வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்
தமிழ்நாடு இடைத்தேர்தலுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. தேர்தல் ஜனநாயகத்தை நோக்கி பெரும் அச்சத்தையும் கேள்வியினையும் உண்டாக்கிய அந்த அடையாளமானது பணம் மற்றும் அதிகாரத்தின் துணைக்கொண்டு வெற்றியை உறுதி செய்வது. 1950 களில் வாக்கு ஒன்றுக்கு ரூ. 5 என்று பொது தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறை இருந்தாக கூறப்படுவதுண்டு. அதுவே எண்பதுகளின் இறுதியில் சராசரியாக ரூ. 20 ஆனது. அதுவரை வாக்காளர்களை கவருவதற்காக சம்பிரதாயமாக கொடுப்பட்டு வந்த இவ்வாறான தொகைகள் தொண்ணூறுகளுக்கு மோசமான வடிவமெடுத்தது.
2003 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தேர்தலில் அதிமுகவினர் புடவை, வீட்டுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை விநியோகித்தனர். 2009 ஆம் ஆண்டு அது புதிய பாய்ச்சலெடுத்தது. அதாவது திருமங்கலம் 2009 இடைத்தேர்தலில் திமுக ஓட்டுக்கு ரூ. 5000 வரை கொடுத்தது, வாக்களிக்க உணவு, பணம் என்று ஊக்கத்தொகையைப் போல நடைமுறையில் இருந்தவை முதல் முறையாக சில ஆயிரங்களை தொட்டது, இரவு நேரங்களில் தேர்தல் ஆணையத்திடம் பிடிபடாமல் பட்டுவாடா செய்யும் முறை முடிவுக்கு வந்து, செய்தித்தாளில் வாக்குசீட்டோடு வீடு வந்து சேர்ந்தது பணம்.
"திருமங்கலம் பார்முலா" என்னும் பதமே உருவானது. இந்தியாவை கடந்து அமெரிக்க, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நிறுவனமயமாக்கப்பட்ட பாணியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறைமை அதிர்ச்சியோடு கவனத்திற்குள்ளானது. திருமங்கலம் வெற்றிக்குப் பிறகு இடைத்தேர்தலை முன்முடிவோடு அணுகும் மனநிலை மக்களிடையே நிரந்தரமாகி 2017 ஆர்.கே நகர் தேர்தல் வரை அது பிரதிபலித்தது.
ஒரு தேர்தலின் வெற்றி , தோல்வி என இரண்டுமே பரிசீலனைக்குட்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே பணம் மற்றும் அதிகாரத்தால் வெல்லும் என்று இடைத்தேர்தலின் தோல்விக்கு அரசியல் வட்டாரத்தில் அதிக முக்கியத்தவத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் நாம் அவ்வாறு கடந்து போய்விடக் கூடிய வழக்கமான இடைத்தேர்தல் அல்ல. இவற்றில் இங்கு இப்போது விக்கிரவாண்டியை மட்டும் ஒரு சான்றாக முன்வைத்து சில விசயங்களை அலசலாம்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஓரிரு வாரத்திற்குள்ளே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர்களுக்கும், திமுகவில் இருந்து மறைந்த வன்னியர் சமூகத்தவரான ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கும் மணி மண்டபம் அமைத்துத் தரப்படும் என்றது அந்த அறிக்கை. கூடுதலாக திமுகவே வன்னியர்களுக்கு அதிக நன்மைகளை செய்ததாக பட்டியலாக மேற்கோள் காட்டப்பட்டது.வன்னிய சமூகத்திற்கு திமுகவே உற்றத்தோழன் என்று பறைச்சாற்றிய அந்த அறிக்கை திமுக ஆட்சி அமைந்த பிறகு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று இதுவரை எந்த பெரிய கட்சியும் நெருக்காத பெரிய வாக்குறுதியை சொன்னது.
பொது தேர்தல்களில் சாதி முக்கியமான அம்சமாக இருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் புதிதில்லை என்றாலும், ஒரு இடைத்தேர்தலுக்கான ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியானது. ஏனெனில் இது இடைத்தேர்தலுக்கு அதிகபடியானது. ஒரு இடைத்தேர்தலில் பணத்தை கடந்து ஒரு சாதியை மட்டும் குறிவைத்து இவ்வளவு சலுகைகளை அறிவித்த விதத்தில் இதை விக்கிரவாண்டி பார்முலா எனலாம்.
விக்கிரவாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம். அதில் வன்னியர்கள் தோராயமாக ஒரு லட்சம். இந்த ஒரு லட்சம் வன்னியர்களின் வாக்குகளை பெற மூன்று பெரிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களை விட பன்மடங்கு சமூக அமைப்பில் பின்தங்கியவர்கள் உள்ள நிலையில், அப்பட்டியலிலுள்ள பெரும்பான்மை வன்னியர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு கொடுப்பது நியாயமாகுமா? என்கிற கேள்விகள் இருந்தாலும் அவை ஒருபுறமிருக்கட்டும். இந்த உள் ஒதுக்கீடு அறிவிப்பு சமூக நலன் சார்ந்தாக இல்லாமல் தேர்தலை கணக்கில் கொண்டு வாக்குத் திரட்சிக்காக அறிவிக்கப்பட்டவை என்பது சொல்லித் தெரிய வேண்டியவை அல்ல.
இந்த அறிவிப்பை ஏற்று அச்சமூக மக்கள் வாக்களித்தாலும் நிராகரித்தாலும், தன் சாதியின் மீது ஆளுகிற, ஆளப்போகிறவர்களுக்கு இருக்கும் பயமும் கிடைக்கப்பெறும் முக்கியத்துவமும் அச்சமூக மக்களிடையே தங்கள் சாதி குறித்தான இருப்பு கூர்மையடைய செய்யவே பயன்படும்.. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருக்கிற காரணத்தால் திமுகவை பொருத்தமட்டிலும் இது தேர்தல் உத்தி என்று சொல்லிக் கொள்ளப்படலாம். ஆனால் வெற்றி பெற்றது என்னவோ வன்னியர் அரசியல் என்னும் சாதி ஓர்மை தான்.
வன்னியர்களுக்கு மட்டும் சாதகமான இந்த அறிவிப்பின் மூலம் அதே விக்கிரவாண்டி தொகுதியிலிருக்கும் 25 % - 30 % தலித்துகள் என்ன முடிவெடுப்பார்கள்? என்பது குறித்த எந்த அக்கறையின்றி, தொகுதியின் சாதி பெரும்பான்மை வாக்குத்திரட்சி மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வன்னிய சமுதாய ஆளுமைகளுக்கும், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் திமுக முக்கியவத்துவம் கொடுப்பதை கணக்கில் கொண்டு விழுப்புரம் மாவட்ட தலித்துகள் திமுகவுக்கு வாக்களிக்காமல் போயிருந்தால் அது யதார்த்தமான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கணிசமான தலித் வாக்கு வங்கியால் தான் திமுக கௌரவமான தோல்வியை தழுவியிருக்கிறது.
வன்னியர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை தலித்துகள் ஏன் முரணாக பார்க்க வேண்டும்? என்கிற கேள்விக்குப் பின்னால் வரலாற்று நியாயம் இருக்கிறது.
1987 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் பகுதியில் வன்னியர்களின் போராட்டம் ஆரம்பமானது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட 22 கோரிக்கையை மையப்படுத்தி போராடுகிறோம் என்று வன்னியர் சங்கங்களால் சொல்லப்பட்டாலும் அந்தக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது தலித்துகள் தான்.
தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வரலாற்றுப் பகை ஏதுமில்லை. வன்னியர்கள் கோரிய இட ஒதுக்கீடும் தலித்துகளுக்கு எதிரானதில்லை. ஒரே நிலப்பரப்பிலிருக்கும் இரண்டு பெரும்பான்மை சமூகத்திற்குள் உருவாகும் முரண் என்கிற அளவில் மட்டுமே சமூகப்பிரச்னைகள் இருந்து வந்தன. ஆனால் அந்தப் போராட்ட உத்தி, ஏற்கனவே அரசின் சலுகைகளை பெற்று வரும் சாதியை எதிரியாக காட்டி சாதிய திரட்சியை உருவாக்குவதாக இருந்தது. வட மாவட்டத்தில் அரசியல்படுத்தப்பட்ட தலித் - வன்னியர் முரண்களின் தொடக்கம் இது தான்.
தலித்துகளுக்கு எதிரானவர் முத்திரைகளிலிருந்து விடுபடுவதற்காக பின்னாளில் பல முயற்சிகளை மேற்கொண்டார் ராமதாஸ். நீலக்கொடி டேவிட் அம்பேத்கர், தலித் ஏழுமலை, பின்பு தொல். திருமாவளவன் என்று பல தலித் ஆளுமைகளோடு இணக்கம் பாராட்டி தலித் விரோதி என்கிற பட்டத்தை நீக்க பயணப்பட்டவை குறிப்பிட வேண்டியது. வட மாவட்ட சாதியப் பிரச்சனைகள் குறித்த புரிதலுக்கு இச்சிறு வரலாற்று குறிப்பு அவசியம். இந்தக்குறிப்பை மனதில் கொண்டு விக்கிரவாண்டி தேர்தலை அணுகலாம்.
திமுக - அதிமுக என்று இருமுனை போட்டியாக இருந்திருக்க வேண்டிய விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஸ்டாலின் அறிவிப்பிற்கு பிறகு சத்தமில்லாமல் வன்னியர் - வன்னியரல்லாதோர் எதிர்மறையாக உருவெடுத்தது. ஸ்டாலினின் இந்த வாக்குறுதிகளுக்கு வன்னியர் சங்கங்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததைப் போல நன்றி தெரிவித்து அதே சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புகைப்படத்தோடு விழுப்புரம் சுவரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் பிரச்சார உரைகளும் வன்னியர்களுக்கு அரணாக இருப்பது திமுகவா? அதிமுகவா? என்று மாறிப் போயின. வேறு விசயங்கள் அழுத்தம் பெறாத வகையில் இந்த லாவணியே மொத்த தேர்தலையும் ஆக்கிரமித்தது. வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்களை திமுக நியமித்திருக்கிறது? என்று கேட்ட ராமதாஸ், "கணிசமான வன்னியர் மாவட்ட செயலாளர்களை உருவாக்குங்கள், நாங்களே அஞ்சு பத்து ஒட்டு போடுறோம்" என்றார்.
விழுப்புர மாவட்ட திமுகவில் வன்னியர்களுக்கு செல்வாக்கு இல்லையென்பதாக நெடுங்கால புகைச்சல் அங்கு இருந்தாலும் இந்த தேர்தலில் அது ஏகத்திற்கும் பற்ற வைக்கப்பட்டது. இவையெல்லாம் ஒருசேர திமுக மற்றும் திமுக சார்புடைய பெரும்பான்மை வன்னியர்களின் வாக்குகள் திமுகவுக்கு பதிலாக அதிமுகவுக்கு திருப்பப்பட்டது. வன்னியர்களின் வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கவில்லை என்று சொல்வதின் மூலம் மேலும் வன்னியர்களுடனான முரணை கூர்தீட்ட விரும்பாத திமுக, தேர்தல் முடிந்த கையோடு தலித் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லை என்று முதற்கட்ட கருத்துருவாக்கத்தை தோல்விக்குப் பிறகு விழுப்புர மாவட்டத்தில் உருவாக்கியது. ஆனால் 275 வாக்குச்சாவடிகளில் பதிவான புள்ளி விவரங்கள் வேறாக இருந்தன.
கடந்த சில வருடங்களில் தலித்துகளிடையே அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பு இப்பகுதியில் அழுத்தம் பெற்றிருக்கிறது.தேர்தல் அரசியலில் கணிசமான பிரதிநித்துவத்தை பெற்ற தலித் கட்சியாக இருப்பதால் இவ்வாக்குகள் முதன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சேர்ந்துள்ளது. இணையதள அரசியலின் தாக்கம், இளைஞர்கள் மத்தியில் உருவெடுத்துள்ள தலித் உரையாடல்கள் கணிசமான இளைஞர்களை தலித் அரசியலை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலிலும் விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலிலும் அவை எதிரொலித்தன. அதிமுகவின் நிரந்தர தலித் வாக்குகளையும் கூட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரை.இரவிக்குமார் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை தலித்துகள் வசிக்கும் வாக்குச்சாவடிகளில் ரவிக்குமார் அதிகப்பட்சமான வாக்குகளைப் பெற்றார். சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் சாத்தியப்பட்ட இந்த வாக்குத்திரட்சியே தற்போது திமுகவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியிலும் கைகூடியிருக்கிறது. இம்மூன்று தொகுதிகளின் தலித் வாக்குத்திரட்சியை பற்றியும் நியாயமாக விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலிருந்து ஆய்வுக்குட்படுத்தியிருக்க வேண்டும். தங்களின் வாக்கு திரட்சியை அழுத்தம் தந்து சொல்லியிருக்க வேண்டும். அதனடிப்படையில் எதிர்கால தேர்தல்களின் பேர சக்தி உறுதிப்படும். ஆனால் வெற்றி பெற்றதையே போதுமானதாக கருதி தினசரி செய்திகளின் அடிப்படையில் அரசியல் செய்வது மட்டுமே அவர்களின் மையநீரோட்ட அரசியலாக மாறிவிட்ட நிலையை பார்க்கிறோம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள்113766. திமுக பெற்ற வாக்குகள் 68842 . மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 18 ல் மட்டுமே திமுக முன்னிலை. அந்த 18 வாக்குச்சாவடிகளில் கிட்டத்தட்ட 16 வாக்குச்சாவடிகள் பெரும்பான்மையாக தலித்துகள் வசிக்கிறார்கள். வன்னியர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் கடும் பின்னடைவை சந்திருக்கிறது திமுக. இதில் திமுக ஒன்றியச்செயலாளர்களின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளும் தப்பவில்லை. திமுக முன்னிலை பெற்ற அதே 18 வாக்குச்சாவடிகளில் நாடாளுமன்ற தேர்தலின் போது ரவிக்குமார் அவர்களும் அதிக வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெரும்பான்மை தலித் பகுதியின் வாக்குகள் கணிசமாக பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே பரிமாறப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.
தலித்துகளும் வன்னியர்களும் சம அளவில் இருக்கும் பகுதிகளில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே சற்றேறக்குறைய சம அளவிலான வாக்குகளை பெற்றுள்ளன. பெரும்பான்மை தலித் வாக்குகளின் புள்ளிவிவரத்தையும், வன்னியர் பகுதிகளில் திமுக அடைந்திருக்கும் பின்னடைவையையும் கணக்கில் கொண்டு ஒப்பிடும் போது வன்னியர்களும் தலித்துகளும் சம அளவில் இருக்கும் பகுதியின் வாக்குகள் எவ்வாறு பிளவு பட்டிருக்கும் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரவிக்குமாருக்கு வாக்களித்த தலித் மற்றும் வன்னியரல்லாத பிற சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளும் குறிப்பிடும்படியான அளவு குறைந்துள்ளது. வன்னியர்களுக்காக அறிவிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு ஒரு முக்கிய காரணம். மேலே குறிப்பிட்டதைப்போல, இட ஒதுக்கீட்டை ஒரு சமூக முன்னேற்றத்திற்கான திட்டமாக அன்றி, தேர்தலை மையப்படுத்திய சாதி திரட்சிக்காக கையிலெடுத்ததால், பிற சிறுபான்மை சாதிகளை அது தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கிறது.
திமுக முன்னிலை பெற்ற பதினெட்டு வாக்குச்சாவடிகளின் மொத்த வாக்குகள் 6 ,181. இதே வாக்குச்சாவடிகளில் பாராளுமன்ற தேர்தலில் ரவிக்குமார் 9 , 173 வாக்குகளை பெற்றிருக்கிறார். 2992 வாக்குகள் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மாறியிருக்கிறது.
1 . சட்டமன்ற தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் மக்கள் அணுகும் முறையிலுள்ள வேறுபாடு 2 . வன்னியர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தால் தீவிர தலித் அரசியல் Consciousness உள்ளவர்கள் அடைந்த மனமாற்றம். 3 . வன்னிய பெரும்பான்மை அரசியலால் தொந்தரவுக்குள்ளான சிறுபான்மை சாதிகள் உள்ளிட்ட குறைந்த சதவிகிதத்தில் நிகழ்ந்த மாற்றத்தோடு, 4 . வன்னிய சங்கத்தினர் தாங்கள் எந்தக் கட்சியிலிருந்தாலும் வன்னியர் அரசியலுக்கே முதன்மை முக்கியவத்துவம் கொடுப்பது . இக்காரணிகள் தான் விக்கிரவாண்டியை பொறுத்தவரை வெற்றியை தீர்மானித்திருக்கிறது.
ஆனால் இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல் 2016 தேர்தலில் திமுக பெற்ற வாக்கு வங்கியை இடைத்தேர்தலோடு ஒப்பிட்டு தன்னை சமாதானம் செய்துகொள்கிறது திமுக. மொத்த வாக்கு சதவிகிதத்தில் 25 - 30 % புதிய வாக்குகளாக தலித் வாக்குகள் திமுவை சேர்ந்திருக்கிறது. 2016 ல் 63757 வாக்கு பெற்ற திமுக இந்த இடைத்தேர்தலில் கூடுதலாக ஐயாயிரம் பெற்று 68842 வாக்குகள் பெற்றிருப்பதற்கான காரணமும் இது தான். இந்த மூன்றரை வருடத்தில் வழக்கமான வாக்குகள் மாறி, தற்போது கூடுதலான தலித் வாக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூலம் திமுக பெற்றிருக்கிறது என்பதே தேர்தல் ஆய்வுகள் உணர்த்தும் செய்தி.
பணம் மற்றும் அதிகார பிரயோகத்திற்கும் தேர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மையென்றாலும் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது திமுக, அதிமுக அளவு செல்வாக்கில்லாத பிற கட்சிகள் தான். ஆக இவ்விருவருமே சம அளவில் பணம் கொடுத்தாலும் அதில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்கிற தமிழக மக்களின் முடிவு சமயத்தில் கணிக்க முடியாததாகவே இருக்கிறது.
பெருவாரியான வன்னியர் வாக்குகள் கிடைக்காததால் தான் தோல்வியை தழுவினோம் என்று கூட்டணிக்கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சி என்றில்லை, மாவட்ட அளவிலான திமுக தலித்துகள் உள்ளிட்டோர் கூட விவாதித்துக்கொள்வதற்கே சிக்கலிருக்கிறது.
கடந்த 5 .11 . 19 அன்று திருமாவளவன் அளித்த பேட்டியில் தலித் வாக்குத் திரட்சி குறித்து கேட்டப்பட்ட கேள்விக்கு "இளைஞர்கள் மூலமாக தலித் வாக்குத் திரட்சி சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது" என்று பொத்தாம் பொதுவாக பதில் அளித்திருக்கிறார். சிதம்பரம் மற்றும் விழுப்புரம் பாராளமன்ற தேர்தல் முடிவு வெளியான போதே இவை முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதைப் பேசுவதற்கு இரண்டாம் கட்ட தலைவர்களிலிருந்து மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் வரை தயக்கத்தோடு கடந்து போக விரும்புகிறார்கள்.
இதற்கான காரணம் ஒன்று தான். கிடைக்காத வாக்குகளை பற்றியும், கிடைத்த வாக்குகள் பற்றியும் குறிப்பாக பேசினால் அது தங்கள் கூட்டணி தலைமையை தொந்தரவுக்குள்ளாக்கும் என்று கருதுகிறார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது.
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையில் ராமதாஸ் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தை அருகில் அமர்த்திக்கொண்டே திமுக வன்னியர்களை மாவட்டச்செயலாளராக்கி னால் ஓட்டு போடுவோம் என்று பிரதிநித்துவம் கோரினார். ஆனால் தொல்.திருமாவளவன் பேசும் போது, "திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள், 2021 ல் திமுக ஆட்சி அமைத்த பிறகு அண்ணன் பொன்முடியிடம் உங்களுக்காக ஒரு சத்துணவு ஆயா வேலையை கேட்பேன்" என்கிறார்.
எதிரணியில் அமர்ந்துக்கொண்டு தன் சமூகத்துக்கான பிரதிநித்துவத்தை அதிகாரமாக கேட்கிறார் ராமதாஸ். ஆனால் அந்த அளவிற்கான அழுத்தத்தை இங்கு எழுப்ப முடியவில்லை. கேட்டுப் பெற முடியாதவற்றில் கூட பெரிய இலக்கை நிர்ணயிக்க யாருக்கு இங்கே அரசியல் அதிகாரமும் வரலாற்று உரிமையும் இருக்கிறது? யாருக்கு இருக்க வேண்டும்? யார் கேட்க முடிகிறது? யார் கேட்க முடியவில்லை? இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ள இதை விட சிறந்த அரசியல் சூழல் வேறு இருக்க முடியாது.
பாராளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை தழுவி கொஞ்சம் சோர்வுற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியை திமுக தெரிந்தோ தெரியாமலோ உற்சாகப்படுத்தியிருக் கிறது என்றே சொல்ல வேண்டும். திட்டமிடாமல் நடந்தவையாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு எதிர்காலத்தில் திமுகவுக்கு பலனைத் தராது என்று சொல்வதற்கு நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. வேறு எந்த யுத்தியை காட்டிலும் வாக்குகளை அறுவடை செய்ய பணம் மற்றும் சாதி அரசியல் எளிமையான வழிகளாகி விட்டன.
கூட்டத்தை திரட்டுவதைக் காட்டிலும் திரண்டு நிற்கும் கூட்டத்தை திருப்தி படுத்தி தகவமைப்பதற்கான வேலைகளை தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தொடக்க காலந்தொட்டே செய்து வருகிறது. இரண்டு லட்சத்தி நாற்பதாயிரம் வாக்குகள் கொண்ட ஒரு சட்டமன்ற தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் இருக்கும் சாதியின் வாக்குகளை திரட்ட மூன்று பெரிய அறிவிப்பை வெளியிடுகிறது எழுபதாண்டு காலமாய் அரசியல் செய்யும் ஒரு கட்சி. தமிழக சாதி அரசியல் வரலாற்றிலேயே இது முக்கியமான விவாதத்தை உண்டு செய்திருக்க வேண்டும். யாருக்காக இது அறிவிக்கப்பட்டதோ அவர்களாலேயே இத்தந்திரம் முறியடிக்கப்பட்டதில் தோற்றது சாதியாக இருந்தால் அதை பேசாமல் கடந்து விடலாம்.ஆனால் இப்போட்டியில் வெல்வதற்கு மீண்டும் வீரியமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்கிற போது யார் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் சாதி தான் அங்கு வாழப்போகிறது.
அதிகாரத்தை ஆயுதமாக நாம் பயன்படுத்துவதில்லை, அதிகாரமே ஆயுதமாக நம்மை பயன்படுத்திக்கொள்கிறது என்பது மைக்கல் பூக்கோவின் கூற்று.சாதி தான் இங்கு அதிகாரம், அது தக்கவைக்கப்படுகிறது, கூர்தீட்டப்படுகிறது, அதுவே ஒரு பண்பாக தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது.
(கட்டுரையாளர் வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.