அரியகுளம் பெருமாள் மணி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கிறார். அரசியலில் தான் சந்தித்த சிரமங்கள் உதயநிதிக்கு ஏற்படக்கூடாது என்பதில் ஆரம்பம் முதலே ஸ்டாலின் கவனமாக இருந்தார். ஒரு தயாரிப்பாளராக பொது வெளியில் முதலில் அறிமுகமான உதயநிதி பிறகு கதாநாயகன் ஆனார். ஆரம்பத்தில் நகைச்சுவை நிறைந்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், காலப்போக்கில் சமூக அக்கறை உள்ள கதைகளை தேர்வு செய்தார். திமுக என்ற கட்டமைப்பை தாண்டி பரவலான மக்கள் திரளை சென்றடைய உதயநிதி திரைப்படங்களை பயன்படுத்திக் கொண்டார்.
பெரிய இடைவேளைக்குப் பின் 1989இல் திமுக ஆட்சியைப் பிடித்தது. கலைஞர் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அப்போது கலைஞர் தன் அமைச்சரவையில் இடமளித்த கே.என் நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி போன்றவர்கள் 30 ஆண்டுகளாக ஸ்டாலினுக்கு கட்சியிலும் ஆட்சிகளும் உற்ற துணையாக இருக்கின்றனர். 89 அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் ஸ்டாலினுக்கான அணியை கருணாநிதி கட்டமைத்தார்.
வைகோ கட்சியை விட்டு வெளியேறிய பிறகு நடந்த 1996 பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த போதும் அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு இடமளிக்கவில்லை கருணாநிதி. சென்னை மாநகர மேயராக வாய்ப்பு வழங்கினார். அமைச்சர் பதவியுடன் ஒப்பிடுகிற போது சிறிய பதவி என்றாலும் நிர்வாகத்தை சிறப்பாக புரிந்து கொள்ளும் உதவும் என்ற வாதமும், தனி பட்ஜெட் போடுகிற இடத்தில் ஸ்டாலினை உட்கார வைத்ததுள்ளார் என்ற விமர்சனமும் ஒரு சேர எழுந்தது.
எம்.எல்.ஏ.வாக, மேயராக, இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் கட்சியிலும் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தாலும் ஊடகங்கள் அவரைப் பற்றி அந்தக் காலகட்டத்தில் பெரிதாக எழுதவில்லை. படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு பொதுக் கூட்டங்களில் நீண்ட உரைகளை அவர் ஆற்றிய போது கூட அதைக் குறிப்பிட்டு எழுத ஊடகங்கள் தயாராகவில்லை. கருணாநிதிக்கு கிடைத்த ஊடக வெளிச்சமும், பரப்பும் ஸ்டாலின் 2021ல் அவர் முதல்வராக வரும் வரை அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் இத்தகைய இடர்பாடுகள் உதயநிதிக்கு ஏற்படவில்லை.
திரைப்பட கதாநாயகனாக தயாரிப்பாளராக உதயநிதிக்கான இடம் வெகுஜன ஊடகங்களில் ஆரம்பம் முதலே உறுதி செய்யப்பட்டது. அதற்கு ரெட் ஜெயண்ட் விளம்பரங்களும் ஒரு காரணம் எனலாம். நீண்ட கால திட்டத்தின் முதற்படி இது. கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் திமுகவை மறு கட்டமைப்பு செய்தார். மாவட்ட கழகங்களின் எண்ணிக்கையை எழுபதிற்கும் மேல் உயர்த்தினார். பலம் பொருந்திய ஒன்றுபட்ட மாவட்ட செயலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி பெரியசாமி, கே.என் நேரு, பொன்முடி, எ.வ.வேலு போன்ற வலிமையான மாவட்ட செயலாளர்களின் எல்லை சுருக்கப்பட்டது ஆனால் அதிகாரம் குறைக்கப்படவில்லை, மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் மிக நுட்பமாக கையாண்ட இடமாக இதை சொல்லலாம். மாவட்ட செயலாளர்கள் அதற்கு முன் யாருடைய விசுவாசியாக இருந்தாலும் அவர்களை மாற்றாமல் பதவியில் தொடர அனுமதித்தார். கட்சி படிப்படியாக ஸ்டாலினின் கட்டுக்குள் வந்தது.
ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் இளைஞர் அணியின் செயலாளர் பதவி கொஞ்ச காலத்திற்கு வெள்ளக்கோயில் சுவாமிநாதன் வசம் இருந்தது. 2019 தேர்தலில் துரைமுருகன், பொன்முடி , ஆற்காடு வீராசாமி போன்ற மூத்த நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஐ.பெரியசாமி, டி.ஆர். பாலு வாரிசுகள் எம்எல்ஏவாக முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். உதயநிதி இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கும் முன்னரே கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரின் வாரிசுகள் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் இடம்பெற்றிருந்தனர்.
கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று கட்சியின் முகமாக பெரும்பாலான காட்சி ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் வெளியானது. இதன்பிறகு அவரது அரசியல் பணிகள் தீவிரமாயின. திமுக சந்தித்த தேர்தல்களில் மிகக் கடினமான தேர்தல் என 2021 தேர்தலை சொல்ல வேண்டும். இந்து விரோதக் கட்சி, ஸ்டாலின் முதல்வராக ராசியில்லாதவர் என இதுவரை தமிழக அரசியல் களம் சந்தித்திராத குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் இந்த தேர்தலில் எதிர்கொண்டார்.
மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக அவர் செய்த சாதனைகள் மக்களிடம் சரியாக சென்று சேராத காரணத்தினால் உண்டான சவால்கள் இவை. உதயநிதி 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து திமுகவிற்காக வாக்கு சேகரித்தார். களத்தில் அவரது பிரச்சாரத்திற்கான இடம் திட்டமிட்டு வரையறுக்கப்பட்டது. 2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றி கருத்தாக்கமாக 2021 தேர்தலில் திமுகவிற்கு உதவவில்லை. கடினமாக உழைக்க ஸ்டாலினும் தயாரானார், கட்சியையும் தயார்படுத்தினார், உதயநிதியும் விரிவான பரப்புரைக்கு ஆயத்தமானார்.
2021 உதயநிதி பரப்புரை களத்திலும், சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் முக்கிய இடத்தை பெற்றது. உதயநிதி விசுவாசிகள் அவரை சின்னவர் என அழைக்கின்றனர். இந்த பெயரில் இதற்கு முன் அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் முதலாவது அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி அமைச்சராகிறார். ஸ்டாலின் ஒவ்வொரு படியாக ஏறிய போது உட்பகையும், வெளிப்புற விமர்சனங்களும் ஏற்படுத்திய தடங்கல்கள் ஏராளம். இப்போது உதயநிதி அமைச்சராகிற போதும் விமர்சனங்கள் எழுகின்றன ஆனால் பெரிய அளவில் உட்பகை இல்லை. இத்தகைய சூழலை உருவாக்கியதே ஸ்டாலினின் அரசியல் வெற்றி.
(கட்டுரையாளர் அரியகுளம் பெருமாள் மணி எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஆவார்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.