ஆர்.வெங்கடேஷ்,
மூத்த பத்திரிகையாளர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த யூகங்கள் தொடங்கிவிட்ட நேரம் இது. என்னைப் பொறுத்தவரை, 2021 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும். பழைய கூட்டணிக் கணக்குகள், வாக்கு வங்கிக் கணக்குகளை வைத்து கணிக்கிற தேர்தலாக இது இருக்காது. இதற்கு முக்கியக் காரணம், கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இரு ஆளுமைகள் இல்லாமல் எதிர்கொள்கிற தேர்தல் இது.
அடுத்து, நாம் விரும்புகிறோமோ இல்லையோ... தமிழ்நாட்டில் இந்து வாக்கு வங்கி ஒருங்கிணைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதுநாள் வரை, பாஜக.வை யாரும் ஒரு பொருட்டாக கருதியது கிடையாது. ஆனால் இப்போது பரவலாக உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்பு ரீதியான பலப்படுத்தல் ஆகியவற்றை அங்கு பார்க்க முடிகிறது. இதன் தொடர்ச்சிதான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் ஆகிய முக்கிய திமுக தலைவர்களே பாஜக.வில் சென்று இணைவது.
ஆனாலும் தேர்தல் என வரும்போது, இந்து வாக்கு வங்கி ஒருங்கிணைப்பு என்பது பாஜக.வுக்கு மட்டுமே பலன் தரும் என நான் நினைக்கவில்லை. பாஜக மீது தமிழகத்தில் நிலவும் விமர்சனங்களையும், அதிருப்திகளையும் அவ்வளவு சுலபத்தில் புறம் தள்ளிவிடவும் முடியாது. அந்த இடத்தில் நம்பிக்கை பெற்ற நபராக ரஜினிகாந்த் வரலாம். அந்த வாக்கு வங்கியை அவர் ஒருங்கிணைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
திராவிட அரசியலுக்கு எதிரான தேசிய உணர்வுள்ள வாக்கு வங்கியும் தமிழகத்தில் கணிசமாக இருக்கிறது. இந்த வாக்கு வங்கியையும் ரஜினிகாந்த் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். தவிர, திமுக எதிர்ப்பு வாக்குகள் இந்த முறை அதிமுக.வுக்கு செல்வதைவிட, ரஜினிக்கு போகும். இப்படி சில சாத்தியக்கூறுகள்தான் ரஜினிகாந்தின் பலம்.
சமூக ஊடகங்களில் மாரிதாஸ், மதன் போன்றவர்களின் பேச்சுகள் அதிக வைரல் ஆவதைக் காண்கிறோம். இவர்களின் முன்னெடுப்புகள் தமிழகத்தில் பாஜக.வுக்கான ஆதரவை பெரிதாக பெருக்கிவிடாது. ஆனால் திமுக எதிர்ப்பு உணர்வை கூர்மைப்படுத்தும். அது எப்படி வாக்காக மாறும்? வாக்குகளாக ரஜினிக்கு போய்ச் சேருமா? என்பதைப் பார்க்க வேண்டும்.
பாஜக.வைப் பொறுத்தவரை, உடனடி பலன் பெறும் கட்சியாக தமிழகத்தில் இருக்காது. திராவிடக் கட்சிகளில் இருந்து களப்பணி அனுபவம் பெற்ற பலர் இப்போது பாஜக.வுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளாவது, அடிப்படைப் பணிகளில் அந்தக் கட்சி கவனம் செலுத்தினால் இந்த ஊருக்கான கட்சியாக உருப்பெற முடியும்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்கனவே இருக்கிற வாக்கு வங்கி அடிப்படையில் எதிர்வரும் தேர்தலை பேசுகிற அனுமானத்தையும் முற்றிலும் நான் புறக்கணிக்கிறேன். திமுக.வுக்கு 23 சதவிகிதம், அதிமுக.வுக்கு 32 சதவிகிதம் என பேசிக் கொண்டிருக்கிறோம். இதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, அதிமுக.வின் வாக்கு வங்கி என எடுத்துக் கொண்டால், அதில் ஜெயலலிதாவுக்கு என்று போடப்பட்ட 8 முதல் 10 சதவிகித வாக்குகள் இருக்கின்றன. திமுக.விலும் அதேபோல கருணாநிதிக்கு என விழுந்த வாக்குகள் உண்டு. அவை போக எஞ்சிய வாக்குகள்தான், அந்த கட்சிக்கான பாரம்பரிய வாக்குகள்.
எனவே இன்றையச் சூழலில் பொதுத்தேர்தலை சந்திக்கும்போது, இந்தக் கட்சிகளின் பழைய வாக்கு வங்கிக் கணக்குகள் கை கொடுக்காது. சரியாகச் சொல்வதானால் 2021 தேர்தல்தான் வாக்கு வங்கிகள் தொடர்பான புதிய கணக்குகளுக்கு ஆரம்பமாக இருக்கும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலை ஏன் அளவுகோலாக எடுத்துக் கொள்ளக் கூடாது? என்கிற கேள்வி எழலாம். அந்தச் சூழல் வித்தியாசமானது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே மோடி எதிர்ப்புப் பிரசாரத்தை தமிழகத்தில் திமுக வலுவாக முன்னெடுத்தது. கடைசி நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்து பிரசாரம் செய்தார் ஸ்டாலின். தமிழகத்தில் மோடி எதிர்ப்பு உணர்வை முழுமையாக பயன்படுத்த மேற்கொண்ட தந்திரம் அது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
இன்னும் தெளிவாக சொல்வதானால், 2019-ல் தமிழகத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெருவாரியான வாக்குகள் ராகுல் காந்திக்காகவும் காங்கிரஸுக்காகவும் கிடைத்தவையே. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டவர் ஸ்டாலின். இது இந்தத் தேர்தலில் பயன்படாது.
பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை, அவர் யாருக்கு ஆலோசகராக சென்றாலும் அந்தக் கட்சியை தனித்துப் போட்டியிடச் சொல்வார். ஜெகன் மோகன் ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை அதுதான். ஸ்டாலினுக்கும் அதே ஆலோசனையைக் கொடுத்திருக்கவே வாய்ப்பு அதிகம். திமுக மட்டுமே 190 தொகுதிகளில் ஜெயிக்க விரும்புவதாக கூறுகிறார்கள். இதன் அர்த்தமே தனித்துப் போட்டிதான்.
அதிகபட்சம், நாடாளுமன்றத் தேர்தலில் விசிக.வின் ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி ஆகியோரை திமுக சின்னத்தில் நிற்க வைத்ததுபோல சில கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்கலாம். இது நடந்தால், ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே கருதிக் கொண்டு எடுக்கிற நடவடிக்கையாக அது இருக்கும். அந்த இடத்தில், ஸ்டாலினுக்கான ஈர்ப்பு சக்தி என்ன? திமுக.வின் வாக்குகளைத் தாண்டி, எத்தனை சதவிகித வாக்குகளை ஸ்டாலின் கொண்டு வந்து சேர்ப்பார்? என்கிற கேள்விகள் எழும்.
ஏற்கனவே சொன்னதுபோல 2019-ல் விழுந்த வாக்குகள் நிச்சயம் ஸ்டாலினுக்கான வாக்குகள் அல்ல. இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கான வாக்குகள் எவ்வளவு? என்பதும் தெரிந்துவிடும்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் வெற்றி- தோல்வியை தீர்மானித்து வந்திருப்பதையும் மறுக்க முடியாது. இப்போது 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என திமுக கணக்குப் போடுகிறது. என் அனுமானம், ஜனவரி அல்லது பிப்ரவரியில் அதிமுக- பாஜக கூட்டணி உடைந்துவிடும். பாஜக.வை சுமந்தால் தோல்வி என்பதை 2019-லேயே எடப்பாடி பழனிசாமி பார்த்துவிட்டார். மீண்டும் அதே தவறை செய்ய அவர் விரும்பவில்லை என்பதை சமீபத்திய இரு தரப்பு அறிக்கைகள், பேட்டிகளே உணர்த்துகின்றன.
மத்திய அரசை அனுசரிக்க விரும்பி இப்போதும்கூட அதிமுக அடக்கி வாசிக்கலாம். ஆனால் தேர்தல் நெருங்கும்போது, இதே அதிமுக தலைவர்கள் பாஜக மீது புழுதிவாரி தூற்றக்கூடும். அதன் மூலமாக அவர்களின் பாரம்பரிய வாக்குகளை பெறுவதற்கு முயற்சிப்பார்கள். ஜெயலலிதா 2014-ல் செய்த அரசியலும் அதுதான்.
இன்னொரு அம்சம், சசிகலா வெளியே வந்தால் அதிமுக தலைவர்கள் அவருடன் இணையமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சமூக ரீதியாக சசிகலாவின் வருகை இன்னும் அதிமுக.வுக்கு பலம் சேர்க்கலாம். எடப்பாடி பழனிசாமி இதுவரை பெரிதாக சசிகலாவை விமர்சித்துப் பேசியதில்லை. போயஸ் கார்டனை இவர்கள் அரசுடைமையாக்கியபோதும், அதே பகுதியில் சசிகலாவுக்காக பங்களா தயாராவதாக செய்திகள் வருகின்றன. ஆட்சியாளர்கள் அனுமதி இல்லாமல் அந்த பங்களாவை கட்ட முடியாது அல்லவா?
எனவே திமுக தனித்துப் போகலாம். திமுக இடம் கொடுத்தால், கமல்ஹாசன் அங்கு இணையலாம். கமல்ஹாசனின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ராஜ்யசபை எம்.பி. பதவியாக இருக்கலாம் என்பதே என் கணிப்பு. பாஜக.வை அதிமுக கழற்றி விடலாம். மொத்தத்தில் திமுக, அதிமுக, பாஜக, ரஜினி என 4 முனைப் போட்டியை எதிர்பார்க்கலாம். 2021-க்கான களம் இதுதான் என நான் நம்புகிறேன். வாக்காளர்கள் எப்போதுமே அதி புத்திசாலிகள். சரியான முடிவை எடுப்பார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.