமை--பெருமைகளை, அற்புதத் திறமைகளை நீங்களே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். விரைந்து கெட்டுப்போகும் தன்மைகள் என மூன்று விடயங்களை வள்ளுவர் பட்டியலிடுகிறார். அவற்றுள் ஒன்று தன்னைத்தானே வியந்துப் போற்றுவது:

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பொதுவெளியில் தன்புராணம் பாடுவது என்பது தன்னம்பிக்கையின் வெளிப்பாடல்ல; மாறாக உள்ளுக்குள் ஒரு பாதுகாப்புணர்வு இல்லாமலிருப்பதன், உங்களைப் பற்றிய ஒரு சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதன் அடையாளம். நாம் அற்புதமானவர் என்பதை மற்றவர்கள் உணரச்செய்தால்தான் நம்மை விரும்புவார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மையே தன்னைப் பற்றி பேசவைக்கிறது. தங்களுக்குள்ளிருக்கும் ஒரு வெறுமையை மறக்கவும் அல்லது மறைக்கவும்கூட சிலர் தங்களைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1

வேறு சிலரோ தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்வது போலவேப் பேசி, தங்கள் பெருமைகளை கோடிட்டுக் காட்டுவார்கள். எவ்வளவு சாமர்த்தியமாக மறைத்து நாம் பேசினாலும், ஒருவர் தன்புராணம் பாடுவது பிறருக்கு எளிதாகப் புரிந்துவிடும். உங்களைப் பற்றிப் பேசும் தேவை ஏற்படும்போது, உங்களின் முயற்சிகள், உழைப்பு, தனித்த அனுபவங்கள் பற்றி தாராளமாகப் பேசுங்கள். எதையும் கூட்டிக் குறைக்காமல், மிகைப்படுத்தல்கள் இல்லாமல், உண்மைகளை மட்டுமேப் பேசுங்கள். பிறரை மட்டம் தட்டாமல், அடுத்தவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து, தவறுகளுக்குப் பொறுப்பேற்று, நன்றியுணர்வுடன் நியாயமாகப் பேசுங்கள்.

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் நம்மைப் பற்றி பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில், நாம்தான் பேசியாக வேண்டும் என்பது உண்மைதான். இப்போதெல்லாம் ‘அட்மின்’ வைத்துக்கொண்டும், ‘ஆர்மி’ நிறுவிக் கொண்டும், அடிபொடிகளைக் களமிறக்கியும் தன்தம்பட்ட வேலைகள் தாராளமாகவே நடக்கின்றன.

தற்சார்பு, தற்காப்பு, தற்பெருமை எனும் விழுமியங்களைக் கைக்கொள்ளுங்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்வது போல,
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்,உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம்!

(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).

இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 9

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Suba Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment