Advertisment

தமிழ்நாடு ஜெயில்-பெயில் டைரி: யார், யார் இப்போது எந்த சிறையில்?

ஜெயலலிதா காலத்தைவிட, போலீஸாரின் கைக்கட்டுகள் அதிகமாக அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மக்கள் குரலை பிரதிபலிக்கவே தடைகள் என்றால், அதற்கான எதிர்வினைகளை ஆட்சியாளர்கள் சந்தித்தே தீரவேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Jail-Bail Diarry: Who in What Jail?

Tamilnadu Jail-Bail Diarry: Who in What Jail?

ச.செல்வராஜ்

Advertisment

தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் போராட்டக்காரர்கள் பலர் சிறை புகுந்திருக்கும் தருணம் இதுதான்! இன்னும் பலர் ஜாமீன் பெற்றுக்கொண்டே வெளியில் இருக்கும் நிலை!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, தமிழ்நாடு போராட்டக் களமானது நிஜம்தான்! ஜல்லிக்கட்டுப் போராட்டம், டெல்லியை மிரள வைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைத் தாண்டி, ஒரே நாளில் 4 துறைகளின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது அந்தப் போராட்டம்!

காவிரி போராட்டம், கடந்த ஏப்ரலில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. பெரிதாக பிரபலமாகாத சில அமைப்புகளே இணைந்து ஐபிஎல் போட்டிகளை இங்கிருந்து துரத்தியது, பிரதமர் மோடியின் சென்னை விசிட்டின்போது இதற்கு முன்பு இந்தியாவில் வேறு எங்கும் நிகழாத வகையில் கருப்புக் கொடிகளால் திணறடித்தது... ஆகியவை மத்திய அரசின் கண்களை சிவக்க வைத்தன.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம், மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டம், அதன்பிறகு வெடித்த ஸ்டெர்லைட் போராட்டம், சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்... என ஒவ்வொன்றிலும் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு வந்தார். மத்திய உளவு அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ரிப்போர்ட்டும் இதை ஒட்டியே அமைந்தது.

விளைவு? மத்தியில் இருந்து தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழ்நாடு ஆளுனரே டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அழைத்து ஆலோசனை செய்ததும் நடந்தது. தொடர்ந்து போலீஸாருக்கு முன் எப்போதும் இல்லாத சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதன் அடுத்தகட்டம்தான், போராட்டக்காரர்களின் அடுத்தடுத்த கைது!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் பல மாதங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை தாக்கியதாக பதிவான வழக்கில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இயக்குனர் கவுதமன், மன்சூர் அலிகான், சேலம் வளர்மதி, பியூஷ் மனுஷ் என தொடர்ந்து ஆம் ஆத்மி வசீகரன் வரை வந்து நிற்கிறது கைது நடவடிக்கைகள்!

தமிழ்நாடு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்கள் மற்றும் ஜாமீன் பெற்றுக்கொண்டு இப்போதைக்கு தப்பியிருக்கும் போராட்டக்காரர்களின் நிலவரம் குறித்து இங்கு காணலாம்!

வேல்முருகன்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன், அதிரடியான போராட்டங்களின் அடையாளமாக உருவெடுத்து வந்தார். காவிரிக்காக திமுக பந்த் நடத்திய நிலையில், மத்திய அரசின் வருவாய் கேந்திரங்களில் ஒன்றான சுங்கச்சாவடியை (உளுந்தூர்பேட்டை டோல்கேட்) இவரது கட்சியினர் தகர்த்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது.

Velmurugan Arrest, Vaiko Protest வேல்முருகன் கைது செய்யப்பட்டபோது...

2018, ஏப்ரல் 1-ம் தேதி நிகழ்ந்த அந்த சம்பவத்திற்காக மே 26-ம் தேதி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வேல்முருகன். ஏற்கனவே ஏப்ரல் 10-ம் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்ட வழக்கும் அவர் மீது இருந்தது. அதன் அடிப்படையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக தேசத் துரோக வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

25 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜூன் 19-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் வேல்முருகன். நீதிமன்ற உத்தரவுப்படி நாகர்கோவிலில் தங்கியிருந்து நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார். அடுத்தகட்ட போராட்டங்களை உடனடியாக முன்னெடுக்க முடியாத அளவுக்கு கைதும், சிறையும் வேல்முருகனை முடக்கிப் போட்டிருக்கிறது.

இயக்குனர் கவுதமன்:

ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், சீமான் ஆகியோருடன் முன்னால் நின்றவர் இயக்குனர் கவுதமன்! அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜூன் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார் கவுதமன். போலீஸாரை தாக்கியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் இவர் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

காவிரிப் போராட்டத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் போராட்டம், சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றிலும் கவுதமன் களம் இறங்கிய வேளையில்தான் இந்த அதிரடி கைது!

இதில் விசேஷம் என்னவென்றால், மே 23-ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னையில் ஸ்டெர்லைட் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தியபோதே கவுதமன் கைதானார். அடுத்த 2 நாட்களில் ஜாமீனிலும் அவர் வெளிவந்தார். ஏப்ரல் 10-ம் தேதி பதிவான வழக்கை அப்போது அமல்படுத்தி நடவடிக்கை எடுக்காத திருவல்லிக்கேணி போலீஸார், திடீரென சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போராட்டம் வீரியம் பெற்றுவந்த காலகட்டமான ஜூன் 24-ல் அவரை தூக்கி உள்ளே வைத்தனர்.

தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கவுதமன் வெளியே வரும் பட்சத்தில், அடுத்தடுத்து வழக்குகள் பாயத் தயாராக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

மன்சூர் அலிகான்:

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போராட்டங்களில் பங்கேற்க சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் அழைப்பின் பேரில் சேலம் சென்றார் மன்சூர் அலிகான். அங்கு தனக்கேயுரிய பாணியில், ‘8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் 8 பேரை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போவேன்’ என பேட்டி கொடுத்தார். மே 3-ம் தேதி அப்படி பேசியவரை, சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போராட்டம் உக்கிரம் பெற்று வந்த ஜூன் 17-ம் தேதி போலீஸ் கைது செய்தது.

ஏற்கனவே ஏப்ரல் 10-ம் தேதி ஐபிஎல் போராட்டம் நடந்த அன்று மாலை சீமானை பழைய வழக்குகளில் கைது செய்ய சென்னை பல்லாவரத்தில் போலீஸ் குவிந்தது. அன்று பாரதிராஜா, தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் அங்கு சென்று சீமானை கைதில் இருந்து காப்பாற்றினார்கள்.

அன்றும் அங்கு சென்று, ‘சீமானை கைது செய்வதாக இருந்தால் என்னையும் கைது செய்யுங்கள். யாரையாவது தாக்கினால்தான் கைது செய்வேன் என்று கூறினால், அதற்கும் நான் தயார்’ என போலீஸாரிடம் மல்லுக்கட்டி கைதானவர்தான் மன்சூர் அலிகான். அதிலிருந்து மீண்டு வந்ததும் அடுத்த கைது!

இரண்டாவது முறையாக சேலம் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் அலிகான், ஜூன் 28-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். அடுத்தடுத்து இரு முறை நடந்த கைது, சிறையில் அடைப்பு ஆகியன மன்சூர் அலிகானை போராட்டப் பாதையில் இருந்து தற்காலிகமாக ஒதுங்க வைத்திருக்கிறது.

பியூஸ் மனுஷ்:

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்சூர் அலிகான் பேசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் பியூஷ் மனுஷ்! சூழலியல் ஆர்வலரான இவரை அதே மே 3-ம் தேதி கூட்டத்திற்காக ஜூன் 18-ம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூர் போலீஸார் கைது செய்தனர்.

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடத் தூண்டியதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜூன் 22-ம் தேதி இவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார். ‘மக்களை வன்முறை பாதைக்கு நாங்கள் தூண்டவில்லை. தகவல் அறியும் சட்டம் மூலமாகவும், நீதிமன்றம் மூலமாகவும் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு இந்த அரசாங்கம் பதில் தந்தால் போதும்’ என்கிறார் பியூஸ் மனுஷ்.

சேலம் வளர்மதி:

சேலம் மாணவி வளர்மதி, டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எரிவாயு எடுப்பதற்கு எதிராக போராடி கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராகவும் போராடிய வளர்மதி, ஜூன் 19-ம் தேதி பொதுமக்களுடன் இணைந்து நில அளவை அதிகாரிகளை முற்றுகையிட்டார். ஏற்கனவே சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷுடன் இணைந்தும் போராட்டங்களை முன்னெடுத்தவர் இவர்!

ஜூன் 19-ம் தேதி இவரை கைது செய்து சேலம் மகளிர் சிறையில் அடைத்தது போலீஸ். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இயக்குனர் அமீரின் ‘அச்சமில்லை’ படப் பாடல் வெளியீட்டு விழாவில் அரசுக்கு எதிராக பேசியதாகவும் இவர் மீது ஒரு வழக்கு இருந்தது. சேலம் சிறையில் இருந்த அவரை, அந்த வழக்கிலும் போலீஸார் கைது செய்வதாக அறிவித்தனர்.

இரு வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுக்கொண்ட வளர்மதி, இரு வாரங்கள் சிறை வாசத்திற்கு பிறகு ஜூலை 5-ல் (இன்று) ஜாமீனில் வெளிவந்தார்.

அ.வியனரசு:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அ.வியனரசு. 40 ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல் தளத்தில் இயங்கி வருபவர்! ஈழத் தமிழருக்கான போராட்டத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முதலில் சுமந்தவர் இவர்!

அ.வியனரசு, காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றம் வந்தபோது... அ.வியனரசு, காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றம் வந்தபோது...

மே 23-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக மே 30-ம் தேதி போலீஸார் இவரை கைது செய்தனர். ஒரு வாரத்தில் அவரது மகள் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இவரது கைது நடந்ததால், உற்றார் உறவினர்கள் திகைத்தனர்.

எனினும் நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பால் திருமணம் நடந்தது. பரோலில் வந்து மகளையும், மருமகனையும் வாழ்த்திச் சென்றார் வியனரசு. கூடங்குளம் அணு உலைப் போராட்டம் முதல் காவிரிப் போராட்டம் வரை அத்தனைப் போராட்டங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவரான வியனரசுவை ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது வாகங்களுக்கு தீ வைத்ததாக போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வியனரசுவுக்கு, ஒரு மாதம் கடந்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீனுக்கான முயற்சிகள் நடக்கின்றன.

இடும்பாவனம் கார்த்திக், கடல் தீபன்:

கடல் தீபன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். ஏப்ரல் 10-ம் தேதி காவிரி பிரச்னைக்காக சென்னையில் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, கடலூரில் பஸ் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

கடல் தீபன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதில் இருந்து மீண்ட அவர், மே 7-ம் தேதி விடுதலை ஆவதாக இருந்தது. உடனே நெய்வேலி போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக இயங்கியதாக குற்றம் சாட்டி தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் இருக்கிறார் அவர்.

இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்! மே 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவரை அன்று இரவே போலீஸார் கைது செய்தனர். போலீஸாரை தாக்கியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல நாம் தமிழர் கட்சியினர் மட்டும் கடந்த இரு மாதங்களில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாஞ்சிநாதன்:

மதுரையை சேர்ந்தவரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மோசடியை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று தோலுரித்தவர்! இதற்காகவே டெல்லி சென்று திரும்பிய அவரை ஜூன் 21-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது... மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக நின்றதுடன், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளையும் மேற்கொண்டவர் இவர். மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஊழியர்கள் குடியிருப்பில் காருக்கு தீவைத்ததாக இவர் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கும் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

வசீகரன்:

ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். மன்சூர் அலிகான பேசியதை நியாயப்படுத்தி பேசிய இவர், ‘சேலம்-சென்னை பசுமை வழிச்சாலையை நிறைவேற்றினால் 16 பேரை வெட்டுவோம். ஒரு பேச்சுக்காக இதை சொல்கிறோம். வெட்டுவோம்னு சொன்னா உடனே வெட்டிடுவோமா? இது ஒரு ஆதங்கம்’ என ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து இவரை ஜூன் 4-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் வசீகரன்.

ஆம் ஆத்மி வசீகரன் கைது... ஆம் ஆத்மி வசீகரன் கைது...

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஆட்சியை தக்க வைக்கவே அதிமுக தலைவர்களுக்கு போராட்டமாகிப் போனது. அந்த காலகட்டத்தில் மத்திய அரசின், ஆளுனரின் நேரடி தலையீடுகள் அதிகரிக்கவும்தான் போராட்டங்களும் வீரியம் பெற்றன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஜெயலலிதா காலத்தைவிட, போலீஸாரின் கைக்கட்டுகள் அதிகமாக அவிழ்த்து விடப்பட்டிருப்பதாக தங்கள் நடவடிக்கைகள் மூலமாக காட்டி வருகின்றனர்.

அதன் எதிரொலிதான் துப்பாக்கி சூடு, சரமாரி கைதுகள், என்கவுண்டர் ஆகியவை! போலீஸாரின் ஆக்ரோஷ பாய்ச்சலுக்கு இடையே சீமான் ஏற்கனவே பதிவான பல வழக்குகளில் பெயில் வாங்கவே போராடிக் கொண்டிருக்கிறார். இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், திருமுருகன் காந்தி ஆகியோர் இது பதுங்க வேண்டிய தருணம் என உணர்வதாக அறிய முடிகிறது.

கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் சுப.உதயகுமாரன் சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்தி வருகிறார். சொந்த வேலை காரணமாக பெங்களூருவில் அவர் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது.

வன்முறைகளை ஒடுக்க இரும்புக் கரம் அவசியம்தான்! ஆனால் மக்கள் குரலை பிரதிபலிக்கவே தடைகள் என்றால், அதற்கான எதிர்வினைகளை ஆட்சியாளர்கள் சந்தித்தே தீரவேண்டும்... தேர்தல் ரூபத்திலாவது!

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment