Advertisment

பி.ஏ.பி. திட்டம் முழு வரலாறு: கூட்டுறவு மீண்டும் பலப்படுமா?

பிஏபி திட்டத்தை வடிவமைத்து நிதி ஒதுக்கி கட்டுமானம் செய்து முடித்து பராமரிப்பு செய்வது என அனைத்தும் தமிழகம் முழுமையாகச் செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Edappadi K Palaniswami, kerala, Pinarayi Vijayan, tamil nadu Kerala chief ministers meeting

Edappadi K Palaniswami, kerala, Pinarayi Vijayan, tamil nadu Kerala chief ministers meeting

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Advertisment

தமிழக-கேரள கூட்டுறவின் அடையாள சின்னங்களாக இருப்பது தான் பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டம் மற்றும் சிறுவாணி அணை திட்டங்கள். பல ஆண்டுகளாக இந்த திட்டங்களின் நீர்ப் பங்கீடு கூட்டுறவில் விரிசல் இருந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் இரு மாநிலங்களின் கூட்டுறவைப் புதுப்பிக்கும் முயற்சியாக இருமாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

தமிழக பகுதிகளில் பெய்யும் மழை நீரானது மேற்கு நோக்கி கேரளத்துக்குள் சென்று அரபிக் கடலில் கலந்து வீணாகி வந்தது. இதனால், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இந்தத் தண்ணீர் கிடைக்காமல் வீணாகி வந்ததை அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் மற்றும் கேரள முதல்வர் நம்பூதரி பாட் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் பிஏபி திட்டம் உருவாக்கப்பட்டது. பிஏபி திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 20 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர இரு மாநிலங்களின் குடிநீர்த் திட்டங்களுக்கும், நீர்மின் திட்டங்களுக்கும் பிஏபி திட்டம் உதவியாக உள்ளது.

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டம் எனும் பிஏபி திட்டம் மூலம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் இத்திட்டம் இருந்து வருகிறது. இதுதவிர கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகாவின் பாசன வசதிக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் இந்தத் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாளமாக கேரளத்தின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்போடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 1962-ஆம் ஆண்டு நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. பிஏபி திட்டம் வடிவமைத்தபோது, திட்டத்தின் மூலம் 50.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டு, அவ்வாறு கிடைக்கும் தண்ணீரில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சியும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சியும் என பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

பிஏபி திட்டத்தை வடிவமைத்து நிதி ஒதுக்கி கட்டுமானம் செய்து முடித்து பராமரிப்பு செய்வது என அனைத்தும் தமிழகம் முழுமையாகச் செய்தது. மேலும், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் கட்ட இடத்தை குத்தகைக்குத் தந்து கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கியது.

இந்தத் திட்டத்தில் கேரளத்தின் பங்கு என்பது இடத்தை குத்தகைக்கு வழங்குவது, தமிழகத்துக்கு கேரளம் வழியாகத் தண்ணீர் கொண்டுச் செல்ல அனுமதிப்பது என்பது ஆகும். இதற்குப் பிரதிபலனாக தமிழகம் சார்பில் ஆண்டுக்கு 19.55 டிஎம்சி தண்ணீர் கேரளத்துக்கு வழங்க வேண்டும். இப்படி இரண்டு மாநிலங்களுக்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்ற நீரை இரண்டு மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 50.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்காததால் நாளடைவில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு 57 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கேரளத்துக்குத் தற்போது வரை ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய 19.55 டிஎம்சி தண்ணீர் ஒரு சில ஆண்டுகள் தவிர பெரும்பாலான ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பிஏபி திட்டம் துவங்கப்பட்டபோது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு 30.5 டிஎம்சி தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருந்தும் தண்ணீர் எடுக்க முடியவில்லை.

இதற்குக் காரணம் பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு என்ற திட்டத்தை தமிழகம் நிறைவேற்றி அதிலிருந்து 2.5 டிஎம்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வழங்கும் 1.75 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமை உள்ளது. ஆனால், இந்தத் தண்ணீரை தமிழகம் பயன்படுத்த கேரளம் ஒரு நிபந்தனை விதித்தது. அதில் கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டிய பிறகு ஆனைமலையாறு திட்டத்தையும், கீழ்நீராற்றில் இருந்து கேரளத்துக்கு வழங்கும் 1.75 டிஎம்சி தண்ணீரையும் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். இதில் இடைமலையாறு அணையைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கேரள அரசு கட்டி முடித்துவிட்ட நிலையில், தற்போது வரை அணையை முழுமையாக கட்டி முடிக்கவில்லை என்று கூறி தாமதித்து வருகிறது.

எனவே, ஆனைமலையாறு அணையைக் கட்டக்கூடாது என கேரளம் தெரிவித்து வருகிறது. இதனால், தற்போதுவரை தமிழகத்துக்கு நேரடியாக 4.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதுதவிர பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த மழைப்பொழிவைவிட குறைவான மழைப் பொழிவே கிடைக்கிறது. இதன் மூலமும் சுமார் 2 டி.எம்.சி வரை தமிழகத்துக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பிஏபி பாசன பகுதிகள் வறட்சியிலேயே இருந்து வருகின்றன.

பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்றவிடாமலும், கீழ்நீராற்றில் கூடுதலாக 1.75 டிஎம்சி தண்ணீர் எடுக்கவிடாமலும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளில் பணியாற்றும் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

பிஏபி திட்டம் தொடங்கும் இடமான நீராற்றில் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரில் சுரங்கப்பாதை மூலம் அதிகபட்சமாக 3,000 கன அடி வரை மட்டுமே தமிழகம் பயன்படுத்த முடியும். இதனால், மழைக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள நல்லாறு என்ற அணைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு கேரளம் முட்டுக்கட்டையாக உள்ளது.

தமிழகத்தில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. இந்தத் திட்டமும் இரு மாநிலங்களின் கூட்டுறவால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தத் திட்டத்திலும் அவ்வப்போது கேரள அதிகாரிகள் இடையூறு செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

அமராவதி அணையின் நீராதாரமான ஆற்றில் தடுப்பணை, சிறுவாணி நீராதாரத்தில் தடுப்பணை கட்டுவது என கேரளம் செயல்பட்டு வருவதால் நீர்ப் பங்கீட்டில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

தமிழக-கேரள மக்கள் சகோதரர்களாக இருந்துவரும் நிலையில் கேரளத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர், அதிகாரிகள் சிலரால் மட்டும் நீர்ப்பங்கீட்டு பிரச்னை ஏற்படுவதாக கூறப்படுகிறது. பிஏபி திட்டம் துவங்கப்பட்டபோது, இரு மாநிலங்களுக்கு இடையே இருந்த கூட்டுறவு நாளடைவில் விரிசல் அடைந்து வந்த நிலையில் இருமாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்னைகளை குறித்து இரு மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள் சந்திப்பு கூட்டம் கடந்த 25-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு நதிநீர் சிக்கல்களில் இருமாநில முதல்வர்களும் என்ன பேசினார்களோ? இந்த சந்திப்பில் இரு தரப்பிலும் தலா 5 பேர் இணைந்து 10 பேர் சேர்ந்த குழு அமைந்துள்ளது. சரி தான். ஆனால் பேசப்பட்டது என்ன? வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டால் நல்லது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசியுள்ளனர். கீழே சொல்லப்பட்ட நதிநீர்ப் பிரச்சனைகள் பேசப்பட்டதா?

ஆழியாறு-பரம்பிக்குளம் நிறைவேற்றி 60 ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் சிக்கல்கள் உள்ளன. பாண்டியாறு- புன்னம்பழா, ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம் போன்ற திட்டங்களும் சிக்கல்களில் உள்ளன. குமரி மாவட்ட பாசனத்திற்கான நெய்யாறு அணையை கடந்த 10 ஆண்டுகளாக கேரள அரசு மூடிவிட்டது. தக்கலை, திரிவிதாங்கோடு, விளவங்கோடு முதலான பகுதிகள் பச்சை பசேலென்று திருவனந்தபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் வாழையும், நெற்பயிர்களும் இருக்கும்.

முதல் ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிடப்பட்டு காமராஜர் தமிழகத்தின் முதல்வரக இருந்தபோது கேரள முதல்வர் சங்கரோடு இணைந்து நெய்யாறு அணை திறப்பு விழா குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த அணையின் கட்டுமான செலவினை தமிழக அரசே அப்போது ஏற்றது. மீண்டும் தமிழக அரசிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து இந்த அணையை கேரள அரசு மூடிவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கு சற்று வடக்கே நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாற்று பிரச்சனையிலும் கேரளா வம்பு பிடிக்கின்றது. 1989ல் செங்கோட்டை அருகே கட்டப்பட்ட அடவி நயினார் அணைக்கும் நீர்வரத்தை தடுக்கிறது கேரளம். இந்த அணையை இடிப்பதற்காக 2002ல் அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் கடப்பாரை, மம்பட்டியுடன் வந்தது ரணமான செய்தியாகும்.

இதற்கடுத்து கோதையாறு, கீரியாறு திட்டமும் நெல்லை மாவட்டத்தில் 40, 50 ஆண்டுகளாக பேசப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பை மத்திய அரசு விரும்பியும் அதை நடைமுறைபடுத்த இயலவில்லை.

உள்ளாறு திட்டம் குறித்து அறிய 1997ல் தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் மேற்கொண்டு இந்த பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. செண்பகவல்லி அணை பாதிப்புகள் ஏற்பட்டு இடிக்கப்பட்டு வழக்குமன்றம் வரை சென்றும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இவையெல்லாம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் சார்ந்த நீராதாரப் பிரச்சனைகள் ஆகும்.

அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை திட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளுக்கான நீராதார பிரச்சனைகளிலும் கேரளா தடுக்கின்றது. முல்லை, பெரியாரை பற்றி அனைவரும் அறிந்த சிக்கலாகும். இந்த முல்லை பெரியாறு நதிமூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகேயுள்ள செண்பகவல்லி திட்டம் தான்.

மதுரை, திண்டுக்கல் மாவட்டம் பயன்பெறும் ஆலடி அணை, மஞ்சளாறு, மாம்பழ ஆறு போன்றவற்றிலும் கேரளா தமிழகத்திற்கு எதிராக பிடிவாத போக்கை கொண்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, பவாணி, அமராவதி என அனைத்திலும் கேரளா தடுப்பணைகளை கட்டிக்கொண்டே வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் மேயாறிலும் பிரச்சனைகள். எனவே குமரி முனையில் இருந்து நீலகிரி தொட்டபெட்டா வரை கேரளத்தின் பிடிவாத போக்கு தொடர்கிறது. இவற்றையெல்லாம் தீர்க்க இரு மாநில அரசுகளும் என்ன செய்யப் போகின்றன? என்பதுதான் மக்கள் எதிர்பார்ப்பு!

(கட்டுரையாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழக நீராதார உரிமைகள் குறித்து தொடர்ந்து களத்திலும், பொதுநல வழக்குகள் மூலமாகவும் குரல் எழுப்பி வருபவர்)

Mullaiperiyaru K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment