எப்பணிச் செய்யினும் இப்பணிக்கு ஈடாகுமா? என ஒரு வினா எழுப்பினால், எப்பணியும் இப்பணிக்கு நிகரில்லை என ஓங்கி உரைத்திடும் வல்லமைக் கொண்ட ஒரேப்பணி, அறப்பணியாம் ஆசிரியர் பணியே ஆகும்.
ஈன்றெடுத்தத் தாய்க்கும், தோள் சுமந்த தந்தைக்கும் நிகராய் போற்றிப் புகழ்ந்து, மதித்திடும் வல்லமைப் பெற்றவர் ஆசிரியரே அன்றி இப்பூவுலகில் வேறு எவரும் இலர் என்பது நிதர்சனமான நிஜம்.
பண்டையக் குருகுலக் கல்வியிலிருந்து தொடங்கி, இன்றைய வகுப்பறைக் கல்வி வரை, ஒரு மாணவனின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் யாரால் நிர்ணைக்கப் படுகிறதென்றால், அஃது ஓர் ஆசிரியரால் மட்டுமே என்பதற்கு, ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் அக்கினிச் சிறகுகள் மாபெரும் சாட்சியாகும்.
வாடிவீழும் பூவையும் வாசம் பெறச் செய்யும் வல்லமை எப்படி ஒரு கவிஞனிடம் உள்ளதோ, அதைப் போன்று, படிப்பில் வீழ்ந்து கிடக்கும் ஒரு மாணவனை, மாண்புறச் செய்யும் வல்லமை ஓர் ஆசிரியரிடம் மட்டுமே உள்ளது என்பது திண்ணம்.
பெற்றெடுத்துப் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுத்து, வளர்த்து ஆளாக்கியப் பெற்றோரால் புறந்தள்ளப்பட்ட ஒருவர், தலைசிறந்த ஓர் ஆசிரியரிடம் அடைக்கலம் புகுந்து விட்டால், அவரைப் புடம்போட்டத் தங்கமாக மாற்றிக்காட்டும் வல்லமை அந்த ஆசிரியரிடம் மட்டுமே உண்டு. இதற்கு இந்திய தேசத்தின் இரண்டாவது முதல் குடிமகன் பாரத ரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்ற எத்தனை எத்தனையோ ஆசிரியர்கள் உதாரண புருஷர்களாய் இன்றும் இத்தேசத்தில் வானுயர்ந்து வாழ்கிறார்கள்.
அதனால்தான், டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் நம் தேசத்தில், ஆசிரியர் தினமாகப் பிரகடனப் படுத்தி, இன்றும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அந்த அரும் பெரும் நாளில் ஆசிரியர் பணியில் தலை சிறந்து விளங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு, அப்பெருமகனாரின் நற்பெயரில் நல்லாசிரியர் விருது (டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது) வழங்கி, மத்திய, மாநில அரசுகள் கௌரவிக்கின்றன.
புனிதமான ஆசிரியர் பணிக்காய் வழங்கப்படும் இவ்விருது, வேறு எந்த விருதிற்கும் ஈடுயிணையற்றது என்றால் அது மிகையாகாது. இவ்விருதினைப் பெறும் ஓர் ஆசிரியர், தியாகத்தின் திருவுருவாகவும், குணத்தால் குன்றிலிட்ட விளக்காகவும், ஒழுக்கத்தால் உன்னதமானவராகவும், மாணவர்களும் பெற்றோரும் மதித்துப் போற்றும் உதாரணப் புருஷராகவும் திகழ வேண்டும்.
இப்படிப்பட்டப் பத்தரை மாற்றுத் தங்கங்களைத் தேடிப்பிடித்து, அவர்களைப் பற்றி நன்கு ஆய்ந்தறிந்த பின்னரே இவ்விருதினை வழங்கி வந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மீது இதுவரை எவ்வித விமர்சனங்களும் எழுந்ததில்லை. அவர்கள் யாருடைய கேலி, கிண்டலுக்கும் ஆளானதுமில்லை.
ஒருவர் ஆசிரியராகப் பணியாற்றினால் சமூகத்தில், அவருக்கு சிறந்த மதிப்பும் மரியாதையும் தானாக வந்துவிடும். அவர் நல்லாசிரியர் விருது பெற்று விட்டால் அவருக்கு, மாணவர்கள் மத்தியிலும், சமூகத்திலும் கிடைக்கும் மரியாதைக்கு ஓர் அளவேயிருக்காது.
ஆனால் சமீபகாலமாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுகள் பல்வேறு விருப்பு வெறுப்புகளுக்கும், கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன. இவற்றில் மத்திய அரசிடமிருந்துப் பெறப்படும் நல்லாசிரியர் விருதுகள் பற்றி அதிக அளவில் விமர்சனங்கள் எழுவதில்லை. ஆனால் மாநில அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுகள் பற்றிதான் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.
இவ் விமர்சனங்கள் எழுவதற்கு முதல் காரணம், இவ்விருதினைப் பெறுவதற்குக் கடுகளவும் தகுதியற்ற சிலருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்பதுதான். ஒருசில ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் வி்ருது அறிவிக்கப்பட்டதை அறிந்தவுடன், அதே பள்ளியில், அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே முகம் சுழிக்கின்றனர். ‘போயும் போயும் இவருக்கா இந்த விருது’ என்ற விமர்சனம் அங்கிருந்தே தொடங்கி விடுகின்றது.
இப்படி இந்த விமர்சனம் எழுவதற்கான அடிப்படைக் காரணங்களாக இரண்டு விஷயங்கள் விமர்சகர்களால் முன் வைக்கப்படுகின்றன. அவற்றில் முதல் காரணம் அரசியல் தலையீடு. மற்றொன்று பிற துறைகளைப் போல் கல்வித்துறையிலும் பணம் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது.
முதலில் கூறப்படும் குற்றச்சாட்டானது, தமிழகத்தில் ஆளும் கட்சிக்குச் சாதகமான ஆசிரியர்கள், ஏதேனும் ஆசிரியர் அமைப்புகளில் பொறுப்பு வகிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு, அரசின் அல்லது அரசியல்வாதிகளின் சிபாரிசுடன் இவ்விருது வழங்கப்படுகிறது என்பதாகும்.
அரசியல் தலையீடு மூலம் ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால் அதில் எந்த அளவிற்குத் தகுதிக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது அனைவருக்கும் புலனாகும்.
இரண்டாவதாகக் கூறப்படும் காரணமானது, நல்லாசிரியர் விருதுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும் போது முதலில் அவர், அந்தந்த கல்வி மாவட்ட, கல்வி அதிகாரியிடம் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர், அந்த விண்ணப்பங்கள் அவரால், ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சிறந்தவை தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டச் சிறந்த விண்ணப்பங்களை, அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிப்பார். அதன் பிறகு அவ்விண்ணப்பங்களில் மிகச் சிறந்தவை மட்டுமே அவரால் நேரடியாக அரசிற்கு பரிந்துரைக்கப்படும்.
இதில் என்னக் கொடுமை என்றால் தொடக்க நிலை கல்வி அதிகாரியிடமிருந்து தொடங்கி, மாவட்ட கல்வி அதிகாரி வரைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அதிகாரி வரைக்கும் பணம் புகுந்து விளையாடும் என்பதுதான். அவ்வாறு பணம் பட்டுவாடச் செய்பவர்களுக்கு வேறு எவ்விதத் தகுதியும், திறமையும் இன்றியே நல்லாசிரியர் விருது வீடுதேடி வந்துவிடும்.
இந்தக் குற்றச்சாட்டு மிகவும் பலமாக, பகிரங்கமாக குமரி முதல் சென்னை வரையுள்ள ஆசிரியர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இவ்விதம் அரசியல் தலையீடு மற்றும் பணப் பரிமாற்றம் ஆகியவற்றால் நல்லாசிரியர் விருது பெறுவதற்கு வேறு எந்தத் தகுதியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.
இப்படி குறுக்கு வழியில் ஓர் ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றால், அதனால் இழுக்கு ஏற்படுவது, அவ்வாசிரியருக்கு மட்டுமின்றி, அவ்விருது, யாருடையப் பெயரில் வழங்கப்படுகிறதோ அவருக்கும், கூடவே ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் இழிவை ஏற்படுத்தும்.
எனவே அடுத்த மாதம் (செப்டம்பர்) 5 ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான ஆசிரியர் தேர்வு மிக மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையிது. இனியும் இவ்விருது பற்றியோ, இவ்விருது பெறுபவர்கள் பற்றியோ எவ்வித விவாதங்களும் எழாமல் இருக்க வேண்டும். அதற்காக, நல்லாசிரியர் விருதிற்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கென்றே சில அடிப்படையானத் தகுதிகளை வரையறுத்து, அதன் அடிப்படையில், எவ்விதமான தலையீடுகளும் இன்றி, அதற்கானத் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் மிகுந்த நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும்.
அதன் மூலம் நல்லாசிரியர் விருது மீது எழும் தேவையற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு, கிரேஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்! பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.