முனைவர் கமல.செல்வராஜ்
சாணி மெழுகியத் தரையில் உட்கார்ந்திருந்து அங்கும் இங்கும் நகர்வதினால் பின்பக்கம் கிழிந்த டவ்சர், சிலேட்டையும் புத்தகத்தையும் சுமந்ததினால் தோள் பட்டைக் கிழிந்த சட்டை, அலுமினியத் தட்டுடன் மதிய உணவுக்கு வரிசையில் நின்றது, ஓலைக்கூரை கூட சரியாக இல்லாததால் தூரத்தில் மேகம் கறுத்ததும் வீட்டுக்கு ஓடியது… இவையெல்லாம் பள்ளிக்கூடத்தின் நினைவுகளாய்… இன்றும் பசுமரத்து ஆணியாய் இதயத்தில் இடம் பிடித்திருப்பவை.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு. இறுதியாண்டு என மூன்று தேர்வுகள் எழுதி, சிவப்பு மை அடையாளத்துடன் புரோக்கிரஸ் கார்டில் அப்பாவிடம் ஒப்பு (கையெழுத்து) வாங்கப் பயந்து… பயந்து… நின்றது, ஒவ்வொரு ஆண்டும், கடைசி தேர்வு முடிந்து, அடுத்த ஆண்டுப் பள்ளிக்கூடம் திறப்பதற்குப் பத்து நாள்களுக்கு முன்பு பள்ளிக்கூடக் கரும்பலகையில் ரிசல்ட் பார்த்து விட்டுத் துள்ளிக் குதிப்பது வரை… அனைத்தும் மனதின் அடியாளத்தில் இன்றும் அடையாளங்களாக இருப்பவை.
இப்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு முறையும் நடக்கும் தேர்வுகள் அனைத்தும் எங்களுக்குப் பயத்தை ஏற்படுத்தவில்லை. மாறாகத் தேர்வுக்கு நன்றாகப் படிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்த்தின. நாங்கள் படிக்காமல் இருக்கும் போது, எங்கள் ஆசிரியர்கள் கைகளிலும் கால்களிலும் அடித்த அடிகள், எங்களுக்குள் காயத்தை ஏற்படுத்தவில்லை மாறாகக் கண்ணியத்தைக் கற்றுத்தந்தன. நாங்கள் தவறு செய்யும் போது, அவர்கள் திட்டிய வார்த்தைகள் எங்களுக்கு வேதனையயைத் தரவில்லை, மாறாக நாங்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட வேதங்களாக மாறின.
அன்று தேர்வுகள் மூலம் மாணவர்களுக்குள் உருவான, நன்றாகப் படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும், ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒழுக்க நெறிகளும் ஒவ்வொரு மாணவனின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஊன்றுகோலாக இருந்தன.
ஆனால் இன்று நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் புதிய அரசு அமையும்போது அவரவர்களின் விருப்பப்படி கல்வித்துறைக்குள் புகுந்து, அத்துறையை அவர்களின் கைப்பந்து விளையாட்டுக் களமாக மாற்றி வருகின்றனர். மட்டுமின்றி ஒரே அரசாக இருந்தாலும் ஒரு முறை கொண்டு வந்த நடைமுறையை சில ஆண்டுகளாவது அப்படியே கடைபிடிக்காமல், அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருப்பது ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.
அந்த வகையில் தான் தற்போது ஐந்தாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு வைக்க வேண்டுமா? வேண்டாமா? என எழுந்துள்ள விவாதமும் விமர்சனமும்.
முதலில் 14 வயது வரையிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், மாணவர்களுக்கு தேர்வினால் ஏற்படும் பயத்தையும், மன அழுத்தத்தையும் போக்கி, அவர்களின் இடைநிற்றலை தடுப்பதற்காகவும் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல், அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தனர்.
இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத் திறன்வளர்ச்சிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மட்டுமின்றி மாணவர்களிடமிருந்த ஒழுக்க நெறிகளும் சிதைந்து சின்னாபின்னமாயின. இந்த நடைமுறையின் மூலம், மாணவர்களின் ஒழுக்கத்திற்கு இருப்பிடமாக இருந்த பள்ளிக்கூடங்கள் அவர்களின் ஒழுங்கீனங்களின் புகலிடமாக மாறிவிட்டது. பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவர்களின் இருக்கைகளை அடித்து நொறுக்கி அருகிலுள்ள ஹோட்டலில் விற்று, பள்ளியின் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையிலிருந்து மதுவருந்திவிட்டு வகுப்பறையில் வந்து, பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் அளவிற்கு மாணவர்களின் ஒழுக்கம் வழுகிப்போனது.
அதோடு மட்டுமின்றி ஆசிரியர் மாணவர்களின் உறவு நிலையும் சிதிலமடையத் தொடங்கியது. பழைய அரசியலில் எமெர்ஜன்சி காலத்தில் இருந்த ‘இம்’ என்றால் வனவாசம், ‘ஏன்’ என்றால் சிறைவாசம் என்ற நடைமுறைதான் தற்போது, கல்வித்துறையில் மாணவர்களின் ஒழுங்கீனங்களைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கும் உருவாகி உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் கண்டு ‘இம்’ என்றால் இடமாற்றம், ‘ஏன்’ என்றால் சிறைவாசம் என்ற பரிதாப நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போதைய தமிழக அரசு, இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டு (2019-2020) முதல் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்தது. இம்முறைக்கு சில எதிர்ப்புகள் கிளம்பியதால், அதனை நடைமுறைப் படுத்தாமல், தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “இந்த நடைமுறை இந்த ஆண்டு இருக்காது, எப்போது என்பதை பின்னர் அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திடீரென இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுத் தொடங்கி, காலாண்டுத் தேர்வு முடிந்து, அரையாண்டுத் தேர்வு நடக்க இருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்திருப்பது ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான தெளிவின்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் ஒரு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்.
பள்ளிக்கூடங்களில் கல்வியின் தரம் சீரற்று விட்டது என்பதற்காக 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அது, இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதில்லாமல், ஒரு கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே தெளிவாக திட்டமிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும். அதன் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களை கற்றல், கற்பித்தலுக்குத் தயார் படுத்திக் கொள்வார்கள்.
அதோடு மட்டுமின்றி பள்ளியில் பயிலும் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டு, ஒழுக்க நெறி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், மீண்டும் பழையது போல் ஒன்றாம் வகுப்பு முதல் முப்பருவத் தேர்வு முறையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். அதற்காக எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை சமாளிப்பது அரசின் கடமையாகும்.
அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய அடிப்படைக் கல்வியளிப்பது அரசின் தலையாயக் கடமையாகும். மட்டுமின்றி அவர்களை இடைநில்லாமல் கற்க வைப்பதில் பெற்றோரின் பங்கும் மகத்தானது. அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என்பதற்காக கல்வியின் அடிப்படை நோக்கத்தை தவிர்ப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
ஒரே முடிவாக, அதையும் நல்ல முடிவாக, காலத்தே எடுக்க வேண்டாமா கல்வி அமைச்சரே!
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.