கதிர்
தண்ணீர் பஞ்சம் இவ்வளவு தலை விரித்து ஆடும்போது மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. உள்ளூர் அளவில் ஆங்காங்கே சாலை மறியல் செய்கிறார்களே தவிர, ஒருங்கிணைந்த போராட்டம் எதையும் தமிழகம் இன்னும் பார்க்கவில்லை.
யாருக்கு எதிராக போராடுவது? யார் தலைமையில் போராடுவது?
எங்கே போனாலும் முகத்தில் அறைவது போல வந்து விழுகின்ற எதிர்க் கேள்விகள் இவை. தொடர்ந்து பல ஆண்டுகளாக காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுக்கிறது. நாட்டின் அதிக பட்ச அதிகாரம் கொண்ட சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகளும் தமிழக அரசும் வழக்கு தொடுக்கிறார்கள். தண்ணீர் திறந்து விடுமாறு கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது. கர்நாடகா அரசு அந்த ஆணையை புறக்கணிக்கிறது. அப்பட்டமான சட்ட மீறல். அரசாங்க தலையீடு இல்லாமல் காவிரி நீர் நிர்வாகம் நடக்க ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணையிடுகிறது. மத்திய அரசால் அந்த ஆணையை அமல்படுத்த முடியவில்லை.
சராசரி குடிமகன் சட்டத்தை மீறி நடந்தால் கைது, வழக்கு, சிறை, அபராதம் என தண்டனைகளை சந்திக்க நேர்கிறது. உச்ச அதிகாரம் படைத்த நீதிமன்றத்தின் உத்தரவையே காலில் போட்டு மிதிக்கும் மாநில அரசை வழிக்கு கொண்டுவர மத்திய அரசால் இயலவில்லை. தனக்கு இடப்பட்ட ஆணையை நிறைவேற்றவும் வக்கில்லை. இரு அரசுகளையும் என்ன செய்துவிட்டது சுப்ரீம் கோர்ட்? அண்டை மாநில அரசை கோர்ட்டுக்கு இழுத்து, அதிகபட்ச ஊதியம் வாங்கும் வக்கீல்களை அமர்த்தி வாதாடி, சாதகமான ஆணை வாங்க மட்டும்தான் முடிந்தது தமிழக அரசால். தண்ணீர் வாங்க முடியவில்லை.
வழக்கு தொடர்வதே வீரத்தின் அடையாளம், சாதகமான தீர்ப்பை வாதாடிப் பெறுவதே சாதனையின் அடையாளம் என்று பெரும்பாலான மக்களை நம்பவைத்து ஏமாற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதை இப்போது தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
அது மட்டுமல்ல. வெகுஜன ஊடகங்களால் விரிவாக விவாதிக்கப்படாத வேறு சில உண்மைகளும் மக்களின் பரிசீலனைக்கு கிடைத்திருக்கிறது இப்போது. டெல்லியில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் இருந்து சென்ற விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு பெரிய அளவில் இங்கே மக்களின் ஆதரவு பீறிட்டுக் கிளம்பாத காரணமும் அதில் அடங்கிக் கிடக்கிறது.
அரசின் வேளாண் கொள்கை எந்த அடிப்படையில் எழுதப்படுகிறது, விவசாயம் சார்ந்த திட்டங்களின் பலன்களை அனுபவிப்பது யார், அதிக கடன் பெறுவது யார், ஒழுங்காக திருப்பி செலுத்துவது யார், அறவே தவணை செலுத்தாதவர்கள் யார் யார் என்பதெல்லாம் இன்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இலவச மின்சாரம், உர மானியம், பயிர் காப்பீடு, வருமான வரி விலக்கு முதலான விவசாயி நலன் பாதுகாப்பு திட்டங்களின் நிஜமான பயனாளிகள் யார் என்று ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னமும் கொஞ்சம் உயிர்ப்புடன் இயங்கும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் கேட்ட மாத்திரத்தில் வீட்டில் சுருட்டி வைத்திருக்கும் பட்டியலை எடுத்து வந்து வாசிக்கிறார்கள்.
ஆக, மக்கள் வீதியில் இறங்கிப் போராட முன்வரவில்லை என்பதற்குக் காரணமே இந்த விழிப்புணர்வுதான். அரசாங்கம், அதிகாரிகள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் கூட்டணி அமைத்து நாட்டைச் சுரண்டும் சூழலில் அப்பாவி பொதுமக்கள் யாருடைய தலைமையில் ஒருங்கிணைவார்கள்? கேட்டாலே கொதிக்கிறார்கள்.
“சீசனில் மட்டும் இங்கே சின்னதாக கடை போட்டு பிழைத்துக் கொண்டிருந்தோம். ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் உள்ளாட்சி நிர்வாகம் மூக்கை நுழைத்தது. அன்றே எங்கள் பிழைப்பில் மண் விழுந்தது. இத்தனை கடைகள், ஒவ்வொன்றும் இத்தனை சதுர அடி, அதற்கு இவ்வளவு குத்தகைத் தொகை என்று நிர்ணயம் செய்து ஏலம் நடத்தினார்கள். தேதியும் இடமும் தெரிவிக்காமலே ஏலம் முடிந்ததாக சொல்லி ஒப்பந்ததாரர்கள் பெயர்களை அறிவித்தார்கள். எல்லோருமே வெளியூர்காரர்கள் என்பது மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் சீசன் கடைகள் தொடங்கி பொருட்காட்சி வரை அத்தனை குத்தகையும் எடுப்பது அவர்கள்தான். ஏலம் எடுத்த தொகையைவிட 20 மடங்கு அதிகம் கொடுத்தால், அவர்கள் பெயரில் கடை நடத்திக் கொள்ளும் உரிமையை உங்களுக்கு தருவார்கள். 30 ஆயிரம் என்றால் 6 லட்சம். தவணையெல்லாம் கிடையாது. முழுத்தொகை ஒரே பேமென்ட். ரசீதெல்லாம் கிடையாது” என்று ஒரு சுற்றுலா தலத்தில் விவரம் சொன்னார்கள் இளைஞர்கள்.
அந்த தொகைக்கு எப்படி கட்டுப்படி ஆகும் என்றால், அதற்கு சொல்லும் பதில் இன்னும் அதிர்ச்சி தருகிறது.
“சீப்பான சரக்குகளை குவித்து மும்மடங்கு நாலு மடங்கு லாபத்துக்கு விற்க அவர்களே அட்வைஸ் தருகிறார்கள். தரம் குறைந்த, போலி அயிட்டங்களையும் விற்க சொல்கிறார்கள். ’பல ஆயிரம் செலவு செஞ்சு இங்க வர்றவன் அஞ்சு பத்து ஜாஸ்தினு உங்கிட்ட சண்டைக்கா வருவான்? வந்தா எங்களுக்கு மிஸ்டு கால் குடு..’ என்று சகஜமாக சொல்கிறார்கள். அப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்க மனமில்லாமல் நாங்கள் வியாபாரத்தையே விட்டு விட்டோம்” என்றார்கள்.
என்ன கொடுமை, இதை கேட்பார் இல்லையா என்று உங்களுக்கும் நெஞ்சு கொதிக்கும்தான். பாதிக்கப்பட்டவர்களும், அதை பார்த்து நொந்தவர்களும் சும்மா இருக்கவில்லை. போலீஸ், கலெக்டர், முதல்வர் அலுவலகம் என்று வரிசையாக புகார் அனுப்பினார்களாம். உள்ளூர் நிருபர்களை அழைத்து சொல்லியிருக்கிறார்கள். ஒருமுறை ஒளிபரப்பு அல்லது பிரசுரம் ஆனதோடு சரி. விசாரித்தால் ‘இதெல்லாம் எல்லா ஊரிலும் நடக்கிற விஷயம்தானே, வேறு ஏதாவது ஜனங்களை கவரும் வகையில் செய்தி தேடுங்கள்’ என்றதும் நிருபர்கள் திசை மாறிவிடுகிறார்கள். வழக்கு தொடர முயன்றால் வக்கீல்களே சலித்துக் கொள்கிறார்களாம்.
பேராசை பிடித்த மனிதர்கள் எல்லோரும் கைகோர்த்து கொடுமை செய்யும்போது மற்றவர்கள் யாரிடம் போய் முறையிட முடியும்? உச்ச நீதிமன்றமே தனது ஆணைகள் நிறைவேற்றப்படாத அவலத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய சூழலில் கீழ் கோர்ட்டுகள் எப்படி பொதுநல வழக்குகளை கையாளத் துணியும்? கடவுளிடம்தான் முறையிட முடியும். ஆனால் அந்தக் கடவுள்கள் குடியிருக்கும் கோயில்களில் நிலவரம் எப்படி இருக்கிறது? கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்க ரெட்டைக் கொடுமை தலைவிரிச்சு ஆடுச்சாம் என்பதைப் போல, மக்கள் மன நிம்மதி நாடி செல்கின்ற கோயில்களில் நடக்கும் முறைகேடுகள் கொஞ்சமல்ல. புகழ்பெற்ற ஐந்தாறு திருக்கோயில்களின் நிலவரத்தை நேரில் மதிப்பிட இந்தப் பயணம் வாய்ப்பளித்தது. வழக்கம்போல் அங்கும் பலரோடு உரையாடி மனமறிய முடிந்தது.
“சோகத்தோட கோயிலுக்கு வந்தேங்க. கோபத்தோட ஊருக்கு போறேங்க..” என்று கண்கலங்கினார், குடும்பத்துடன் வந்திருந்த ஒரு பக்தர்.
நாளை பார்க்கலாம்