Teachers Eligibility Test தேர்ச்சி பெற்றவர்கள் ஆகப் பெரிய கவலையில் இருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு வெயிட்டேஜ் முறையை மாற்றி விட்டு, இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியாம் அறப்பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆண்டாண்டுக் காலமாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பு அடிப்படையே கடைபிடிக்கப் பட்டு வந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், அந்த நடைமுறையை மாற்றி விட்டு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வுமுறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.
அதன்படி முதல்முதலில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2,78,725 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,397 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். இது வெறும் 3.73 சதவீதத் தேர்ச்சியே ஆகும். அதுபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த தேர்வில் 3,77,973 பேர் எழுதியிருந்தனர். இதில் 8,849 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். இது வெறும் 2.34 சதவீதத் தேர்ச்சியே ஆகும்.
இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைத்தது. அதே ஆண்டு இரண்டாவது முறை நடந்த தேர்வில் வெற்றி விகிதம் சற்று அதிகரித்தது. ஆனால் வெற்றி பெற்ற அனைவருக்கும், அரசால் வேலை அளிக்கும் அளவில் பணியிடம் காலியில்லாமல் இருந்தது.
அதனால் ஆசிரியர்பணி நியமனத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வெயிட்டேஜ் முறையை தமிழக அரசு அமலாக்கியது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் 60 மதிப்பெண், +2 படிப்புக்கு 10 மதிப்பெண், பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண், பி.எட்.படிப்புக்கு 15 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண் என வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கப் பட்டது.
வெயிட்டேஜ் முறையை அரசு அமல் படுத்தியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 2014 இல் உயர்நீதிமன்றம், வெயிட்டேஜ் முறையைக் கடைபிடிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வெயிட்டேஜ் முறையை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. மட்டுமின்றி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை என்பது வேதனைக்குரியது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு வினோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், போட்டித் தேர்வு என அதிகமாக ஒரு தேர்வுகூட எழுத வேண்டும், அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப் படுவார்கள் என்பதுதான் அந்தப் புதிய அறிவிப்பு.
இவ்வாண்டு பிப்ரவரி மாதக் கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன எனத் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதுவரை மூன்று முறை நடந்த தகுதித் தேர்வில் சுமார் 75 ஆயிரம் பேர் வெற்றி பெற்று, இன்று அல்லது நாளை வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் “இலவு காத்தக் கிளிபோல்” உள்ளனர். அப்படி காத்திருப்போரின் தலையில் விழுந்த மாபெரும் இடியே இந்த புதிய தேர்வு முறையாகும்.
பொதுவாக ஆசிரியர் பயிற்சி என்பது முழுக்க முழுக்கக் கற்பித்தல் பற்றிய பயிற்சியே ஆகும். அதன் பிறகு ஒரு தகுதித் தேர்வு என்பதுகூடத் தேவையற்றது. மட்டுமல்ல இதுவரை ஓராண்டாக இருந்த பி.எட். பயிற்சி தற்போது இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு தகுதித் தேர்வு என்பதுகூடத் தேவையற்றது.
எனினும் காலத்தின் கட்டாயம் கருதி வேண்டுமென்றால் ஒரு தகுதித் தேர்வை நடத்தலாம். அதையும் தாண்டி இரண்டாவதாக ஒரு போட்டித் தேர்வை நடத்துவதென்பது ஆசிரியர் பணிக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு காத்திருப்போருக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
எனவே தமிழக அரசு, ஆசிரியர் பணி நியமனத்தில், முன்பு இருந்தது போன்று பதிவு மூப்பு முறையைக் கடைபிடிக்க வேண்டும். அல்லது, ஒரே ஓர் தகுதித் தேர்வை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பட்டதாரிகளின் சாபம் இந்த அரசை நிச்சயம் துரத்தும்!
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்த கல்வியாளர்! அழைக்க: 94435 59841, அணுக: drkamalaru@gmail.com )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.