Advertisment

உண்மையான பிரச்சினைக்கு முக்கியத்துவம்... ஊடகங்களில் சுயபரிசோதனை தேவை ஏன்?

நம்மிடம் சோம்பேறி பத்திரிகையாளர்கள் என்ற குற்ற உணர்வு உள்ளது. நாம் வரலாற்றின் முதல் வரைவை எழுத வேண்டும் என்பதை மறந்துவிட்டோம். அந்தக் கடமையைச் செய்ய அரசியல் தலைவர்களின் வஞ்சப்புகழ்ச்சிகளை விடுத்து உண்மையான பிரச்சினைகளைக் கையில் எடுக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Tavleen Singh writes Introspection needed in the media in tamil

தவ்லீன் சிங்: இவை அனைத்தும் நமது அரசியல் தலைவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் ஆனால் பத்திரிக்கையாளர்களாகிய நாம் கேட்கவேயில்லை என்றால் அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள்? (எக்ஸ்பிரஸ் படங்கள்)

கருத்து: தவ்லீன் சிங்

Advertisment

இது பெரிய விஷயங்களில் எனது இடத்தைப் பற்றிய ஒரு உயர்ந்த உணர்வாக இருக்கலாம். ஒரு புதிய ஆண்டின் முதல் கட்டுரையை எழுத நான் அமர்ந்திருக்கும் போது, ​​பத்திரிகை என்பது வரலாற்றின் முதல் வரைவாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், 2025-ன் இந்த முதல் கட்டுரையை எழுத நான் அமர்ந்தபோது, ​​நான் பதட்டமாகவும் கொஞ்சம் ஆர்வம் மிகுதியுடனும் இருந்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த வருடத்தில் நடந்த அலுப்பான நிகழ்வுகளின் பட்டியல்களைப் படிக்க எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் அவற்றை எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன். கடந்த வாரம் அமெரிக்காவிலும் அதற்கு முந்தைய வாரம் ஜெர்மனியிலும் நாம் கண்ட இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பற்றி எழுத நினைத்தேன், ஆனால் இதைப் பற்றி ஏற்கனவே அதிகம் கூறப்பட்டு விட்டது. எனவே, இந்திய ஊடகங்களில் நாம் உண்மையில் வரலாற்றின் முதல் வரைவை, எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் எழுதுகிறோமா என்பதை ஆராய்வது என்று நான் முடிவு செய்துள்ளேன்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Tavleen Singh writes: Introspection needed in the media

நான் இதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியவுடனேயே, அரசியல் கிசுகிசுக்கள், அற்பமான விஷயங்கள் ஆகியவற்றில் சிறப்பு ஆர்வமுள்ளவர்களைத் தவிர, வரலாற்று ஆசிரியர்களுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒரு வரைவைத் தான் இதுவரை நாம் எழுதி வருகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். அரசியல் பண்டிதர்கள் என்று சொல்லப்படும் நம்மில் பெரும்பாலோர் அரசியல் சச்சரவுகள் மற்றும் அரசியல் பேச்சுகள் பற்றி எழுதுவதைத் தாண்டி ஒருபோதும் சிந்திப்பதில்லை என்ற அளவுக்கு அரசியல் எழுத்தாளர்களின் படைப்புகள் தரம் தாழ்ந்து விட்டன. இந்த இரண்டு விஷயங்களில் மட்டும் தேவைக்கதிகமாக கவனம் செலுத்துவதால், சுகாதாரம், கல்வி, மாசு மற்றும் பெரும்பாலான இந்தியர்கள் வாழும் அவல நிலைமைகள் போன்ற சாதாரண மக்களை உண்மையில் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நாம் ஒருபோதும் செல்வதில்லை.

Advertisment
Advertisement

கடந்த சில வாரங்களாக நான் எனது வீட்டிலேயே ஒரு மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டதால், நான் சுகாதாரத் துறையைப் பற்றியே தொடங்குகிறேன். நான் சமீபத்தில் மும்பையில் உள்ள சிறந்த மருத்துவமனைகளுக்குச் சென்று வருகிறேன், நமது சுகாதாரத் துறையின் உயர் சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதைக் கண்டு வேதனையடைந்தேன், நோயாளிகளுடன் செலவழிக்க அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நேரம் இல்லை. அவர்கள் மின்னல் வேகத்தில் வருகின்றனர், அதே வேகத்தில் அடுத்த நோயாளியைப் பார்க்கச் செல்கின்றனர், இது அவர்களின் அலட்சியத்தால் அல்ல, ஆனால் உண்மையிலேயே அவர்களிடம் அவ்வளவு நேரம் மட்டுமே இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும் சில அனுபவங்கள் எனக்கிருக்கிறது, அங்கும் இங்கும் மருத்துவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நமது தலைசிறந்த தனியார் மருத்துவமனைகளின் நிலை இது என்றால், அரசு மருத்துவமனைகள் எப்படி இருக்கும்? டாக்டர்கள் பற்றாக்குறை ஏன்? அதிக எண்ணிக்கையில் டாக்டர்கள் நிறையச் சம்பளம் என்று மற்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்களா? மருத்துவக் கல்லூரிகள் குறைவாக உள்ளதா?

இந்தக் கேள்விகளுக்கு நமது அரசியல் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டுமானால், ஊடகங்களில் நாம் அடிக்கடி இதைப் பற்றிக் கேட்க வேண்டும். கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து மாணவர்கள் ஏன் தெருவில் இறங்க வேண்டும் என்பதை நாம் அடிக்கடி கேட்க வேண்டும். இவ்வளவு இளம் , மென்மையான வயதில் ஏன் நம் இளைஞர்கள் விரக்தியையும் ஊழலையும் சமாளிக்க வேண்டும்? பயிற்சி நிறுவனங்களுக்குப் பெரும் தொகையைச் செலுத்தாமல் அரசு ஆளுமைப் பணியிலோ, டாக்டராகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆகாமல் இருக்க முடியாத அளவுக்கு உயர்கல்வி ஏன் இவ்வளவு எட்டாத உயரத்தில் இருக்கிறது?

பெரும்பாலான இந்தியர்கள் வாழும் பரிதாபமான நிலைமைகளுக்கு வரும்போது, ​​​​எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. தூய்மையான காற்றை சுவாசிப்பது போன்ற இன்றியமையாத ஒரு உரிமை, மோசமான நிர்வாகத்தாலும், ஊழல் அரசியல்வாதிகளாலும் பறிக்கப்பட்டு நமது நகரங்கள் நரகக் குழிகளாக மாறிவிட்டன.  வீடுகள் போன்ற நகர்ப்புற வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைக்குக் கூட கிட்டத்தட்ட எந்த முதலீடும் செய்யப்படவில்லை, அதன் விளைவாக நமது பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான மக்கள், மற்ற நாடுகளில் மிருகங்களுக்குக் கூட வாழத் தகுதியற்ற அவல நிலையில் வாழத் தள்ளப் பட்டிருக்கின்றனர்.

அசுத்தமும் வறுமையும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை. இந்தியாவை விட ஏழ்மையான நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அதிக சுகாதாரமான, ஆரோக்கியமான சூழலை வழங்குகிறது. இது ஏன்? நம் அன்பான பாரத மாதா ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறார்? இலட்சாதிபதிகள் கூட கூட்டம் கூட்டமாக வெளியேறுவது போல் இந்தியா ஏன் இவ்வளவு சிறிய நம்பிக்கையை அளிக்கிறது? மனித கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்வதற்கு ஏன் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கிறார்கள்?

இவை அனைத்தும் நமது அரசியல் தலைவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் ஆனால் பத்திரிக்கையாளர்களாகிய நாம் கேட்கவேயில்லை என்றால் அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள்? கடந்த ஆண்டு 4,300 பணக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதையும், அதற்கு முந்தைய ஆண்டில் 5,100 பணக்காரர்கள் வெளியேறியதையும் நாம் கண்டறிந்தால், அது செய்தித்தாள்களில் சிறிய செய்தியாக வெளி வருகிறது. குஜராத்திலிருந்து சென்ற ஒரு குடும்பம் அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து இறந்தது என்று தெரிந்த போது ஒரு சில பத்திகள் அதிகமாக எழுதப் பட்டது. ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லி விஷவாயுக் கூடமாக மாறும் போது, ​​சில சிறந்த தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. ஆனால் , தொலைக்காட்சிகளின் பிரதான நேர அரசியல் விவாதங்களில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும்போது, ​​இது ஒரு பெரிய செய்தி போன்று காண்பிக்கப் படுகிறது.

இது எப்போதுமே இப்படி இருந்ததில்லை. ஒரு காலத்தில் நமது நாளிதழ்களில் சிறந்த புலனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன, தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்த்தியான செய்திகள் இருந்தன, ஆனால் இப்போது இது அரிதாகி விட்டது. அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே ஊடகங்களில் இத்தகைய சரிவு ஏற்பட்டது என்று நம்ப விரும்புபவர்கள் உள்ளனர், ஆனால் என் பார்வையில் அவை தவறானவை. நம்மிடம் சோம்பேறி பத்திரிகையாளர்கள் என்ற குற்ற உணர்வு உள்ளது. நாம் வரலாற்றின் முதல் வரைவை எழுத வேண்டும் என்பதை மறந்துவிட்டோம், அந்தக் கடமையைச் செய்ய அரசியல் தலைவர்களின் வஞ்சப் புகழ்ச்சிகளை விடுத்து உண்மையான பிரச்சினைகளைக் கையில் எடுக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு. எம். கோபால் 

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment