பிக் பாஸ் விரிக்கும் வலை

ரியாலிட்டு ஷோ என்ற பெயரில் எப்படி டிவி தொடரை பிக் பாஸ் என்ற பெயரில் நடத்துக்கிறார்கள் என்பதை விவரிக்கிறார், கட்டுரையாளர் மித்ரன்.

மித்ரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்திவருபவர்கள் இப்போது புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள். ஆம். அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது. ஒருவேளை அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகவே நடந்திருக்கலாம். பிக் பாஸ் பெற்றுவரும் வெற்றி அவர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கும்.

big boss 0-0
ரியாலிட்டி ஷோ என்னும் பெயரால் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் திட்டமிட்டு கவனமாக நடத்தப்படும் ஷோ என்பது ஊடகங்களைப் பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ளவர்களுக்குத் தெரியும். அந்த ஷோவில் ஒவ்வொரு நாளும் நடக்கும் விஷயங்களும் அதில் அரங்கேறும் நிகழ்வுகங்களும் திட்டமிடப்பட்டவை. அவற்றில் பிரதிபலிக்கும் சோகம், மகிழ்ச்சி, பொறாமை, காதல், உற்சாகம் ஆகிய எல்லாமே தொலைக்காட்சித் தொடரைப் போல முன்னமே திட்டமிட்டு நேர்த்தியாகவோ கொஞ்சம் சுமாராகவோ நடிக்கப்பட்டு அரங்கேறும் காட்சிகள். ஆனால், திட்டமிட்ட நாடகம் என்று தெரியாமல் பார்த்துக்கொள்வதில்தான் நிகழ்ச்சியின் வெற்றி இருக்கிறது. நாடகம் என்று தெரிந்துவிட்டால் பாரவையாளர்கள் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். நல்ல காட்சி, நல்ல நடிப்பு / மோசமான காட்சி, சுமாரான நடிப்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கே என்ன நடக்கிறது?

ஏன் நாம் விவாதிக்கிறோம்?

பொது வெளிகளில், குறிப்பாகச் சமூக ஊடகங்களில் பிக் பாஸ் பற்றிய பதிவுகள், விவாதங்கள் பொங்கி வழிகின்றன. ஒவ்வொரு நாளும் உள்ளே ‘நடக்கும்’ சங்கதிகள் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் மீது அனுதாபம், சிலருக்குக் கண்டனம், சிலருக்கு ஆலோசனைகள், பாராட்டுகள் என்று சமூகம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மனிதர்களைப் பற்றி அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறது. லிஃப்டில் செல்லும்போது, “ஏன் எல்லாரும் சேர்ந்து அந்தப் அக்காவை அழ வெக்கறாங்க?” என்று ஒரு குழந்தை அப்பாவித்தனமாகத் தன் அம்மாவிடம் கேட்டதைப் பார்க்க முடிந்தது. அதே அப்பாவித்தனம்தான் பொதுப் பார்வையாளர்களிடத்திலும் வெளிப்படுகிறது.

big boss 2-2
இல்லாவிட்டால் பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்தச் சமூகம் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளுமா? ஜூலிக்காக அனுதாபம், காயத்ரி, ஆர்த்தி மீது கோபம், கஞ்சா கறுப்புக்குச் சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள், அவதூறு சுமத்தப்பட்ட பரணிக்காகப் பொங்கி எழுதல், ‘சேரி பிஹேவியர்’ என்னும் சொல்லைக் கேட்டு ஆவேசம் எனத் தமிழ்ச் சமூகம் பிக் பாஸின் நிகழ்வுகளுக்கேற்பப் பொங்கிப் பொங்கி அடங்குகிறது. அந்த வீட்டுக்குள் நடப்பவை எல்லாமே நாடகம். அந்த நாடகம்கூடத் திறமையாக அரங்கேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.

நன்றாக யோசித்துப் பாருங்கள். பரணி வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டிப் பாருங்கள். அவர் சுவர் ஏறிக் குதிக்க முயற்சி செய்தபோது யாருமே அவரைத் தடுக்கவில்லை. அப்படி எல்லோரும் வெறுக்குமளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்? அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த வீட்டில் தன்னால் இருக்க முடியவில்லை என்றார். எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறார். வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வதில் சில குறைகள் இருந்திருக்கலாம். ஆனால், இதெல்லாம் அவரை எல்லோரும் சேர்ந்து வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு சீரியஸான குறைகளா? அவர் எக்கேடு கெட்டும் போகட்டும் என்று கைகழுவி விடும் அளவுக்குத் தீவிரமானவையா?

big boss 3-3
குறிப்பாக, எப்போதும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் பேசும் கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோர்கூட ஏன் அவரைத் தடுக்கவில்லை? வெளியே போக வேண்டுமென்றால் பிக் பாஸிடம் சொல்லிவிட்டுக் காத்திருங்கள் என்று ஏன் அறிவுரை வழங்கவில்லை? அல்லது அவரது நிலை கண்டு வெறுத்தோ, இரக்கப்பட்டோ அவரை எளியேற்ற ஏன் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கவில்லை? அவர் கஷ்டப்பட்டுச் சுவர் ஏறும்போது ஏன் வேடிக்கை பார்த்தார்கள்? ஏனென்றால் அப்போதுதான் அந்த நாடகத்தில் சுவாரஸ்யம் இருக்கும்.

பலியாடும் வில்லிகளும்

ஜூலி விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கும் காயத்ரி, ஆர்த்திக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்க்கும் யாருக்கும் ஜூலியின் மேல் அனுதாபம் ஏற்படும். ஃபேக் என்று சக மனிதரை முகத்துக்க்கு நேராகச் சொல்லும் உரிமையை ஆர்த்திக்கு யார் கொடுத்தது? அதுபற்றி பிக் பாஸோ அந்த வீட்டின் தலைவரோ ஏன் கேட்கவில்லை? அவர் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் ஆர்த்தி ஏன் அவரை விடாமல் காய்ச்சிக்கொண்டிருக்கிறார்? சமாதானம் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த காயத்ரி தானும் களம் இறங்கி ஜூலியை வறுத்து எடுத்தது ஏன்? அதன் பிறகு ஜூலி இறங்கி வந்து பணிவாகப் பேசும்போதுகூட (காலில் விழாதது ஒன்றுதான் குறை) காயத்ரி ஏன் அவரை இளக்காரமாக நடத்துகிறார்? பிறர் இதையெல்லாம் ஏன் கண்டும் காணாமலும் செல்கிறார்கள்?

big boss 4-4
ஏனென்றால், இவை எல்லாமே நாடகம். அந்த நாடகத்தில் பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெற சில பலிகடாக்கள் தேவை. கோபத்துக்கு இலக்காகச் சில வில்லன்கள் / வில்லிகள் தேவை. இந்தச் சண்டையைத் தூண்டிவிடச் சில கோள்மூடிகள் தேவை. கண்டும் காணாமலும் இருந்து இதற்குத் தூபம் போடச் சில அலட்சிய ஆத்மாக்கள் தேவை. இதையெல்லாம் மனதில் கொண்டு பாருங்கள். எல்லாமே திட்டமிட்டபடி நடப்பது தெரியும்.

ரொமான்ஸ், நட்பு, பொறாமை, கவர்ச்சி, வில்லத்தனம், அப்பாவித்தனம், ஏமாளித்தனம், தலைமைப் பண்பு, நடனம், பாட்டு, நகைச்சுவை என்று மசாலா படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் பிக் பாஸ் ஷோவில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லோரும் நல்லவர்களாக, கண்ணியமானவர்களாக, பொது இடத்தில் நடந்துகொள்ளும் இங்கிதத்தைக் காட்டுபவர்களாக இருந்துவிட்டால் இந்த ஷோவைத் தொடர்ந்து 100 நாட்கள் யாரும் பார்க்க மாட்டார்கள். விவாதிக்க மாட்டார்கள். தொடர்ந்து பார்க்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பதுதான் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கம். அது நன்றாகவே நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

நாமும் பங்கேற்பாளர்கள்தான்

ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் அரங்கேற்றும் நாடகத்தில் நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்ல. பங்கேற்பாளர்கள். நாமும் மானசீகமாக அந்த வீட்டுக்குள்தான் இருக்கிறோம். அது பற்றிப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். எப்படிப்பட்ட விவாதங்கள் வர வேண்டும் எனபதுகூடப் பெருமளவில் திட்டமிடப்பட்டதாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் மறு நாளைய விதாதத்துக்கான ஏதொ ஒன்றை வைத்திருப்பது தற்செயலானதல்ல. பிக் பாஸ் தினமும் நமக்கு வலை விரிக்கிறார். நாம் அதில் வலியச் சென்று விழுகிறோம். அப்படி விழாமல் இருந்தால் அதை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்த்துவிட்டு அமைதியாகக் கடந்துபோயிருப்போம்.

இதில் வரும் சில காட்சிகள், வசனங்கள் ஆட்சேபத்துக்கும் கண்டனத்துக்கும் உரியவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவற்றை ஒரு திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரிலோ வரும் ஆட்சேபத்துக்குரிய அம்சங்களை விமர்சிப்பதுபோலத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர, நிஜமான சம்பவங்களை விமர்சிப்பதுபோல் அல்ல. காரணம், எல்லாமே நாடகம். நாம் நாடகத்தை ரசிப்போம், விமர்சிப்போம். நாடகம் என்னும் புரிதலுடன் ரசிக்கலாம், விமர்சிக்கலாம். நடப்பதையெல்லாம் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நீங்கள் பார்வையாளராக இருக்கப்போகிறீர்களா, அல்லது பாத்திரமாக மாறப்போகிறீர்களா?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close