Advertisment

சுஜித் மரணம் சொல்லும் செய்தி

அவரவர் முற்றத்தை ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sujith Wilson tragedy

Sujith Wilson tragedy

க.சந்திரகலா

Advertisment

Sujith Wilson tragedy : ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே திசை நோக்கி தொழ வைத்த குழந்தை சுஜித் அனைவரையும் அழவைத்துப் போயிருக்கிறான்.மனித பிறப்பில் மரணம் தவிர்க்க முடியாதது. ஒரு பூவைப்போல் மலர்ந்து, மணம் வீசி, உறவுகள் கண் நனைய போய்ச் சேர்வது இயற்கை நியதி.இங்கே ஒரு அரும்பு மொட்டாவதைக்கூட அனுமதிக்காமல் சூழ்நிலைச் சூறாவளி அதனை உலுப்பி மரணக்குழியில் தள்ளியிருக்கிறது.

அனாதையாக கிடக்கும் ஆழ்குழாய் கிணற்றில் குழந்தைகள் சிக்கி உயிரிழப்பது தமிழகத்தில் இதுவொன்றும் புதிதல்ல.அதற்கு காரணம் நிச்சயம் அந்த அப்பாவிக் குழந்தைகளுமல்ல.

அப்புறம்?  குழந்தைகளுகெதிரான  குற்றங்களையும்,குழந்தைகளுக்கான ஆபத்துச் சூழலையும் கண்டும் காணாமல் கடந்து போகும் கையாலாகாத இந்தச் சமூகமின்றி வேறு யாராம்?

அரை அடி விட்டம் போதும் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழ. ஆனாலும், எவரேனும் ஒரு மூடி போட இதுவரையிலும் எத்தனித்திருக்கிறோமா?  திறந்து வைக்க வேண்டிய இதயத்தை பூட்டி வைக்கிறோம்; பூட்டி வைக்க வேண்டிய கிணற்றை திறந்து வைக்கிறோம். ஏதோ ஒரு ஊரில் ,யாரோ வெட்டி வைத்த கிணற்றில் இந்த குழந்தை போய் விழுந்து விடவில்லை. ரோஜா பதியனை நட்டு வைக்க வெட்டி வைத்த குழியை வெறுமனே விட்டு வைப்பதைப்போல இப்படியா ஐநூறடி ஆழக்குழியை அசிரத்தையாக வைத்திருப்பார்கள்? இந்த சூழ்நிலையில் சுஜித்தின் தந்தையை எப்படி நோவது?

உயர உயரப் பறந்து உச்சாணியில் உட்கார வேண்டிய பச்சைக்கிளி,தாழப்பறந்து வேறெங்கோ போய் மறைந்ததிலிருந்து இந்த சமூகம் என்ன பாடம் கற்றுக்கொள்ளப் போகிறது?  குழந்தை தவறி விழுந்தது விபத்தாகவே இருக்கட்டும்; அடுத்தடுத்து அரங்கேறியதென்ன?  உள்ளூர் தீயணைப்புத் துறையிலிருந்து துவங்குகிறது மீட்பு நடவடிக்கை. பதினெட்டு அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்த அந்த பஞ்சு குழந்தையை மீட்க நாலா புறத்திலிருந்தும் வந்த தொழில் நுட்பங்கள் தோற்றுப் போன போது குழந்தை அறுபத்தியெட்டு அடி தூரத்துக்கு பயணப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : சுஜித் மீட்புப் பணி : 80 மணி நேரம் களத்தில் நின்ற பெண் அதிகாரி…

சுஜித்தை உயிருடன் மீட்க அரசு நிர்வாகம் நிறைய மெனக்கெட்டது. எங்கெங்கிருத்தோ நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.மாநில தேசிய பேரிடர் மீட்புப்படையினர் களமிறங்கினர்.

பரபரப்பும்,பதட்டமுமாய் நகர்ந்த நிமிடங்களை ஊடகங்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்த்தன.  தமிழக மக்கள் தங்கள் பண்டிகை கொண்டாட்ட மனநிலையை சற்றே தள்ளி வைத்துவிட்டு முகம் தெரியாத அந்த பிஞ்சுக் குழந்தையின் மூச்சுச் சத்தம் கேட்க காத்துக்கிடந்தார்கள்.

மூன்றாவது நாள் ,கொல்லைப்புறம் வழியாக குழாய் கிணற்றை கீறிப்பார்த்த போது எவரிடமும் சொல்லாமல் அவன் பயணப்பட்டு 48 மணிநேரத்துக்கு மேலாகியிருந்தது.

அரசிடமிருந்து ஒரு உத்தரவு வரவேண்டுமானால் ஒரு உயிர் போயாக வேண்டும் என்பது தமிழகத்தின் சாபக்கேடு.அதன்படி,இப்போது அரசிடமிருந்து ஒரு உத்தரவு வருகிறது.தமிழகம் முழுக்க திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட வேண்டும்.

சரி; யார் இதை கேட்கப்போகிறார்கள்? யார் இதை செய்யப்போகிறார்கள்? இல்லை ; யார் இதை செயல்படுத்தப் போகிறார்கள்?

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை நகரிலேயே ஆழ துளை கிணற்றில் ஒரு குழந்தை விழுந்தது. அப்போதும் இதே போன்றதொரு அறிவிப்பை அரசு வெளியிட்டது. யார் அதை கண்டுகொண்டார்கள்? அரசின் கண்கள் கூர்மையானது. அதேநேரம் ஆபத்து வரும் திசைகள் அத்தனையும் கண்டறிந்து தடுப்பதில் அரசு நிர்வாகத்துக்கும் சிக்கல்கள் இருக்கிறது.எனவே அவரவர் ஊரை . அதுகூட வேண்டாம் அவரவர் முற்றத்தை ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதையை சுஜித்தின் மரணம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது.

தண்ணீர் தர மறுக்கும் ஆழ்குழாய் கிணறுகளை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கண்ணீர் தர அனுமதிப்பது?

Trichy Kavignar Chandrakala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment