Advertisment

பிணம் தின்னும் சாத்திரங்கள் 5 : தறுதலையான தமிழகம்

இன்றைக்கு மக்களிடையே நிலவும் விரக்தி கலந்த மனோபாவம் நீடித்தால் மாபெரும் தலைவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் கரைந்து போகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kathir - Tamilnadu - Encroachment

கதிர்

Advertisment

திடீரென்று பெற்றோர் இருவரும் இறந்துவிட்டால் குழந்தைகள் கதி என்ன?

தாய் தந்தை இல்லாத குழந்தைகள் தறுதலைகளாக வளரும் என்பார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் நிலைமை இன்று அப்படித்தான் இருக்கிறது.

வழி நடத்த தலைவன் இல்லை, சீராட்ட தலைவி இல்லை, கண்டிக்க ஆசான் இல்லை, தண்டிக்க நாட்டாமை இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல, எங்கே பார்த்தாலும் அவரவர் இஷ்டத்துக்கு அத்தனை விதிகளையும் மீறிக் கொண்டிருக்கிறார்கள்.

மயிலாப்பூர் மாடவீதியை அழகுபடுத்த அகலமாக்கப்பட்ட நடைபாதையில் வியாபாரிகள் முன்னைவிட விசாலமாக கடை பரப்பி நாற்காலி போட்டு அமர்ந்து இருக்கிறார்கள். ஆக்கிரமித்திருக்கும் அத்தனை கடைகளிலும் எல்சிடி விளக்குகள். ஒரே இடத்தில் இருந்து மின்சார இணைப்பு.

கேகே நகரில் சைக்கிளுக்கு போட்ட தனிப்பாதையில் வரிசையாக கார்களை ஏற்றி மறைத்திருக்கிறார்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் கடைக்காரர்கள் இருபுறமும் தலா 100 சதுர அடி கடைபரப்பை விஸ்தரித்துள்ளார்கள்.

மரியாதைக்கு பெயர் வாங்கிய கோயமுத்தூர் மக்கள் ஆளே இல்லாத சாலைகளிலும் விடாமல் ஆரன் அடித்தபடி வண்டி ஓட்டுகிறார்கள். மதுரை, திருநெல்வேலியில் எந்த சாலையில் வேண்டுமானாலும் நட்ட நடுவில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போகலாம். கேட்பதற்கு ஆளில்லை.

எத்தனை தடைகள் போட்டாலும் திருட்டு மணல் லாரிகள் திருச்சி மேம்பாலத்தில் வரிசை வரிசையாக போய்க் கொண்டிருக்கின்றன. எல்லா ஜெயில்களிலும் ஜேமர் வைத்துவிட்டதாக அரசு சொன்னாலும், கைதிகள் செல்போன் பேசுவது குறையவே இல்லை. இரண்டு ஊர்களில் கைதிகளுக்கு கால் போட்டு பேசினார்கள் நண்பர்கள்.

எந்தத் துறையில் ஆள் எடுப்பதாக சட்டசபையில் அறிவிப்பு வந்தாலும் அடுத்த நொடியே வசூல் தொடங்கி விடுகிறது. லேட்டஸ்டாக கல்வி அமைச்சர் அறிவித்த ஆசிரியர் நியமன அறிவிப்பும் கல்வித்துறை புரோக்கர்களை சுறுசுறுப்பாக களம் இறங்க வைத்துள்ளது.

எல்லாம் முறைப்படி தேர்வு ஆணையம் அல்லது வாரியம் மூலம் நடக்கிறது என்கிற விளக்கம் எவராலும் நம்பப்படவில்லை. விலைப்பட்டியல் வைக்காத குறையாக 4 லட்சம் தொடங்கி 40 லட்சம் வரை லஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள். ஸ்லெட், நெட், நீட் என்று எத்தனை ஃபில்டர்கள் போட்டாலும் இறுதிச் சுற்றான இன்டர்வியூவில் சுழித்து விடுகிறார்கள். அதுவரை ஆன்லைனாக இருந்த தேர்வு முறை அங்கே ஆஃப்லைனுக்கு மாறிவிடுகிறது.

Kathir - Tamilnadu - Univercity of Chennai

“உங்களுக்கு எல்லா தகுதியும் இருப்பதாலும், நேர்முக தேர்வில் சிறப்பாக பதிலளித்து இருப்பதாலும் சலுகை தருகிறோம். 35 என்பதை 30 ஆக குறைக்கிறோம். சம்மதம் என்றால் இன்று இரவுக்குள் இதே நம்பரில் தெரியப்படுத்துங்கள். நன்றி, வணக்கம்” என்று அழகான தமிழில் மென்மையாக பேசுகிறார்கள் செல்போனில். 10 கோடி கொடுத்து துணைவேந்தர் ஆனவர் வேறெப்படி சரிக்கட்டுவது?

அரசுத்துறைதான் என்று இல்லை. தனியார் துறைக்கும் பலமாக பரவியிருக்கிறது வேலை நியமன ஊழல். பஞ்சாலை, லாரி கம்பெனி, பத்திரிகை அலுவலகம், செக்யூரிட்டி ஏஜன்சி, தேவாலயம் என்று எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உருவாகிறதோ அனைத்தும் சந்தையில் விலை பேசப்படுகிறது. கணிசமான சம்பளம் வாங்கும் ஆசிரியர் குறைந்த கூலிக்கு இன்னொரு ஆள் நியமித்து விட்டு இவர் வட்டித் தொழிலில் மும்முரம் காட்டும் கொடுமையும் ஒழியவில்லை.

நல்லவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பற்றி பேசவில்லை. அந்த எண்ணிக்கை அழிந்துவிடும் அளவுக்கு மற்றவர்கள் தொகை பெருகி வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

தவறு செய்பவர்களிடம் தயக்கம் இல்லை. மனசாட்சிக்கு பயந்து ஒளிவு மறைவாக முறைகேடு செய்வதும் இல்லை. பகிரங்கமாக எந்த உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்கள். கேட்டால் யார் இங்கே யோக்கியன் என்று எதிர்க் கேள்வியை வீசுகிறார்கள்.

காக்கிச் சட்டை மீதிருந்த பயம் அறுந்து விட்டது. தனியாக சிக்குபவனை தவிர எல்லோரும் ஏகத்துக்கு எதிர்க்கேள்வி போட்டு போலீசை விரட்டுகிறார்கள். கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினால் தெரியும் என்று ஏட்டு மிரட்டினால், கர்ணன் கோர்ட்டா தினகரன் கோர்ட்டா என்று கலாய்க்கிறார்கள்.

மொத்த இந்தியாவிலும் சட்டத்துக்கும் நீதிக்கும் மனமுவந்து தலை வணங்கும் மக்கள் தமிழர்கள்தான் என்று ஒரு கருத்து இருந்தது. நீதிமன்றம் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருந்த அந்த நம்பிக்கை பலத்த அடி வாங்கி இருக்கிறது. ஒவ்வொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு வழங்குவது, ஊரறிந்த குற்றங்களில் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் விசாரணை, தண்டனை, சிறை என்ற சட்டத்தின் எந்தக் கரங்களாலும் தீண்டப் படாதது, தப்பித் தவறி தண்டனை விதிக்கப்படும் பிரமுகர்கள் சிறைக்குள் இருந்தே ராஜ்யம் செய்ய அனுமதிக்கப்படுவது. இவையெல்லாம் மக்கள் மனதை உறுத்துகின்றன. கணக்குப்புலி பெங்களூர் குமாரசாமி ஏற்படுத்திய சேதத்தின் பாதிப்பு சரியாகவே இன்னும் நூறு வருடம் தேவை போல தெரிகிறது.

கோர்ட் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும்போது நீதிபதிகள் கடுமை காட்டாமல் ஒதுங்கிக் கொள்வதும் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. ”ஒவ்வொரு முறையும் வழக்காடிதான் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அதிகாரிகளை இழுக்க வாரண்ட் போட வைக்கிறார். தனது ஆணைகள் நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்பதை நீதிபதிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதில் என்ன சிரமம் இருக்கிறது?” என்று கேட்டார் சாலைக்காக நிலம் கொடுத்து 12 வருடமாக நிவாரணம் கிடைக்காமல் போராடும் ஒரு விவசாயி.

Kathir - Tamilnadu - Palar River

ஊடகங்கள் சொல்வதை ஒன்றுக்கு பாதிதான் நம்புகிறார்கள். பிரசுரமாகும் அல்லது ஒளிபரப்பாகும் ஒவ்வொரு செய்திக்கும் என்ன பின்னணி என்று அசராமல் அலசுகிறார்கள். எந்த ஊடகத்தின் உரிமையாளர் சின்னம்மாவை பார்க்க நடையாக நடந்தார் என்பதில் தொடங்கி, எந்த பத்திரிகையின் முதலாளி எம்.பி பதவிக்காக ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டுகிகிறார் என்பது வரை விவரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மக்களிடம் பரஸ்பர நம்பிக்கை துருப் பிடித்து வளைந்திருக்கிறது. யாரும் யாரையும் முழுமையாக நம்புவது இல்லை. நல்லது சொன்னாலும் செய்தாலும் அதற்கு உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறார்கள்.

மதம் ரீதியாக முதலிலும், சாதி ரீதியாக பிறகும் தீவுகளாக மாறிய தமிழ் சமூகம் இன்று அதைவிட குறுகிய குழுக்களாக பிரிந்து குட்டைகளாக கிடக்கின்றன.

பொதுவாகவே அரசியல்வாதிகளை மதிக்காத மக்கள் இன்றைக்கு மிக கேவலமாக அவர்களை விமர்சிக்கிறார்கள். ஜெயலலிதா அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மறு வாரத்தில் ஊர் வாய் அசையத் தொடங்கி விட்டது. அப்போது தொடங்கி இன்னமும் முடியாத அவல நாடகத்தின் அத்தனை காட்சிகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். காரித் துப்புகிறார்கள்.

பொதுவாக ஏற்கக்கூடிய சில சித்தாந்தங்கள் உண்டு. அவற்றை யாரும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டதுதான் இதுவரை நாம் பார்த்தது. அந்தக் காலம் மலையேறி விட்டது.

சுழலும் ஏர் பின்னது உலகம் என்பதை ஏற்று, விவசாயிகள் என்ன கேட்டாலும் கொடுப்பது அரசின் கடமை என்று எல்லோரும் நம்பினார்கள். இன்று கடன்களை ரத்து செய்ய விவசாயிகள் போராடுவது டூ மச் என்கிறார்கள்.

“இலவச மின்சாரம், வருமான வரி விலக்கு, உர மானியம், அரசு கொள்முதல், ஊக்கத்தொகை, பயிர் கடன், காப்பீடு அது இது என்று விவசாயிகளுக்கு அரசு ஏகப்பட்ட சலுகைகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. கடனை வாங்க வேண்டியது, பிறகு ரத்து செய் என்பது என்ன நியாயம்? வாங்கிய கடனை திருப்பி செலுத்துபவர்கள் மூடர்களா? கடனையெல்லாம் தள்ளுபடி செய்தால் எல்லோர் தலையிலும்தானே வரிச்சுமை விழும்?” என்று வாதிட்டார் ஒரு வர்த்தகர்.

“இழப்பு என்பது எல்லாருக்கும்தான் வருகிறது. திடீரென்று உடலுக்கு ஏதாவது ஆனால் சம்பளக்காரன் குடும்பமே நடுத்தெருவுக்கு வருகிறது. பிசினஸ் சரிந்தால் வியாபாரிக்கு இழப்பு. இப்படி எத்தனை பேருக்கு கடனையெல்லாம் ரத்து செய்ய முடியும்? பேங்கெல்லாம் திவாலானால் யாருக்கு நஷ்டம்?” என்று லாஜிக் பேசினார் இன்னொருவர்.

எல்லையில் இரவு பகலாக காவல் நிற்கும் ராணுவ வீரர்கள் மேல் மரியாதை இருந்தாலும், அவர்களுக்கு அரசு காட்டும் சலுகைகள் அதிகம் என்ற அதிருப்தியும் பரவலாக நிலவுகிறது.

”போலீஸ்காரர்கள் இறந்தால் 5 லட்சம், ராணுவ வீரர் இறந்தால் 50 லட்சம், விளையாட்டில் ஜெயித்தால் வீடு, கார், தங்கக்கட்டி என்று அள்ளிக் கொடுக்கிறதே அரசாங்கம், இதற்கு அர்த்தம் என்ன?” என்று ஒரு மாணவர் ஆவேசமாக கேட்டார்.

“அதெல்லாம் உயிருக்கு ஆபத்தான வேலை என்று தெரிந்துதானே சேர்கிறார்கள். அதே காரணத்தால்தான் அவர்களுக்கு அதிக சம்பளமும் படிகளும் சலுகைகளும் ஏற்கனவே கொடுக்கப்படுகின்றன. பத்து எதிரிகளை வீழ்த்தி வீர மரணம் அடைந்தார் என்றால் பதக்கமும் வாரிசுக்கு வேலையும் பண உதவியும் கொடுப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். முகாமில் தூங்கும்போது தீவிரவாதிகள் இருட்டில் வந்து சுட்டார்கள் என்றால் அதற்கெல்லாம் வீர மரணம் என்று சொல்லி அள்ளிக் கொடுப்பதை அந்த வீரர்களே விரும்ப மாட்டார்கள்” என்று அவரது நண்பர் தொடர்ந்தார்.

ஆறாவது ஊதியக் குழு, ஏழாவது ஊதியக் குழு என்று ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும் போதும் அரசு ஊழியர் அல்லாதவர்கள் மனதில் ஏக்கமும் கசப்பும் ஒன்றாக உருவாகிறது. ”தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதைக்கூட உறுதிப்படுத்த முடியாத அரசாங்கம், தனது ஊழியர்களுக்கு மட்டும் அதிகபட்ச ஊதியம், சலுகைகள், மருத்துவ காப்பீடு, பென்ஷன், கிராஜுட்டி என்று வரிக் கொடுக்கிறது. குடிமக்களை இரண்டு வகைப்படுத்தும் இந்த ஏற்பாடு ஆரோக்கிமானது அல்ல” என்று கருத்து சொன்னார் ஒரு மனித வள ஆய்வாளர்.

ஆனால், மக்களின் இந்த சிந்தனைக்கு பொருத்தம் இல்லாத நிகழ்வுகள்தான் ஊடகங்களில் பிரதான இடம் பிடிக்கின்றன. “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல யார் அப்பன் வீட்டுப் பணத்தை இப்படி எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது அரசு? குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவி என்றெல்லாம் செய்தி வருகிறது. அவ்வளவு பணம் அந்த வீரர் உயிரோடு இருந்தால் ஒருக்காலும் சம்பாதிக்க முடியாது. குடும்பத்தினரின் மனதில் தவறான எண்ணங்களை தூண்டக்கூடிய இதுபோன்ற செயல்களை அரசு தவிர்க்க வேண்டும்” என்று ஒரு ஆளுங்கட்சி பிரமுகரே ஆதங்கப்பட்டார்.

இங்கே வரிசையாக அடுக்கப்பட்ட பிரச்னைகளில் பெரும்பாலானவை பழசுதான். ஆனால் இன்று அவற்றின் தாக்கம் ஆழமாக இருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றின் மீதும், சக மனிதர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே போவது உண்மையில் ஆபத்தான விஷயம். அரசு தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்யும். குடிமக்களும் தங்கள் விருப்பம்போல் எப்படி வேண்டுமானாலும் நடப்பார்கள். யாருக்கும் யார் மீதும் கன்ட்ரோல் கிடையாது. அதைத்தான் அனர்க்கி என்பார்கள். தமிழ்நாட்டுக்கு பனானா ரிபப்ளிக் என்ற பட்டம் கிடைக்கும்.

அந்த நிலைமை வருமானால் அதற்குள் செத்துப் போவோம் என்றுதான் நாட்டை நேசிப்பவர்கள் கடவுளை வேண்டுவார்கள். பூச்சாண்டி காட்டவில்லை. பல நாடுகளின் சீரழிவை பார்த்தும் படித்தும் அறிந்துள்ளதால் சொல்ல வேண்டியிருக்கிறது: நிலைமை அனர்க்கியை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது.

எத்தனையோ குறைகள் இருந்தாலும் இந்தக் கட்டமைப்பை நிர்மாணிக்க நமது சுயநலமில்லாத தலைவர்கள் சுதந்திரத்துக்கு பிறகு மேற்கொண்ட முயற்சிகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. அவர்களின் உழைப்பு இன்று எதனோடும் ஒப்பிட முடியாதது. இன்றைக்கு மக்களிடையே நிலவும் விரக்தி கலந்த மனோபாவம் நீடித்தால் மாபெரும் தலைவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் கரைந்து போகும்.

Kathir- Tamilnadu - Madras-High-Court

பருவ மழை பொய்த்து, வற்றாத ஜீவ நதிகளும் வறண்டு கிடக்கும் ஒரு பரிதாபமான சூழ்நிலை உருவானதில் மக்களின் இந்த மன நிலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றே உள்மனம் சொல்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு படி முன்னேற்றமாவது ஏற்பட வேண்டும் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வேண்டும். அதை விடுத்து ஒன்றுக்கும் உதவாத பிரச்னைகளை ஊதி ஊதிப் பெரிதாக்கி ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி காலத்தை வீணாக்குகிறோம்.

நல்லது நடக்காமல் இல்லை. நல்லவர்கள் இல்லாமலும் போய்விட வில்லை.

குற்றாலம் அருவிகளில் ஜட்டியுடன் குடிகாரர்கள் கும்மாளம் போடுவதும், எண்ணெய் சீயக்காய் ஷாம்பு சோப்பால் இடத்தையே நாசப்படுத்துவதையும் தடுக்கவே முடியாது என்று மனதை தளரவிட்ட நிலையில், இன்று அங்கு காணும் மாற்றம் அதிசயிக்க வைக்கிறது. கோர்ட்டின் இடைவிடாத தலையீடும் கோர்ட்டுக்கு சளைக்காமல் அலைந்த ஆர்வலர்களின் அக்கறையுமே இந்த மாற்றத்துக்கு காரணம்.

தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கிய தகவல் நள்ளிரவில் கிடைத்திருக்கிறது. டிரைவர் ஏழை. லாரி உரிமையாளரோ நோய்க்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை. உள்ளூர் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தகவல் தெரிந்து தான் சார்ந்துள்ள அமைப்புக்கு தெரிவிக்க, அந்த அமைப்பினர் பம்பரமாக சுழன்றுள்ளனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் 20 பேருக்கு மேல் அவரவர் வாகனங்களில் வந்திறங்கியுள்ளனர். டிரைவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பது, போலீசுடன் ஒத்துழைத்து வழக்கு பதிவது, லாரியை பணிமனைக்கு அனுப்பி சரி செய்வது, சரக்குகளை மீட்டு வேறு வண்டியில் உரிய இடத்துக்கு அனுப்புவது என்று மளமளவென்று வேலைகள் நடந்துள்ளன.

மறுமுனையில் டிரைவரின் மனைவிக்கு தகவல் சொல்லி அவரை காரில் அனுப்புவது, பிள்ளைகளை வேறு வீட்டில் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்புவது (தேர்வு நேரம்), செலவுக்கு முன்பணம் கொடுப்பது, ஓனருக்கு தகவல் சொல்லி இன்சூரன்ஸ் க்ளெய்முக்கு உதவுவது என்று கிடுகிடுவென காரியங்கள் நடந்துள்ளன. பின் எல்லாம் சுகமே. டிரைவர் இந்து, ஓனர் கிறிஸ்துவர் என்பது கொசுறு.

இன்னும் இந்த நாடு பிழைத்துக் கிடக்கக் காரணமான இதுபோன்ற நல்ல உள்ளங்களையும் ஆங்காங்கே சந்திக்க முடிந்தது. வறண்ட மண்ணில் கோடை மழையாக இதம் தந்த கதைகளை காது குளிர கேட்டோம். இது நீடிக்குமா, நல்லது பெருகுமா என்பதுதான் ஏழரைக் கோடி ரூபாய் கேள்வி.

அரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் நாம் விரும்பும் சமூக மாற்றம் சாத்தியம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அத்தகைய அரசியல் மாற்றம் வருமா? யாரால் வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்?

நாளை பார்ப்போமா...

Tamilnadu Palar River Kathir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment