தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை உருவாக்க கருத்து கேட்புக் கூட்டங்களை அனந்தகிருஷ்ணன் குழு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினை அமைத்து ஜூலை 4-ம் தேதி பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அதன்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அறிவொளி இந்தக் குழுவின் உறுப்பினர் செயலராக பணியாற்றுவார். கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, சென்னை தரமணி கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, சூழலியலாளர் தியோடர் பாஸ்கரன், சென்னை புதுக் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை முன்னாள் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கல்வியாளர் கலா விஜயகுமார், ஓவியர் டிரட்ஸ்கி மருது ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் ‘ஐஇ தமிழ்’-க்காக கருத்து கேட்டோம். “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் அமைச்சர் செங்கோட்டையனும், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸும் இணைந்து எடுத்து வரும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் வரவேற்கவேண்டும். அந்த வகையில் மதிப்புமிக்க கல்வியாளரான அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே! ஆனால் இப்படி ஒரு குழு மட்டுமே உட்கார்ந்து மொத்த மாற்றங்களையும் உருவாக்கிவிட முடியும் என நான் நம்பவில்லை.
இந்தக் குழுவினர் கல்வியாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடமும் பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து கருத்துகளை கேட்டுப் பெறவேண்டும். இதற்காக கருத்து கேட்புக் கூட்டங்களை தமிழகத்தில் நான்கைந்து பெரிய ஊர்களில் நடத்தலாம். ஒருவேளை இந்தக் குழு அப்படி கருத்து கேட்காவிட்டால், பொதுமக்களே தங்கள் கருத்துகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
இதில் எனது ஆணித்தரமான கருத்து, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தமிழில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும். காரணம், குழந்தைகள் ஒரு மொழியை மட்டுமே படிக்க முடிகிற, விரும்புகிற காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிக்கும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
தாய்மொழியை கற்றபிறகு, அதன் மூலமாக இதர மொழிகளை பயிற்றுவிக்கலாம். ஒருவேளை ஆங்கில மோகம் காரணமாக பெற்றோர்களே இந்த முடிவை எதிர்க்கக்கூடும். ஆனாலும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, எதிர்கால நலன் கருதி தைரியமாக இதில் அரசு முடிவெடுக்கவேண்டும்.
எந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம். முன்பு அமலில் இருந்த அந்தத் திட்டம், நீதிமன்ற உத்தரவு காரணமாக ரத்து ஆனது. அதை மீண்டும் கொண்டுவர அரசு சட்டம் இயற்றவேண்டும்.” என்றார் பிரபா கல்விமணி.