சுப. உதயகுமாரன்
<9> அடையாளம்
“நான் யார்?” “என்னுடைய அடிப்படை அடையாளம் எது?” என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
“சினிமா, இசை, நண்பர்கள், வாட்சப் பற்றி சிந்திப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த நிலையில் எங்கே அடையாளம் பற்றி சிந்திப்பது?” என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் “நான் யார்?” என்பது மனித வாழ்வின் இரண்டு அடிப்படை கேள்விகளுள் முதன்மையானது. இதற்கு இணையான இரண்டாவது முக்கிய கேள்வி, “எனக்கு என்ன வேண்டும்?” என்பது. முதல் கேள்வி பற்றி மட்டுமே இங்கு விவாதிப்போம்.
எல்லைகாந்தி என்று போற்றிப் புகழப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் அவர்களின் மகன் கான் அப்துல் வாலி கான் ‘தான் யார்’ என்பது பற்றி பேசும்போது, கடந்த 50 ஆண்டுகளாக தான் ஒரு பாகிஸ்தானி, 500 வருடங்களாக ஒரு முசுலீம், ஆனால் 5,000 வருடங்களாக தான் ஒரு பட்டான் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது தேசிய, மத அடையாளங்களைவிட, தனது இன அடையாளம் முக்கியத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறார் அவர்.
வெளிநாட்டில் இருக்கும்போது, ‘நீங்கள் யார்’ என்று யாராவது கேட்டால், “நான் ஓர் இந்தியர்” என்று தேச அடையாளத்தைச் சொல்கிறோம். ஆனால் இந்தியாவுக்குள் மாநில அடையாளத்தை, அல்லது மொழி அடையாளத்தைச் சொல்கிறோம். நமது மாநிலத்துக்குள் சாதி அடையாளம் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாகவே இந்தியாவில் சாதி அடையாளம்தான் மிகவும் அடிப்படையானதாகவும், பலமிக்கதாகவும், முன்னிலை பெறுவதாகவும் இருந்து வருகிறது.
அண்மையில் ஒருவரின் குடும்பத்தில் நிகழ்ந்த மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றேன் நான். அவருடைய வீடு தெரியாததால், அந்தத் தெருவில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம், “இன்னார் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டேன்.
“அவர்கள் என்ன ஆட்கள்?” என்று திருப்பிக் கேட்டார் அந்தப் பெண்மணி.
அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்த நான், அதை நாசூக்காகத் தெரிவிக்கும் பொருட்டு, “நம்மைப் போலவே மனித ஆட்கள்தான்” என்றேன்.
“அது தெரிகிறது. என்ன சாதி என்று சொல்லுங்கள்” என்றார் அழுத்தம் திருத்தமாக.
“எனக்குத் தெரியாதே!” என்றேன்.
“அப்படியானால் எனக்கும் தெரியாது!” என்று நறுக்கென முடித்துக் கொண்டார் அந்தப் பெண்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
சாதி எனும் முட்டாள்தனத்தை கவிமணி காத்திரமாகச் சாடுகிறார்:
வேதன் முகத்தில் உதித்தவரே—இங்கு
மேலா யெழுந்த குலத்தினராம்!
பாத மதில்வந்த பாவியரே—என்றும்
பாரில் இழிந்த அடிமைகளாம்!
உச்சி மரத்திற் சுவைக்கனியும்—தூரில்
ஓடிப் பரந்தெழும் வேரதனில்
நச்சுக் கனியும் பழுத்த பலாமரம்
நானிலத் தெங்குமே கண்டதுண்டோ?
என்று கேட்கிறார் அவர். ஒரே பலா மரத்தின் உச்சியில் காய்ப்பது சுவை அதிகமானதாகவும், வேரில் காய்ப்பது சுவை குன்றியதாகவும் இருக்க முடியாது. அதைப் போலவே, மனிதர்களின் பிறப்பு குறித்த கதைகளும் பொய்யானவை என்று கோடிட்டுக் காட்டுகிறார் கவிமணி
பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்த சாதிய அடையாளம் இசுலாத்தைத் தழுவிக்கொண்ட பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளையும்கூட விட்டுவைக்கவில்லை. அங்கேயும் சாதி பெருமளவு சதிராட்டம் போடுகிறது.
அண்மைக்காலத்தில் நம் நாட்டில் மதவாதம் தலைதூக்கிப் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், சிலருக்கு மத அடையாளம் முக்கியமானதாக அமைகிறது. மேற்காணும் சாதி, மத அடையாளங்கள் இரண்டுமே மிகவும் அரசியல்படுத்தப்பட்டவை என்பதை நாம் உணரலாம். மக்களைப் பிரித்தாளவும், செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும், லாபம் ஈட்டவும் தன்னலவாதிகளும், அதிகாரவெறி கொண்ட அரசியல் கட்சிகளும் சாதி, மத அடையாளங்களை பயன்படுத்துகின்றனர்.
இவர்களைப் போன்ற “நான் யார்?” எனும் கேள்விக்கு கடினமான, உறுதியான, இறுக்கமான விடைகொண்டவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் இலகுவான, நெகிழ்வான, தளர்வான பதில் கொண்டவர்கள் சிறந்த மனிதர்களாக விளங்குகிறார்கள்.
எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் 1982-ஆம் ஆண்டு ஒரு தமிழ்ச்சங்கக் கூட்டம் நடந்தது. அந்நாட்டின் யாருமறியா ஏகாந்தமான மலையிடுக்கு ஒன்றில் மாந்த நேயத்தின் அடிப்படையில் மட்டுமே உண்டு, உறங்கி, உறைந்திருந்த எனக்கு என்னுடைய அடையாளம் பற்றியத் தெளிவு செம்மையாகவே இருந்தது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். என்னுடைய முறை வந்ததும், எழுந்து நின்று, “நான் தமிழ் பேசும் மனிதன்” என்று சொன்னேன். எனதருகே அமர்ந்திருந்த ஈரோட்டைச் சார்ந்த நண்பன் சாஜன் சற்றும் தாமதிக்காமல், “ஆமாம், நாங்கள் எல்லாம் குரங்கு?” என்று நகைச்சுவை வியாக்யானம் செய்தான். ஒட்டுமொத்தக் கூட்டமே ‘ஓ’வென்று சிரித்தது. இப்படியாக தமிழ் பேசக் கூடிய நாங்கள், அடையாளம் பற்றியும் பேசி முடித்தோம்.
தமிழர்களாகிய நாம் மொழிவெறி பிடித்தவர்கள் என்கிற ஒரு தவறான எண்ணம் சில பிற மாநிலத்தவர் மனங்களில் இருந்தாலும், நாம் தெளிவாகவே இருக்கிறோம். சாதி, மத அடையாளங்களைச் சாடும் நீங்கள், இன/மொழி அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்கிறீர்களே என்று நீங்கள் கேட்கலாம்.
உலகின் எந்தப் பகுதியில், எந்த நாட்டில் பிறந்தாலும், நாமனைவரும் மனிதர்கள் என்றே அறியப்படுகிறோம். பரந்துபட்ட அந்த முதன்மை அடையாளத்தை நாம் மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மனிதராய் பிறக்கும் நம்மனைவருக்கும் பல அறிவார்ந்த, அறிவியல் சார்ந்த, அர்த்தமிக்க அடையாளங்களும், எந்தவிதமான அடிப்படையுமற்ற அரசியல் சார்ந்த அடையாளங்களும் வந்து சேருகின்றன.
நாம் முதன்முதலாகக் கேட்கும், புரியும், பேசும், சிந்திக்கும் மொழியை நம்முடைய தாயிடமிருந்து பெறுவதால் அதனை தாய்மொழி என்றழைக்கிறோம். உங்கள் தாயார் தமிழ் பேசுபவராக இருக்கும்போது, அவர் அறிந்தேயிராத ஸ்பானிய மொழியை உங்கள் தாய்மொழியாக நீங்கள் உரிமை கொண்டாட முடியாது.
‘தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி, எனவே வீட்டாரிடமும், வீட்டு வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசு’ என்று சில பெரியவர்கள் அறிவுரைக்கலாம். ஆனால் வீட்டுக் கழிப்பறையில் வழுக்கி விழுந்தால், ‘அம்மா’ என்று அலறுகிறோமா, அல்லது ‘ஓ மை காட்’ என்று ஆங்கிலத்தில் கூச்சலிடுகிறோமா?
அதேபோல, பயங்கர கருப்பான தந்தைக்கு கருப்பா(க) பயங்கரமா(க)ப் பிறந்திருக்கும் நான் என்னை ஜப்பானிய சூமோ வீரன் போன்ற மஞ்சள்நிற ஆணழகன் என்று அழைத்துக் கொள்வது யாராலும் ஏற்கப்படாது. மொழி, இனம் போன்றவை அறிவார்ந்த, அறிவியல் சார்ந்த, அர்த்தமிக்க அடையாளங்களாக அமைகின்றன.
ஆனால் சாதி, மதம், தேசம் போன்ற அடையாளங்களின் பின்னால் என்ன பெரிய அறிவுப்புலமும், அறிவியல் பலமும், அர்த்தமும் இருக்கின்றன? ஒருவரைப் பார்த்தவுடன் அவரது சாதியை சரியாகச் சொல்ல முடியமா? ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான அங்க அடையாளங்கள், சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவா? இல்லையே?
நம்முடைய தாய், தந்தையரின் மத அடையாளத்தைத்தானே நாம் பின்பற்றுகிறோம்? பின்னர் உட்கார்ந்து சிந்திக்கும்போது, இந்த கடவுள் வியாபாரம் பிடிக்காமல், நாத்திகராக, அல்லது இயற்கை வழிபாட்டாளராக நாம் மாறுகிறோம். அதேபோல, வரைபடங்கள் மாறும்போது, சிலரின் தேச அடையாளங்களும் மாறிவிடுகின்றன.
சாதியும், மதமும் எண்ணிக்கை குறித்து கரிசனம் கொள்ளும், வாக்குவங்கி குறித்துக் கவலையுறும், வருமானம் குறித்து மனங்கொள்ளும் தன்னலவாதிகளின், பிழைப்புவாதிகளின், சந்தர்ப்பவாதிகளின் அரசியல் நாடகங்கள்.
பிறந்த ஊர், பேசும் மொழி, வாழுமிடம், கல்வி, வேலை, ஈடுபாடுகள் என ஏராளமானவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் அடையாளங்கள் உள்ளன. அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் பூலியன் வட்டங்களால் (Booleans) இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வோர் அடையாளம் உயர்ந்து நிற்கிறது. உயிருள்ள எந்த மனிதனுக்கும் ஒரே வார்த்தையிலான அடையாளம் வழங்க முடியாத அழகான உலகம் இது.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
மனித அடையாளத்தை ஒரு மரத்தோடு ஒப்பிடலாம். ஒரு மரம் நிலைக்குத்தி நிற்க, நெடிதாக உயர, வேர்விட்டு வளர நிலமும், வளமும், நீரும் உரமும் வேண்டும். அதேபோல, மனிதனுக்கும் தன்னை உணர, தலை நிமிர்ந்து நிற்க, சிந்தித்து வளர, மொழியும், இலக்கியமும், சிந்தனைப் பாரம்பரியமும் மிகவும் முக்கியம். பாவேந்தர் சொல்வது போல,
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு! நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு – தமிழா நாம் தமிழர் நம் திறத்துக் கெவர் ஈடு? என்கிற பெருமிதம் மிகவும் இன்றியமையாதது.
ஆனால் நாம் தமிழர் என்று நாளும் பாடி நாமெல்லாம் வெறுப்பும், கோபமும் கொண்ட கிணற்றுத் தவளைகளாக மாற வேண்டும் என்று பாவேந்தர் குறிக்கவில்லை. மரம் எப்படி எல்லாத் திசைகளிலும் கிளைபரப்பி பரந்துவிரிந்து பார் போற்ற வாழ்கிறதோ, அதைப் போலவேதான் மனிதர்களும் வாழ வேண்டும். அதுதான் மானுட அடையாளம். பாவேந்தரும் இதை பாங்காகச் சொல்கிறார்: மானிடத் தன்மையைக் கொண்டு – பலர் வையத்தை ஆள்வது நாம் கண்டதுண்டு மானிடத் தன்மையை நம்பி – அதன் வண்மையினாற் புவி வாழ்வு கொள் தம்பி!
இதையே கவின்மிகு தமிழில் கவிமணியும் சொல்கிறார்: மன்னுயிர்க் காக முயல்பவரே—இந்த மாநிலத் தோங்கும் குலத்தினராம்; தன்னுயிர் போற்றித் திரிபவரே—என்றும் தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா! நீங்கள் என்ன வேண்டுமானாலும் படியுங்கள், எந்த வேலையையும் செய்யுங்கள், எங்கே வேண்டுமானாலும் வாழுங்கள், ஆனால் “மன்னுயிர்க்காக முயல்பவர்” எனும் அடயாளத்தை மட்டும் வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – பகுதி 10
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.