கட்டுரையாளர்: முனைவர் கமல. செல்வராஜ்
தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் கல்வித் துறை ‘எடுப்பார் கைப்பிள்ளை’ யாகி, பல்வேறு கேலிக்கூத்துக்கு ஆளாவது வழக்கம். இதனை நிரூபிக்கும் வண்ணம் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக் கலைக் கழகங்களிலும் பொது பாடத்திட்டம் என்ற அறிவிப்பு.
மத்திய அரசு 2020 இல் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து, அதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. அதனை தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நடைமுறை படுத்தாததோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்திற்கென்று மாநிலக் கல்விக்கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே மிகப்பெரியப் பனிப்போராகியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு, மிகவும் அவசரக் கோலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக்கழகங்களிலும் இந்தக் கல்வியாண்டு முதல் பொது பாடத்திட்டத்தின் அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான பாடத்திட்டங்கள் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளதா? அதனை யார் தயாரித்தார்கள்? எப்பொழுது தயாரித்தார்கள்? அதற்கான கருத்துக் கேட்பு நடந்ததா? கல்வியாளர்களிடமோ, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களிடமோ கலந்தாலோசிக்கப் பட்டதா? என்பவையெல்லாம் பரம ரகசியமாகவேயுள்ளன.
திடீரென இப்படியொரு அறிவிப்பை பல்கலைக் கழகங்களில் திணித்ததற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின்(யு.ஜி.சி) ஆலோசனையோ, அனுமதியோ பெறாமல் மாநில அரசு, தான்தோன்றித்தனமாக இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது, எதிர்காலத்தில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வழிவகுக்கும் என்கின்றனர் உயர்கல்வித் துறையை சார்ந்த கல்வியாளர்கள்.
யார் காரணம்?
1986 இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, உயர்கல்வி மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த அமைப்பு சரிவரச் செயல்படாமல் நீண்ட நெடுங்காலமாகச் செயலிழந்திருந்துள்ளது. கடந்த 2021 இல் மீண்டும் அம்மன்றம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த மன்றம் தான் ஓராண்டு காலத்திற்குள், பொது பாடத்திட்டத்திற்கான 301 பாடங்களை அவசரக் கோலத்தில் உருவாக்கி, இந்தக் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.
இம்மன்றம், பாடதிட்டம் தயாரிப்பில் 922 பேராசிரியர்களை ஈடுபடுத்தி, 870 கூட்டங்களை நடத்தி, பாடதிட்டத்தை தயாரித்துள்ளதாக உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த போராசிரியர்கள் எந்தெந்த துறையைச் சார்ந்தவர்கள், கூட்டம் நடந்த விவரங்கள் பற்றியத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு கூட்டம் நடந்தது தங்களுக்குத் தெரியாது என்று பெரும்பாலானப் பேராசிரியர்கள் மறுத்துள்ளனர். மட்டுமின்றி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களிடமும் எவ்வித ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை என அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தற்போதுள்ள தேசிய கல்விக் கொள்கையில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக் கழகங்களால் மட்டுமே மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதத்தில், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்தி, கல்வியை வளப்படுத்த முடியும். இந்நிலையில் ஒரே பாடத்திட்டம் என்பது, தனியார் பல்கலைக் கழகங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்கின்றனர் தனியார் பல்கலைக் கழக நிர்வாகிகள்.
‘சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தன்னாட்சி அந்தஸ்துடன், தனித்தனிப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கின்றன. இதனால் புதிய பாடங்களைக் கற்ற பட்டதாரிகள் உருவாவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே பாடதிட்டம் என்ற நடவடிக்கை, தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் செயல்’ என அண்ணா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கும் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எப்படி சாத்தியமாக்கலாம்?
தமிழக அரசின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் அனைத்து மருத்துவப் படிப்புக்களையும் உள்ளடக்கி டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், அனைத்து பொறியியல் படிப்புகளையும் ஒன்றிணைத்து, அண்ணா பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், பி.எட். படிப்புகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து ஒரே ஓர் பல்கலைக் கழகம் மட்டும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கு கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களிடமும் நீண்ட நெடிய விவாதமும் கருத்துக் கேட்பும் நடத்த வேண்டும்.
நவீன தொழில் நுட்பம், அறிவியல் வளர்ச்சி, தொழில் வாய்ப்பு ஆகியவற்றை ஒன்றிரண்டு ஆண்டுகள் நன்கு அலசி ஆய்ந்து, தேவையான, தரமான பாடங்களைத் தேர்வுச் செய்து, பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி அவசரக் கோலத்தில் எடுத்திருக்கும் இந்த முடிவு நடைமுறை சாத்தியமற்றதாகவே இருக்கும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர். பல்வேறு கல்வி கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றி வருபவர். அழைக்க: (9443559841); கருத்துக்களை அனுப்ப: (drkamalaru@gmail.com))
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.