scorecardresearch

பிணம் தின்னும் சாத்திரங்கள்

செழிப்புக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சி வட்டாரத்தில் தென்னை மரங்கள் பழுத்த ஓலைகளுடன் வீசாத காற்றில் சிலையாக நிற்கின்றன.

Kathir - Tamil Nadu - Water problem 2

கதிர்

செய்தியாளனாக வேலை தொடங்கி நாற்பது ஆண்டுகள் ஆகிறது. இத்தனை மோசமான நிலைமையில் தமிழ்நாடு இருந்ததே இல்லை.

வெளித் தோற்றங்கள் உண்மையை உணர்த்துவது கிடையாது. பார்ப்பதற்கு ஆரோக்யமாக தோன்றும் ஒருவர் உடலுக்குள் பயங்கர நோய் மறைந்திருக்கலாம். அதை அறியாமல் அவரும் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கலாம்.

நமது மாநிலத்தின் நிலவரம் அதுதான்.

பரந்து விரிந்த நெடுஞ்சாலைகளில் விரையும் பளபளக்கும் கார்களும், சரவண பவன் ஆனந்த பவன்களில் காத்திருக்கும் கூட்டமும், மால்களில் உரசல்களை பொருட்படுத்தாமல் செல்போன்களில் செல்பி எடுக்கும் இளைஞர் பட்டாளமும், எல்லாவற்றுக்கும் மேலாக நாளின் பெரும் பகுதியை தனி மனித தாக்குதல்களில் விரயமாக்கிக் கொண்டிருக்கும் சமூக ஊடக சமுதாயமும் தமிழ்நாட்டின் உண்மையான நிலவரத்தை தமிழர்களே உணர முடியாமல் தடுக்கின்றன.

Kathir - Tamil Nadu - Water scarcity. 1

நான்கு வாரங்கள் அநேக மாவட்டங்களை குறுக்கு நெடுக்காக சுற்றி வந்தபோது புரிந்துகொண்ட கசப்பான நிஜம் இது. கண்ணில் பட்ட ஒவ்வொரு சராசரி மனிதனும் ஒன்றுக்கு மேல் சோகக்கதைகளை சுமந்து கொண்டு திரிவதை பார்க்க முடிந்தது. நகர எல்லைகளை தாண்டும்போது இந்தக் காட்சிகள் இதயத்தில் ஏற்படுத்தும் வலி கொஞ்சமல்ல.

தண்ணீர் பிரச்னை முதலாவது. இவ்வளவு கொடூரமான தண்ணீர் பஞ்சம் இதற்கு முன் எப்போது தமிழகத்தை தாக்கியது என்பதே நினைவில் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக அணைகளில் குட்டைகளாக தேங்கிக் கிடக்கும் தண்ணீர் எரிந்து முடிவதற்குள் அணைக்கப்பட்ட கொடும்பாவிகளை நினைவூட்டுகின்றன. விலங்குகள்கூட தாகம் தணிக்க முடியாத அந்தத் தண்ணீரையும் ஆவியாக உறிஞ்சிக் கொள்வதுதானே என்று தகிக்கும் சூரியனைப் பார்த்து சபிக்க வேண்டும் போலிருந்தது.

Kathir - Tamil Nadu -Water scarcity - dam 3
எல்லா அணைகளின் நிலைமையும் ஒரே மாதிரிதான் இருந்தது. தமிழகத்தில் இல்லாவிட்டாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் கிருஷ்ணராஜ சாகரில் நீர்மட்டம் உயர்ந்து, அங்கிருந்து திறக்கப்படும் நீரால் மேட்டூர் மட்டமும் உயர்வது வாடிக்கை. அதனால்தான் ஜூன் 12 என்பது மேட்டூர் அணை திறப்பு நாள் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருந்தது. அந்த தேதியில் மேட்டூர் நீர் மட்டம் 90 அடியாக இருந்தபோதே திறப்பதில் பிரச்னைகள். இம்முறை அணையில் நீர்மட்டம் 23 அடி என்றார்கள். தொடர்ந்து ஆறாவது ஆண்டாக தென்னகத்தின் நெல் களஞ்சியத்தில் குறுவை சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்ட பரிதாபம் தனிக்கதை.

குடிநீருக்காக பெண்கள் கலர் குடங்களை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் வெயிலில் நடந்து செல்வதை அனைத்து ஊர்களிலும் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தள்ளுவண்டியில் குடங்களை வரிசையாக வைத்து கொண்டு செல்கிறார்கள். 6, 8, 12 என குடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த தள்ளுவண்டிகளின் சைஸ் மாறுகிறது. நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆண்கள் டூவீலரின் இருபுறமும் குடங்களை தொங்கவிட்டு பல கிலோ மீட்டர் சென்று தண்ணீர் பிடித்து வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.

https://ietamilwpcontent.s3.amazonaws.com/uploads/2017/06/Kathir-Tamil-Nadu-Water-scarcity-Animal-Conflict.jpg

மனிதர்களுக்கு தண்ணீர் இல்லாத சூழலில் விலங்குகள் என்ன செய்யும், பாவம். காடுகள் வறண்டு நிலம் கொதிப்பதால் மிருகங்கள் காட்டை விட்டு வெளியேறி ஊர்களுக்குள் கூட்டமாகவும் தனியாகவும் நுழைகின்றன. கோவை பிராந்தியத்தில் யானைகள் வயல்களையும் வீடுகளையும் குறிவைத்து வந்து தண்ணீருக்காக வீடுகளை புரட்டிப் போடுவது பத்திரிகைகளுக்கே சலித்துப் போன விஷயமாக தினமும் நடக்கிறது. ஊட்டியில் ஈக்கோ சஃபாரி என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் சுற்றுலாவை இன்னமும் தொடர்வது வனத்துறை அதிகாரிகளின் அசாத்திய நம்பிக்கையை பறைசாற்றுகிறது. காட்டுக்குள் அழைத்துச் சென்று விலங்குகளை காட்டுவதாக ஜீப், வேன்களில் அழைத்துச் சென்று காய்ந்த கரும்புத் தோட்டங்களைவிட பரிதாபத்துக்கு உரியதாக வாடிக் கிடக்கும் மரங்கள், செடிகளையும் ஓட முடியாமல் பின்தங்கிவிட்ட முதுமை எட்டிய காட்டெருமைகள் ஒன்றிரண்டையும் காட்டி திருப்பி அனுப்புகிறார்கள். குற்றாலத்தில் குப்பைக்கூடையில் வீசி எறியப்படும் காலி தண்ணீர் பாட்டிலுக்காக குரங்குகள் அடித்துக் கொள்ளும் காட்சியை இதற்குமுன் நீங்கள் பார்த்திருக்க முடியாது. உணவுக்காக அல்ல அந்த சண்டை.

Kathir - Tamil Nadu -Water scarcity - River Sand - 5

செழிப்புக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சி வட்டாரத்தில் தென்னை மரங்கள் பழுத்த ஓலைகளுடன் வீசாத காற்றில் சிலையாக நிற்கின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வாழைத் தோட்டங்கள் சாய்ந்த மரங்களாலும் காய்ந்த செத்தைகளாலும் நிரம்பிக் கிடக்கின்றன. வழக்கமாக விவசாயிகள் தீவைத்து எரித்து காலி செய்வார்கள். இம்முறை அதற்குக்கூட அவசியம் இல்லாமல் பல இடங்களில் காட்டுத்தீ போல் தானாக எரிவதாக சொன்னார்கள். அந்த செலவாவது மிச்சமாகிறதே என்று கண்ணீருடன் புன்னகைத்தார் ஒரு விவசாயி. கிடைக்கிற இடமெல்லாம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சுகிறார்கள், தண்ணீர் சப்ளையர்கள். நகரங்களில் கேன் வாட்டர் போல சிற்றூர்களில் இன்று அதுதான் லாபம் கொழிக்கும் புதிய தொழில். போர் வெல் போடும் எந்திரங்கள் இயங்கும் சத்தம் எல்லா ஊர்களிலும் கேட்கிறது.


சின்னச் சின்ன ஊர்களில்கூட ஓட்டலில் சாப்பிட உட்கார்ந்ததும் முதல் அயிட்டமாக மினரல் வாட்டர் பாட்டிலை கொண்டுவந்து வைக்கிறார்கள். ஒரு சொட்டு தண்ணீரைக்கூட இலவசமாக பெற இயலாது என்கிற கட்டத்தை நோக்கி என்றைக்கோ நகர்ந்துவிட்டது தமிழ்நாடு. அந்த விலை மதிப்பற்ற தண்ணீரை நாம் எப்படி எல்லாம் உதாசீனம் செய்கிறோம், அவமதிக்கிறோம், அசிங்கப்படுத்துகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். நதிக்கரை நாகரிகம் என்பது மறைந்து நதியோர நாற்றம் என்பது வழக்குக்கு வந்தாகி விட்டது. எல்லா நதிகளையும் கூவத்துக்கு போட்டியாக வளர விட்டதன் விளைவுதானே இது.


வறண்டு கிடக்கும் நதிகள், வாய்க்கால்களை உற்றுப் பார்க்கும்போது மணல் கொள்ளையின் தடயங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றன. ஓரளவுக்கு நீரோட்டம் இருந்தபோதே எத்தனை இடங்களில் எவ்வளவு ஆழத்துக்கு தோண்டி மணல் எடுத்திருக்கிறார்கள் என்பதை பார்த்தால் மலைப்பும் ஆத்திரமும் மனதில் ஒன்றாகப் பொங்கி வடிகின்றன. ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தூராக இருப்பது மண். காலம் காலமாக நீரோட்டம் இருக்கும் நதிகளில் படிமங்களாக சேர்ந்திருப்பது மணல். அது ஆயிரம் ஆண்டுப் பயிர். அநியாயமாக அள்ளி அழித்து தெய்வமென போற்றும் நதிகளை, அன்னையை சீரழித்து சூறையாடி விட்டார்கள் பாவிகள். இந்தக் கொடுமைக்கு இன்று இரவு முற்றுப்புள்ளி வைத்தால்கூட இழந்த நிலை மீண்டும் உருவாக இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பேராசை பிடித்த பீடைகள் மணல் கொள்ளையர்களும் அவர்களுக்கு துணை நின்ற அரசியல்வாதிகளும் அற்ப அதிகாரிகளும் மட்டும்தானா?
நாளை பார்ப்போம்

(கட்டுரையாளர் கதிர் நாற்பதாண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். முன்னணி நாளிதழ்களில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், சமூக சிந்தனையுடன் கூடிய கட்டுரைகளை எழுதி வருகிறார்.)

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: The dead and the living eagles