scorecardresearch

நஞ்சற்ற உணவு… பரவலாக்கப்பட்ட சமூக நீதி… இயற்கை விவசாயத்தில் மட்டுமே இது சாத்தியம்!

நாட்டில் 60 சதவீத நிலப்பரப்பு வானம் பார்த்த  பூமியாக உள்ளது. இந்த நிலங்களில் எந்தவித இழப்பும் இன்றி இயற்கை உழவாண்மையை நடைமுறைப்படுத்த முடியும்.

த. வளவன்  

நம் மக்கள் முதலில் உணவு உடை வீடு சுகாதாரம் கல்வி போன்றவற்றில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்து முடிக்காமல்  ஏற்றுமதி வணிகத்துக்காக பண்டங்களை உற்பத்தி செய்வது மூடத்தனம். ஒரு கஞ்சன் தன்னிடம் உள்ள பணத்தை எண்ணி எண்ணி பார்த்து மகிழ்ச்சியடைவான். அவனைத் தவிர மற்றவர்க்கு அந்தப் பணம் எந்த இன்பத்தையும் தராது!

பட்டினி கிடக்கும் மக்கள் கையில் நிறைய பணத்தை மட்டும் கொடுத்துப் பாருங்கள்…. ‘பணத்தையா திங்க முடியும்’ என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதை தவிர வேறொன்றும் நடக்காது. ஆதலால் மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.  இந்தியாவில் திட்டம் தீட்டியவர்களுக்கு,  இப்படி ஒரு பார்வை இல்லாத காரணத்தால்.. இரண்டாவது முறையாக அடிமை சாசனத்தில் கையொப்பம் இட்டுக் கொண்டிருக்கிறோம். ஆம், உணவை இறக்குமதி செய்கிறோம்.

‘குப்பை,  கூளம் இல்லாத கோதுமை கொடுங்கள்’ என்று அமெரிக்காவிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த பதில் நாங்கள் இப்படித்தான் கொடுப்போம். நீங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொண்டு போய் சுத்தம் செய்து கொள்ளுங்கள்!. இப்படி ஒரு சூழ்நிலை இன்னமும் தொடர வேண்டுமா.?

‘கூடாது… கூடவே, கூடாது என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. அதன் பெயர் ‘உழவு பார்வை’ கூட்டமைப்பு. இயற்கை வழிப் பண்ணையத்தில் ஈடுபாடு கொண்டுள்ள உழவர்கள், நுகர்வோர்கள், சிந்தனையாளர்கள் இந்த உழவுபார்வை கூட்டமைப்பில் இருக்கிறார்கள். இதன் ஒருங்கிணைப்பாளர் மராட்டிய மாநில சூழல் மனித உரிமைப் போராளி பரத்.

இந்தியாவில் வேளாண்மை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. சுழலேணி போல வளர்ந்து வரும் சூழல் பிரச்சினைகள்,  விடாது உயர்ந்து வரும் செலவினங்கள்,  உற்பத்தியில் தேக்கம் உழவர்கள் கடன்படுவது, தற்கொலைக்கு ஆளாவது என்று அனைத்தும் சேர்ந்து நமக்கு உணர்த்துவது ‘பசுமைப் புரட்சி’ உழவியல் தொழில்நுட்பம் தோற்றுப் போனதைத்தான். பசுமைப் புரட்சியின் மூலம் நமக்கு கொடுக்கப்பட்ட தொழில்நுட்பம், நிலைத்து நீடிக்கவல்ல உற்பத்திக்கு துணை போகாது.

அமெரிக்கர்களில் மூன்று விழுக்காடு மக்களே உழவர்கள். அவர்களுக்கு பல நூறு கோடி டாலர்  மானியமாக அமெரிக்க அரசு கொடுக்கிறது. அதனாலயே அமெரிக்கா பொருளியல் அடிப்படையில் போண்டியாகி கொண்டுள்ளது. ரசாயன இடுபொருள் மிகுந்த ‘பச்சைப்புரட்சி’  மூலம் வேளாண்மை செய்த பன்னாட்டு கம்பெனிகளுக்கு  அதிக லாபம்  கிடைத்துள்ளது. 

அண்மையில் வெளியான இந்திய தேசிய உழவர் கமிஷன் அறிக்கை இப்படிச் சொல்கிறது. 40% இந்திய விவசாயிகள் வேறு வாய்ப்பு கிடைத்தால் பண்ணை தொழிலை விட்டு விலகத் தயாராக உள்ளனர். அதாவது இதே நிலை நீடித்தால் சுமார் 25 கோடி உழவர்கள் உயிர்ச் சூழல் அகதிகளாக மாற்றப்படுவர்.

நெருக்கடிக்கு தீர்வாக பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றுப் பயிர்களைப் புகுத்தி திட்டமிடுகின்றன. மரபணு மாற்றப் பயிர்களால் துன்பங்கள் பெருக மட்டுமே வாய்ப்பு உள்ளது. பி.டி. எனப்படும் மரபணு மாற்று நஞ்சை எதிர்க்கும் சக்தி பெற்ற பூச்சிகள், எதிர்காலத்தில் சமாளிக்க முடியாத அளவுக்குக் கொடூரமாக மாறும் அபாயம் உள்ளது. நுகர்வோரின் உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மரபணு மாற்றப் பயிர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாய்ப்பே மிகுதி. இவை பொருளியல் இழப்பை உண்டு பண்ணும் என்பதற்கு இந்திய, சீன அனுபவங்கள் சாட்சி கூறுகின்றன.

பச்சைப் புரட்சி தொழில் நுட்பமும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பமும் கையாளப்படும் வேளாண்மையில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் புதுப்பிக்க முடியாத எரிசக்தியும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். இவற்றின் பயன்பாடு நேரடியாக பூமி வெப்பக் கூடாரமாக மாறுவதற்கு துணை போகிறது. இந்த வகை ரசாயனங்கள் உலகம் முழுவதும் வெளியிடப்படும் கரியில் (கார்பன்) 25 சதவிதம், மீத்தேன் வாயுவில் 60 சதவிதம், நைட்ரஜனில் 80 சதவிதம் என்று வெளியிடுகின்றன. கார்பன் டை ஆக்சைடு பூமியை எவ்வளவு சூடாக்க முடியுமோ, அது போல 200 மடங்கு வல்லமை பெற்றவை  ரசாயன  உரங்களிலிருந்து வெளியேறும் நைட்ரஜன்.

இந்தியாவில் சிறு, குறு உழவர் எண்ணிக்கை 80 சதவிதம். இந்தக் குடும்பங்கள் சொந்தமாக வைத்திருப்பது ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலங்களே. இதில் 90 சதவித குடும்பங்கள் பயிர் வைப்பதற்கு மழையையே நம்பியுள்ளனர். பசுமைப் புரட்சி வெள்ளாமையில் சாகுபடிச் செலவு அதிகம். பயிர்  விளையாமல் போகும் ஆபத்தும் அதிகம். அதனால் செலவழித்த பணத்தைக் கூட எடுக்க முடியாமல் போகிறது.

கடன் பட்டு துயருற்று தற்கொலை செய்து கொள்ளும் உழவர்களுக்கு நிவாரண உதவிகள் மட்டும் போதாது. கடனையும் வட்டியையும் அந்த உழவர்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். நியாயமான குறைந்த மட்ட விலை முடிவு செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உழவர்களும் இயற்கை வழி வேளாண்மை செய்ய அரசு  வழி வகை செய்ய வேண்டும். 

இயற்கை வழி உழவாண்மை என்பது செலவு குறைந்தது. விபத்து குறைந்தது. சத்து மிகுந்தது. பூரணத்துவம்  கொண்டது.  அதுவே நிலைத்து நீடிக்க வல்லது.   பசுமைப் புரட்சி தொழில் நுட்பத்தால் ஏற்பட்டுள்ள உயிரியல் பொருளியல் இழப்புகளுக்கு இயற்கை வழி உழவாண்மை ஒன்றே மாற்றாகும். இயற்கை வழி உழவாண்மையில் கையாளப்படும் உத்திகள் பூரணத்துவம் வாய்ந்தவை. இதுவே பல உழவர்களின் அனுபவமாக இருந்துள்ளது. உழவுக்கு அடித்தளமாக உயிர்ச் சூழலை மீட்டெடுக்க வல்லதும் இதுவே.

நாட்டில் 60 சதவீத நிலப்பரப்பு வானம் பார்த்த  பூமியாக உள்ளது. இந்த நிலங்களில் எந்தவித இழப்பும் இன்றி இயற்கை உழவாண்மையை நடைமுறைப்படுத்த முடியும். ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த உலக உழவு உணவு அமைப்பும் ஆந்திராவில் பட்டன்செரு என்ற இடத்தில் உள்ள சர்வதேச மானாவாரி சாகுபடி ஆராய்ச்சி நிறுவனமான ‘இக்ரிசாட்’டும் நீண்ட ஆய்வுக்குப் பின் இந்த முடிவுக்கு வந்துள்ளன. நஞ்சற்ற உணவும் சரிவிகிதச் சத்து மிகுந்த உணவும் பரவலாக்கப்பட்ட சமூக நீதியும் ஏழைக்கு உதவுவதும் பரவலாக்கப்பட்ட சமூக நீதி. இது இயற்கை வழி விவசாயத்தில் மட்டுமே சாத்தியம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Tamil agriculture update only in natural agriculture benefits in tami