முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
எனது நினைவு சரியாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பித்த ஒரு சில நாள்களுக்குள், அக்கல்லூரியிலிருந்து என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள். நானும் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன்.
அங்கு என்னிடம் முதலில் எதிர்காலக் கல்வி என்னும் தலைப்பில் அரை மணி நேரத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றார்கள். நான் அதற்குச் சம்மதம் தெரிவித்து, எழுதுதத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்தேன். என் மனதில் என்ன தோன்றியதோ என்னவோ, அந்தக் கட்டுரையை இப்படித் தொடர்ந்தேன்... “இனி பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் தாண்டும் போது கல்வியில் பெரும் மாற்றங்கள் வரும். மாணவர்கள் கற்பதற்கு, இப்பொழுது உள்ளது போன்று பெரிய பெரியக் கட்டடங்கள் தேவைப்படாது. விசாலமான வகுப்பறைகளுக்கும் அவசியம் இருக்காது. மாணவர்கள் வீட்டில் இருப்பார்கள். ஆசிரியர்கள் அவரவர் இல்லத்தில் இருந்தோ அல்லது அவர்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்தோ கம்பியூட்டர் மூலம் கற்றுக் கொடுப்பார்கள். அவற்றை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்வார்கள்” என முன்னுரை, முடிவுரையுடன் ஒரு மூன்று பக்கத்திற்கு எழுதிக் கொடுத்தேன்.
அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடந்தது. முடிவை பிறகு எனக்கு அறிவிக்கலாம் என்று சொன்னார்கள். நானும் ஆமாம் சாமி போட்டுவிட்டு கிளம்பிவிட்டேன்.
என்ன ஆச்சரியம் பாருங்கள் சரியாகப் பதினைந்து ஆண்டுகள் கடந்த உடன், நான் அன்று எழுதியது எப்படி நிஜமாகி விட்டது? இன்று பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார்கள். மாதங்கள் கடந்த பிறகும் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்வதற்கு முடியவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவதற்கு இருந்த ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள தேர்வுகள் அனைத்தும் நடத்தாமல் ரத்து செய்து விட்டு, ஆல் பாஸ் என அறிவித்துவிட்டார்கள்.
கல்லூரித் தேர்வுகளை என்ன செய்வது என்பது பற்றி அரசும் கல்வியாளர்களும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரையிலும் அடுத்த மாதம்(ஜூலை) பள்ளிக் கல்லூரிகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்களும் பெற்றோர்களும் இருந்தார்கள். தற்பொழுது கொரோனாவின் தாக்கத்தைப் பார்க்கும் போது, அடுத்தக் கல்வியாண்டிலாவது பள்ளிக் கல்லூரிகள் திறக்குமா? என்ற ஏக்கத்திற்குள் அனைவரும் வந்து விட்டார்கள்.
இந்நிலையில் தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் அனைத்தும் இணைய வழிக்கற்பித்தலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. முதலில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் +2 மாணவர்களுக்கென்று ஆரம்பித்த இந்த இணையவழிக் கற்பித்தல், தற்பொழுது பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதை உணர்ந்தவுடன் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு வரை ஆன்லைன் கற்பித்தலைத் தொடங்கியுள்ளார்கள். கூடவே கலை அறிவியல் கல்லூரிகளிலிருந்து தொடங்கி, இஞ்ஞினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் வரை ஆன்லைன் கற்பித்தலை நடத்தி வருகின்றன.
இப்பொழுது ஆசிரியர்கள் தங்களின் வீடுகளில் அல்லது அவர்கள் பணியாற்றும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஆன்லைன் மூலம் கற்பிக்கின்றார்கள். மாணவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து பாடங்களைக் கற்கின்றார்கள். “கற்றல், கற்பித்தல் செயல்பாடு என்பது இரண்டு இதயங்களுக்கு இடையே நடக்கும் ஓர் இணைப்பு பாலமாகும்” என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால், இந்த ஆன்லைன் கற்பித்தலினால் எந்த இதயங்களும் இணைக்கப்படுவதில்லை. மாறாக இதயங்களைப் பிரித்துப் போடுகின்றன.
இம்முறைக் கற்பித்தலினால் மாணவர்களும் ஆசிரியர்களும் முகத்திற்கு முகம் நேரடியாகப் பார்ப்பதற்கு முடியாது. அவரவர்களின் கருத்துகளை நேரடியான உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு இயலாது. மாணவர்களின் மனநிலை, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு முடியாது. இது வெறும் உயிரோட்டம் இல்லாத ஓர் இயந்திரமயமானச் செயல்பாடேயன்றி எவ்வகையிலும் ஓர் ஆக்கப்பூர்வமான கற்றல் கற்பித்தலே அல்ல.
மட்டுமின்றி எல். கே.ஜி, யு.கே.ஜி போன்ற சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு, செல்போன் மூலம் பாடம் நடத்துவதினால், செல்போனிலுள்ளக் கதிரியக்கங்கள், குழந்தைகளின் மிகவும் இலகுவான மண்டை ஓடுகள் மூலம் அவர்களின் மூளையை கடுமையாகத் தாக்கும். அதோடு ஸ்மார்ட் போனின் மிகவும் அருகில் இருந்து பாடங்களைப் படிப்பதினாலும் காதில் ஹெட்போன் வைத்துப் பாடங்களைக் கேட்பதினால் பல மாதங்கள் செல்லும் போது கண், காது ஆகியன மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என மூளை நரம்பியல் மருத்துவர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக அரசும் கல்வித் துறையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைந்தது எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதியளிக்கக் கூடாது. அதோடு பெற்றோரும், ஆசிரியர்கள் இந்த வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை ஊக்கப்படுத்தக் கூடாது.
எது எப்படியானாலும் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தக் கொடியக் கொரோனாவினால், உலகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில், கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது இந்தியாவைப் பொறுத்த வரை தற்போதைக்கு மிகவும் அபத்தமானதாகும். ஆனால், காலப்போக்கில் இணையவழிக் கல்வி அல்லது கற்றல் கற்பித்தல் முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிடும்.
அதற்கு முன்னோட்டமாகத் தான் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு (நெட்) மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு (சிலெட்) ஆகியத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவதற்குத் தொடங்கியுள்ளனர். பிற்காலத்தில் இத்தேர்வு முறை அனைத்து வகையான தேர்வுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம். கூடவே ஆன்லைன் கற்றல், கற்பித்தல் முறை என்பது தேசம் முழுக்க நடைமுறைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பொழுது பள்ளி, கல்லூரிகளுக்கு இப்பொழுது உள்ளது போன்ற பெரிய பெரிய கட்டடங்களுக்கும், அளவுக்கு அதிகமான ஆசிரியர்களுக்கும் தேவையே இருக்காது.
இப்பொழுது உங்கள் அனைவருக்குள்ளும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும். நான் நேர்முகத் தேர்விற்குச் சென்ற, அந்த கல்லூரியில் எனக்கு வேலை தந்தார்களா? இல்லையா? என்று. நீங்களே நினைத்துப் பாருங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொருக் கருத்தை முன் வைத்தால் யாராவது, ஒன்றும் வேண்டாம் நீங்களாக இருந்தால் கூட வேலை தருவீர்களா? அதுதான் அன்று நடந்தது. ஆனால் இப்பொழுது அப்படி ஒரு தேர்வு நடந்து, நான் இப்படியொரு பதில் எழுதினால் கண்டிப்பாக எனக்கு வேலை தருவார்கள் என்பது உறுதி.
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை. அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.