Advertisment

மராத்தா இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக இட ஒதுக்கீடு வழக்கை பாதிக்குமா?

மராட்டிய இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்புக்குப் பின் தமிழ் நாட்டில் இடஒதுக்கிடு வழக்குகள் என்னவாகும், அது நம் வழக்கில் எந்த வகையில் தாக்கத்தை உண்டாக்கும்? என்ற எதிர்பார்ப்பும், பதட்டமும் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maratha reservation judgement, supreme court judgement on Maratha reservation, maharashtra, tamil nadu, மராத்தா இடஒதுக்கீடு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, மகாராஷ்டிரா, தமிழ்நாடு இட ஒதுக்கீடு, maratha judgement impact on tamil nadu reservation, vanniyar internal reservatio, வன்னியர் உள் இடஒதுக்கீடு, மராத்தா இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாடு இட ஒதுக்கீட்டை பாதிக்குமா, tamil nadu reservation, arunthathiyar, வன்னியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ews, mbc, bc reservatio, obc reservation

ப.பாலதண்டாயுதம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

Advertisment

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில மணிநேரத்திற்கு முன்பு MBC பட்டியலை உடைத்து அதிமுக அரசு வழங்கிய உள் இடஒதுக்கீட்டின் சாதக பாதகம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்த வேலையிலேயே, தேர்தல் முடிந்து, திமுக-வின் புதிய அரசு பதவியேற்பு குறித்த விவாதத்திற்கு நகர்ந்து, தேர்தல் மன நிலையிலிருந்து தமிழ் சமூகம் விடுபடாத நிலையில், அதிமுக-வின் தேர்தல் தோல்விக்கு இந்த MBC உள் இடஒதுக்கீடு தான் காரணம் என்று ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கையில், -2021-மே-5-ல் மகாரஷ்டிர மாநிலத்தில், மராத்திய சமூகத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய 2018-ல் அம்மாநில அரசு இயற்றிய இடஒதுக்கீட்டு சட்டத்தை செல்லாது என உச்சநீதிமன்றத்தின் ஐவர் அரசியலமைப்பு அமர்வு, தீர்ப்பு வழங்கியிருக்கிறது .

மகாராஷ்ட்டிர மாநிலத்தின் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த இவ்வழக்கில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் அதிகாரமும் பறிபோயிருக்கிறது.

இடஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலம். இங்கு இடஒதுக்கீடு வரலாறு நெடியது. இந்தியாவில் 1950-க்குப் பின்பு தான் இடஒதுக்கீடு, ஆனால் இங்கு 1921 தொடங்கி 2021 வரை பல மாற்றங்களை தாங்கி வந்திருக்கிறது. அது தனியாக விரிவாகப் பேச வேண்டியது.

மராட்டிய இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்புக்குப் பின் தமிழ் நாட்டில் இடஒதுக்கிடு வழக்குகள் என்னவாகும், அது நம் வழக்கில் எந்த வகையில் தாக்கத்தை உண்டாக்கும்? என்ற எதிர்பார்ப்பும், பதட்டமும் தமிழ்நாட்டில் எழுந்துள்ள நிலையில் அவ்வழக்குகளின் எதிர் காலம் குறித்தும் சாத்தியமான தீர்வுகளையும் முன்வைத்து சட்ட ரீதியாக விளங்கிக் கொள்ளும் சிறு முயற்சியே இக்கட்டுரை.

மராட்டிய இட ஒதுக்கீடு வழக்கு என்பது என்ன?

மகாராஷ்ட்டிராவில் முன்பு 52% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது, மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நீண்ட போராட்டம் நடைபெற்றது அதனடிப்படையில் முன்பு ஆட்சியில் இருந்த பா.ச.க அரசு முன்னாள் நீதிபதி கெய்க்வாட் தலைமையில் ஆணையம் அமைத்தது, கெய்க்வாட் ஆணையத்தின்-2018 பரிந்துரையின் பேரில் மராட்டிய சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்கி 2018-ல் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 68%-ஆக உயர்ந்தது, இதற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

மும்பை உயர் நீதிமன்றம் 16% இட ஒதுக்கீடு என்பதை மறுத்து கல்வியில் 12% வேலை வாய்ப்பில் 13% எனக்குறைத்து பிரித்து வழங்கியது, அதனையொட்டி 2019-ல் ஒரு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது, இதன்படி மொத்த இடஒதுக்கீடு 64%-65% வரை உயர்ந்தது. இந்த்ரா சாவ்னி (1992 Suppl. (3) S.C.C.217) வழக்கின்படி. மொத்த இடஒதுக்கீட்டின் அளவு அதிக பட்சமாக 50 சதவீதம் தான் இருக்க முடியும், இந்த அளவை மகாராஷ்டிரா மீறியிருப்பதால் இட ஒதுக்கீடு செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மேலும் முக்கியமாக, ஒன்றிய அரசு 2018-ம் ஆண்டு செய்த 102-வது அரசியலமைப்புச்சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, மாநிலங்களில் சமூக மற்றும் கல்வியில் பிற்பட்டவகுப்பினரை (SEBC) அடையாளம் கண்டு பட்டியல் வெளியிடும் அதிகாரம் மாநில அரசுக்கல்ல! ஒன்றிய அரசுக்கே உண்டு!, எனவும் பட்டியலை மாற்றியமைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு சட்டசபைக்கு அல்ல எனவும் இவ்வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடோடு சேர்த்து 50% எல்லையை மீறிய பிற மாநிலங்களும் பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மாநிலங்களோடு சேர்த்து ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலும் கூட பாதிக்கும் சூழல் உள்ளது. ஏனென்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு (EWS) 2019-சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 10% இடஒதுக்கிட்டோடு 49.5%ஆக இருந்த மொத்த ஒன்றிய பட்டியல் தற்போது 59.5 % ஆக உயர்ந்துள்ளது.

102-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் குறித்த தீர்ப்பு, மாநில அரசுகளிடையே எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்ட்டிர மாநிலத்தின் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த இவ்வழக்கில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் அதிகாரமும் பறிபோயிருக்கிறது.

மராட்டிய வழக்கு பின்னணியில் தமிழ்நாடு இடஒதுக்கீடு என்னவாகும்?

இதன் பின்னணியில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு வழக்கு எதிர் கொண்டுள்ள சிக்கலையும் சாத்தியக் கூறுகளையும் பார்க்கலாம். இவ்விசயத்தில் விடை காண வேண்டிய நான்கு பிரச்சனைகள் உள்ளன.

(1). 69% இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த, இயற்றப்பட்ட 1993-தமிழ்நாடு சட்டம் செல்லுபடியாகுமா? கூடுதலான 19% இட ஒதுக்கீடு என்னவாகும்?

(2.) அச்சட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு 9-வது அட்டவணையில் சேர்க்க 1994-ல் இயற்றப்பட்ட 76-வது சட்டத்திருத்தம் அரசியலமைப்புபடி செல்லுபடியாகுமா? நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இவ்வழக்குகளில் உச்சநிதிமன்றம் என்ன முடிவெடுக்கப்போகிறது?

(3). இசுலாமியர், அருந்ததியர், வன்னியர், சீர்மரபினர் உள் இடஒதுக்கீடு நிலைக்குமா?

(4). ஒன்றிய அரசு 2018-ம் ஆண்டு செய்த 102-வது அரசியலமைப்புச்சட்டத் திருத்தத்தைக் காட்டி யார் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBC) என்று அடையாளப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.! இது எந்த வகையில் பாதிப்பை உண்டாக்கும்? என்ற எதிர்பார்ப்பும், பதட்டமும் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

இதில் முதல் மூன்று பிரச்சனைகளுக்கு உச்சநீதிமன்றமும் நான்காவது பிரச்சனைக்கு ஒன்றிய அரசும் விடையளிக்க வேண்டும்.

(1). 69% இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த, இயற்றப்பட்ட 1993-தமிழ்நாடு சட்டம் செல்லுபடியாகுமா?

தற்சமயம் தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (BC)-30%

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (MBC) -20% (வன்னியர் 10.5 + சீர்மரபினர் 7 + MBC 2.5)

அட்டவணை சாதியினர் (SC) -18%

அட்டவணை பழங்குடியினர் (ST) -1%

மொத்தம் -69 %

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் ஒன்றிய அரசு பதவிகளில் இடஒதுக்கீடு வழங்கியது, அதன் பின்பு ”மண்டல் ஆணயத்தின் 1979-1980” பரிந்துரையின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) ஒன்றிய அரசு பதவிகளில் 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குதான் இந்த்ரா சாவ்னி வழக்கு-1992 அல்லது மண்டல் வழக்கு என அழைக்கப்படுகிறது. இவ்வழக்கில் 1990-1992 வரை இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டு 1992, நவம்பர்-16 அன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இடஒதுக்கீடு குறித்த அனைத்து அம்சங்களிலும் ஆழமாக விவாதிக்கப்பட்டு. OBCயினருக்கு மண்டல் ஆணையம் பரிந்த்துரைத்த 27% இட ஒதுக்கீடு என்பதை ஏற்றுக் கொண்டதோடு, இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல்கள் என்பது அரசியலமைப்பிற்கு புறம்பானவை என்று கூறியது, அதே நேரத்தில் இதர OBC வகுப்பினருக்கு கிரிமிலேயர் முறையை அமல்படுத்தக்கோரியது. இடஒதுக்கீட்டு விவகாரங்களில் இன்றும் முன்மாதிரியானதாகவும், வழிகாட்டியாகவும் கருதப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பின் சாரத்தை கருத்தில் கொண்டே இடஒதுக்கீட்டை மாநில ஒன்றிய அரசுகள், நீதிமன்றங்கள் கையாளுகின்றன. மகாராஷ்டிர வழக்கும் இந்த வழக்கின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த்ரா சாவ்னி வழக்கின் படி அதிக பட்சமாக 50 சதவீதம் தான் இட ஒதுக்கீடு கொடுக்க முடியும். மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி, ஆனால் 19% அதிகமாக உள்ளது. 50% விதி என்று கூறிய உச்ச நீதிமன்றம் அதனை உயர்த்திக் கொள்ள அசாதாரண சூழலும் விதிவிலக்கான நிலையும் (Extrordinary circumstances and exceptional situation) இருக்கும் பட்சத்தில் உச்சபட்சம் 50% என்ற விதியை தளர்த்தி விலக்களிக்கவும் வழி வகுத்துள்ளது இந்த்ரா சாவ்னி வழக்கு அதனை உச்ச நீதிமன்ற 9 நபர் அமர்வு கீழ்கண்டவாறு கூறியுள்ளது.

“இந்த நாட்டின் மற்றும் மக்களின் பெரும் பன்முகத்தன்மையில் உள்ளார்ந்த சில அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம், ஏனென்றால் தொலைதூரத்தில் வாழ்பவர்களும், வாழ்வியலால் தேசத்தின் மைய பொது நீரோட்டத்திலிருந்து விலகி நிற்கும் மக்களையும், அவர்களுக்கே உரிய விசித்திரமான பிரத்தியேக மற்றும் தனித்த நிலைகளையும் கணக்கில் கொண்டு அவர்கள் வேறு வழியில் நடத்தப்பட வேண்டும், அவ்வாறு செய்யும்போது, தீவிர எச்சரிக்கையுடன் பார்ப்பதோடு ஒரு சிறப்பு கவனமும் செலுத்தப்பட வேண்டும்” என்று கூறியது.

இந்த்ரா சாவ்னி வழக்கும் 50% அதிகபட்ச இடஒதுக்கிடும்

இந்த்ரா சாவ்னி வழக்கின் படி அதிக பட்ச அளவான 50 சதவீதத்தை தாண்ட ஒரே வழி “Extrordinary circumstances and exceptional situation, ஆனால், மராட்டிய இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த கெய்க்வாட் ஆணையம் இச்சமூகத்தின் கல்வி மற்றும் சமூக ரீதியிலான பிற்படுத்தப்பட்ட நிலையை அடையாளம் காண 22 காரணிகளைக் குறிப்பிட்டுள்ளது, இருந்த போதிலும், உச்சநீதிமன்றம் 50%-க்கும் மேலாக உயர்த்திடப் போதுமான காரணிகள் இல்லை என மறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் 69% இடஒதுக்கீடானது இந்த்ரா சாவ்னி வழக்கின் படி 19% அதிகம் ஆகும். இந்த 19%-ஐ தக்க வைத்துக் கொள்ள இருக்கும் ஒரே சட்ட வாய்ப்பு இந்த சாதியினர் கல்வி பொருளாதாரம் மற்றும் சாதி ரீதியில் பின் தங்கியுள்ளனர் என்பதனை நிரூபிக்கும் தரவுகளும், அவை இடஒதுக்கீடு கொடுப்பதற்கான அசாதாரண சூழல் மற்றும் விதிவிலக்கான நிலை என்பதை நிறுவுவதும் ஆகும்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள்

தற்சமயம் நம்மிடம் இருக்கும் தரவுகள் இரண்டு, 1).சட்டநாதன் ஆணைய அறிக்கை 2). அம்பாசங்கர் IAS ஆணைய அறிக்கை. தமிழ்நாட்டில் உள்ள சமூகங்களின் கல்வி மற்றும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையை ஆய்வு செய்ய முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணயம் திமுக ஆட்சிக் காலத்தில் திரு.சட்டநாதன் அவர்கள் தலைமையில் 1969-ல் அமைக்கப்பட்டது இது சட்டநாதன் ஆணையம் (1969-1970) என அழைக்கப்படுகிறது, அதன் பின்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு அம்பாசங்கர் IAS அவர்கள் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1982-ல் அமைக்கப்பட்டது இது அம்பாசங்கர் IAS ஆணையம் (1982 - 1985) என அழைக்கப்படுகிறது.

இரு ஆணையங்களும் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆய்வு செய்து கல்வி சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய சாதிகளின் நிலையையும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அசாதாராண சூழல்களும் விதிவிலக்கான நிலைகளையும் நுட்பமாக பதிவு செய்திருப்பதாக பல சமூக ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் கூறுகிறார்கள், மாற்றுக் கருத்துகளும் உண்டு, வரும் நாட்களில் இவ்விரு ஆணையங்களும் விவாதப் பொருட்களாக மாறும். இவை இரண்டும் முப்பது ஆண்டுகளுக்கும் பழமையான தரவுகள் ஆகும்.

இன்னிலையில் கடந்த 2020 டிசம்பரில் அதிமுக அரசு நடப்புக் காலத்தில் சமூக கல்வி, பொருளியலில் பின் தங்கிய சாதியினரை ஆய்வு செய்து அடையாளம் காண ஓய்வு பெற்ற நீதியரசர் குலசேகரன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. எனவே வரும் நாட்களில் இந்த ஆணையத்தின் செயல்பாடு முக்கிய கவனத்தைப் பெறப் போகிறது.

இடஒதுக்கீட்டை காத்துக்கொள்ள பெரும்பாலான சாதிகள் சமூக, கல்விப் பொருளியலில் பின் தங்கியுள்ளன என்பதை நிறுவ வேண்டியது அவசியமாகிறது.

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இடஒதுக்கீடு என்ற கொள்கையை எவ்வாறு வரையறுத்துள்ளார்கள் என்பதை அறிவதும் அவசியம் . “அரசியலமைப்புச் சட்டப்படி சாதிய ரீதியில் பின் தங்கிய நிலையில் இருப்பதால் அரசாட்சியில், அரசு இயந்திரத்தில் பங்கேற்க முடியாமல் இருக்கும் சாதியினருக்கு அரசு இயந்திரத்தில் பங்கு கொடுக்கும் ஏற்பாடே இடஒதுக்கீடு” ஆகும்.

மராட்டிய இடஒதுக்கீட்டு வழக்கில் ஒரு கேள்வி எழுந்தது, மராட்டா சமூகம் வரலாற்றுக் காலம்தொட்டு அரசர்களாகவும் அவ்வரசின் உயர்பதவிகளில் இருந்த சத்திரியர்கள் என கோரும் நிலையில் ஒரு சாதியில் உள்ள ஒவ்வொருவரும் அரசாட்சியில் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் கூட சாதிசமூகரீதியில் பின்தங்கியவர்களாக கோருவதையும் எப்படிப் பார்ப்பது என்பது தான்.

இதே போன்று தமிழ்நாட்டிலும் பல சாதிகள் தங்களை சத்திரிய வம்சமாகவும், அரசாட்சியில் பங்கு கொண்ட சாதிகளாகவும் கோருரிமை செய்யும் போக்கு இருக்கிறது, உச்சநீதிமன்றம் இதை எப்படிப் பார்க்குமோ? என எண்ணத் தோன்றுகிறது.

எனவே நீதியரசர் குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் பொருளியலில் பிற்படுத்தப்பட்டுள்ள சாதிகளின் நிலையை திறம்பட ஆய்வு செய்து நிறுவும் காரணிகள், extradinary circumstances, exceptional situation என்ற விதிவிலக்குளின் தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் 69% இடஒதுக்கீட்டை தற்காத்துக் கொள்ள முடியும்

(2.) 1993- இட ஒதுக்கீடுச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு 9-வது அட்டவணையில் சேர்க்க 1994-ல் இயற்றப்பட்ட 76-வது சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் படி செல்லுபடியாகுமா?

இந்திய அரசியலமைப்புச்சட்ட சரத்து 31-B-ன்படி எந்த ஒரு சட்டமோ விதியோ அரசியலமைப்பு அட்டவணை 9-ல் சேர்க்கப்பட்டால் நீதிமன்றங்களின் மறு ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்றும் அரசியலமைப்பு பாதுகாப்புக் கொடுக்கும் பொருட்டு இயற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டுச் சட்டம்-1993 தனித்த சட்டம் மூலம் 1994-ல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 9-வது அட்டவனையில் சேர்க்கப்பட்டது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ் நாட்டு இடஒதுக்கிட்டுச் சட்டம் மட்டுமே இந்த பாதுகாப்பை பெற்றுள்ளது, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட குஜராத், மகாராஷ்டிர மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்கள் 9-வது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. பல்துறை சார்ந்த சட்டங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, தற்போது வரை இந்தியா முழுதும் 284 சட்டங்கள் இந்த அட்டவணையின் பாதுகாப்பில் உள்ளன.

நிலமை இவ்வாறு இருக்கையில் 2007-கோயெல்கோ வழக்கின்படி கேசவானந்த பாரதி வழக்குக்குப் பின் 9-வதுஅட்டவனையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது தான், நீதிமன்றத்தின் ஆய்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது, அந்த சட்டம் அடிப்படை உரிமைகளை பறிக்கவில்லை என்றும் அரசியலமைப்புக் கோட்பாட்டின் அடிப்படைக்கு முரணாக இல்லை என்றும் ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே நம் இடஒதுக்கீட்டு வழக்கும் நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டதே. இத்தீர்ப்பு பெரிய அமர்வால் மாற்றி அமைக்கப்படும் வரையும் ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செய்யாதவரையும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்நாட்டின் சட்டமாகவே (Law of land) கருதப்படும்.

(3). இசுலாமியர், அருந்ததியர், வன்னியர், சீர்மரபினர் உள் இடஒதுக்கீடு என்னவாகும்?

ஆந்திரபிரதேச அரசு அட்டவணை சாதிகளுக்குள் இருந்த 59 சாதிகளை 4 வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் தனித் தனியாக இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றியது.

இந்த சட்டத்திற்கு எதிராக E.V.சின்னையா –எதிர்- ஆந்திரபிரதேசம் (2005) 1 SCC 394

என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 05.11.2004 அன்று நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான உச்சநீதிமன்ற ஐவர் அமர்வு தீர்ப்பளித்தது, இடஒதுக்கீட்டை. மறுக்கும் போது கீழ்கண்டவாறு கூறினர்.

“ஏற்கனவே அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வகுப்பினரை துணை வகைப்படுத்தவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை மாநிலங்களிடையே ஒதுக்கீடு செய்யவும் மாநிலத்திற்கு உரிமையில்லை.

இடஒதுக்கீட்டின் இந்த துணை வகைப்பாடு மற்றும் பகிர்வின் நோக்கம் என்னவாக இருப்பினும் இடஒதுக்கீட்டைப் பகிர்வது இரண்டாம் நிலை மற்றும் அதன் விளைவு மட்டுமே.

பட்டியல் II-ன் என்ட்ரி 41 மற்றும் பட்டியல் III-ன் என்ட்ரி 25 ஆகியவற்றில் உள்ள அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தைக் காட்டி மாநில அரசின் அட்டவணைச் சாதிப் பட்டியலை பிரிக்க மாநில அரசு சட்டமியற்ற அதிகாரத்தைக் கோர முடியாது.

எனவே இந்தச் சட்டம் கல்வித் துறையையோ அல்லது மாநில அரசுப் பணிகளுக்கான துறையையோ நிர்வகிக்கும் சட்டம் அல்ல என்பது எங்கள் கருத்து.”

சின்னையா வழக்கு இன்னும் மாற்றியமைக்கப்பட வில்லை, இத்தீர்ப்பின் படி தான் தற்போதும் முடிவு செய்யப்படுகிறது. சின்னையா வழக்கை மாற்றியமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ”பஞ்சாப் –எதிர்- தேவின்டர்” என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இனி வரப்போகும் தீர்ப்பு தான் இசுலாமியர், அருந்ததியர், வன்னியர், சீர்மரபினர் உள் இடஒதுக்கீடு என்னவாகும் என்பதை முடிவு செய்யும்.

(4). 102-வது அரசியலமைப்புச்சட்டத் திருத்தம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு என்ன?

ஒன்றிய அரசு 2018-ம் ஆண்டு செய்த 102-வது அரசியலமைப்புச்சட்டத் திருத்தத்தைக் காட்டி யார் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBC) என்று அடையாளப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.! இது தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் புதுப்பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறது.

2019-ல் EWS-க்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் பொருட்டு பாஜக அரசு 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செய்தது,

அதற்கு சிறிது காலம் முன்பு, 2018-ல் 102-வது வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செய்து, 338-B மற்றும் 342-A ஆகிய இரண்டு புதிய அரசியலமைப்புச் சட்ட சரத்துதுகளை சேர்த்தது நினைவிருக்கலாம்.

என்ன சொல்லுகிறது இந்த சரத்துகள்:-

சரத்துகள் 338-B-ன்படி “ஐந்து நபர்கள் அடங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான ஆணையம் அமைக்கப்படும், இந்த ஐவர் ஆணையத்தின் பணியானது சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை கண்காணிப்பதும் அதன் பொருட்டு சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குவதும், வரும் புகார்களை விசாரிப்பதும் உரிய பரிந்துரைகளை வழங்குவதும் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்வதும் ஆகும். இச்சரத்தின் படி ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள சமூகங்களின் (SEBC) அனைத்து கொள்கை முடிவுகளிலும் இந்த ஆணையத்தை கலந்தாலோசிப்பது அவசியம் ஆகும்” என்று இந்த சரத்து கூறுகிறது.

சரத்துகள் 342-A-ன்படி “குடியரசுத்தலைவர் ஒவ்வொரு மாநிலத்தின், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களையும் கலந்தாலோசித்து சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBC) பட்டியலை வெளியிட வேண்டும், அவ்வாறு ஒன்றிய பட்டியல் வெளியிட்ட பின்பு பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் மாற்றத்தைச் செய்யும் அதிகாரம் சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு” என்று இந்த சரத்து கூறுகிறது.

மராட்டிய இடஒதுக்கீடு வழக்கு விசாரணையில் 102-வது சட்டத் திருத்தம் எவ்வாறு வருகிறது என்று கேள்வி எழலாம்.

102-வது சட்டத் திருத்தம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் உள்ளது எனவே இந்த சட்டத் திருத்தத்தை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மராட்டிய இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பல அடிப்படைக் காரணங்களை (ground) கூறியிருந்தனர். அதில் ஒரு காரணம் (ground)! 2018-ம் ஆண்டு செய்த 102-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு சரத்துகள் 342A-ன்படி யார் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBC) என்று அடையாளப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, ஒன்றிய அரசுக்குத் தான் உண்டு, அவ்வாறு இருக்கும் போது மராட்டிய சமூகத்தை சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் என வகை பிரிக்கும் அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்கு இல்லை என்பதாகும்.

வழக்கு விசாரணை முடிவில் 102-வது சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அதனால் இடஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூவர் இத்தீர்ப்புக்கு ஆதரவாகவும் இருவர் எதிர் நிலைப்பாட்டையும் எடுத்தனர்.

இவ்வழக்கின் தரப்பினராக இருந்த ஒன்றிய அரசிடம் அவ்வாறு மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பது தான் ஒன்றிய அரசின் நோக்கமா? என்ற கேள்வியை எழுப்பிய போது ஒன்றிய அரசு கூறுகிறது

“சமூக கல்வியில் பின்தங்கிய வகுப்பினரரை (SEBC) அடையாளம் காணும் மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பது ஒன்றிய அரசின் நோக்கமல்ல, ஆனால் நீதிமன்றம் தான் சட்டத்திருத்தத்திற்கு வெற்று பொருள் விளக்கம் கொடுத்துள்ளது (bare test of the amendment)” என்றும் மேலும், “ஒன்றிய அரசு மற்றும் அதன் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் ஒன்றிய இடஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிடுவது தான், பாராளுமன்றத்தின் நோக்கம் பின்தங்கிய பட்டியலை நிர்ணயிக்கும் மாநில அரசின் அதிகாரத்திலும், பின்தங்கிய மக்களின் பட்டியலுக்கும் எந்த வகையிலும் தொடர்பற்றது இந்த 102-வது சட்டத்திருத்தம்” என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தற்போது விளக்கம் கொடுக்கப்படுகிறது.

இப்போது 102-வது சட்டத்திருத்தத்தை அனுமதிப்பதற்கு சரத்துகள் 338-B மற்றும் 342A ஆகிய சரத்துகளின் சட்டவரிகளுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள சட்ட பொருள் விளக்கத்தைக் காண்போம்.

இச்சரத்துகளின் சட்டவரியின் பொருளானது

1.குடியரசு தலைவர் மட்டுமே பட்டியலை அறிவிப்பு செய்ய முடியும் மேலும் இந்த பட்டியலில் மேற்கொண்டு எந்த மாற்றமும் செய்வதாக இருந்தால் பாராளுமன்றத்தால் மட்டும் தான் செய்ய முடியும்.

  1. இதனுடைய NCBC ஆணைய விதிகளுடைய சட்டவரிகளும் அட்டவணை சாதிகள் மற்றும் அட்டவணை பழங்குடி ஆணையத்தை வழி நடத்தும் NCSC & ST விதிகளின் சட்ட வரிகளும் ஒத்த தன்மையுடையதாக உள்ளன.

  2. மேலும் அட்டவணை சாதிகள் & அட்டவணை பழங்குடிகள் யார்? சமூக கல்வியில் பின்தங்கியவர்கள் யார்? என அடையாளம் காணும் வழிமுறைகளும் இரண்டிலும் சரியாக ஒன்றாகவே இருக்கிறது.

  3. எனவே அதே நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பின்பற்ற பாராளுமன்றம் எண்ணியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

  4. இச்சட்டத்தினை விளக்குவதற்காக சேர்க்கப்பட்ட உட்கூறில் சரத்து 342-A-ன்படி வெளியிடப்பட்ட பட்டியலே சமூக கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBC) எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் அந்த விளக்க உட்கூறில் இது “அரசியலமைப்பின் நோக்கம்” எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இதன் பொருளானது “மாநில அரசுகளால் நடைமுறைப்படுதப்பட்ட சட்டங்களுக்கும் பின்தங்கிய சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கொடுப்பதற்காக சிறப்பு சட்டம் இயற்ற வழிவகுக்கும் சரத்துகள் 15 (4) & 16 (4)-க்கும் ஒட்டு மொத்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சேர்த்தே இது பொருந்தும்” என்று விளக்கமாக சட்ட பொருள் விளக்கம் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் ஒரு படி மேலே சென்று மாநில அரசுகளுக்கு இனி இட ஒதுக்கீட்டு விசயத்தில் கோரிக்கை வைக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளது.

நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றிய அரசு கொடுக்கும் விளக்கத்திற்கும் தீர்ப்புக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. மேலும், மாநிலங்களவை தேர்வு கமிட்டியில் ஒன்றிய அரசு நடந்து கொண்ட விதம் வேறு ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது.

102-வது சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தேர்வு கமிட்டியில் விவாதம் நடந்த போது, SEBC வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரம் மாநில அரசிடமே இருக்கும் வகையில் குறிப்பான ஒரு உட்கூறு சேர்க்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை தேர்வு கமிட்டியில் சேர்க்க சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து ஆலோசணை வழங்கியதாகவும் அதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனையும் கவனத்தில் கொண்டே உச்சநீதிமன்றம், SEBC பட்டியலை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத் தான் உண்டு மாநில அரசுக்கு இல்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த குழப்பத்துக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பு.

EWS-இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு காலத்தில் இருந்து பெரும்பாலான மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு வந்ததையும், 2019-ல் பாஜக EWS-10%-ஐ கொண்டு வந்த பின்பும் மாநில அரசுகள் அதனை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

EWS-க்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் 2019-சட்டத்தையும், இடஒதுக்கீட்டு பட்டியலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்க வழிவகுத்துள்ள 102-வது சட்டத்திருத்தத்தையும் நிறைவேற்ற ஒன்றிய அரசு காட்டிய வேகத்தையும் பார்க்கும் போது 102- தற்செயல் நிகழ்வுதானா? என எண்ணத் தோன்றுகிறது.

இத்தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் புதிய அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் படி ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBC) பட்டியலை வெளியிட ஒன்றிய அரசுக்கு ஆணையிட்டுள்ளது. அவ்வாறு ஒன்றிய அரசு தமிழ் நாட்டின் பட்டியலை வெளியிட்டுவிட்டால் அதனை மாற்றும் அதிகாரத்தை தமிழ்நாடு இழந்து விடுகிறது. அவ்வாறு ஒன்றிய அரசு பட்டியல் வெளியிடும் வரை தற்போதைய இடஒதுக்கீடு தொடரும். வெளியிட்டு விட்டால் முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உண்டு.

சரியோ தவறோ தற்போது 102-வது சட்டதிருத்தம் உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே ஒன்றிய அரசுக்கு இரண்டே வாய்ப்பு உள்ளது. ஒன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களின் இடஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிடப் போகிறதா அல்லது 102-வது சட்டத் திருத்தத்தில் இடஒதுக்கீடு விசயத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமல்ல என்பதை சட்டத்தில் குறிப்பாக தெளிவுபடுத்தி இன்னொரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை செய்யப் போகிறதா? என்பது தான். ஏற்கனவெ கல்வி பொதுபட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது, தற்போது இடஒதுக்கீட்டு அதிகாரமும் சூட்சுமமாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு VAO பதவிக்கும் ஒன்றிய அரசை சார்ந்தே மாநில அரசுகள் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மீதி இரண்டு வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவு என்னவாக இருப்பினும், மக்களாட்சி குடிநாயகத்தில் மக்களே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள என்பதை கடந்த கால வரலாறு உணர்த்தியிருக்கிறது.

இந்த கட்டுரையை எழுதியவர் ப.பாலதண்டாயுதம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தொடர்புக்கு: balanmpb76@gmail.com

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu India Reservation Vanniyar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment