தலைவர் ரஜினி – ஒரு பார்வை

ரசிகர்களை குஷிப்படுத்தி, எதிர்வரும் படங்களின் வணிகத்தை உறுதி செய்துவிட்டு இதே நிலையை (status-quo) தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

rajini
ரஜினிகாந்த்

மகேஷ் கேசவபிள்ளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விவாதிக்கப்படும் அதி முக்கியமான தலைப்பு செய்தி தலைவரின் அரசியல் வருகை பற்றிய அறிவிப்பே. இது இந்திய அளவில் trending ஆன செய்தியும் கூட.

இதில் மிகவும் துரதிருஷ்டமான விஷயம், எந்த கொள்கையும் இல்லாமல் அரசியலுக்கு வருவதுதான். இது அவர் இத்தனை நாள் சினிமாவில் ஊக்குவித்து வந்த தனிமனித வழிபாட்டின் நீட்சியே.

முதலில் தலைமையையும், அதிகாரத்திற்காக (234 தொகுதிகள்) போட்டியிடுவதையும் முடிவு செய்துவிட்டு, பின் கொள்கையை தேடும் top -down approach எத்தனை அபத்தமானது. கொள்கைகளை முதலில் முறைப்படுத்தி விட்டு (formulate) அதை நோக்கி கட்டமைக்கும் bottom-up approach தானே மாற்றத்திற்கான அரசிலியலாக இருக்க முடியும்.

அவர் கட்சியின் கொள்கைகளை பற்றி கேட்டால் உண்மை, நேர்மை, நாணமயம் (அட, பேட்டியில் நாணயத்தை இப்படித்தான் சொன்னார்) என்று காமெடி செய்கிறார். இதைக் கேட்கும்பொழுது விவேக்கின் நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. வேலை கேட்கும் தனுஷிடம் என்ன படித்திருக்கிறாய் என கேட்பார் விவேக்.

அதற்கு தனுஷ் “நீதி, நேர்மை, நியாயம்” என்பார். ஏதாவது உருப்படியாக இருந்தால்தானே படிப்பை பற்றி சொல்வதற்கு.
இது போல உண்மை, நேர்மை, நாணயம் என்பது எவ்வளவு பொத்தாம் பொதுவான பதில். இப்போதிருக்கும் அரசியல் தலைவரிகளிலேயே மிகவும் மோசம் என்று நீங்கள் நினைக்கும் ஒரு தலைவரிடம் கேட்டுப் பாருங்கள்; அவர் மட்டும் தனது குறிக்கோள் அநீதி, பொய்மை, வஞ்சகம் என்றா சொல்ல போகிறார்.

வணிக குதிரை:

அவர் திரைத்துறையில் உலகத்தரமான படங்களுக்காக எந்த முன்னெடுப்போ, பெரிய பங்களிப்போ செய்யாதவராக இருந்தும் பொன்முட்டை இடும் வாத்தாகவே இருந்தார். அது போல இப்போது தொலைக்காட்சி ஊடகங்களுக்கும். அரசியல் அறிவிப்புக்கு முன் அவர் வருவாரா மாட்டாரா என்று விவாதங்கள் அரங்கேறியது போல, அறிவிப்புக்கு பின், இல்லாத கொள்கையை பல மணி நேரங்கள், பல நாட்களாக விவாதிக்கும் வியாபாரத்துக்கு உதவி வருகிறார்.

ஏன் அரசியல்?

அவர் இப்போது ஏன் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார் என்று சற்று கூர்ந்து ஆராய்வோம். சாதக பாதகங்களை அலசி ஆராயும் SWOT analysis செய்யாமல் இந்த அறிவிப்பை வெளியிடும் மனிதர் இல்லை அவர்.

பணம், புகழ் சம்பாதிக்கவா? அவர் சினிமாவில் சம்பாதிக்காத பணம் புகழ் இல்லை. சம்பாதித்த பணத்தை தன்னை வாழ வைத்த திரைத்துறையிலேயே மீண்டும் முதலீடு செய்த முட்டாளாக இருந்ததில்லை. இதனால் அவரிடம் தலைமுறைகளுக்கு தேவையான பொருள் இருக்கும் என்பது எவருக்கும் தெரிந்ததே. அவரது ஒரே கடன்பாடான (liability) அவரது மகள்கள் மேலும் சில படங்கள் எடுத்து அவரது சொத்தை சிறிது அசைத்து பார்த்தாலும், பெரிய சேதம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு இல்லை.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவா? வாய்ப்பில்லை. ஏன் என்பதை இனி வரும் பத்திகளில் பார்ப்போம்.

இலவு காத்த கிளிகள்:

மூல முதற் காரணம், நிர்பந்தங்களே. பல வருடங்களாக அவர் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்த அவரது ரசிகர்களுக்கு சிறுவர் பருவத்திலிருந்து முதுமைப்பருவம் அடைந்ததும், இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே நம் வாழ்நாளில் முடிந்துவிடுமோ என்ற அழுத்தமாகவே மாறியது; அதுவே உச்சமடைந்து நிர்பந்தங்களாக மாறியது. இந்த நிர்பந்தந்தங்களை இன்னும் ஊதாசீனப்படுத்தினால், அது தனக்கு பேரழிவைத்தரும் என்று ரஜினிகாந்த் நினைத்திருக்கக்கூடும்.

இது அவரே ஏற்படுத்திய எதிர்பார்ப்புதான். அவர் திரையிலும் வெளியிலும் பேசியது தான் இந்த எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகாமல் வைத்திருந்தது; அவரின் படங்களின் வணிகத்துக்கு பெரிதும் உதவியது.

அது கதாபாத்திரம் பேசியது, இது பத்திரிகைகளின் வேலை, இது ரசிகர்களின் தேவையில்லாத கற்பனை, இதற்கு ரஜினிகாந்த் பொறுப்பாக முடியாது போன்ற சால்ஜாப்புகளை நம்புவதற்கில்லை. இத்தனை பெரிய ஆளுமையை மீறி எதுவும் நடந்து விடமுடியாது. அவர் நினைத்திருந்தால், ஒரு சின்ன அறிவிப்பின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

இவரது பிற்கால படங்களின் வெற்றிக்கு, இத்தகைய வசனங்கள், எதிர்பார்ப்புகள், எதிர்பார்ப்புகளைக் கொண்ட ரசிகர்கள், தனி மனித துதி பாடும் சுவரொட்டிகள், கட்-அவுட் வைத்து பால் ஊற்றும் கலாச்சாரம், திரை உலகையும், நிஜ உலகையும் பிரித்து பார்த்தறியாத அல்லது பார்க்க விரும்பாத விசில் அடிக்கும் கூட்டம் இவையே அடித்தளமாக கட்டமைக்கப்பட்டன, சில விதி விலக்குகளைத் தவிர. இதுவே இப்போது நிர்ப்பந்தமாக மாறியிருக்கிறது.

அறுவடை காலம்:

சரி, இந்த அவருடைய ரசிகர் கூட்டத்தில் அறுதிப்பெரும்பான்மை, அரசியலுக்கு வரத்துடிப்பது மக்கள் சேவை செய்வதற்கே என்று நீங்கள் நினைப்பீர்களானால், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

எம் ஜி ஆர், விஜயகாந்த் முதலாக எத்தனையோ உதாரணங்களைப் பார்த்தவர்கள் இவர்கள். மேற்சொன்னோரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பின்னாளில் கரை வேட்டி கட்டி ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்ததையும், கல்வி தந்தைகளாக அவதாரம் எடுத்ததையும் ரஜினி ரசிகர்கள் ஏக்கத்தோடு பார்த்தவர்கள். தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்தால் குறைந்த பட்சம் மாநகராட்சி உறுப்பினராகவாவது (ward councillor) ஆகும் வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள்.

இவர்களையெல்லாம் தலைவர் பணம் சம்பாதிக்க விடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்பதை அப்பாவித்தனமாக நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சில காலங்களுக்கு முன் “இதுவரை எங்களுக்கு என்ன செய்தீர்கள்” என்று கேட்ட ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “எனக்கு எப்போதுமே நயமான, உலகத்தரம் வாய்ந்த படங்களை செய்வதில்தான் விருப்பம்; ஆனால், உங்களுக்காகதானப்பா, இப்படி மசாலா படங்களில் நடிக்கிறேன்” என்று சொன்னது, அவர் ரசிகர்களை கட்டுப்படுத்துவரா இல்லை வளைந்து கொடுப்பாரா என்பதற்கு சான்று.

எல்லாவற்றுக்கும் மேலாக, இதே படையை வைத்து, அவரே சொல்லும் இந்த சீர்கெட்டு கிடக்கும் அமைப்பை (system) மாற்ற முடியுமா?

கடந்த மற்றும் இந்த கால அரசியல்வாதிகள் செய்த குற்றங்களிலேயே ஆகப்பெரிய குற்றம் சாமானிய மக்களையும் குற்றவாளிகளாக மாற்றியதுதான். வோட்டுக்கு பணம் வாங்குவதை பிறப்புரிமையாகவே கருதும் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். இயற்கை வளங்களை சுரண்டுவதில் இருந்து, அரசு எந்திரங்கள் மட்டுமின்றி, ஊடகங்கள் வரை ஊழல் புரையோடிப்போய் இருக்கிறது. இவற்றை மேற்சொன்ன “காவலர்” படையை வைத்துக்கொண்டு மாற்றுவது சாத்தியமா? இதொன்றும் அறியாதவர் அல்லர் அவர்.

ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும்:

இதுவரை எல்லோருக்கும் நல்லவராக, தனக்கு பிரச்சினை வராத வரையில் ஆட்சியாளர்களை பகைத்துக்கொள்ளாமல் அதன் மூலம் கிடைக்கும் பலன்களை அனுபவித்தவராகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரது மூத்த மகளுக்கு 2009-லேயே, திரைப்படங்கள் இயக்கி சேவை செய்வதற்கு முன்பாகவே, நடனத்துக்காக கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பிற்காலத்தில் ஐ நா வில் அவர் ஆடிய நடனம், சாமானியர்களால் மட்டுமின்றி நாட்டிய வல்லுனர்களாலேயும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 1996ல் அப்போதைய முதலமைச்சரை எதிர்த்து குரல் கொடுத்தார் என்று கம்பு சுத்தும் அவரது ஆராதகர்கள், பின்னாளில் அதே முதலமைச்சர் சிறை சென்று திரும்பியபோது, ஏதோ சுதந்திர போராட்ட வீரர் சிறை மீண்டதைப்போல, இவர், wanted ஆக வாழ்த்து அறிக்கை வெளியிட்டதை வசதியாக மறந்து/மறைத்து விடுகிறார்கள்.

இன்னமும் கூட, பலவீனமான மாநில அரசைக் குறை கூறும் வீரம், சக்தி வாய்ந்த அல்லது சக்தி வாய்ந்ததாக கருதப்படும் மத்திய அரசை விமரசிக்க தலைப்படவில்லை.

தன் வினை?

அரசியலுக்கு வந்தால் நிறைய பகைவர்களை சம்பாதிக்க வேண்டியிருக்கும். நியாயமான, நியாயமற்ற பல வழக்குகள் பாயும்; வாடகை பிரச்சனைகள் விஸ்வரூபமெடுக்கும்; அவர் மீதான தனி மனித தாக்குதல்கள் தீவிரமாகும்; வருமானம் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படுத்தப்படும்; அவருடைய நிகழ்கால மற்றும் கடந்த கால, பொது வாழ்க்கைக்கு எந்த தொடர்பும் இல்லாத குடும்ப பிரச்சினைகள், தனிப்பட்ட பழக்கங்கள் இன்னும் தீவிரமாக பொது வெளியில் விவாதிக்கப்படும். இந்த பாதகங்களை நிச்சயம் அலசி இருப்பார். அதையும் மீறி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பது, இவர் எவ்வளவு கடுமையான நிர்பந்தங்களுக்கு உள்ளாகி, சூழ்நிலைக்கைதியாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த பெரியவரை இப்போதும் அவர் விருப்பத்துக்கு நடக்க விடாமல் இருக்கும் அழுத்தங்கள் காலத்தின் கோலங்கள்

காரணிகள்:

இப்போது மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதும், பிறர் தமிழகத்தைப் பார்த்து சிரிப்பதும் இவரை பாதித்தததாக இவரே சொல்லும் காரணங்கள். இதற்கு முன்னதாக கடந்த 15 ஆண்டுகளில் மோசமான ஆட்சி அரசியல் நிகழ்ந்த போதும் அது இவரை பாதிக்கவில்லை.

ஒரு கேரள மாநில திரை பிரபலம் “எங்கள் மாநிலத்தில் தலைவர்களை திரையில் தேடுவதில்லை” என்று சொன்னது இவரை பாதிக்கவில்லை.

மற்ற மாநிலத்தவர் இவரது படங்களில் இடம்பெறும் புவி ஈர்ப்பு விசைக்கே சவால் விடும் ஸ்டண்ட்கள் மற்றும் ஸ்டைல் என்ற பெயரில் நடக்கும் சேஷ்டைகளை பகடி செய்து சிரித்தது இவரை பாதிக்கவில்லை. அது பிரபல்யத்தித்திற்கும், வணிகத்துக்கு உதவிய பட்சத்தில். (இப்படி பகடி செய்வததற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்பதே என் கருத்து, என்ற போதும்)
இப்போது அவரை பாதித்ததாக சொல்லும் காரணிகள் நம்பும் படியாக இல்லை. முன்பு சொன்ன அவருக்கு இருக்கும் அழுத்தங்களே உண்மையான காரணிகளாக புலப்படுகின்றன.

தீவிர போட்டியாளரா? :

இவர் பிஜேபியின் B – டீம், இவர் திமுகவுக்கான சவாலா? மீண்டும் நடிகரே நாடாளலாமா? தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்புவதில் வெற்றி பெறுவாரா? வெளி மாநிலத்துக்காரர் தமிழ் நாட்டை எப்படி ஆள முடியும்? பிரச்சார வியூகம், நிதி திரட்டும் பணி போன்ற கடுமையான சவால்களை சமாளிப்பாரா? இவர் அரசியலில் இன்னொரு MGR ஆ? இல்லை சிவாஜியா? சிரஞ்சீவியும் அவரை அரசியலில் பின்னிருந்து இயக்கிய மைத்துனரும் கூட்டி கழித்து பார்த்ததில் அதிக நட்டம் அடையாததைப் போல இவரும் ஆவாரா? என்ற வாதங்களுக்குள் எல்லாம் நான் போகவில்லை.

இத்தனை அழுத்தங்களால் அறிவிப்பை வெளியிட்ட அவர், இதனை முன்னெடுப்பதில் நிஜமாகவே தீவிரம் காட்டுவாரா என்பதே கூட எனது சந்தேகம். பெயரளவில் அறிவித்துவிட்டு, அதன் மூலம் பல ஆண்டுகள் காத்திருப்பினால் விரக்தியின் விளிம்பில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தி, எதிர்வரும் படங்களின் வணிகத்தை உறுதி செய்துவிட்டு இதே நிலையை (status-quo) தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்னும் சில காலம் எதைப்பற்றியும் பேச வேண்டாம், போராட்டம் நடத்த வேண்டாம், குறை கூற வேண்டாம் என்ற அறிவிப்புகள் என் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் எதுவும் நடக்கலாம். சூழ்நிலை, உடல்நிலை என கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட காரணிகள் நிறைய இருக்கின்றன. அவை இந்த சூழ்நிலைக்கைதி தப்பிப்பதற்கு வழி செய்யலாம். எவர் கண்டது? காலம் பதில் சொல்லட்டும்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thalaivar rajini a view

Next Story
சிதம்பரம் பார்வை : 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் – புதிய பொய்.Tamilnadu jobs
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com