Advertisment

எம்.ஜி.ஆர்... சிவாஜி... விஜயகாந்த்... நடிகர் விஜய் போகும் அரசியல் பாதை எது?

அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன் ; 2026 தேர்தலே இலக்கு என்றார். இதோ கட்சிக்கொடி , டைட்டில் சாங் என மனுசன் களத்தில் குதித்தே விட்டார்.

author-image
WebDesk
New Update
MGR SIVAJI VIJAYAKANTH VIJAY

எப்படி திருப்பித்தரப்போகிறீர்கள் விஜய்?

Advertisment

இதோ வருகிறேன், இதோ வரப்போகிறேன்,,; இதோ வந்துவிட்டேன் என தன்னை உயிருக்கும் மேலாக நேசித்த ரசிகர்களுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து சமிக்ஞை கொடுத்து விட்டு  கட்டக்கடைசியில் தனது உடல்நலத்தைக் காரணங்காட்டி ஒதுங்கிக் கொண்ட ரஜினிகாந்த்  போல அல்ல விஜய்.

அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன் ; 2026 தேர்தலே இலக்கு என்றார். இதோ கட்சிக்கொடி , டைட்டில் சாங் என மனுசன் களத்தில் குதித்தே விட்டார். தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் வெற்றிடத்தை கச்சிதமாக இட்டு நிரப்புமென அவரது அடிப்பொடிகள் வாயெல்லாம் பல்லாக திரிகிறார்கள். வெற்றிடம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ரசிகர் மன்றங்களை கட்டி ஆள்பவர்களிடம் பதில் இல்லை.

கொதிக்கிற எண்ணெய சட்டியில் வறுபட்டுக் கொண்டிருக்கிறோம்; எங்களைக் காப்பாற்ற ஒரு தேவதூதன் வரமாட்டானா என தமிழக மக்கள் மன்றத்திலிருந்து எந்தவொரு அபயக்குரலும் வராத நிலையில், இதோ நானிருக்கிறேன் என புகழ் வெளியில் உச்சத்திலிருக்கிறவர் இறங்கி வருகிறார் எனில் ஏதோ காரணம் இருக்கிறது.

சினிமாவுக்கு நூறு கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக பேசப்படுகிற விஜய்  , அரசியல் களமாட இன்னும் கால அவகாசம் இருந்தும் ' 2026 ' தேர்தலை குறிவைக்க வேண்டிய அவசியம் என்ன? வெள்ளிக்கரண்டியோடு பிறந்து, வேர்வை அறியாமல் வளர்ந்து, சொகுசும் பவுசுமாக வாழ்ந்தவரை வெக்கை பழக தூண்டிய விரல் எது? நியாயமற்ற நிராகரிப்பகள், நெருக்கடிகள் தந்த கோபத்தின் நீட்சி இதுவென கொள்ளலாமா?

இவரது திரைப்படங்கள், இடம்பெற்ற காட்சிகளுக்காக விமர்சனத்துக்கு உள்ளானதுண்டு; சிறப்பு காட்சிகளுக்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்ததுண்டு. இவற்றையெல்லாம் ஒரு யானையைப் போல் ஞாபகத்தில் வைத்து,  தான் யாரென நிறுவதற்கான அறைகூவலா இது?!

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சினிமா தருகிற புகழ் வெளிச்சத்தைக் கொண்டு ஓட்டுகளை அறுவடை செய்ய முடியாது;  சினிமா நடிகனை வெறும் பொழுதுபோக்காளனாய்  தமிழக மக்கள் 1989 தொடங்கி புரிந்தே வைத்திருக்கிறார்கள் அதென்ன 1989? வேறொன்றுமில்லை எம்ஜிஆருக்கு இணையாக கொண்டாடப்பட்ட சிவாஜி தனது கட்சியை ஒப்படைத்துவிட்டு ஓடிய காலம் அது.

காதலித்தவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள்,காதலில் தோற்றவர்களென அத்தனை பேரையும் தனது கக்கத்தில் இடுக்கிக் கொண்டு நடந்த ராஜேந்தர், தாய்குலங்களை தனது திரைமொழியால் கட்டிப் போட்டிருந்த பாக்யராஜ் எல்லாம் அரசியல் கட்சி ஆரம்பித்து அடையாளமிழந்து போனவர்கள். சமீபத்திய உதாரணம்  சரத்குமார். நள்ளிரவில் கட்சியை விட்டுவிட்டு தெற்கே ஒரு கும்பிடு வடக்கே ஒரு கும்பிடு என கும்பிட்டு விட்டு போனார்.

ஒரு கட்சியின் தலைவன் ஜெயித்தால் முதல்வன் ஆகிவிடலாம் என விதியில்லை. இன்னும் 117 எம்எல்ஏ க்கள் வேண்டும். விஜய்யை விட செல்வாக்கு மிக்கவராக இருந்த கமல்ஹாசன்  விஸ்வரூபம் படத்தையொட்டி நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் வெதும்பி கட்சி ஆரம்பித்து விட்டு, டார்ச்லைட் வெளிச்சத்தில் இப்போது நிர்வாகிகளை தேடிக்கொண்டிருக்கிறார் . விஜய்காந்த் கட்சி ஆரம்பித்த போது அரசியலில் பழுத்த அனுபவமிக்க பண்ட்ருட்டி ராமச்சந்திரன் உட்பட பலரை பக்கத்தில் வைத்திருந்தார். எதிர்கட்சி அஸ்தந்து வரை வந்த கட்சி்க்கு இப்போது இங்கே வேலையில்லை.

சினிமாவை விடுங்கள்; போர்க்குணமிக்க சமூகசேவகர் என தமிழகம் அறிந்து வைத்திருந்த டிராபிக் ராமசாமி ஓட்டரசியலுக்கு வந்தபோது எத்தனை பேர் அவருக்கு வாக்களித்தார்கள். தமிழகத்தில் ஆலமரமாய் வேரும் விழுதும் விட்டு நிற்கக் கூடிய தி.மு.க, அ.தி.மு.க, காங், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஓட்டுப் பழகியவர்களிமிருந்துதான் உங்களுக்கான ஓட்டுகளை உலுப்பி எடுக்க வேண்டும். அந்த அளவுக்கு வலுவானதா உங்கள் ஆதரவுக் கரங்கள்?

துதிபாடிகளை அருகில் வைத்திருக்கிறவன் தன்பத்தை மடியில் வைத்திருக்கிறான். நீங்கள் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி ஒருத்தரையும் வேறு சிலரை ஒளித்தும் வைத்திருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர் நடிகனாக மட்டுமல்ல வள்ளலாக இருந்தார். ஏழைகளுக்கு மாத்திரமல்ல..எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தார்

எம்ஜிஆரின் அரசியல் வெற்றிக்கு காரணம் இதுவெனும் போது சிவாஜியின் தோல்விக்கு காரணம் சிறுபிள்ளையும் அனுமானிக்கக் கூடியதே. ரஜினியின் ஒருதுளிவியர்வைக்கு ஒருபவுன் தங்கக்காசு தந்த தமிழகம் உங்களுக்கு ஒன்றரை பவுன் தந்திருக்கிறது.;  தமிழகத்துக்கு அதை எப்படித் திருப்பித்தரப் போகிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்களின் அரசியல் வெற்றி!

அதங்கோடு கலாதரன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Sivaji Ganesan Vijayakanth Mgr Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment