கொள்கை வழிமுறைகள் மற்றும் அரசியல் நீடித்திருக்கும்போது களத்தில் கூட்டாக நமது செயல்படுத்தல் உத்திகளை மேலும் செம்மைப்படுத்துவதற்கான ஒரு கேள்வியின் முடிவில். சில பரிசீலனைகள் உள்ளன.
தொற்றுநோய்களில் இருந்து விடுபட்டு இந்தியா தொடர்ந்து பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்லும் போது, பல ஆண்டுகளாக நம் நாட்டில் பாதித்து வரும் பெண்களின் விகிதாசாரத்தை பெரும் அளவில் பாதிக்கும் காசநோயை முக்கியமான அம்சமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
2020 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 15 லட்சம் பேர் காசநோயால் இறந்துள்ளனர். இந்தியாவில், காசநோய் இறப்பு விகிதம் 2019 இல் 17 சதவிகிதத்தில் இருந்து 2020 இல் 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரல் (2010-13) , சர்வதேச ஆரோக்கிய ஆராய்ச்சி மையத்தின் கூட்டு அறிக்கையின்படி. 30-69 வயதுடைய பெண்களின் மரணங்களில் கிட்டத்தட்ட 5 சதவிகித பெண்களின் மரணத்துக்கு காசநோய்தான் ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆண்கள், பெண்கள் தங்களைப் பலவீனப்படுத்தும் இந்த நோயின் விளைவுகளை அனுபவிக்கும் அதே வேளையில், பெண் நோயாளிகள் மிகவும் நியாயமற்ற வகையில் சமூகம்-பொருளாதாரம் எனும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமூகப் புறக்கணிப்பு மற்றும் குடும்ப ஆதரவின்மை முதல் திருமண வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கம் வரை, பெண்கள் எதிர்கொள்ளும் காசநோயின் விளைவுகள் மருத்துவ அளவீடுகளுக்கு அப்பால் உள்ளது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நடத்தை குறித்த தேவை வரும்போது களங்கம் ஒரு வலுவான தடுப்பாக செயல்படுகிறது. எனவே, காசநோய்க்கான சிகிச்சை பெறுவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே முன் வருகின்றனர்.
இந்தத் தடைகளை நீக்கி, காசநோய் சிகிச்சைக்கு எல்லோருக்கும் சமமான அணுகலைக் கொண்டு வருவதற்கு பல்முனை அணுகுமுறை தேவை. அரசானது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சகத்தின்-மத்திய காசநோய் பிரிவு இந்தியாவில் காசநோய்க்கான பாலினம் சார்ந்த அணுகுமுறைக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்கியது. இந்த ஆவணம் சிகிச்சையை அணுகுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து அதற்கேற்றபடி செயல்படக்கூடிய தீர்வுகளை வழங்குகிறது. தேசிய அளவில் இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும். 2021ம் ஆண்டு டிசம்பரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ‘காசநோய்க்கு எதிராக பெண்களின் வெற்றி’ என்ற தலைப்பில் ஒரு நாடாளுமன்ற மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் பாலின-ரீதியிலான அணுகுமுறை கொள்கை தலையீடுகள் விவாதிக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை உறுதி செய்தல் மற்றும் காசநோய் சேவைகளை, குறிப்பாக சமூக-பொருளாதார ரீதியாக நலிவடைந்த பின்னணியில் உள்ள பெண்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அளித்தல் போன்ற செயலூக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களை வலியுறுத்தினார்.
கொள்கை வழிமுறைகள் மற்றும் அரசியல் நீடித்திருக்கும்போது களத்தில் கூட்டாக நமது செயல்படுத்தல் உத்திகளை மேலும் செம்மைப்படுத்துவதற்கான ஒரு கேள்வியின் முடிவில். சில பரிசீலனைகள் உள்ளன. ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில், சம்பந்தப்பட்ட அனைத்து மன்றங்களிலும் இடங்களிலும் பிரச்னையை முன்னிலைப்படுத்த நாம் ஒன்று கூட வேண்டும். நான், எனது மரியாதைக்குரிய சக ஊழியர்கள் பலருடன் சேர்ந்து, காசநோய் திட்டம் குறித்த மதிப்பாய்வுகளை அந்தந்த மாவட்டங்கள் மற்றும் சமூக மக்களிடம் மேற்கொள்கிறேன். இந்தக் கூட்டங்களில் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு பெண் தலைவர்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
இரண்டாவதாக, பெண் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கான கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பொது மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எங்கே நோயாளி சிகிச்சை பெறுகிறார் என்பதை பாரபட்சமாக கருதாமல்- நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆதரவான சூழலை வழங்க வேண்டியதன் முக்கியத்தும் குறித்து நோயாளியின் குடும்பத்திற்குக் கற்பிக்கும் வகையில் சுகாதாரப் பணியாளர்களின் திறனை கட்டமைப்பது. மூன்றாவதாக, , பெண்களுக்கான ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ஆழ்ந்த ஆணாதிக்கக் கருத்துக்கள் நிலவும் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கான வெளியை அது பாதிக்கின்றது. பெண்கள் பெரும்பாலும் பெரியவர்கள், கணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முதலில் உணவளிக்க விரும்புகிறார்கள். கடைசியாகதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள், காசநோயில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிரமான ஆபத்தான காரணியாக இருக்கிறது. இது போன்ற ஆபத்துகள் பெண்களுக்கு அதிக அளவு இருப்பதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக காசநோயாளிகளுக்கு சத்தான உணவை வழங்குவதற்காக, நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் மூலம், மாதம் ரூ.500 பண பலனை அரசு திறம்பட வழங்கியது சிறந்த முன்னுதாரணமாகும். 2020 ம் ஆண்டில் பயனாளிகளுக்கு NPYயின் கீழ் ரூ.200 கோடிக்கும் அதிகமான தொகை நேரடி பணப்பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டது. கூடுதலாக, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கலாம், இதில் பொது விநியோக அமைப்பானது, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தொடர்புடைய துறைகளுடன் பொருத்தமாக இணைக்கப்பட்டிருப்பதையும், காச நோயாளிகளுக்கு புரதம் நிறைந்த உணவு வழங்கப்படுவதையும் கூட ஆராயலாம் மற்றும் இது நோயாளிகள், குறிப்பாக பெண்களுக்கு சமச்சீர் உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.
நான்காவதாக, ஒரு சமூக மட்டத்தில், துல்லியமான காசநோய் செய்தியை நாம் எடுத்துக்கூற வேண்டும். களத்தின் செயல்பாட்டின் போக்கை தீர்மானிப்பதில் பாலினம் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
உலக நாடுகள் மார்ச் மாதத்தை மகளிர் தினமாக கொண்டாடகின்றன. சமூகத்தில் பெண்களின் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. எவ்வாறாயினும், “பெண்கள் பிரச்னை” என்ன என்பது பற்றிய கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய மற்றும் அத்தகைய பாலின கட்டமைப்புகளை எதிர்கொள்ள வேண்டிய உரிய தருணம் இதுவாகும்.. குறிப்பாக பொது சுகாதாரத்தின் பின்னணியில், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பெண்கள் மட்டுமே எதிர்கொண்டு தீர்வு காணக்கூடியவை அல்ல. இவை பாலின இருமைகளைக் கடக்க வேண்டிய உலகளாவிய பிரச்சனைகளாகும். சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சமமான தீர்வுகள் வழங்கப்படும் போது மட்டுமே, காசநோய்-இல்லாத இந்தியா என்ற கனவை நம்மால் நனவாக்க முடியும்.
இந்த கட்டுரை முதலில் 17ஆம் தேதியிட்ட அச்சுப் பதிப்பில் ‘The toll on women’’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையின் எழுத்தாளர் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராவார், மகாராஷ்டிராவின் நந்துர்பர் தொகுதியின் எம்பியாக உள்ளார். காசநோய்க்கு எதிரான உலகளாவிய கூட்டணியின் உறுப்பினராகவும் உள்ளார்.
தமிழில் ரமணி