அரவிந்தன்
ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை நாளன்று ஒரே விழாவுக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், இன்னும் சில அமைச்சர்களும் வருகிறார்கள் என்று மதுரையில் ஏக அமர்க்களம். கலெக்டரும், பல துறை அதிகாரிகளும் பரபரப்புடன் இயங்குகிறார்கள். விமான நிலையத்தில் இருந்து விழா மண்டபம் வரை முதல்வரையும், துணை முதல்வரையும் வரவேற்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் என ஏற்பாடுகள் பலமாக இருந்தன. விழா நடந்த பாண்டி கோயில் அருகே அ.தி.மு.க. கொடி கட்டிய பகட்டான கார்களும், அரசு வாகனங்களும் வந்து போய்க் கொண்டிருந்தன. அந்த வட்டாரத்தைச் சுற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீஸார், முக்கியஸ்தர்கள் வருகையினால் பந்தோபஸ்து (ஜபர்தஸ்து)க்கு சட்டம்-ஒழுங்குப் போலீஸார் என போலீஸ் தலைகள் அன்று அதிகமாகத் தென்பட்டன.
முதல்வர் எடப்பபாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வருகை, அதையொட்டிய இத்தனை ஏற்பாடுகள் இவை எல்லாம் ஏதோ மதுரைக்கு ஒரு புதிய மேம்பாலத் திறப்பு விழாவுக்காகவோ, புதிய நீர்ப்பாசனத் திட்டத் துவக்க நிகழ்ச்சிக்காகவோ நடைபெற்றவை அல்ல. தமிழக அரசின் கூட்டுறவுத் துணை அமைச்சர் (மதுரைக்காரர்) செல்லூர் ராஜூவின் இரண்டு பேரன்கள், ஒரு பேத்தி என 3 பேருக்கு நடந்த காது குத்தும் வைபவத்துக்குத்தான் இந்த கோலாகலம்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், காதுகுத்து நடந்த 3 பேரில் ஒரு பேரனுக்கு 11 வயது; மற்றொரு பேரனுக்கு 8 வயது; பேத்தி மட்டுமே சுமார் ஒரு வயது குழந்தை. இந்த நிகழ்ச்சியை ஒட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், தெரிந்தவர்கள் என சில ஆயிரம் பேருக்கு அமர்க்ககளமான அசைவ விருந்தும் படைத்துவிட்டார் அமைச்சர். மொத்தத்தில் விழா பட்ஜெட் சுமார் 5 கோடி இருக்கும் என்கிறார்கள். சும்மாவா, அமைச்சர் வீட்டு விசேஷம்! போதாத குறைக்கு தேர்தல் வேறு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலைமை!
இது, வெறும் ஒரு காது குத்து விழா, அமைச்சர் வீட்டு விழா என்பதால் ஆடம்பரமாக நடந்தது என்று மட்டும் பார்க்க முடியாது. இதிலே அரசியலும் கலந்தே இருக்கிறது. மதுரை அ.தி.மு.க.வில் மூன்று முக்கியப் புள்ளிகள் தலைமையில் மூன்று கோஷ்டிகள் உள்ளன. அமைச்சர் ராஜூவின் கோஷ்டி பிரதானமானது. இன்னொன்று, முன்னாள் மேயரும் இப்போதைய எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பாவின் கோஷ்டி, மூன்றாவதாக இயங்குவது மதுரையில் கால் பதிக்க விரும்பும் மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளரான அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவு மைனாரிட்டி கோஷ்டி. மற்ற கோஷ்டிகள் எல்லாம் மதுரையில் ‘டம்மி’தான் என்று கட்சி மேலிடத்துக்கும், ‘முதல்வர், துணை முதல்வர் - இரண்டு பேருக்கும் நான் வேண்டியவன்’ என்று மதுரை கட்சிக்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் உணர்த்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இந்த காது குத்து விழா பயன்பட்டிருக்கிறது.
இரு அணிகளாகப் பிளவுபட்டிருந்த அ.தி.மு.க. ஒன்றுபட்ட பிறகும், இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாக ஆள் சேர்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆட்சி எப்போது முடிந்தாலும், கட்சி கைக்குள் இருக்க வேண்டும் என்று இருவரும் கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள். காலியாகவுள்ள ஆட்சிப் பதவிகளுக்கு உரியவர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கும் காரணம், அதிகாரப் போட்டியில் அடுத்தவரின் கை ஓங்கிவிடக் கூடாது என்று இருவருமே நினைப்பதுதான்.
இத்தகைய பின்னணியில்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்திய ‘குடும்ப நிகழ்ச்சி’யான காது குத்தும் விழா ஏற்பாடுகளிலும்கூட அரசியல் பொதிந்திருப்பதாகவே அ.தி.மு.க. வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
அரசு தொடர்பான ஒரு வேலையில் இத்தனை நுட்பமான அக்கறையை இவர்கள் காட்டுவார்களா என்ற விமர்சனத்தை முதல்வரோ, துணை முதல்வரோ கண்டு கொள்ளவா போகிறார்கள்?