சஞ்சய் குமார்
டெல்லியின் அதிகாரம் யார் கையில் என்பதை திட்டவட்டமாக எடுத்துக் கூறிவிட்டது உச்ச நீதிமன்றம். எந்த ஒரு முடிவினையும், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றி, துணை நிலை ஆளுநரால் டெல்லியில் எடுக்க இயலாது என்றும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கும் ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையேயான அதிகாரப் போர் ஒரு வழியாக இந்த தீர்ப்பின் மூலம் முடிவிற்கு வந்துவிட்டது.
இந்த தீர்ப்பினால் யார் ஆதாயம் அடைவார்கள்?
2013 மற்றும் 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் மத்திய மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் தேர்வு ஆம் ஆத்மியாக ஒரு போதும் இருந்ததில்லை.
ஆனால் தாழ்ந்த வகுப்பினைச் சேர்ந்த எளிய மக்கள் மற்றும் ஏழைகளின் தேர்வு என்றுமே ஆம் ஆத்மி கட்சியாகத்தான் இருக்கிறது.
டெல்லி வாக்காளர்களில் கணிசமான அளவு இம்மக்களே வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினர் தங்களுடைய அரசு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கீழ் தான் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நடுத்தரவர்க்கத்தினருக்கு, இந்த ஆட்சி மீதும் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் அத்தனை பெரிய நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களின் அவநம்பிக்கையினை உடைத்து அவர்களுக்கும் நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.
டெல்லிக்கு யார் பாஸ்? உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வாலிற்கும், டெல்லியின் துணை நிலை ஆளுநரான அனில் பைஜாலுக்கும் இடையில் அதிகாரம் தொடர்பாக பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.
மக்களுக்கு செய்யப்படும் ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் முட்டுக்கட்டையாக செயல்பட்டார் பைஜால். இதனை எதிர்த்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் சில அமைச்சர்கள் ஆளுநரின் அலுவலத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டார்கள்.
பின்னர் யாருக்கு அதிகாரம் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கியது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் சந்திரசுட் வழங்கிய தீர்ப்பில் “டெல்லியின் துணை நிலை ஆளுநர் டெல்லியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு ‘உதவி மற்றும் ஆலோசனை’ வழங்கினால் மட்டும் போதுமானது. இரண்டு அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து தான் செயல்பட வேண்டும். சுயாட்சி அல்லது ஒற்றை ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. டெல்லியின் மீதான பெரும்பான்மை அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
“இந்திய அரசியல் சாசனம் 239ன் படி துணை நிலை ஆளுநர் டெல்லியில் தனித்து செயல்பட இயலாது என்றும், 239AA (4)ன் படி, மத்திய அரசு எடுக்கும் முக்கிய திட்டங்களுக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் இடையூறு ஏற்படும் போது அதை மாநில அரசின் உரிமைகள் அங்கு மறுக்கப்படும் “ குறிப்பிட்டார் நீதிபதி சந்திரசுட்.
“மேலும் அனில் பைஜால் எந்த ஒரு முடிவினையும், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றி டெல்லியில் எடுக்க இயலாது என்றும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கும் ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை” என்றும் குறிப்பிட்டார் தீபக் மிஸ்ரா.
இந்திய அரசியல் சாசனத்தை மதித்து அறிவுப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி இயக்கத்தின் அடிப்படைகளை இரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
தலைமை நீதிபதி குறிப்பிடுகையில் டெல்லி முனிபல் மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கும் இடையே தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பினை சுட்டிக்காட்டினார். 9 நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வின் தீர்ப்பில் “டெல்லி மாநிலம் கிடையாது. அது சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு பகுதி” என்று கூறியதை விளக்கி, “அனில் பைஜால் கவர்னர் இல்லை, ஒரு பொறுப்பில் அமர வைக்கப்பட்டிருக்கும் அதிகாரி” என்றும் குறிப்பிட்டார்.
டெல்லி மக்கள் யார் பக்கம்? என்ன சொல்கின்றது வளரும் சமூக வளர்ச்சிக்கான கல்வி மையம்?
டெல்லியில் 60%க்குமான மக்கள் ஏழை மற்றும் எளிய மக்கள் தான். அவர்களின் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் கல்வி நலத்திட்டங்கள், பாடங்கள், மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை அளித்து அதில் திறம்பட செயல்பட்டு வருகிறது டெல்லி.
ஒவ்வொரு முறையும் மக்களுக்கு நல்லது செய்யும் போது, கவர்னர் தடுக்கிறார் என்று மக்களிடம் ஆம் ஆத்மி முறையிட்டதால், நடுத்தர மற்றும் மேல் வர்க்கத்தினர் அக்கட்சியின் வைத்திருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையினையும் இழந்துவிட்டார்கள்.
அரசின் இயலாமையின் வெளிப்பாடாகவே இதைக் கருதி வந்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த கருத்து வேறுபாடுகளை களைய உதவும்.
ஆம் ஆத்மி தன்னுடைய கொள்கைகளில் உறுதியாகவும், மக்களுக்கான நலத்திட்டங்களை விரைந்தும் முடிக்குமானால் அடுத்த தேர்தலிலும் ஆம் ஆத்மியின் ஆட்சி தான் டெல்லியில்.
தமிழில் நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.