ஓய்வு வயது அதிகரிப்பு: இளைஞர்களை நினைத்துப் பார்த்ததா அரசு?

சாதாரணமாக ஊர்ப்புறங்களில் எவருக்கேனும் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீங்குத் தொடர்ந்து நடந்து விட்டதென்றால் “பாம்பு கொத்தினவன் தலையில் இடி விழுந்தது மாதிரி” என்னும் பழமொழியைக் கூறுவார்கள். அதே நிலை தான் இன்று தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

By: Updated: May 10, 2020, 09:13:10 AM

முனைவர் கமல.செல்வராஜ்,கட்டுரையாளர்
சாதாரணமாக ஊர்ப்புறங்களில் எவருக்கேனும் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீங்குத் தொடர்ந்து நடந்து விட்டதென்றால் “பாம்பு கொத்தினவன் தலையில் இடி விழுந்தது மாதிரி” என்னும் பழமொழியைக் கூறுவார்கள். அதே நிலை தான் இன்று தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் அரசிற்கு கொரோனா காலத்தில் என்ன தடுமாற்றம் நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. திடீரென எவருடைய வலுவானக் கோரிக்கையோ, போராட்டங்களோ இல்லாமல் எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு ஊழியர்களின், பணி ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அவசர அவசரமாக ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு கல்வித்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறைகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இருந்த சுமார் 40 ஆயிரம் பேர் மீண்டும் பணியில் தொடர்ந்து பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் பல பட்டங்களைப் படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காகக் காலம் காலமாகக் காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்று தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உட்பட சில சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இப்படி அரசு ஊழியர் சங்கங்களுக்குள்ளேயே இந்த விஷயத்தில் இருவேறு கருத்துகள் இருக்கும் போது, இந்த அரசு எதற்காக அல்லது யாருக்காக இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்பதுதான் புரியாதப் புதிராக உள்ளது.

கடந்த ஆண்டு அதாவது 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகப் புள்ளி விவரப்படி சுமார் 85 லட்சம் பேர் தங்களின் படிப்பைப் பதிவு செய்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கின்றார்கள். இவர்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்காக மட்டும் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 35 லட்சம் போர் 24 முதல் 35 வயது வரை உள்ளவர்கள். சுமார் 13 லட்சம் பேர் 36 முதல் 57 வயதைத் தாண்டியவர்கள். சுமார் 10 ஆயிரம் பேர் 58 வயதைத் தாண்டியவர்கள்.

இது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நேர்முகப் புள்ளிவிவரம். இதையும்தாண்டி, நேர்முகமாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒன்றரை கோடி இளைஞர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என ஓர் அமைப்புசார இயக்கத்தின் சமீபத்தியப் புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.

இத்தனைக் கோடி இளைஞர்கள் பல லட்சம் பணத்தைச் செலவு செய்து படித்து முடித்துவிட்டு வேலையின்றி வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, இப்படியொரு சலுகை அரசு ஊழியர்களுக்குத் தேவையா? என்பதை இந்த அரசாங்கம் எண்ணிப் பார்த்திருக்கிறதா?

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் என்பது கானல்நீராக அல்லவா இருக்கிறது? இதனால் பல லட்சம் பணம் செலவு செய்து இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். படிப்பை முடித்த ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் எத்தனை ஆண்டுகளாக ஆசிரியர் கனவோடு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அரசு துளி அளவேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?

இன்றைக்கு தனியார் சுயநிதிப் பள்ளிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த 10 லட்சம் பேரின் நிலைமை என்ன ஆயிருக்கும்? அதிலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஐம்பதாயிரம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, தனியார் பள்ளிகளில் ஒரு கடுகளவுக்கும் ஓய்வின்றி உழைக்கும் ஆசிர்யர்களுக்குக் கிடைக்கும் மாதச்சம்பளம் ஐயாயிரம், ஆறாயிரம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

தற்பொழுது கொரோனா வந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அடைத்திருக்கும் சூழ்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்து கொண்டு மாதா மாதம் ஒரு காசுகூடக் குறைவில்லாமலே சம்பளத்தை வங்கி வழியாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தும், பள்ளியில் சென்றும் ‘ஆன்லைன்’ மூலம் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, எத்தனைப் பள்ளி நிர்வாகம் முழுமையாகச் இரண்டு மாதமும் சம்பளம் வழங்கியிருக்கிறது என்பதையாவது இந்த ஆட்சியாளர்கள் ஆய்ந்து பார்த்துள்ளார்களா?

அரசாங்கத்தில் வேலையில் சேர்பவர்கள் இருபது வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும் முப்பது வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும் முப்பது, முப்பந்தைந்து ஆண்டுகாலம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகும் ஓய்வூதியம் கிடைக்கிறது. அவர்களால் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் மிக அந்தஸ்தான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை, தொடக்கம் முதல் ஓய்வு வரை செக்கிழுக்கும் மாட்டின் நிலைதான் என்பதை இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்தே ஆகவேண்டும்.

எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் அரசு தேவையின்றி அவசர அவசரமாக இரண்டு முடிவுகளை எடுத்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளைத் திறந்ததற்கு நீதிமன்றம் தடைவிதித்து, அது திறந்த வேகத்திலேயே அடைக்கப்பட்டிருக்கிறது. அது போன்று அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டித்திருப்பதையும் அரசு மறு பரிசீலனைச் செய்து, இந்த ஆண்டு ஒய்வு பெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, அந்த இடத்தில் உடனடியாகப் புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது போன்று வரும் காலங்களில் அரசு வேலையில் சேருபவர்களுக்கு, அவர்கள் எந்த வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும் ஒருவருக்கு அதிகப்பட்சமாக இருபது ஆண்டுகள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற சட்டத்தையும் கொண்டு வரவேண்டும். அப்பொழுதுதான் நாட்டிலிருக்கும் படித்த அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு சில ஆண்டுகளாவது அரசாங்கத்தில் வேலை செய்வதற்கு முடியும். கூடவே நாட்டிலிருக்கும் வேலைவாய்ப்பு இன்மையையும் குறைப்பதற்கு முடியும் என்பதுதான் நிஜம்.

இல்லையேல் இப்பொழுது தமிழக இளைஞர்களுக்கு “பாம்பு கடித்தவன் தலையில் இடிவிழுந்தப்” பழமொழி எப்படிப் பொருந்துகிறதோ, அதைப் போன்று அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இந்த அரசுக்கும் பொருத்தமாக இருக்கும்.

முனைவர் கமல. செல்வராஜ், கட்டுரையாளர்
மின்னஞ்சல் முகவரி: drkamalaru@gmail.com

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu government rises retirement age of govt staff tasmac opened and closed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X