சொன்னது கோடி, கிடைத்தது லட்சம்

கடந்த மூன்றாண்டுகளாக ரயில் பின்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணன்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. பல்வேறு இமாலய வாக்குறுதிகளை முன்வைத்து 2014 மக்களவைத் தேர்தலில் இமாலய வெற்றிபெற்ற பாஜக அரசு இன்னும் பல முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை. அவற்றில் மிக முக்கியமானது வேலைவாய்ப்பு உருவாக்கம்.

3 ஆண்டுகளாகப் பொய்த்துவரும் வாக்குறுதி

2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்களித்தது பாஜக. ஆனால் ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடையைவிருக்கும் நிலையில் சில லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன என்பது மட்டுமல்லாமல் பலர் வேலை இழக்கும் நிலையும் அதிகரித்துவருகிறது.

கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் திட்டமிடல் துறையின் இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துவருவதை ஒப்புக்கொண்டுள்ளார். 2016ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 5%இலிருந்து 5.2%ஆக உயர்ந்துள்ளது.

1990களில் இந்தியாவின் மக்கள்தொகை மிகவும் அதிகரிக்கத் தொடங்கியது. 90களில் பிறந்தவர்கள் இப்போது கல்வி முடித்து வேலைச் சந்தைக்குள் நுழையும் இளைஞர்களாகியிருக்கிறார்கள். அதன்படி ஆண்டு ஒன்றுக்குச் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் புதியவர்கள் வேலைச் சந்தைக்குள் நுழைகிறார்கள். ஆனால் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2015இல் ஒரு லட்சத்து 50 ஆயிரம்; 2016இல் இரண்டு லட்சத்து 30 ஆயிரம். இதோடு தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐடி) ஆட்குறைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தத் துறையைச் சார்ந்துள்ள வேலைகளும் இல்லாமல் போகும்.

அறிவிக்கப்படாத மந்த நிலை?

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பின்மை எப்போதும் மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. 2000க்குப் பிறகு நிகழ்ந்த ஐடி துறை புரட்சியால் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. புறநகர்கள், சிற்றூர்கள், கிராமப் புறங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு ஐடி வேலையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சொகுசான வாழ்க்கையும் கிடைத்தது. ஆனால் அதுவும் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வடைந்துவருகிறது. நாடெங்கும் பல ஐடி நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் அதிர்ச்சிகரமான செய்தி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

2008இல் உலகப் பொருளாதார மந்த நிலை உருவானபோது பன்னாட்டு நிறுவனங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்தது. ஆனால் அது மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் முன் கட்டுப்படுத்தப்பட்டது. உலக பொருளாதார மந்த நிலையின் தாக்கம் இந்தியாவில் அப்போது பெரிதாக இல்லை என்பதே பொருளாதார வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.

மாறாக இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட மந்த நிலை எதுவும் இல்லாமலே ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்துவருகிறது. சென்னையில் ஐடி துறையிலும் இதர பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்துவரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்கள் போராடத் தொடங்கியிருக்கின்றனர்.
இதற்கு சர்வதேச சந்தை நிலவரம் மந்தமாக இருப்பதும் முக்கியமான காரணம் என்றாலும் அதை மட்டும் சொல்லி இந்திய அரசு தப்பித்துவிட முடியாது. ஏனென்றால் அதையெல்லாம் சமாளிப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தித்தான் தனிப் பெரும்பான்மை ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றது பாஜக.

தேவை உடனடி கவனம்

2014 தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு முக்கியக் காரணம அப்போது ஓட்டுப்போடும் வயதை அடைந்திருந்த கோடிக் கணக்கான இளைஞர்கள் அவரது வளர்ச்சி முழக்கத்தால் ஈர்க்கப்பட்டதுதான். அவர் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் அதிகரிப்பார் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.  ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக ரயில் பின்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டாண்டுகளில் மிகத் தீவிர கவனம் செலுத்தி ஒழுங்காகத் திட்டமிட்ட துரித நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தவில்லையென்றால் 2019 மக்களவைத் தேர்தலில் இது ஒரு மிகப் பெரிய தேர்தல் பிரச்சினையாக ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை.

×Close
×Close