த.வளவன், மூத்த பத்திரிகையாளர்
குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வது வாடகைத் தாய் குழந்தைப் பேறு. அறம் மறந்த மருத்துவர்களாலும் இடைத்தரகர்களாலும் அது வணிகமானதால் அதை முறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் சட்ட ஆணையமும் வழிகாட்டின. இதன் விளைவாக, வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
உறவினர் அல்லாதவர் பணம் பெற்றுக்கொண்டு வாடகைத் தாயாக இருப்பதைத் தடை செய்யும் சட்டப் பிரிவு, கர்ப்ப காலத்தின்போதும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் மொத்தம் 16 மாதங்கள் வாடகைத் தாய்க்கான காப்பீடு பலன்தர வேண்டும் என்னும் அறிவிப்பு உள்ளிட்ட சில பிரிவுகள் வரவேற்கப்பட வேண்டியவைதான் என்றாலும், முக்கியமான சில பிரிவுகள் இன்றைய வாழ்க்கை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை என்பதால்தான் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
என்ன சொல்கிறது வாடகைத் தாய் சட்டம்?
திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருப்பவர், திருமணமாகி குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். அவர் 25–35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே வாடகைத் தாய் முறையில் அவர் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தை தேவைப்படும் தம்பதியரில் பெண்ணுக்கு வயது 23–50-க்குள்ளும் ஆணுக்கு வயது 26–55-க்குள்ளும் இருக்க வேண்டும். வெளிநாட்டினர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற முடியாது.
ஒரு பெண் பணத்துக்காகவே வாடகைத் தாய் ஆக முடியும் என்பதுதான் நடைமுறை யதார்த்தம். அப்போது ‘வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்படுகிறது’ எனும் இந்தச் சட்டத்தின் முக்கியமான அறிவிப்பு அடிபட்டுப்போகிறது. இந்தச் சட்டத்தில் வாடகைத் தாயானவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், உறவினர் அல்லாதவர்களையும் உறவினராகக் காண்பிக்கப்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் அதிகம். நம் கலாச்சாரத்தில் குழந்தையில்லாத பிரச்சினை வெளியில் தெரியக் கூடாது என்றே அநேகரும் விரும்புவர். குடும்பத்தில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொடுத்தால் அதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இந்தியாவில் வாடகைத் தாய் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு விழும் முதல் அடி இது. அடுத்ததாக, வாடகைத் தாயானவர் 25–35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற வரையறை ஒரு முக்கியமான நடைமுறைச் சிரமம். ஏனெனில், அதுதான் அவரவர் வாழும் வயது. கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகிவரும் இன்றைய வாழ்க்கையில், தம்பதிகள் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில், அவரவர் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குவதே சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில், ஆதாயம் இல்லாமல் அடுத்தவர் குழந்தைக்கு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராவது இன்னும் சிரமம்.
நெருங்கிய உறவினரால் வரும் சிக்கல்
நெருங்கிய உறவினர் வாடகைத் தாயாக இருப்பதில் மேலும் பல சிக்கல்கள் உள்ளன. யாரோ ஒருவர் வாடகைத் தாயாக இருக்கும்போது கருவில் சுமந்து பெற்ற தாயை, அந்தக் குழந்தை அடுத்து பார்க்கப்போவதில்லை. ஆனால், வாடகைத் தாயாகப்போகிறவர் நெருங்கிய உறவினராக இருக்கும்போது, வளர்ப்புத் தாயைப் போலவே வயிற்றில் சுமந்த தாயும் குழந்தையின் அருகிலேயே இருக்க நேர்வதால், சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் உளவியல்ரீதியாகவும் உறவு சார்ந்ததாகவும் பல சங்கடங்கள் நேர வாய்ப்பிருக்கிறது. இன்னொரு சிக்கல் என்னவென்றால், தன்னார்வத்துடன் ஓர் உறவினர் வாடகைத் தாயாக ஆவதற்கு முன்வரும்போது, அவருடைய தியாகத்துக்கு ஈடாகப் பணத்துக்குப் பதிலாக நகை, கார், வீடு, நிலம் போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதைத் தடைசெய்ய இந்தச் சட்டம் வழிகாட்டவில்லை. எனவே, மறுபடியும் மறைமுகமான வணிகரீதியிலான வாடகைத் தாய் முறைக்கே இது வழிவகுக்கிறது.
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறும் சட்டப் பிரிவு அடுத்ததொரு சிரமம். மேலும், இன்றைய இளைய வயதினர் நிரந்தரப் பணியில் சேர்ந்த பிறகுதான் திருமணத்துக்குத் தயாராகின்றனர். மிகவும் தாமதமான திருமணமும் அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறைகளும் குழந்தைப்பேறுக்கான சாத்தியக்கூறுகளை இயல்பாகவே குறைத்துவிடும். இந்தச் சூழலில் இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருந்தால் நிலைமை மோசமாகிவிடும். குறிப்பாக, ஆணுக்குத் தரமான உயிரணுக்கள் உண்டாவதற்கும் பெண்ணுக்குக் கருமுட்டை உருவாவதற்கும் சிரமம் ஏற்படும்.
மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
இந்தச் சட்டத்தின்படி திருமணமாகாமல் சேர்ந்து வசிப்பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், தன்பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கெனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் போன்றோரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை என்பது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது. அடுத்து, ஒற்றைக் குழந்தை வளர்ப்பையே அதிகம் விரும்பும் இக்காலத்தில் உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் இல்லையென்றால், அந்தக் குழந்தைகள் வருங்காலத்தில் திருமணம் ஆகும்போது குழந்தையின்மைப் பிரச்சினைக்கு வாடகைத் தாயை எவரிடமிருந்து பெறுவது எனும் கேள்விக்கு இந்தச் சட்டத்தில் எந்தப் பதிலும் இல்லை.
இடைத்தரகர்களும் சில மருத்துவர்களும் அப்பாவி ஏழைப் பெண்களை ஏமாற்றி மோசடி செய்வதுதான் வாடகைத் தாய் முறையில் இருக்கும் பிரச்சினை என்றால், அதைத் தடுப்பதற்குக் கருத்தரிப்பு மையங்களை முறைப்படுத்துவது, சட்ட வரைமுறைக்கு உட்படுத்துவது, இடைத்தரகர்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்குவது போன்ற சரியான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டுமே தவிர, வாடகைத் தாய் முறையைப் பின்பற்றுவதே நடைமுறைச் சிரமமாகும் விதத்தில் சட்டதிட்டங்கள் வகுப்பது ஆரோக்கியமானது அல்ல. பொதுவாக, சமூகம் சில அவசிய வாழ்க்கைத் தேவைகளை அடைவதற்குச் சட்டங்கள் கடுமையாக இருக்குமானால், அந்தச் சட்டங்களுக்குப் புறம்பாக அடையவே முயலும். வாடகைத் தாய் விஷயத்திலும் அதற்கான வாய்ப்புகளே அதிகம். அதிலும், குழந்தையின்மைப் பிரச்சினை அதிகரித்துவரும் இன்றைய சூழலில், குழந்தையைத் தத்தெடுக்கும் வழிகளும் கடுமையாக உள்ள நிலையில், இதுவரை பகிரங்கமாக நடந்த வாடகைத் தாய் வணிகம், இனி ரகசியமாக நடைபெறும். எனவே, இந்தச் சட்டம் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்
இந்த கட்டுரையை எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் த.வளவன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.